டிசம்பர் 2022
பட்டினப்பாலை (பாடல் 60-77/301)
வரி மணல் அகன் திட்டை
இரும் கிளை இனன் ஒக்கல்
சுரு தொழில் கலி மாக்கள்
கடல் இறவின் சூடு தின்றும்
வயல் ஆமை புழுக்கு உண்டும்
வறள் அடும்பின் மலர் மலைந்தும்
புனல் ஆம்பல பூ சூடியும்
நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரு
தாள் மீன் விராய் கோள்மீன் போல
மலர் தலை மன்றத்து பலருடன் குழீஇ
கையிலும் கலத்திலும் மெய் உற தீண்டி
பெரு சினத்தால் புறம்? கொடாஅது
இரு செருவின் இகல் மொய்ம்பினோர்
கல எறியும் கவண் வெரீஇ
புள் இரியும் புகர் போந்தை
பறழ் பன்றி பல் கோழி
உறை கிணற்று புறம் சேரி
மேழகம் தகரொடு சிவல் விளையாட (77)

பொருளுரை :
காவிரிப்பூம்பட்டினத்தில் நெளிவுகள் சேர்ந்த மணல் கொண்டுள்ள அகண்ட திட்டுகள் உள்ளன. ஒரே இனத்தை சார்ந்த வலிமையான தொழில் புரியக்கூடிய பல்வேறு ஆடவர்கள் அவ்விடம் உள்ளனர். அவர்கள் கடல் இறாலின் வேகவைத்த இறைச்சியையும், வயலில் உள்ள ஆமையை பொசுக்கிய இறைச்சியையும் உண்பர். அவர்கள் மணற்பாங்கான இடத்திவ் மலரும் அடப்பம் பூவை தலையில் கட்டியும், நீரில் பூக்கும் ஆம்பல் பூக்களைச் சூடவும் செய்வர்.
நீல நிற வானில் வலப்பக்கமாக எழும் விண்மீன் கோள்களுடன் இணைந்து திரிவது போன்று, புறமுதுகு காட்டாது மிகுந்த சினத்துடன் தங்கள் கைகளும் உடலும் தீண்டும்படி நீண்ட போர் புரியும் வலிமை மிகுந்த பலரும் அங்குள்ள பரந்த மன்றங்களில் போர் செய்வர்.
அவர்கள் கல் எறியும் கவணைக் கண்டு அஞ்சி புகார் நகரில் உள்ள கபில நிறமுள்ள பனை மரங்களிலுருந்து பறவைகள் பறந்து ஓடும்.
பல குட்டிகளைக் கொண்டுள்ள பன்றிகளும் பல்வேறு கோழிகளும் அங்கே உள்ளன. உறை கிணறுகள் உள்ள புகார் நகரின் புறத்தேயுள்ள புறச்சேரியில் செம்மறி ஆட்டுக்கிடாயுடன் கவுதாரி பறவையும் விளையாடும்.
தமிழ்த்திரு. மறைமலை வேலனார்,
துணைத்தலைவர், சுபைல் மண்டலம்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.