டிசம்பர் 2022
தனித்தமிழ் மீட்சியே தமிழ் மொழி மீட்சி
வடமொழிக் கலப்பில்லா தனித்தமிழ பயன்பாடு தமிழர் நிலத்தில் இந்தி உட்பட்ட பிறமொழி எதிர்ப்பு ஒரு புறமிருக்க, தலையாய் பணியாக தனித்தமிழ்ப் பயன்பாட்டை எழுத்து, உரை என அனைத்து நிலைகளிலும் தளங்களிலும் செயல்படுத்துவதற்கான தேவை மிகுதியாக உள்ள காலம் இது.
மாட்சிமிக்க நம் தாய்த்தமிழ் மொழி, வெவ்வேறு காலகட்டத்தில் தனது வளாச்சி நிலைகளில் பிறமொழி மற்றும் வடமொழிக் கலப்பினை எதிர் கொண்டு தீடூழி நிலைத்து வாழும் தன்மையினைக் கொண்ட வலிமையான இலக்கண அமைப்பைக் கொண்டிருந்ததை, நமக்குக் கிட்டிய தொன்மையான இலக்கண நுவான தொல்காப்பியம் வழி அறிகிறோம். ஆயினும் பலண்டைய தமிழர், கால ஓட்டத்தில் தமிழ் மொழியின் வளம் மற்றும் கட்டமைப்பைக் காக்க தொல்லாசான் நிறுவிய நூற்பாக்களை நுண்ணறிவுடன் ஆய்ந்து செயல்படுத்தத் தவறியதன் விளைவாக துளு மலையாளம் தெலுங்கு போன்ற பற்பல தென்னிந்திய மொழிகள் தோன்றின. படையெடுப்புகள், வணிகம் மற்றும் பண்பாட்டுச் சிதைவுகள் இதற்கு வழி வகுத்தன.
குறிப்பாகத் தமிழர் வாழ்வியலில், அக்கால மன்னர்கள் மற்றும் சமயத் தலைவர்களின் மொழி சார்ந்த குறுக்கீடுகள் மற்றும் திணிப்புகள், தமிழர் உணராவண்ணம் தனித்தமிழின் உருச்சிதைவிற்கு வழி வகுத்தது. சமயங்கள் மொழியின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அதே வேளை நல்வாய்ப்பாக அவ்வமயம் வாழ்ந்த மன்னர்களின் சமய ஈடுபாடும் குறிப்பாக “சைவம்” முதலான தமிழர் சமயங்கள் வழி தனித்தமிழின் உரு காக்கப்பட்டதையும் நாம் மறுக்க இயலாது. பிற்பாடு ஆரிய சூழ்ச்சியின் வாயிலாக இறைவனுக்கும் மக்களுக்குமான இணைப்பு மொழி வடமொழி என்ற கருத்து நிறுவப்பெற்று வடமொழி கலந்த கொடுந்தமிழ் பயன்பாடு பெருசியது.
ஆரியர்களின் வடமொழி இலக்கணங்கள் வடக்கில் முதலில் தோன்றி அதுவே தமிழ் இலக்கணங்ளுக்கான வேராக அமைந்தது போன்ற ஒரு பொய் தோற்றம் ஏற்படுத்தப்பட்டது. பிற்காலத் தமிழர் விழிப்படைத்து தங்கள் தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்து கண்டறிவர் என ஆரியன் அறிந்ததன் விளைவாக, இலக்கண மற்றும் இலக்கிய ஆக்கங்கள் மற்றும் அவற்றை ஆக்கியோர்களின் வரலாறு திரிக்கப்பட்டதாக, இடைச்செருகல்கள் நிறுவப்பட்டதாக, நமக்கு இதுவரை கிட்டிய பல்வேறு தரவுகள், ஆய்வு கட்டுரைகள் வழி அறிகிறோம். அண்மையில் காலஞ்சென்ற மூத்த தமிழறிஞர் இரா. இளங்குமரனார் அவர்கள், தொல்காப்பியத்தில் இரண்டு விழுக்காடு வடமொழிச் சொற்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனித்தமிழ் உருச்சிதைவு நெடுங்காலம் மெல்ல மெல்ல நிகழ்ந்த நிலைமாற்றம், இம்மாற்றத்தை தமிழ் பெருமக்கள் நாம் இனங்கண்டு விழிப்படைய தவறினோம் என்பது மறுக்க இயலா வலி மிகுந்த மெய். மெய்யான தமிழ் மொழி மீட்சி என்பது தனித்தமிழ் மீட்சியே. ஆக்கியோர்களின் ஆக்கங்களின் சுவை கெடும் உரிமை கெடும் பொருள் அறியாது போகும் போன்ற கூற்றுகளை முன்னிறுத்தி தனித்தமிழ்ப் பயன்பாட்டைத் தவிர்க்கும் நிலையை மாற்ற வேண்டிய கடமை தமிழர் ஒவ்வொருவருக்கும் உண்டு. குறைந்தது நம் எழுத்தாக்கங்களில் தொல்காப்பிய மொழி மரபு (அதற்பட யாத்தல்) கெடாது காக்க வேண்டும். இனியும் நாம் நம் செயற்பாட்டில் மாற்றம் செய்யாதிருப்பின் நம்மால், நம் கண் முன்னே தாய்த்தமிழ் மொழி சிதைவுண்டழியும்.
தமிழ் மீட்சிப் பாசறை அமைத்து, தமிழ் மொழி காக்கும் நமது நாம் தமிழர் கட்சியின் பங்கு தமிழர் வரலாற்றில் எத்தாளும் போற்றப்படும். தமிழுணர்வு மிகுந்த தமது அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் முனைப்பு, சிந்தனைத் தெளிவு, தமிழ் மொழி மற்றும் இலக்கியப் படைப்புகளின் மாட்சி சார்ந்த அவரது எழுச்சி உரைகள் மற்றும் அதன் தொடர்புடைய செயல்பாடுகள், இளையோர்களின் உள்ளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை நாம் எவரும் மறுக்க இயலாது.
தனித்தமிழ் இயக்கம் தோற்றுவித்து, தனித்தமிழ் வளர்த்த மறைமலை அடிகள் போன்ற அறிஞர் பெருமக்கள் தொடங்கிய புள்ளியிலிருந்து தமிழ் தேய அரசியல் போற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் நாம் யாவரும், இயன்றவரை கீழ்க்காணும் வழிமுறைகளைத் தவறாது செயல்படுத்தித் தனித்தமிழ் மீட்சியின் வாயிலாக நம் தாய்த்தமிழ் மொழி நீடுழி வாழ்விக்கத் தமிழராக நம் கடமையைச் செய்தல் வேண்டும்.
1. இயன்றவரை பிறமொழி வடமொழி சொற்கள் பயன்பாட்டைத் தவிர்த்தல் (செய்தால் முழுமையாக சிறப்பான முறையில் மட்டுமே ஒரு செயலைச் செய்தல் வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு இம்மி அளவு மாற்றமாயினும் அதைச் செயல்படுத்தல்).
2.தமிழ் தமிழ் அகராதிப் பயன்பாட்டை வழமை ஆக்குதல்.
3.அன்றாட வாழ்வில தனித்தமிழச் சொற்கள் பயன்பாட்டைச் செயல்படுத்தல்.
4 ஆக்கங்களின் கருத்துருவிற்கு வழங்கும் சிறப்பு நோக்கை தனித்தமிழ்ப் பயன்பாட்டிற்கும் வழங்குதல்.
5. தனித்தமிழ் நிறைந்த இலக்கியங்களைப் பொருளறிந்து கற்றல்.
6. நம் தொன்ம இலக்கண நூலான தொல்காப்பியம் பொருளறிந்து கற்றல். மொழி மரபு மாறாது ஆக்கங்களை இயற்றுதல்.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
தமிழ்த்திரு. மறைமலை வேலனார்,
துணைத் தலைவர், சுபைல் மண்டலம்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.