அக்டோபர் 2023
தியாகி சங்கரலிங்கனார்
ஈகம் செய்தாய் உயிர்த்
தியாகம் செய்த செம்மலே!
சங்கம் வைத்து வளர்த்த தமிழுக்காய்
உயிர் நீத்த சங்கரலிங்கனாரே!
விருதுநகர் தமிழ்நாட்டிற்குக் கொடையாகத்
தந்தது உங்களை! தமிழினம் ஒருநாளும்
மறவாது உங்களின் கொடைப் பண்பை!
உண்ணா நோன்பிருந்து உடலைத்
தான் வருத்தினீரே! உறவுகளைக்
கடந்து உயிர்த் தமிழுக்காக மூச்சையடக்கினீரே!
மொழிவழி மாநிலம் வேண்டும் என்றாயே!
தமிழ்நாடு எனப் பெயர் வைக்க
உயிர் துறந்தாயே!
சமத்துவத்தைப் போதித்த
சுதந்திரப் போரட்ட வீரரே!
சாவைச் துச்சமென எண்ணிய
தமிழ்ப் போராளியே!
எழுபத்தி ஆறுநாளும் நம்முயிர்த்
தமிழுக்காக நலம் குன்றினீரே!
தமிழ்நாட்டுக்குத் தன்னுயிரைக்
கொடையாகத் தந்தப் போராளியே!
தமிழ்நாடெனும் நற்பெயரைத் தந்திட்ட
பெருந்தமிழரைப் போற்றுவோம்!
ஊணின்றி உறக்கமின்றி உயிர்துறந்த
உத்தமருக்கு சுடரொளி ஏற்றுவோம்!
வந்தவரெல்லாம் ஆள!
வரலாற்றில் மறைத்தார்
உந்தன் தியாகத்தை!
தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட ஐயா!
நீயே முதல்விதை!
பெருந்தமிழர் ஐயா சங்கரலிங்கனாருக்கு
புகழ் வணக்கம்!
தமிழ்நாடு என்ற பெயர் முழங்க
உயிர் நீர்த்த ஈகியருக்குப் புகழ் வணக்கம்!
திரு. பா.வேல்கண்ணன்,
துணைத்தலைவர்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.