நவம்பர் 2022
மாவீரர்கள் : தமிழினத்தைத் தலைநிமிரச் செய்த தியாகச்செம்மல்கள்!
ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம், வானம் வழங்கும் வலியும், விசனமும், வெறியும், வேதனையும் சேர்ந்து தம் மனதை நனைக்கும் நாளாக இருக்கிறது, மாவீரர் நாள் ! கடந்ததையும், நடப்பதையும் சேர்த்துப் பார்க்கையில், மாவீரர்களின் பெயரை உச்சரிக்கவோ, அவர்களின் நித்திய புகழைப் பாடவோ, நினைவிலேற்றி அஞ்சலி செலுத்தவோ உள்ளபடியே நமக்குத் தகுதியிருக்கிறதா? என்றே எண்ணத் தோன்றுகிறது. மே 2009க்குப் பின்னான பதின்மூன்றாண்டுகளில், அதிகபட்சமாக நமக்குக் கிடைக்கவேண்டிய தனித்தமிழீழ சோசலிசக் குடியரசை அடையாது, குறைந்தபட்சமாக உலகத்தமிழினம் ஓர்மைப்படாதுகூட இருக்கும் நிலை, ஒரு வரலாற்று இழிவு.
ஒருவேளை அடுத்த தொடி நாம் இறந்தால், இருக்குமா என்று தெரியாத. இருந்தால் நிச்சயம் மாவீரர்களைத் தன்னகத்தே கொண்ட சொர்க்கத்துக்கு நாம் செல்லுகையில், புனிதக்கனவுக்காக இறந்த ஒரேயொரு வீரனின், “ஈழம் அடைந்துவிட்டோமா?” எனும் ஆர்வமிகு கேள்விக்கு இல்லையென்று எப்படி முகத்துக்கு நேரே பதில் சொல்லப்போகிறோம்? அந்த நொடி நாம் ஆயிரமாயிரம் முறை நாம் செத்ததுக்குச் சமமில்லையா? தெரியவில்லை! மரணம் நம்மைத் தீண்டுவதற்குள், அந்த உன்னதமான இலட்சியத்தை நிறைவேற்ற என்னவெல்லாம் செய்துவிட முடியுமோ, அத்தனையும் செய்துவிட்டால், இனத்தைச் சாகவிட்ட குற்ற உணர்ச்சி கொஞ்சமேனும் குறையலாம்!
செங்காந்தள்கள் தீச்சுடரைப் போல மலரும் கார்த்திகை மாதத்தில், தமிழினத்துக்கு முக்கியமான இரு நாட்கள் வருகின்றன. ஒன்று, உலகத்தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவனாய் உள்ளபடியே திகழும், நம் தேசியத்தலைவர் மேதகு, வே.பிரபாகரன் அவர்கள் உதித்த நவம்பர் 26; மற்றொன்று நாம் உய்ய, தான் நிரந்தரமாகத் துஞ்சி மறைந்த மானமறவர்களை நினைவிலேற்றும், மாவீரர் நாள்: அதிகபட்ச மகிழ்ச்சியும், ஆற்றொணா சோகமும் அடுத்தடுத்து நம்மைத் தழுவுகையில், உணர்ச்சிக்குவியல்களூடே நாம் அலைகடற்படகென அலையும் நாட்களிவை என்பதில் மாற்றுக்கருத்துகள் இருக்க முடியாது!
இளவிடுதவைச் சமரில், நமக்காகக் களமாடி, இன்னுயிரை ஈந்தவர்களை மாவீரர்களென்று அழைப்பதையும், அவர்களின் ஈகத்தைப் போற்றி 1989 முதல் நவம்பர் 27ம் நாள் ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்துவதையும் உலகமறியும். ஆனால் ஏன் அந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டதெனில், ஈகைச் சுடரேற்றும் மாலை 6.05 மணிக்குத்தான், நெல்லியடித் தாக்குதலில் சிங்களப் பேரினவாத அரசபடைகளைச் சிதறடித்த சத்தியனாதன் என்ற சங்கர், வீரமரணத்தைத் தழுவிய முதற்புலியாக தலைவர் மடியில் தமிழகத்தில் உயிர்விட்டார் என்பதால் தான். விடுதலைப் புலிகளைப் பற்றியும், அவர்களின் கட்டமைப்பும், உறுதியும், செயல்திறனும் எப்படிப்பட்டதென்று, நாம் வெளிப்படையாக அறிந்ததை விட, அறியாததே ஆயிரம் மடங்கிருக்கும். அப்படிப்பட்டவர்களை என்று புறந்தந்த தமிழன்னையிடம் நாமும் உதித்தோமென்பது தான் எப்படிப்பட்ட பெறுதற்கரிய பேறு?

பரந்த இந்த பூமிப்பந்தில், ஓரறிவு தாவரங்களிலிருந்து ஆறறிவு மனிதர்கள் வரை, உயிர்த்திருத்தலை விடவும் விடுதலையாக இருக்கவே போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் தன் உழைப்பில் மொழியை உருவாக்கி, அதன்மூலம் கருத்துக்களைப் பரிமாறும் திறன் கொண்ட மனித இனம், பல்வேறு காலகட்டங்களில், நிலங்களில் விடுதலைக்கான போராட்டத்தைத் தொன்றுதொட்டு நடத்திக் கொண்டேயிருக்கிறது. அதில் சில போராட்டங்கள் காலத்தால் அழிக்க முடியாத காவியங்கள் போன்றதென்றால், புறநானூற்று வீரச்சுவையை நிகழ்நேரத்தில் நடத்திக் காட்டிய செவ்விலக்கியம் தான், ஈழவிடுதலைப் போராட்டம்! அதன் கதைமாந்தர்களாய் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து, எண்ணிறந்த தியாகங்களினால் சர்வதேச அங்கீகாரத்தைத் தவிர, ஒரு கனவு நாட்டைக் கட்டமைத்து நடத்தியவர்கள், விடுதலைப்புலிகள்.
புகை, மது, மாதுவைத் தொடாத ஒழுக்கம்,இனத்துக்காக உயிரைத் துணிந்து தரும் அர்ப்பணிப்பு, பிறர் வாழத் தன்னை உருக்கிக் கொண்ட தியாகம், எதுவுமே செய்யமுடியாமல் எதிரியைக் கையறுநிலைக்குத் தள்ளும் துல்லியம், இனவிடுதலையைத் தவிர வேறேதும் எண்ணாத கொள்கைப்பிடிப்பு, இருப்பதை வைத்து, இருந்த இடத்திலிருந்து வெற்றிகளைக் குவிக்கும் தளர்வற்ற ஊக்கம், மனித சக்திக்கு அப்பாற்பட்ட புத்தாக்க மூளை போன்ற பல குணங்களைக் கொண்டவர்கள், புலி மறவர்கள், துரோகக் கள்ள சிந்தனை கொண்ட ஏமாற்றுப் பிழைப்புவாத சிங்களத் தலைவர்களின் சதிகளை மீறி, பல பத்தாண்டுகளாக உறுதியாகப் போராடியவர்களை, சூழ்ச்சியையும், முதலாளித்துவ நாடுகளின் ஏகாதிபத்திய வெறியையும் கொண்டு அறமற்ற முறையில் வீழ்த்தியதற்காக வெட்கிப்பதைத் தவிர, அவர்கள் வேறேதும் செய்வதற்கில்லை.
தமிழர்களின் திறமையாலும், கடும் உழைப்பாலும் இலங்கையில் பெற்ற செல்வாக்கையும், செல்வத்தையும் கண்டு பொறாமையில் கொதித்து, அன்புவழியைப் பின்பற்றி, ஆசையைத் துறக்கச் சொன்ன புத்தரின் போதனையைத் துறந்தது சிங்கள தேசம். சிங்களத்தின் பெரும்பான்மைத் தேசியவாதம், தமிழர்களை எதிரிகளாகவும், தங்களின் வாய்ப்புகளுக்குப் போட்டியாளர்களாகவும் பார்க்கிறது. 1948ல் இலங்கை விடுதலையடைந்ததிலிருந்து, இன்று வரை திட்டமிட்ட அரச பயங்கரவாதத்தால் ஒரு இனம்,மூன்றாம் தரக் குடிமக்களாக அடக்குமுறைக்கு உள்ளாகிறது. வரலாற்றில் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட இனப்படுகொலை இது மட்டும் தான். விடுதலைப் புலிகள் வன்முறையாளர்கள் என்று சொல்பவர்கள், இலங்கை அரசின் பிணவெறி கொண்ட கோர் முகத்தைப் பற்றி ஏன் பேசுவதில்லை?

ஈழ ஆயுதக்குழுக்கள் குறிப்பாகப் புலிகள் பிறரைக் கொல்கிறார்கள் என்றவர்கள், கால் நூற்றாண்டுகளாகத் தமிழர்கள், தந்தை செல்வாவின் தலைமையில் முன்னெடுத்த அகிம்சைப் போராட்டம் வீழ்த்தப்பட்டதைக் குறித்தும். அதை இரத்ததாலும் கலவரங்களாலும் நிகழ்த்திக்காட்டிய சிங்களத்தின் ஓநாய்த்தனத்தை ஏன் கதைக்க விரும்பவில்லை? சாவு நிச்சயம் என்று தெரிந்த பின்னரே, இனத்தின் உரிமையை அடையவாவது உதவட்டுமென்று ஆயிரக்கணக்கான போராளிகள் புலிகளாகினார்கள்!
கருவில், தெருவில், வைத்தியசாலையில், கலாசாலையில், வீட்டில், பள்ளியில், கல்லூரியில், சந்தையில், சாவடியில், இவ்வளவு ஏன் கனவிலும் கூடத் தமிழர்களின் உயிருக்கு உத்திரவாதம் இவ்லையென்று ஆன பின், தன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ளக் ஒருவன் ஆயுதம் ஏந்த மாட்டானா? ஏந்தினால் அது எவ்வாறு வன்முறையும் பயங்கரவாதமும் ஆகும்? மரணபயம் தான் ஆகப்பெரிய பயம்! புலி வருகிறது, புலி வருகிறது என இறப்பு துரத்துகையில், அந்த மரணபயத்தைத் துறக்க ஒருவன் புலியானான்! சாவைச் சட்டைப்பையில் வைத்து எங்கேயும் செல்கின்றான் என்று சிவர் போலப் பாடியாடாமல், உதட்டுக்கு அருகே தன் உயிரை ஒரு குப்பியில் வைத்துக்கொண்டு களமாடிய சமரன்கள், புலிகள். தன்னையும், தன் குடும்பத்தையும் ஆபத்திலிருந்து காத்த முன்னோர்களை குலசாமிகன் என நாம் தொழுவது வழக்கமென்றால், தன் இனம் வாழத் தன்னையே களப்பலியாகக் கொடுத்த மாவீரர்கள் அனைவரும் இனச்சாமிகள். நன்றி நவிலலும், நன்றி மறவாமையும் தான் நம் மெய்யியலின் அடிப்படை என்பது உண்மையென்றால், கதிரவனுக்கு நன்றி சொல்லும் பொங்கலைப் போன்றும், ஆடி தோறும் பொங்கல் வைத்துக் கும்பிடும் குலதெய்வ வழிபாட்டைப் போன்றும், நமக்காக சாவைத் தழுவிக் கொண்ட நம் இனச்சாமிகளுக்கு மாவீரர் நாளன்று வீர வணக்கத்தைச் செலுத்துவது, நம் தலையாயக் கடமை.
ஒவ்வொரு மாவீரர் நாளின்போதும், நாம் அவசியமாகச் செய்ய வேண்டிய ஐந்து விடயங்கள், பெருமைப்படுவது, வெட்கப்படுவது. சிந்திப்பது, திட்டமிடுவது மற்றும் செயல்படுவது. நமக்காக ஒருவன் சாகக்கூடத் தயாராக இருக்கிறான் என்ற நினைவே நமக்கு வாழப் பல காரணங்களைத் தருகிறது. ஆனால் உண்மையிலேயே நம்மினம் வாழ ஆயிரக்கணக்கானவர்கள் இறந்திருக்கிறார்கள் என்பது நம்மை எவ்வளவு சிந்திக்க வைக்க வேண்டும்? இந்த மொழியின் பழமையும், பண்பாட்டின் தொன்மையுமே சாவை முகத்துக்கு நேரே சந்திக்கும் துணிவைத் தருகிறது. மனிதர்கள் சாகலாம்; மொழி சாகக்கூடாது; மொழி பேசும் இனம் சாகக்கூடாது என்று தன்னைப் பின் வைத்து, பிறரை முன்வைக்கும் பக்குவத்தைச் சொல்லிக் கொடுப்பது, இனத்தின் பெருமைமிகு வரலாறு தான், அந்த ஐம்பதாயிரம் ஆண்டுகால சரித்திரத்துக்காக நாம் பெருமைப் பட வேண்டும்.

தனக்காக இறந்தவன் யாரென்று இந்த இனத்துக்குத் தெரியவில்லை. சாவைக் கொடுத்தேனும் உரிமையை, விடுதலையை வாங்கிட உழைத்த மாவீரர்களைப் படையாகக் சுட்டிப் போரிட்ட தலைவனைத் தெரியவில்லை. அவர்களுக்கு வணக்கம் செலுத்தக்கூட விடாமல் தடுக்கும் தருக்கர்களை, தருதலைகளை தலைவர்கள் என்று விழுந்து கும்பிடத் தெரிகிறது. மக்கள் செத்தாலும் கண்டுகொள்ளாது, தன் பிள்ளைகளுக்கும். தோழியின் உறவினர்களுக்கும் தேடித் தேடிப் பதவி வாங்கிக் கொடுத்து, வரலாறு காணாத ஊழலின் மூலம் சொத்துக்களைக் குவித்த திருடர்களின் பின்னாலும், கலவரத்தை வாக்காக்கி, சாதியின் பெயரால் பிரித்தாளும் பதர்களின் பின்னாலும் ஊளையிட்டுக் கொண்டு, அது தான் அடையாளமென்று மடத்தனமாகப் பேசத்தெரிகிறது. இந்த அறியாமைக்கும், அலட்சியத்துக்கும் இந்த இனம் வெட்கப்பட வேண்டும். தமிழினத் தலைவர், காவிரிச் செல்வி என்றெல்லாம் பெயர் கொண்டவர்கள் ஏன் மாவீரர்களின் தியாகத்தைப் பேசவில்லை? ஒற்றைப் பூப்போட்டு வணங்கவில்லை என்பதையெல்லாம் கேட்கவோ, அல்லது எவன் செய்தாலென்ன செய்யாவிட்டாலென்ன நாம். செய்வோம் என்று நினைக்காத கையாலாகத்தனத்துக்காக இந்த இனம் வெட்கப்பட வேண்டும்.
நம் இனம் கடந்துவந்த பாதையென்ன? நாம் இன்று எங்கிருக்கிறோம்? அடைய வேண்டிய இலக்கு என்ன? என்பதையெல்லாம் சிந்திக்க வேண்டும்! உலகத் தமிழர்கள் ஒன்றிணைய எது தடையாக இருக்கிறது? எதனால் ஈழசோகம் கோடிக்கணக்கான தமிழர்கள் உலகெங்கும் இருக்கையில் கூட, தடுத்து நிறுத்த முடியாதபடி நிகழ்ந்தேறியது? எவன் எதிரி? எவன் துரோகி? என பறவைப் பார்வையில் பகுத்தறிய வேண்டும். விடுதலை பெற்ற இனங்களின் ஆதர்சமாக இருக்கும் யூத இனம், இசுரேலை அடைந்தது ஒரு துரோக வரலாறே ஆயினும், அவர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாய் இருந்தார்கள். ஒற்றையிலக்கை நோக்கி, அதன் சாத்தியத்தைக் கருதாமல், தேவையை மட்டும் கருதி தடைகள் தாண்டிச் சாதித்தார்கள். அந்த ஒற்றுமை இருப்பதாலேயே சுற்றிலும் அத்தனை அரேபியர்களைக் கொண்ட இசுலாமிய தேசங்களின் எதிர்ப்பையும் மீறி இத்தனையாண்டுகளாய், இசுரேல் தன் இருப்பை மத்திய கிழக்காசியாவில் தக்க வைத்துள்ளது. அதே ஒற்றுமை இல்லாமல் போனதால் பாலஸ்தீனியர்களின் தேசம், உலக வரைபடத்தில் துண்டாடப்பட்டது.
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய தேசங்களில் தனிப்பெரும் முதலாளிகளாய் இருந்து, அரசுகளுக்கு அழுத்தம் கொடுப்பவர்களாக இருந்தார்கள், யூதர்கள், பொருளாதாரம் மட்டுமல்லாது, கலை, இலக்கியம், அறிவியல், பண்பாடு போன்ற பல தளங்களில் உலகத்தர ஆளுமைகளாய் இருந்து பல சொல்லாடல்கள் மற்றும் கருத்தாக்கங்களை உருவாக்கும் செல்வாக்கைப் பெற்றிருந்தார்கள். இந்தத் தனிப்பட்ட, சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு வலிமை தான், வல்லரசுகள் அவர்களின்பால் நட்போடு இருக்கவோ அல்லது குறைந்தபட்சம் பகைத்துக் கொள்ளாமல் இருக்கவோ செய்து யூதர்களுக்குச் சாதகமான முடிவுகளை எடுக்க உந்தித் தள்ளியது.

எனவே தனித்திறன் வளர்ப்பு, ஆளுமைகள் உருவாக்கம் போன்ற தனிப்பட்ட வளர்ச்சி, சாதி,சமய, வர்க்க வேறுபாடுகளற்ற சமூக உருவாக்கம், தமிழ் முதலாளிகளின் உற்பத்தித் திறன் பெருக்கம், நிலமும் வளமும் சார்ந்த தொழில்கள் உருவாக்கம் போன்ற பொருளாதார மேம்பாடுகள், கலை, இலக்கியம், மெய்யியல், பண்பாட்டு அடுக்குகளில் தமிழர் விழுமியங்களை நிலைநிறுத்துதல் போன்ற 36 சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலம், தமிழ் இனத்தை உலக அரங்கில் கம்பீரமான ஒரு இடத்துக்கு உயர்த்தலாம். அப்போது, நம்மை அடக்கியாள நினைக்கும் ஆதிக்கச் சக்திகளின் சதிகள் முறியடிக்கப்பட்டு, இத்தனையாண்டு காலப் போராட்டம், இழப்புகள், வலிகள், தியாகங்களுக்கான பரிகாரமாக, எப்படி ஆலோகாச்ட்டுக்காக யூதர்கள் இசுரேலைப் பெற்றார்களோ, அதைப் போல இத்தனையாண்டுகால இன்வழிப்பை ஈடுகட்ட இலங்கையின் தமிழர்கள், ஈழ நாட்டைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இது சாத்தியமா என்று பலர் கேட்டால், வேறு எப்படி மாவீரர்களின் ஈகத்துக்கு நீதி செய்து, முக்கால் நூற்றாண்டாய் நிலவும் ஈழ மக்களின் மனக்காயம் தீர்ப்பது என வினவுங்கள். மேற்குறிப்பிட்ட தலைகீழ் மாற்றங்களைச் செய்து முடிக்க நமக்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் அமைப்பு நிச்சயமாய் ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்கானதல்ல; தமிழர்களாலும் நடத்தப்படுவதல்ல. ஒரு துரும்பைக் கூட நகர்த்த அதனால் முடியாது. அத்தகைய உளுத்துப்போன அமைப்பைத் தகர்த்து, மறுகட்டமைப்பு செய்து, இழந்தவற்றை மீட்டுக் கொண்டே, இருப்பதையும் காத்துக் கொள்ள வேண்டும். உண்மையான தரவுகளாலும், விரிவான ஆய்வுகளாலும், இட்டமிட்ட ஆவணப்படுத்துதலாகும், மறைக்கப்பட்ட நம் வரலாற்றை இந்த மண்ணில் நிறுவ அதிகாரபலம் நமக்கு வேண்டும். அதற்கான குறுகியகால, மத்தியகால, நீண்டகாலத் திட்டங்களை வகுத்து, காலந்தாழ்த்தாது செயல்பட வேண்டும்.
இன்று வரை தொடரும் வெள்ளை வேன் கடத்தல்கள், காணாமற்போதல், காணிகள் பறிப்பு, இராணுவத்தின் அட்டூழியம், ஊர்களுக்கு சிங்களப் பெயர் மாற்றம், கைவிடப்பட்ட தமிழர்கள், நம்பிக்கையற்ற எதிர்காலம் என்பதெல்லாம் சகித்துக் கொள்ளக் கூடியதா என்ன? மே 2009 கடந்து பதின்மூன்றாண்டுகளுக்கு மேலான பின்னும், ஒரு அடி கூட முன்னேற்றப் பாதையில் ஈழமக்களின் வாழ்வு நகராதது, ஒட்டுமொத்த தமிழினத்தின் வரலாற்றுத் தோல்வி. தமிழர் தாயகத்தில் தமிழருக்கான அரசு இல்லாததே பிரச்சனையின் ஆணிவேர் என்பதால் மீண்டும்அடிப்படையிலிருந்து தொடங்க வேண்டியுள்ளது.
சக தமிழினத்தின் மகனாக அல்லது மகளாக, இனத்தைக் காக்கும் கடமை நமக்கு நான்காவது ஈழப்போரின் முடிவில், நம் முன்னவர்களிடமிருந்து கையளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கட்டமைத்துப் போன தேசத்தில், தமிழ்த்தேசியத்தின் வழியில், நமக்கான இறையாண்மைமிக்க அரசை அமைப்பது தான். ஆதியிலிருந்து இந்த நிமிடம் வரை, இலங்கை மண்ணில் சித்தப்பட்ட தமிழர்களின் ஒவ்வொரு இரத்தத்துளிக்கான காரணமும், இழக்கப்பட்ட ஒவ்வொரு உயிருக்கான நியாயமும், எழுபது ஆண்டுகால போராட்டதுக்கான வெற்றியும், தமிழக மக்களின் இமாலயத் தவறுக்கான பரிகாரமும், இனியேனும் மானத்துடன் நம்மினம் இப்புவியில் விடுதலையுடன் வாழ்வதற்கான வழியும் ஆகும். அதைச் செய்து முடிப்பதே. மாவீரர்களுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ் சலியும், வீரவணக்கமும் ஆகும். அதுவரை நாம் குற்ற உணர்ச்சியில் குமைபவர்களாகவும், கடமை தவறியதற்காக வருந்துபவர்களாகவும் மட்டுமே மாவீரர் நாளைக் கடக்க முடியும்.
திருமதி. விமலினி செந்தில்குமார்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.