செப்டம்பர் 2022
அறிமுகம்
தமிழர், தமிழரின் தொன்மை, இலக்கியம், இலக்கணம். உஅறிவாற்றல், அறிவியல், மருத்துவம், வரலாறு, வானியல், வாழ்வியல், அரசியல் என அனைத்தையும் கால வெள்ளத்தில் கரைந்து போகாமல் பல்லாயிரம் ஆண்டுகளாக காத்து நின்ற ஓடங்கள் “ஓலைச் சுவடிகள்”.
கூகுள் போன்ற தளங்களின் கணினி சேவையகங்கள் (Servers) முற்றிலும் இயங்காமல் போனால், கோடிக்கணக்கான (அ) எண்ணிலடங்காத் தகவல்கள் ஒரே நொடியில் பறிபோகும் டிஜிட்டல் யுகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தகவல்களை பத்திரப்படுத்த காகிதங்கள் தற்காலிக கருவியாக பயன்படுத்தப்பட்டு, அதிலும் பாதுகாப்பற்ற பயன்முறையை கொண்டிருக்கும் கணினிகளும், திறன்பேசிகளும் தகவல் பதிவு மற்றும் சேமிப்பிற்கான முக்கிய சாதனங்களாகவே மாறிவிட்டன.
தற்போது தகவல் பதிவைச்செய்ய நாம் பயன்படுத்தும் சில பொருட்களைப் பற்றி பார்ப்போம்.
கிளவுட் சேமிப்பகங்கள் கூகிள் கிளவுட், ஒன் டிரைவ் வகை எத்தனை ஆண்டுகள் தகவல்களை அழியாமல் பாதுகாக்கும் என்பது நிச்சயமற்ற ஒன்று.
கணினி மற்றும் திறன்பேசி சேமிப்பகங்கள் பல நேரங்களில் தகவல் இழப்பு சாத்தியம்.
காந்த நாடாக்கள் தாங்கக்கூடியது. 10 முதல் 20 ஆண்டுகள்
தங்கத்தாலான ஆப்டிகல் தட்டுகள் 100 ஆண்டுகள் வரை தரவுகளை வைத்திருக்கும் எனக் கூறப்படுகிறது.
சற்று சிந்தித்துப் பார்த்தால், மேற்கூறிய அனைத்தும், செயற்கையாகத் தயாரிக்கப்பட்டதும், இயற்கைக்கு ஏதோ ஒரு வகையில் தொந்தரவு செய்யும் விதமாகவும் தான் இருக்கும். நாம் பயன்படுத்திய ‘ஓலைச்சுவடிகள்’, முற்றிலும் இயற்கையான மற்றும் இயற்கைக்கு ஒருபோதும் தீங்கிழைக்காத ஒன்றென்பதை நாம் அனைவரும் அறிவோம். அதன் ஆயுளும் மேற்கூறிய அனைத்தையும்விட அதிகம் மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்ததும் கூட
ஓலைச்சுவடியின் பயன்பாட்டை, அதன் வரலாற்றை, சிறப்புகளைக் காண்போம்.
உலகில் மனித இனம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பின் கருத்துப் பரிமாற்றத்திற்காகப் பயன்பட்ட மொழியானது. அவர்கள் குழுவாக வாழத் தொடங்கிய காலத்தில் உணவுத் தேடலுக்காகவும், பிற தேவைகளுக்காகவும் பல இடங்களுக்குச் சென்று திரும்பும்வரை தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைத் தன் குழுவினருடன் பகிர்ந்துகொள்ள முயன்றபோது பேச்சு மொழியாக உருவாகியது.
இவ்வாறு உலகில் தோன்றிய மிகப் பழமையான மொழிகளுள் ஒன்று தமிழ்மொழி. தமிழ் மொழியின் தோற்றம், ஆதிவடிவம் போன்றவை உருவான காலம் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் அமைத்து, தூல் பல இயற்றி, தமிழோடு வளர்த்தவர்கள் தமிழர்கள்,
படிப்படியான வளர்ச்சியின் காரணமாக தொடக்க நிலையில் ஒலிக்குறிப்புகளையும், அதற்கு அடுத்த நிலையில் பேச்சுமொழியையும், வளர்ந்த நிலையில் இலக்கியங்களையும், வளர்ச்சியின் உச்சநிலையில் இலக்கணங்களையும் உருவாக்கி, தமிழ் தன் வளர்ச்சிப் படிநிலைகளைப் பதிவு செய்கின்றது.
தொடக்க காலத்தில் இலக்கியங்கள் வாய்மொழியாக இருந்ததால் அவற்றை மனப்பாடம் செய்வதற்காகவும், பிறருக்குக் கற்றுக்கொடுப்பதற்கு எளிமையாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் எதுகை, மோனைகளுடன், அந்தாதி அமைப்பிலும் அமைத்திருந்தனர்.
பழங்காலத்தில் ஆசிரியர் தான் இயற்றிய நூலையோ, ஆசிரியரிடம் அவர் கற்ற நூலையோ வாய்மொழியாகப் பாடம் சொல்லுவார். பாடம் கேட்கும் மாணவர் அவற்றைத் தம் மனத்தில் நிறுத்தி மனப்பாடம் செய்து அவரின் மாணவருக்கு வாய்மொழியாகப் பாடம் சொல்லிக் கொடுப்பார். வாய்மொழி இலக்கியங்களின் வகைகள் அதிகமாகப் பெருகியதால் அவற்றை வகைப்படுத்த இலக்கணங்கள் உருவாகின.
அவ்வாறு உருவான இலக்கண நூல்களில் நமக்கு கிடைக்கப் பெற்ற தொன்மையான நூல் தொல்காப்பியம். தொல்காப்பியத்திற்கு முந்தைய நூல்கள், தரவுகள் கிடைக்கப் பெற்றிருந்தாலும், இலக்கண நூல்கள் கிடைக்கப் பெறவில்லை.
தொல்காப்பியம் தொன்னூல் மட்டுமல்லாமல் பண்டைத் தமிழ் நாகரிகத்தை, பண்பாட்டைத் தாங்கி நிற்கும் பெருந்தூணாகும். ஆழிப்பேரலைகளில் சிறப்பு வாய்ந்த தமிழின முக மண்டபமும், கூடகோபுரமும், மணிமாடமும், மாளிகை அரணும் ஆழ்கடலுள் ஆழ்ந்து போயின. அந்நிலையில் தமிழினத்தின் சிறப்பினைக் கூறும் கலைக் கூறுகளைக் கண்டெடுத்துக் கட்டிய சிற்றில், தொல்காப்பியம்.
‘செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடுமுந்தநூல் கண்டு முறைப்பட எண்ணிப்புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்’ சிறப்புப் பாயிரம், என்னும் சூத்திரத்தால், தொன்னூல்களைக் கண்டெடுத்தவர் தொல்காப்பியர் எனலாம்.
தொல்காப்பியம் நெடுகலும் ‘என்மனார்ப் புலவர் நுண்ணிதின் உணர்ந்தோர்’ ‘மொழிய என்றிசினோரே’ நுனித்தகு புலவர் கூறிய நூலே’ என்று முடித்திருப்பதால், தொல்காப்பியம் கூறும் இலக்கணச் செய்திகளெல்லாம் முந்து நூல்களில் கண்டவையே என்பது தெளிவு.
தொல்காப்பியம் தமிழின் தொன்மையை அறிவுறுத்துவதைப் போலத் தமிழ் மருத்துவத்தின் தொன்மையும் அறிவுறுத்துகிறது. அதனால், தமிழ் மொழியைப் போலவே தமிழ் மருத்துவமும் தொன்மையானது என்பது தெளிவு.
இவற்றையெல்லாம் நமக்கு அறியத்தந்தது ஒப்பற்ற ஓலைச்சுவடிகளே.
ஆதியில் தமிழர் தனக்குத் தெரிந்தவற்றை அழியாமல் பதிவுசெய்து பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது தோன்றியதோ அப்போதுதான் எழுத்துவடிவம் தோன்றியது. எழுத்துகள் கோடுகளாக, குறியீடுகளாக, படங்களாக இருந்து பின் படிப்படியாக வளர்ந்து தற்போதைய எழுத்து வடிவமாக மாறின என்பதற்குப் LIFT কো ஓடுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றவை சான்றுகளாக உள்ளன.
பழங்காலத்தில் கல், களிமண் பலகை, உலோகத்தகடு, துணி, இலை, பனைஓலை, மரப்பட்டை, மரப்பலகை, தோல், மூங்கில் பத்தை போன்றவை எழுதப்படு பொருட்களாகப் பயன்பட்டன.
எகிப்தியர், கிரேக்கர், ரோமர், யூதர் முதலிய இனத்தவர் பண்டைக் காலத்தில் பேபரைஸ்தாளையும், விலங்குகளின் தோல்களையும் எழுதப்படுபொருளாகப் பயன்படுத்திய காலத்திற்கு முன்பே நமது நாட்டவர், பனையோலையினால் செய்யப்பட்ட ஓலைச்சுவடிகளில் நூல்களை எழுதி வந்தனர். பனையோலையில் எப்பொழுது முதல் எழுதப்பட்டது என்று கூற இயலாது.
பனையோலைகளில் எழுதுவதற்கு எளிமையாக இருப்பதாலும் அவற்றைச் சரியான முறையில் பராமரித்து வந்தால் நீண்ட நாட்கள் அழியாமல் இருக்கும் தன்மை கொண்டதாலும், பனையோலைகள் பயன்படுத்தப்பட்டன. தென் கிழக்காசிய நாடுகள் ஓலையைப் பயன்படுத்தியிருப்பினும் அவற்றைப் பயன்படுத்தும் முறை தமிழர்களிடம் இருந்தே பரவியிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.
தமிழர் மிகுதியாக ஓலையைப் பயன்படுத்த காரணம் இலை, மரப்பட்டை, களிமண் பலகை போன்றவை விரைவில் அழியக்கூடியவை. மரப்பலகை, மூங்கில் பத்தை போன்றவற்றில் பெரிய நூல்களை எழுதிக் கையாளுவது கடினம். தோல், துணி, உலோகத்தகடு போன்றவை மிகுந்த பொருட்செலவினை உண்டாக்கும்.
பிற உயிர்களைக் கொன்று அவற்றின் தோலில் நல்ல கருத்துடைய நூல்களை எழுதுவது மனிதத் தன்மைக்கு முரண்பட்டதாகவும் அமைகிறது. அவற்றில் விரைவாக எழுதவும் முடியாது. கருங்கல் போன்ற பிறபொருள்களைப் பிற இடங்களுக்கு எடுத்துச் செல்வது கடினம். ஆனால் ஓலைச் சுவடியோ இரண்டு மூன்று நூற்றாண்டுகள் வரை அழியாத்தன்மை வாய்ந்தது.
மிகுந்த செலவு இல்லாதது, தமிழகத்தில் எல்லா இடங்களிலும் மிகுதியாகவும் எளிமையாகவும் கிடைக்கக் கூடியது. மிகப் பெரிய அளவுடைய நூல்களையும் ஒரு கட்டில் அடக்கக்கூடிய தன்மை வாய்ந்தது. பல இடங்களுக்கும் எடுத்துச் செல்வது எளிது. பாதுகாக்க ஏற்றது. இக்காரணங்களால் தமிழர் ஓலைச்சுவடிகளைத் தேர்ந்தெடுத்து மிகுதியாகப் பயன்படுத்தினர்.
கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ் எழுத்துக்களின் வரிவடிவங்கள் மாற்றம் பெற்று வளர்ச்சியுற்றதை, தமிழறிஞர்கள் இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டில் வெளியிட்டுள்ள கையேட்டில் பட்டியலிட்டுக் காட்டியுள்ளனர்.
கல்வெட்டுகளில் காணப்பெறும் எழுத்துக்கள். செப்புப் பட்டயங்கள் போன்றவற்றில் அமைந்துள்ள மொழிவடிவம் அறிஞர்களால் ஆராயப்பெற்றது. ஆனால், ஓலைச்சுவடிகளிலமைந்து வந்துள்ள வடிவத்தினை ஆராய்ந்து வெளிப்படுத்தியவர்கள் மிக சொற்பமே.
இதற்குக் காரணம் கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றவை நீண்டகாலம் அழியாமல் இருப்பதால் அவற்றின் வரி வடிவம், எழுத்து வடிவம் இன்றும் மாறாமல் இருக்கிறது.
ஆனால், பழங்காலச் சுவடிகள் கிடைக்கப் பெறாமையாலும், சுவடிகள் சுமார் 300400 ஆண்டுகளில் அழிந்து விடுவதால், அவற்றை படியெடுக்கும் கால எழுத்துருக்களை பயன்படுத்தியதாலும், பிற மொழி சொற்கள் கலப்பினாலும், தனிப்பட்டவர்கள் தங்கள் வசமுள்ள சுவடிகளை பொதுவில் வைக்காததாலும், அறியாமையினால் தீயிட்டு அழிக்கவும். கரையான் மற்றும் பூச்சிகளுக்கு தின்னக் கொடுத்ததாலும், முறையான, தொடர்ச்சியான வரி வடிவ ஆராய்ச்சிகளுக்கு பெருமளவில் உட்படுத்தவில்லை என்பதே உண்மை.
ஓலைச்சுவடிகளின் படைப்பு நுட்பத்தையும், வெளிநாடு களுக்கு கடத்தப்பட்ட தமிழர் ஓலைச்சுவடிகள் அங்கு பாதுகாக்கப்பட்டு, அதன் அறிவியல் குறிப்புகளால் பயனடைந்த நாடுகள் பற்றியும், தாய்நிலத்தில் ஒலைச்சுவடிகளின் துயர நிலை பற்றியும் அடுத்த இதழில் பார்ப்போம்.
தொடரும்…
திரு. ம.இராமகிருசுணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.