நவம்பர் 2022
நந்திக்கடல் தந்த மாவீரம்
மங்காத மா வீரமே! குன்றாத குல வினக்கே!
புலிக்கொடி பறக்கதமிழ்க்குடி சிறக்க வந்த
புற நானூற்று வீரனே! தமிழ் தந்த தலைவனே!
இறையாக வந்த முருகனே! அணை தந்த கரிகாலனே!
குமரனின் கைவேல் பிள்ளையின் பிள்ளை
கொற்றவை பார்வதி அன்னையின் குழவி
பெற்றதால் பெற்றனர் பெரும் பேறு
உற்றது தமிழினம் பார் போற்ற
வழித்துணையாக வரும் புன் முறுவல்
வாழ்துணையாக வந்த மதி வதனமோ
நண்பனே வாய்த்தான் முதல் மகவாக
கண்ணனின் பிறப்பிடம் செல்ல மகளாக
இளமதிச் செல்வனின் திருமுகம் கண்டால்
குளமாய் மாறுதே எங்களின் கண்கள்
உலகெலாம் தமிழர் உள்ளம் கொதிக்குதே
களமெல்லாம் தமிழ்ப் புலிகளால் நிறைக்குதே
எக்குடியும் சிறக்கவே உன் எண்ணம்
தமிழ்க் குடியும் சிறக்கவே உன் பயணம்
சிரம் எல்லாம் சிந்தனை செவி இரண்டும் செம்மை
கண்ணசைவில் கூர்மை எண்ண மெல்லாம் இலக்கு
மூச்செல்லாம் இன விடுதலை பேச்செல்லாம் நறுக்கோலை
செவ் வாயில் இளநகை சங்குக் கழுத்தில் விடநகை
இடைப்பட்டையில் துவக்கு மிடுக்கான உடுப்பு
திண் தோள்களில் தினவு வன் களிற்றின் நடப்பு
தாழ் அறியா அன்பு தரணி போற்றும் மாண்பு
பார் முழுதும் பட்டறிவாக போர் முடிக்க உற்றதுவாக
அறத்தின் வழி நின்றாய் அன்பில் உருகி நின்றாய்
அன்னையாய் உனைக்கொண்டார் அணைத்துக்கொள்ள உடன் வந்தார்
படைக் களமே நிலை என்று
தடைகள் யாவும் எதிர்கொண்டு
படை களத்தினையும் நேர் கொண்டு
விடை கொடுத்தாய் வலி கொண்டு
உதவி வரும் என்று ஓய்ந்திருக்கவில்லை
காலம் வரும் என்று காத்திருக்கவில்லை
கைக்குக் கிடைத்ததை கருவி யாக்கினாய்
எதிரியிடம் பறித்து அவர் மீதே ஏவினாய்
வல்லோர்க்குப் புல்லாயுதமாக வழிவந்த அறிவாயுதமாக
நெஞ்சத்து உரமாயுதமாக உச்சத்தில் உயிரே ஆயுதமாக
படைகள் பல மடங்கு எதிர்க்க தடைகள் பல எதிர் இருக்க
அறிவாலே திட்டம் தீட்டி அடித்தாயே விரட்டி விரட்டி
புலிப் பெயரைக் கேட்டவுடன்
பிடரி மயிர் மண் சுமக்க
புறம் காட்டும் எதிரி கண்டு
புன்முறுவல் பூத்தாயே
கரும் புலிகளைக் கண்டதுமே
வெருண்டோடும் விந்தை கண்டோம்
குலப் பெயரைக் கேட்டவுடன்
குலைநடுங்கும் எதிரிக்கு இன்றும்
முறத்தால் புலி விரட்டிய அன்னையர்
அறம் காக்க தம் மகவை ஈந்தனர்
புறம் காட்டாப் புலிகளென வீரர்கள்
மறம் காக்க உயிரீந்த மாவீரர்கள்
அடுப்பூதிய மான மறத்திகள்
தடுப்புகளை உடைத்துக் கொண்டு
இரும்பேறிய உரத்துடனே
கரும்புலிகளாய் வரித்தனரே
மை வரைந்த மலர்க்கொடிகள்
மெய் வருத்தம் காணாது
கை நிறையப் படைக்கலம் ஏந்தி
பகை மறுத்ததைப் பார்த்தோமே
சினத்தின் வலிமை தெரிய
இனத்தின் மீது கைவை என்றாய்
ஆயுதப் போரிலும் அறநெறி கொண்டாய்
பாயும் புலியெனப் பகைவரை வென்றாய்
உலகப் பொது மறை மொழிக்கேற்ப
உயிரினும் மேலது ஒழுக்க மென்றாய்
ஒழுக்கம் தவறியது யாராகினும்
வழக்கின் தீர்ப்பு மாறாதென்றாய்
தேயம் காக்க வந்தோமென்று
தேயத் தந்தையை கொன்றவர்கள்
புத்தன் வழியை ஏற்றோமென்று
புத்தனையே கொல்கிறவர்கள்
கொக்கரிக்கும் இவர்களுக் கிடையே
சிக்கித் தவிக்குது தமிழினமே
ஓயாத அலைகளாய் நடக்குது இங்கே போராட்டம்
சாயாதோ நம்மீது உலகத்தின் கண்ணோட்டம்
பஃறுளியாற்றுடன் குமரிக் கோடும்
பரந்த நிலமாய் விரிந்த தமிழினம்
வீழ்ந்து கிடப்பதோ எந்நாளும்
எழுந்து வளர்வதே உன் எண்ணம்
வேலனின் வழித் துணைகொண்டு
சோழனின் புலிக் கொடியேந்தி
நற்றமிழர் நனி சிறந்திட
நந்திக் கடலின் நாயகனாக
எண்ணிய வண்ண மெல்லாம் தி
ண்ணிய வடிவம் கொள்ள
வன்னியின் காட்டுக்குள்ளே
பொன்னியின் செல்வனானாய்
அழகுடை குடும்பத்தை இனத்திற்காக இழக்கவும்
பிழையானால் தன்னையே மெய்காப்போர் சுடலாம் என
உன்போல் தலைவன் எவனுமில்லை
இனிமேல் எவரும் பிறப்பதற்கில்லை
குன்றுகள் தோறும் தமிழ்க்கடவுள்
முப்பாட்டன் முருகன்
தமிழர் உள்ளம் தோறும்
தமிழ்த்தலைவன் மேதகு பிரபாகரன்!
திரு. ம.இராமகிருசுணன்,
ஆன்றோர் பேரவைத் தலைவர்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.