செப்டம்பர் 2022
தேசிய இன உரிமையின் அவசியம்
இந்தக் கட்டுரை எழுதப்படுவதின் நோக்கம், பல்வேறு தேசிய உலகளாவிய பொது வரையறையை அறிதலும், உள்ளபடியே அவ்வினங்களுக்கான தன்தீர்வு அரசு(கய நிர்ணய அரசு) அமைந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் அறிதலுமே ஆகும்.
ஓர் இனம் தனக்கான “பொது மொழி”, “தொடர்ச்சியான நிலம்”, “பொருளாதார வாழ்வு” மற்றும் ‘பொதுக் கலாச்சார மன இயல்பு” கொண்ட அமைப்பு முறையை கொண்டிருத்தலே “தேசிய இனம்” என்று உணரப்படும் என்று ருசிய இடதுசாரித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் வரையறுக்கிறார்.
மேற்கூறிய நான்கு விடயங்களில் எதுவொன்று இல்லை என்றாலும் அது தேசிய இனத் தகுதியை இழக்கிறது என்கிறார் அவர். சான்றாக ஆங்கிலம் என்ற மொழியை அமெரிக்காவிலும் பேசுகிறார்கள். இங்கிலாந்திலும் பேக்கிறார்கள். இருப்பினும் இவர்கள் இருவரும் வெவ்வேறு தேசிய இன மக்கள், ஏனெனில் இவர்கள் இருவரும் வெவ்வேறு நிலத்தில் வாழ்கின்றனர். மேற்கூறிய வரையறையும், சான்றும் தேசிய இன வரையறையை விளக்கியிருக்கும் என்று நம்புகிறேன்.
தேசிய இன உரிமை என்பது, மண்ணின் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை தீர்மானிப்பது, அதன்படி சுயநிர்ணய அரசை அமைப்பதுமே ஆகும். பல்வேறு இனக்குழுக்கள் ஒன்றாக வாழும் நிலத்தில் அனைத்து மக்களுக்குமான அரசை அம்மக்களின் துணைக்கொண்டு கட்டமைத்து எழுப்புவதன் மூலமாகவே அவர்களின் தேசிய இனவுரிமை காக்கப்படுகிறது எனலாம்.
தேசிய இள உரிமை என்ற முழக்கம், இந்தியா போன்ற பல்தேசிய இன நாட்டில் அதிகமாக ஒலிப்பதின் தில்லி ஏகாதிபத்திய அரசும், அந்த ஏகாதிபத்திய அரசு உருவாக்கிய அதிகாரமற்ற மாநில அரசும்தான்.
இந்தியப் பார்ப்பனிய ஏகாதிபத்தியம், “நாடாளுமன்றம்”, “சட்டமன்றம்”, “நீதித்துறை”, “காவல்துறை” போன்ற அமைப்பு முறைகளை உருவாக்கி, இந்தியா என்ற நாடு, இன்றமை கொண்ட சனநாயக நாடு என்று மாயத்தோற்றத்தை உருவாக்கி எளிய மக்களை அடிமைப்படுத்தி ஆண்டுவருகிறது. எளிய மக்களிடையே உள்ள சாதிய, மத வேறுபாடுகளை கூர்மைப்படுத்தி, ஒற்றை மொழியை முன்னிறுத்தி, இந்தியா, தான் உருவாக்கிய சனநாயக பிம்பத்தை காத்து வருகிறது.
ஒற்றை மொழியை நோக்கிய இந்தியாவின் தீவிர நகர்வு என்பது, தேசிய இனங்களின், அவற்றின் உரிமைகளின் தீவிர அழிப்பே அன்றி வேறில்லை. இவ்விடத்தில் விழிப்பற்ற தேசிய இனங்கள், இந்தியா என்ற தொன்மங்களற்ற பார்ப்பனிய முதலாளித்துவக் கூட்டத்திடம் அடிமைகளாய் வாழ்வதேயன்றி வேறுவழிகள் இல்லை.
ஒரு பல் தேசிய இன நாட்டில் ஒடுக்குமுறைக்கு உள்ளான தேசிய இனங்கள் எவ்வாறு தன்னை மீட்டது என்று சில சான்றுகள் நம்மிடம் உள்ளது. அவற்றில் இந்திய துணைக்கண்டத்திற்கு ஏதுவான சிலவற்றை காண்போம்.
இங்கிலாந்து, அயர்லாந்து ஆகிய இரு நாடுகளும் 19 ஆம் நூற்றாண்டுவரை பல்தேசிய இனங்கள் வாழும் ஒரே நாடாகவே இருந்தது. ஆனால் இங்கிலாந்து தேசிய இனத்தைச் சேர்ந்த முதலாளித்துவ வர்க்கம், ஐரிய இள மக்களைச் சுரண்டி வருவதாக, ஐரிய தொழிலாளர் வர்க்க மக்கள் போராடினார்கள். இங்கிலாந்து தேசிய இனத்தில் உள்ள தொழிலாளர் வர்க்கம், முதலாளித்துவ வர்க்கத்தால் நிலப் பிரபுக்களாக்கப்பட்டு, ஊட்டம் பெற்று போராட்ட குணமற்று இருந்தனர்.
இவ்வாறு இரு தேசிய இனங்களுக்கிடையே நடக்கும் போராட்டத்தை கவனித்த “காரல் மார்க்க” அவர்கள். ஐரிய தொழிலாளிகள் போராடுவதைப்பற்றி அக்கறையற்று இங்கிலாந்தின் தொழிலாளர்கள் வர்க்கம் உள்ளது. இங்கிலாந்து ஐரிய மக்களைச் சுரண்டுகிறது.
எனவே ஐரிய மக்கள் விடுதலை அடைய வேண்டும் என்று எண்ணிப் போராடினர், இறுதியில் அயர்லாந்து விடுதலை அடைந்தது. இவ்வாறு ஒரு பல்தேசிய இன நாடு. இருவேறு தேசிய இன நாடுகளாகப் பிரிந்தது.
மற்றுமொரு சான்று போலந்து குசியா போராட்டம். ருசிய தேசிய இனத்தின் முதலாளித்துவ வர்க்கம். போலந்து, மக்களை சுரண்டுவதாக தொழிலாளர் வர்க்கம் போராடியது. அப்போதிருந்த “லெனின்” அவர்கள் அப்பிரிவினை கோரிக்கையை ஆதரிக்கவில்லை. இங்கு பிரிவினையை மறுக்கும் காரணம் வேறாக இருந்தது.
ருசிய முதலாளித்துவ வர்க்கம் போலாந்தை சுரண்டுவதை, ருசிய தொழிலாளர் வர்க்கம் ஏற்கவில்லை. இதை புரிந்திருந்த லெனின் அவர்கள், இரு தேசிய இனங்களின் தொழிலார்கள் வர்க்கமும் ஒருவருக்காக, மற்றொருவர் போராடுவதால் பிரிவினை தேவையில்லை, இணைத்து போராடி இலக்கை அடைவோம் என்று மக்களை ஒன்றுதிரட்டி இலக்கை அடைந்தார். தேசிய இனப்பிளவு நிகழாமல் அப்போது அவ்வாறு தவிர்க்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட சான்றுகளில், இந்தியத் துணைக் கண்டத்திற்குப் பொருந்தக்கூடிய சான்றாக ருசியபோலந்து நிகழ்வை நான் கருதுகிறேன். நவீன அறிவியல் உலகத்தில், இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து ஒரு தேசிய இனம் விடுதலை அடைந்து, தனித்துப் பிரிவது மிகக்கடினமான ஒரு விடயம். ஏனெனில் இந்திய அரசியல் சாசனம், இந்திய ஒன்றியத்தின் பாதுகாப்பு, இந்திய இறையாண்மை என பலவிடயங்கள் ஒரு தேசிய இன விடுதலையில் அடங்கியுள்ளது. ஆனாலும் இதுபோன்று விடுதலைக்குரல்கள் எழுவதற்கு காரணம், தேசிய இனங்களின் கூறுகளை அழித்து, “இந்தியா” என்று வரையறுக்கப்பட்ட நிலத்தின் அதிகாரத்தை காப்பதற்காக அனைவரையும் ஒரே கலாச்சார மனிதர்களாக மாற்ற முற்படும் ஒன்றிய அரசின் தொடர் செயல்பாடுகள் தான், தேசிய இன உரிமைகள் பற்றி பேச வைக்கிறது. ஆனால் தேசிய இனங்கள் பிரிந்து செல்லாமல், இந்தியா என்ற ஒரே நிலத்தில் நிறைவாக வாழ சில வழிகள் உண்டு. அதில் முதன்மையானது ஒரு தேசிய இனம், மற்றொரு தேசிய இனத்தின் உரிமைக்காக நிற்பது. அவர்களுக்கு ஒன்றிய அரசால் நெருக்கடிகள் நிகழும்போது உடன் நின்று போராடுவது. அதன்வழியாக தேசிய இனத்திற்கான முழுமையான அரசியல் உரிமைகளை பெறுவது.
அனைத்து தேசிய இனங்களும் தங்களுக்கான முழு உரிமைகளோடு, கூட்டிணைவாக வாழ்ந்தால் பிரிவினை என்ற கருத்து எழ வாய்ப்பில்லை. ஆனால் இச்சூழல் நிகழ வேண்டுமானால் இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமுள்ள தேசிய இனங்கள், தேசிய இன உரிமையின் அவசியம் உணர்ந்தவர்களாக, போராட்ட குணம் நிறைந்தவர்களாக, ஒரு தேசிய இனம் ஒடுக்கப்படும்போது உடன் நின்று போராடுபவர்களாக இருக்க வேண்டும். உலகளாவிய பொது வரையறைகளின்படி ஒரு தேசிய இன அரசு என்பது பின்வரும் கூறுகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அவை,
• விவசாயம்,
• மொழி, கலை, இலக்கியம், கலாச்சார மறுமலர்ச்சி
• சனநாயகம்
• சனநாயக அரசை நிறுவுதல்
மேற்கூறிய தேசிய இன இயக்கத்தின் கூறுகள், ஒரு மனிதனின், மக்கள் கூட்டத்தின் நிறைவான, சமத்துவ வாழ்வை உறுதி செய்கிறது. அதாவது மக்கள் வாழ்வை தொன்மங்கள். வேளாண்மை, அறிவியல் மற்றும் சமத்துவம் நிறைந்த வாழ்வாக வடிவமைக்கிறது.
தேசிய இனங்களின் நிறைவான வாழ்தல் என்பதே பல்தேசிய இன நாட்டின் / இந்திய துணைக் கண்டத்தின் வலிமையை மேலும் கூட்டும். இந்தியாவின் பெரும் நன்மை, அவர்கள் தேசிய இனங்களுக்கு வழங்கும் முழு உரிமையில் உள்ளது. அதே வேளையில் மக்களும் தேசிய இனத்தின், அதன் இயங்குதலின் கூறுகளை உள்வாங்கவேண்டும். அது எளிய மக்களுக்கான, அவர்களின் சுய நிர்ணய வாழ்விற்கான ஆதாரம் என்று உணர்ந்து, தேசிய இன அரசியல் முன்னெடுப்பிற்கு பங்களித்து, ஆதரவளிக்க வேண்டும்.
நன்றி!
திரு. கோபாலகிருஷ்ணன் பால்ராஜ்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.