செப்டம்பர் 2022
விழாக்காலம்
“வானம் விரிவடைகிறது” என்ற வாசகத்தை எங்கேயோ ஓர் புத்தக நிலையத்தில் படித்த நினைவு.
ஓர் நாள் ஸ்டீபன் ஹாக்கிங் என்கிற இயற்பியல் துறையின் மேதையாக போற்றப்படும் மனிதரின் “காலம்” என்கிற நூலை வாசிக்கும் நல்வாய்ப்பு கிடைத்தது.
“புத்தகம் முழுக்க, முழுக்க இயற்பியல் துறையை மட்டுமின்றி, கருந்துளை, வானம், நட்சத்திரம், நேரம், ஒளியாண்டு, காலப்பயணம் குறித்த விடயங்களையும் பேசுகிறது.
இதில் இவர் வைத்த வாதம் ஆம் “வானம் விரிவடைகிறது”.
இப்பொழுது நாம் நம்முடைய தலைப்பிற்கு வருவோம்.
“விழாக்காலம்” என்கிற தலைப்பிற்கு நான் 可 வானத்திற்கு சென்றேன் என்கிறீர்களா?
“வானம் விரிவடைகிறது” உண்மையென்றால் மனிதர்களின் உள்ளம் சுருங்குகிறது என்பதைச் சொல்லத்தான்.
எப்படி என்றா நினைக்கிறீர்கள்?
கடைசியாக உங்கள் பள்ளி, அல்லது கல்லூரி அல்லது உங்களுடன் பணிபுரிந்த நண்பர்களுடன் நட்பு பாராட்டி
பேசியது எப்பொழுது?
உங்களிடம் அவர்கள் அலைபேசி எண் இல்லையா?
அல்லது அவர்கள் தொலைதூரத்தில் இருக்கிறார்களா?
எத்தனை முறை அவர்களை நேரில் கண்டும், காணாமல் போய் இருக்கிறீர்கள்?
பகிரியில் அவர்கள் வைக்கும் ஸ்டேடஸ் பார்க்கிறீர்கள்?
முகநூலில் அவர்கள் ஆன்லைனில் இருப்பது தெரிந்தும் நீங்கள் பேச எண்ணாதது ஏன்?
உங்களுக்கு நேரமில்லை என்று மட்டும் சொல்லாதீர்கள்! உங்கள் நெஞ்சே வஞ்சித்து சாகடித்துவிடும்…! நாம் எங்கே போகிறோம்?
மனிதர்களை மறந்து பறந்து செல்லப் போகிறோமா?
நண்பர்களை இழந்து பிறர் புகழ்ந்து வாழப் போகிறோமா? காலச்சக்கரம் ஞாலத்தில் சீராகத்தான் சுழல்கிறது…!
பிறகு நாம் ஏன் அந்நியப்படுகிறோம்?
தனிமையில் சுகம் காணும் வாழ்க்கையின் அடிபில் சிக்கிக் கொண்டு தவிக்கிறோம்?
வீட்டில் திண்ணை இருந்த வரை தாத்தா, பாட்டி வீட்டில் இருந்தார்கள்.
“போர்டிகோ” வந்த பிறகு அவர்கள் ஒழிந்தார்கள்…!!
“வீட்டுத்திண்ணையிடம் கேட்டுப்பார்க்கலாம்,
பாட்டு பாடும் பல்லிலாக்கிழவியிடம் கேட்கலாம், வயிறு வலிக்கச் சொல்லும் அந்தக்காலச் சொந்தக்கதைய…!
“இந்தக்காலத்துல வயசான திண்ணையுமில்ல, வயசான குழவியும், கிழவியும் இல்ல…!
“கதை கதையா வச்சிக்கிட்டு வெறும் வாய மெல்லுற தாத்தாக்கன் இங்கு ஏராளம்…!
“இணையத்தில் கலக்கும் குப்பைகள் தாராளம்.”
விழாக்கள் வருவது பிரிந்து, திரிந்து, உறவு முறிந்து
தூரத்தில் வாழும் சொந்தங்கள் எல்லோரும் சங்கமிக்கும்
கடல்போல ஆர்ப்பரித்து, ஆரத்தழுவி ஒருவரை ஒருவர்
புரிந்து கொண்டு, மனக்காயங்களை மெல்லிய புன்னகையால்
மருந்திட்டு அதிகப்படியான காயம் என்றால் வெளிப்படையாக
பேசி, மனம் வருந்தி, மன்னிப்பு கேட்டு, குணம் திருந்தி
கொண்டாடுவது தான் விழா.
“முடிந்தால் அலைபேசியை முடக்கி வைத்து, மன மகிழ்ச்சியை தொடங்கி வைக்கலாம்.”
“நம்முடைய நண்பர்களை, உறவினர்களை எங்கு
பார்த்தாலும் முடிந்த வரை அவர்களுடன் உரையாடுங்கள்”
நலம் விசாரியுங்கள், அவர்களுடன் உரையாடும் போது
உங்களை மிகைப்படுத்தி காட்ட அலைபேசியில் தொலைய வேண்டாம்.
“விழாக்காலங்கள் வருவது நம்மை, நம் அன்பை பரிமாறிக் கொள்வதற்காகத்தான் என்பதை பகிர்ந்து கொள்ளுங்கள்…!
“வானம் விரிவடைவதை போல, மனித மனமும் விரிவடைய வேண்டும்”
“அதையே நமது பாட்டனார் வள்ளுவர் “உள்ளத்தனையது உயர்வு” என்கிறார்.
“உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்கிறார்.
“விழாக்காலத்தில் இல்லத்திலும், உள்ளத்திலும் இன்ப
வெள்ளம் பெருகட்டும்…!
அன்பை பகிர்வோம், பரிமாறுவோம்…!
திரு. ஆவணம் சிவபாலன்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.