ஆகத்து 2022
மழையே! அடைமழையே!
படைத்தவன் பரிவுதன்னை பட்சிகளுக்கும் உணர்த்திடவே…
பருவாது தவறாமல் பாசமழை பொழிகிறதோ…
உருவமதை உக்கிரமாய் உருமாற்றி உருகிடவே…
மேற்கு தொடர்ச்சியதை மேகமது மயக்கியதோ…
பரமனவன் சினம் கொண்டால் இயற்கையது என் செய்யுமோ?
அவன் அசைவுகளை அர்த்தமாக்கும் விளைவுகளை விதைக்காதோ….
பசித்தால் ருசியாய் புசிக்கும் மாண்பு படைத்த
வானரத்தின் வித்துகளே…
அந்த பருக்கைகள் தட்டுவர படும்பாடு அறிவீரோ?…
அறிந்திருந்தால் அமைதி கொள்க… இல்லையென்றால் அச்சம் கொள்க…
பக்தியை பரவசமாக்கும் சிலர் மட்டுமல்ல…
பயிர்களை உயிர்வசமாக்கும் உழவனும் – புனிதன் தான்
இயற்கையதின் இன்னொரு பிறப்பு
மழை தான் மழை தான் மழையே தான் அதன்
மறுமுகம் கண்ட மனிதருள் பலருமுண்டு
அந்த பலருள் ஒருவன் நான்…
இந்த ஒருவனும் உழவன் தான்….
மலைமீது மையங்கொண்ட மழைதன்னை…
மாறுவேடம் கொண்டு ரசித்திருப்பீர் – ஆதலால்
மறுக்க பிம்பமது மறைக்கப்பட்டிருக்கும்…
இதோ அதன் பிரதிபலிப்பு…
அ. மழையே அடைமழையே
எங்கள் அழுகுரல் சத்தம் கேட்களயா?
பயிரெல்லாம் பூ வைத்து புழு தின்ன,
நேரத்திலே எங்கள் கதறல் சத்தம்
உன் காது வந்து சேரலயா?
நட்ட நாத்து எல்லாம் உன்முகம் பார்த்து நிக்க
நையாண்டி பன்னிக்கிட்டே நடநடந்து போனிகளே…
பச்சுள்ள பாதர்போல நட்ட நாத்து வேர் நீட்ட
வெடிச்சிகிடந்த வயல்வெளிய
வேர்வை கலந்து வழி வைச்சேன்…
பதிச்ச உரமெல்லாம் களைப்பயிறு திங்கயில தாலி
அடகு வைச்சு களைக்கொல்லி தெளிச்சிவிட்டேன்
பிஞ்சு கதிர்மேல பால் வாசம் வீசயில பூச்சி
விரட்டனும்னு மூக்குத்தி வித்துவந்தேன்…
தட்டுத்தடுமாறி விளைஞ்சி நிக்கையில வினா
வந்து வயித்துல அடிக்கிறியே…
வரியேதும் மிச்சம் இல்ல சர்க்கார கேட்டுபாரு…
குறையேதும் வைக்கவில்லை குலதெய்வத்த போய் கேளு…
வஞ்சசுமேதும் உணக்கிருந்தால் வான்மழையே சொல்லிவிடு…
கண்ணுரெண்டும் வத்தும்முன்னே என் கடமைடெல்லாம் முடிச்சிடுறேன்…
விளைஞ்ச பயிரெல்லாம் விழுந்து கிடக்கயில
அபோக விளைச்சலுன்னு கனவு கண்டிருந்தேன்…
களவ களைப்பதற்கா இடி இடிச்சி வந்தீக – இரா பத்து
ஆகிபோச்சு இன்னுமா களைக்கிறீக…..
படுத்த பயிரெல்லாம் வேர்விடத்தான் துடிச்சிருக்கு…
ஊர்சனம் மொத்தமா உயிர்விடவே காத்திருக்கு….
சோழ தேசம் மட்டுமா சோகத்துல மூழ்கிருக்கு.
பாண்டி தேசம் கூட அங்க பதட்டத்துல தான் இருக்கு…
மேகத்த கட்டியிழுக்கும் வித்தையிருந்தால் காட்டுங்க…
வித்தையேதும் இல்லன விவசாயி விந்து பைய நீக்குங்க…
வாரிசேதும் இல்லாம எங்க தலைமுறையே போகட்டும்…
விவசாயி என்னும் சொல்லு எங்களோட சேந்து சாகட்டும்…
திரு. சோழன் பாரதி,
செந்தமிழர் பாசறை – பகரைன்.