செப்டம்பர் 2022
பட்டினப்பாலை
பாடல் (20 – 27/301):
“அகல் நகர் வியன் முற்றத்து
கடர் நுதல் மட நோக்கின்
நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும் கோழி எறிந்த கொடு கால் கனம் குழை பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்
முக்கால் சிறு தேர் முன் வழி விலக்கும்
விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா
கொழும் பல் குடி செழும் பாக்கத்து”
பொருளுரை:
பாக்கங்களின் மாட்சி :

நெய்தல் நிலத்திற்கண் அமைந்துள்ள ஊர்களை பாக்கங்கள் என்பர். திருமாவளவன் ஆள்கின்ற சோணாட்டில் உள்ள பாக்கங்களில் பெருமைமிக்க அகண்டு விரிந்த இல்லங்கள் உள்ளன. ஒளி பொருந்திய நெற்றியையுடைய. குற்றம் இல்லாத பார்வையும் கொண்ட அழகிய ஆடைகள் அணிந்த பெண்கள் அந்த இல்லங்களில் உள்ளனர். அவர்கள் முற்றங்களில் நெல்மணிகளை உலர வைத்து காவல் காப்பர். அங்கே பொன்னால் ஆன கழல் அணிந்த சிறுவர்கள் உலவி மகிழ்வர், அச்சிறுவர்கள் குதிரைகள் பூட்டாத மூன்று உருளிகள் கொண்ட சிறுதேரினை இழுத்து விளையாடுவர். முற்றங்களில் உலர வைத்த நெல்மணிகளை கோழிகள் உண்ண வரும். அப்பெண்கள் தங்கள் குழை (சுறவுக்குழை) எனும் காதணியை கழற்றி கோழிகளை நோக்கி வீசுவர்.
வீசிய காதணி சிறுவர்கள் இழுத்து விளையாடும் சிறுதேரின் உருளியில் சிக்குண்டு அதன் ஓட்டத்தை தடுக்கும். விலங்குகள் தங்களுக்குள் கொண்ட பகை மற்றும் சோணாட்டின் எதிரிகள் மீதான பகை தவிர வேறு எந்த பகையும் அறியாது கவலையற்று செழுமையாக மக்கள் வாழக்கூடிய வளமான இடமாக பாக்கங்கள் திகழ்ந்தது.
திரு. மறைமலை வேலனார்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.