அக்டோபர் 2022
இன்றைய கல்வியால் காணாமல் போன தமிழர் அறிவு
மனிதன் வாழ்வதற்குத் தேவையான அனைத்துத் தத்துவங்களையும் வகுத்துக் கொடுத்த திருவள்ளுவர் பிறந்த பூமியிலே மக்கள் வாழத் தகுதியின்றி இருக்கிறார்கள். காரணம், நல்ல கல்வி காணாமல் போனது.
கல்வி எப்படி இருக்க வேண்டும்?
நம் கல்வி எப்படி காணாமல் போயிற்று?
கல்வி எப்படி இருக்க வேண்டும்? அதாவது, ஆற்றில் தண்ணீர் ஓடாத பொழுது வெறும் மணல் பரப்பாக ஆறெங்கும் காட்சி அளிக்கும். அந்த மணல் பரப்பில் சிறிய குழி தோண்டி இருந்தால் உங்களுக்கு இது நன்றாக தெரிந்திருக்கும்.எவ்வளவு மணலை நாம் வெளியே எடுக்கிறோமோ அந்த அளவிற்கு தீரானது மணல் எடுத்த வெற்றிடத்தை வந்து நிரப்பும். (இன்று ஆற்றின் நிலைமை மோசமாக இருக்கிறது) அவ்வாறு நம்முடைய அறிவானது அறியாமை என்னும் மணலால் மூடப்பட்டிருக்கின்றது. நல்லவற்றை கற்கின்ற பொழுது, நல்ல நூல்களை படிக்கின்ற பொழுது நமது அறியாமை என்னும் மணல் நீங்கி தெளிந்த நீராக அறிவு வெளிப்படுகிறது. கல்வி என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதனை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஐயன் திருவள்ளுவர் உலகிற்கு போதித்தது யாதெனில்:
கல்வி என்பது
“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு”
இது போன்றுதான் இருக்க வேண்டும்.
ஆனால், இன்றைய கல்விமுறையானது குழந்தைகளை கிளியை பேச பழக்குவது போன்று பழக்கப்படுத்துகிறது. பழக்க வழக்கம் என்பது வேறு, கல்வி என்பது வேறு, திருவள்ளுவர் கூறுவது போன்று மனிதனின் அறியாமையை அகற்றுவதற்கு கல்வி கற்பிக்கப்பட வேண்டும். ஆனால் இவர்கள் கற்பிக்கும் கல்வி அறியாமையை அகற்றுவதற்கு பதிலாக மேலும் மேலும் அறியாமையை வளர்க்கிறது. இன்றைய சமூகத்தில் தவறு செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் மெத்த படித்தவர்களாகவே இருக்கின்றனர். காரணம், கல்வி சரியானதாக இல்லை. நம் முன்னோர்கள் கூறியபடி கல்வி இங்கு கற்பிக்கப்படவில்லை? கல்வி மட்டுமல்ல, உணவே மருந்து மருந்தே உணவு என்ற சிறப்பான தமிழரின் உணவு முறை கூட இங்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது.
நம் கல்வி எப்படி காணாமல் போயிற்று?
இந்த கதை மூலம் இன்றைய கல்விமுறையை எனிமையாக புரிந்து கொள்ளலாம்.
ஒரு வேட்டைக்காரன் அவன் இருந்த காட்டை விட்டு வேறு காட்டிற்கு வேட்டைக்குச் செல்கின்றான். அப்பொழுது ஒரு வளமான காடு அவன் கண்ணில் பட்டது. அந்த காட்டிலேயே சில காலம் தங்கலாம் என முடிவுசெய்தான். காட்டில் இருக்கின்ற வளங்களையும் விலங்குகனையும் வேட்டையாடி, அவன் இருந்த காட்டுக்கு கொண்டு சென்று
கொடுப்பதும் பின்பு திரும்பி வருவதுமாக இருந்தான். அப்படி, ஒரு முறை திரும்பி வளமான காட்டிற்கு வருகின்ற பொழுது பல பழக்கப்படுத்திய கிளிகளை அவன் கையோடு கொண்டு வந்தான்.
கொண்டு வந்த கிளிகளுக்கு வேடன் சில கட்டளைகளை இட்டான். இந்தக் காட்டில் இருக்கின்ற கிளிகளை உங்களைப் போன்று சுதந்திரமாக தங்கக் கூண்டில் வாழவும், மெத்தையில் படுத்து உறங்கும் அளவிற்கு அவர்களை நீங்கள் மாற்ற வேண்டும் என்றான்.
கூண்டு கிளிகள் வேடனின் கட்டளையை ஏற்று அப்படியே செயல்படத் ஆரம்பித்தன. வளம் மிக்க காட்டில் ஆனந்தமாக பறந்து திரிந்த கிளிகளின் மத்தியில் கூண்டுக்கிளிகள் வாழத் துவங்கியது.
காட்டு கிளிகள் சுதந்திரமாக பறந்து திரிந்து இரை தேடி தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு மாலையில் வீடு திரும்பின இதேபோன்று தினந்தோறும் கிளிகள் தங்கள் வேலைகளை செய்து கொண்டிருந்தன. இதைக் கவனித்துக் கொண்டிருந்த கூண்டுக்கிளிகள் ஒரு நாள் பெரிய கிளிகள் கூட்டை விட்டு வெளியே சென்ற நேரம் பார்த்து கூடுகளில் இருந்த கிளிக்குஞ்சுகளிடம் அவர்களது வேலையை காட்ட ஆரம்பித்தது.
கூண்டுக்கிளி ஒவ்வொரு கூடாகச் சென்று, இங்கே பாருங்கள் பிள்ளைகளா நீங்கள் உங்கள் தாய் தந்தை போன்று அலைந்து திரிந்து கடினமின்றி வாழ்வதற்கு நான் உங்களுக்கு வழி காட்டுகிறேன் என்னோடு வாருங்கள். நீங்கள் வாழ்வதற்கு கூண்டு கட்டித் தந்து விடுகிறேன். உங்களுக்குத் தேவையான தரமான உணவு பாதாம், பருப்பு, முந்திரி பருப்பு, வாழைப்பழம் போன்றவை உங்கள் வீடு தேடி வந்துவிடும். உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அதையும் எங்களது ஆட்களே பார்த்துக் கொள்வார்கள்.
உங்களுக்கு சில பயிற்சிகள் கொடுக்கப்படும் அதில் நீங்கள் தேர்ச்சி பெற்றாலும் வேலை தேர்ச்சி பெறாவிட்டாலும் வேலை. நாளை வருகிறேன் நல்ல பதிலை சொல்லுங்கள் என்று சொல்லிச் சென்றது.
மறுநாள் கூண்டுக்கிளிகள் வருவதற்கு முன்பாகவே பல கிளிகள் ஒன்று கூடி போவதற்கு தயாராக இருந்தன… கூண்டுக்கிளிகள் வந்தன… என்ன எல்லோரும் ஒன்று கூடி நிற்கிறீர்கள் என்று தயக்கத்துடன் கேட்டது. வேறொன்றுமில்லை நாங்கள் உங்களுடன் வருவதற்கு தயாராக இருக்கிறோம் என்றன கிளிக்குஞ்சுகள்.
எல்லோரையும் அழைத்துச் சென்று வேடன் பேசுவது போல கிளிகனை பேச வைத்து பயிற்சி கொடுத்தார்கள். தேர்ச்சி பெற்ற கிளிகளை காட்டில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் ஆளுநராக நியமித்தான், தேர்ச்சி பெறாத கிளிகளை காவலாளிகளாக நியமித்தான் வேடன். தேர்வாகிய ஆளுநர் செந்தமிழ் முரசு
அனைவருக்கும் சில முக்கிய ஆலோசனைகளை வகுத்துக் கொடுத்தான் வேடன்.அதாவது, காடுகளிலே வாழுகின்ற அனைவரும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆனால், அவர்கள் நாகரீகமாக வாழ்வதற்கு உங்களிடம் கொடுக்கப்பட்ட இந்த கல்வி முறையை படிக்கச் செய்ய வேண்டும். கல்விக் கழகங்களுக்கு தலைவராக நீங்களே இருக்க வேண்டும். இது உங்களுடைய காடு. உங்களுடைய உறவினர்கள் அவர்களை நீங்கள் தாள் மேம்படுத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கினான் வேடன்,
ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட கிளிகள் தங்களது பணிகளை சிறப்பாக செய்ய ஆரம்பித்தன. சொன்னதைச் சொல்லும் கிளி வேடனின் பேச்சைக் கேட்டு அப்படியே செய்தது.
வருடங்கள் கடந்து ஓடின. காடுகளில் வளங்களும் குறைந்து கொண்டே போயின. கிளிகள் நன்றாக படித்தன. நாகரிகமான வாழ்க்கை என்று சொல்லி அந்த இடத்திற்கு கிளிகளை நகர்த்தினார்கள்.
நாகரீகமான இடத்திற்கு முன்னேறியதாக நினைக்கின்ற கிளிகளுக்கு சுயமாக சிந்தித்து வாழ தெரியவில்லை. இரை தேடி பசியை தீர்த்துக் கொள்ளவும் தெரியவில்லை. கிளிச்சோதிடம் பார்க்கும் இளி சீட்டு எடுத்துக் கொடுத்து சம்பளமாக ஒரு நெல்மணியை வாங்கி உண்கிறது. அது போல யாராவது சொன்னால் அந்த வேலை செய்வோம் கொடுப்பதைப் பெற்றுக் கொள்வோம் என்ற மன நிலைக்கு அந்தக் காட்டில் உள்ள கிளிகள் மாறிவிட்டன.
இந்த சூழலில் வேடனின் சொந்தக் காட்டிற்கு சில ஆபத்துக்கள் வந்தன. அதனால் வேடன் அவனுடைய சொந்த காட்டுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்த காட்டிலுள்ள அனைத்து கிளிகளும் வேடனின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டன. இந்த கிளிகள் இனி எப்பொழுதும் நமக்கு அடிமை தான் என்பதை உணர்ந்த வேடன் அவனிடம் பயிற்சி எடுத்த கிளிகளிடம் இந்த காட்டை ஒப்படைத்துவிட்டு போய்விட்டான்.
வேடன் வகுத்த விதிகளின்படி கூண்டு கிளிகள் அரசாட்சி செய்கின்றன. இயற்கை வழங்கிய சுதந்திரத்தோடு காட்டிலே வாழுகின்ற கிளிகளை விட கூண்டிலே வாழுகின்ற கிளிகள் மேலானது என்று சொல்லி உண்மைக்கு மாறாக கற்பிக்கப்படுகிறது.
“கூண்டுக்கிளியின் அரசாட்சியில் இப்படித்தான் இருக்கும்” இப்படிப்பட்ட கல்வி முறையில் மக்களுக்கு அறிவு வளரும் வண்ணம் எப்படி கற்பிப்பார்கள். அடிப்படை மாற்றம் தேவை. அதற்கு நல்ல தமிழர் ஆட்சி தேவை.
வள்ளலார் மாணவன் திரு. க.நாகநாதன்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – ஓமன்.