நவம்பர் 2022
எழுத்தோலை
நம் முன்னோர் கல் பழங்காலத்தில் பனை ஓலைகளில் பயன்படுத்தப்பட்ட பொருள் எழுத்தாணி எனப்படுகிறது. எழுத்தாணிகளைக் கொண்டு எழுதப்பட்ட எழுத்தும், சொல்லுமே இன்று மனித குலத்தின், குறிப்பாக தமிழினத்தின் பின்நோக்கிய வரலாற்றுப் பதிவினை, இலக்கண, இலக்கியங்களை, அரசியல், ஆட்சியியல், அக, புற வாழ்வியல் முறைகளை, கணக்கு, அறிவியல், வானியல், கட்டிடக்கலை, மருத்துவம் முதலான தரவுகளை அடையாளங்காணக்கூடிய வாய்ப்பினைக் கொடுத்துள்ளது. இவ்வகையில் எழுத்தாணி பற்றி நாம் அறிந்துகொள்வது நமது கடமையாகிறது.
எழுத்தாணி
கூருளியும் ஊசியும் எழுத்தாணி போல் பயன்படுத்தப்பட்ட செய்தியைச் சங்க இலக்கியங்களும் சிந்தாமணியும் குறிப்பிடுகின்றன. பழங்காலந் தொட்டே எழுதுவதற்கு எழுத்தாணி பயன்படுத்தப்பட்டாலும் எழுத்தாணி என்கிற சொல்லை முதன் முதலாக பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஏலாதி தான் குறிப்பிடுகிறது. அதைக் கீழ்கண்ட பாடல் மூலம் அறிய முடியும்.
“ஊணோடு கூறை வெழுத்தாணி புத்தகம் பேணோடு மெண்ணும் மெழுத்திவை மாணோடு கேட்டெழுதி யோதிவாழ் வார்க்கீய்ந்தா ரிம்பையான் வேட்டெழுத வாழ்வார் விரிந்து” (ஏலாதி 63)
உரை ஊக்கத்தோடு கற்கும் மாணாக்கர்களுக்கு ஊண் உடை எழுத்தாணி ஏடு முதலியன கொடுத்துதவுகின்றவர்கள், புலவர் பெருமக்கள் தமது வரலாற்றை விரும்பி எழுத வாழ்வு பெருகி செல்வராய் மாட்சியுடன் (சிறப்புடன்) வாழ்வர்.
பனை ஓலைகளின் மேற்பரப்பு கடினமாக இருப்பதால் நேரிடையாக எழுத முடியாது. வெட்டிப் பதப்படுத்தப்பட்டு, கட்டி வைக்கப்பட்ட அல்லது தனித்த ஓலைகள் எழுது வதற்காகப் பயன்படுத்தப்பட்டது.
பனை ஓலைகளில் இரண்டு வகையாக எழுதப்பட்டன. ஒன்று ஓலைகளின் மீது எழுத்தாணி கொண்டுக் கீறி எழுதும் முறை, மற்றொன்று மை கொண்டு எழுதும் முறை ஆகும். ஓலைகளில் எழுத்தாணி கொண்டுக் கீறி எழுதம் முறை மிகப்பழமையானது. ஓலைகளின் மீது எழுத்தாணி கொண்டு எழுதும் முறை தமிழ்நாட்டிலிருந்து, வடக்கிலும் மற்றத் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் பரவியது.
வடக்கில் மை கொண்டு ஓலையின் மேற்பரப்பில் எழுதும் முறை அதிகமாகக் கையாளப்பட்டது. கருக்கிய சங்கின் பொடி அல்லது விளக்குக் கரியுடன் வேல மரத்துப் பிசின் மற்றும் மழை நீருடன் சேர்த்துச் செய்யப்பட்ட மை கொண்டு எழுதப்பட்டது. வட இந்திய நூலகங்களில் கிடைக்கும் பல சுவடிகள் இம்முறையில் எழுதப்பட்ட பல வண்ண ஓவியங்களுடன் இருக்கின்றன.
எழுத்தாணிகள் ஒருகையால் ஐந்து விரல்களாலும் பிடிக்கப்படக்கூடிய ஒரு மரத்துண்டு, கை வழுக்காமல் இருக்க, அதன்மீது சற்று ஆழமான கீறல்கள் மற்றும் வேலைப்பாடுகளுடன் அமைந்திருக்கும். எழுதப் பயன்பட்ட எழுத்தாணிகள் எலும்பு, தந்தம், பித்தவை, செம்பு. இரும்பு, தங்கம் போன்றவற்றினால் செய்யப்பட்டிருந்தன. இரும்பினால் செய்யப்பட்ட எழுத்தாணிகள் பெருமளவில் புழக்கத்திலிருந்தன. தந்தத்தை எழுத்தாணியாகப் பயன்படுத்தி எழுதினர் என்பதை, பாரதக் கதையை வியாசமுனிவர் சொல்ல பிள்ளையார் எழுதியதாகப் புராணங்கள் கூறுகின்றன. இதில் அவர் எழுதிய எழுத்தாணி தேய்ந்துப் போனதால் தன்னுடையக் கூரிய தந்தத்தை ஒடித்து எழுதியதாக குறிக்கப்படுகிறது. இதிலிருந்து தந்தங்களில் இருந்தும் எழுத்தாணிகள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று எண்ண முடிகிறது.
எழுத்தாணி வகைகள்:
சுவடிகளில் எழுதப் பயன்பட்ட எழுத்தாணிகள் பலவகைப்படும். அவை, அலகெழுத்தாணி, குண்டெழுத்தாணி, கணையெழுத்தாணி, மடிப்பெழுத்தாணி, மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, தேரெழுத்தாணி. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை,
- குண்டெழுத்தாணி,
- வாரெழுத்தாணி,
- மடக்கெழுத்தாணி
என்பனவாகும்.
குண்டெழுத்தாணி:

குண்டெழுத்தாணி என்பது அதிக நீளம் இல்லாமல் கொண்டை கனமாகவும் குண்டாகவும் அமைந்திருக்கும். இதைத் தொடக்க நிலையில் எழுதுபவர்கள் பயன்படுத்துவர். இதன் கூர்மை குறைவாக இருக்கும். இதனைக் கொண்டு பெரிய எழுத்துகளைத்தான் எழுதமுடியும்.

மடக்கெழுத்தாணி:

மடக்கெழுத்தாணி என்பது வாரெழுத்தாணியைப் போல் ஒரு முனையில் பனை ஓலைகளின் மீது அழுத்தி எழுதக் கூரியமுனையுள்ள தேவையான அளவு நீண்ட ஆணி. மறுமுனையில் பனை ஓலைகளை எழுதப் பயன்படும். வகையில் சீராக்க சிறிய கத்தி ஆகியவைகளைக் கொண்டது. இந்த ஆணியையும் கத்தியையும் மடித்து வைக்க ஏதுவாக அந்த மரத்துண்டின் இரு பக்கங்களிலும் ஆழமாக நீளவாக்கில் குடையப்பட்டு,
வாரெழுத்தாணி:

வாரெழுத்தாணி என்பது குண்டெழுத்தாணியைவிட நீளமானது. மேற்புரத்தில் கொண்டைக்குப் பதிலாகச் சிறிய கத்தி அமைந்திருக்கும்.
இக்கத்தி தனியாக இணைக்கப்படாமல் ஒரே இரும்பில் நுனிப்பக்கம் கூர்மையாகவும், மேற்பக்கம் தட்டையாகக் கத்தி வடிவிலும் அமைந்திருக்கும். நுனிப்பக்கம் எழுதவும் மேற்பக்கம் ஓலைவாரவும் பயன்படுவதால் இது வாரெழுத்தாணி என்று அழைக்கப்படுகிறது.
நன்றாக ஓலையில் எழுதும் பழக்கமுடையவர்கள், தாங்களே அவ்வப்போது ஓலையினை நறுக்கி, வாரி ஒழுங்குபடுத்தி ஏடுகளாக அமைத்துக் கொள்ளும் நிலையில் இவ்வெழுத்தாணியினைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்தாணியே பலராலும் பயன்படுத்தப்பட்டது. இவ்வெழுத்தாணியைப் பனையோலையினால் செய்த உரையில் செருகி வைத்திருந்தனர்.
இரண்டு பகுதிகளையும் மடக்கி இடையில் உள்ள கைப்பிடியில் அடக்கிக் கொள்ளுமாறு அமைந்திருக்கும். மடக்கிவைக்கும் தன்மை கொண்டதால் இது மடக்கெழுத்தாணி என்று அழைக்கப்படுகிறது. இதன் கைப்பிடி மரம், மாட்டுக்கொம்பு, தந்தம், இரும்பு, பித்தளை போன்றவற்றால் செய்யப்பட்டிருக்கும். இவ்வெழுத்தாணியைப் பயன்படுத்தாதபோது மடக்கி வைப்பதால் பாதுகாப்புடையதாக இருந்தது.
சங்க காலம் தொட்டே ஏட்டில் எழுத்துக்களை பொறிப்பதற்கு எழுத்தாணி பயன்படுத்தப்பட்டது. பல இலட்சம் சுவடிக்கட்டுகளின் கோடிக்கணக்கான ஓலைகளில், எண்ணற்ற இலக்கண, இலக்கியங்களை தனது கூர்முனை நேயத்தேயத் தடமாகப் பதித்த எழுத்தாணிகள் இன்று மறந்து, மறைந்து போன பாவனைப் பொருளாகிவிட்டது, எழுத்தாணி என்றாள் என்னவென்று கேட்கும், மரபை மறந்த, மரபை இழந்த குமுகமாகிவிட்டோம்.
இருப்பதைக் காப்போம், இழந்ததை மீட்போம்.
எழுத்தோலை நீளும்…
திரு. ம.இராமகிருசுணன்,
ஆன்றோர் பேரவைத் தலைவர்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.