சனவரி 2023
மானமிகு வாழ்வு வாழத் துணிவற்ற தமிழக வாரிசுகள் – உச்சகட்ட அடையாளச் சிக்கலில் தமிழ் இளைஞர்கள்
தைத்திருநாளாம் பொங்கலை முன்னிட்டு, தொடர் விடுமுறை இருக்கும் என்பதால் துணிவு மற்றும் வாரிசு படங்கள், கடந்த 11ம் தேதியன்று வெளியிடப்பட்டன. இரு உச்ச நடிகர்களின் திரைப்படம் ஒரே நாளில் வெளியாகிறது என்பதால், இதற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து தமிழகமே இவ்விரு படங்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது என்கிற பிம்பம் ஊடகங்கள் வழி ஊதிப் பெருக்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வழக்கம்போல இந்தப் படங்களையும் வெளியிடுகிறார்கள் என்பதால், அதிக பரபரப்பு தொற்றிக் கொண்டது. பெரும் ஆரவாரத்தோடு இரசிகர்களின் அதீத கொண்டாட்டங்களோடு படங்கள் வெளியாகி இருந்தாலும் கூட, பொதுச்சமூகம் கவலைக்குள்ளாகும் வகையில் பல்வேறு விடயங்கள் நடந்தன. அவற்றுள் மிக முக்கியமானது ஒரு இளைஞரின் மரணம்.
குறைந்தது ஐம்பதாயிரம் ஆண்டுகளேனும் தொன்மைவாய்ந்தது தமிழ்மொழியென்று மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் சொல்கிறார். ஒரு பழமையான பண்பட்ட சமூகத்தில் கலைகள் செழித்துப் பொலிந்திருக்கும். அதுவும் இயல், இசை மற்றும் நாடகத்தை முத்தமிழாக வரையறுத்துள்ளது நம் தமிழினம். நாடகம் எனும் சிறப்புவாய்ந்த நிகழ்த்து கலை குறித்து சிலப்பதிகாரத்தில் ஏகப்பட்ட குறிப்புகள் உள்ளன. இக்கலை மீது அதிக ஆர்வம் காட்டும் நமது வரலாற்றின் தொடர்ச்சி தான், திரைக்கலையின் மீதான தமிழ்ச்சமூகத்தின் மிகுதியான ஈடுபாடும். தமிழ்நாட்டில் தான், அதிகபட்சமான நடிகர்கள் நாட்டையே ஆளும் அரசியல் தலைவர்களாகப் பரிணமித்துள்ளனர். திரைக்கலை மீதான மோகம் என்பது இன்று வெறியாக மாறி உயிர்குடிக்கும் அளவு வளர்ந்ததற்கு சமூகத்தில் பல்வேறு பகுதியினரை நாம் கை காட்ட வேண்டியிருக்கும்.
தமிழக திரைத்துறைக்கு இன்று வயது நூறுக்கும் மேல். நடிகர்கள் சமூகத்தில் அதீத ஆதிக்கம் செலுத்தும் ஆளுமைகளாக இருப்பது இன்று நேற்றல்ல; தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்தே இருக்கிறது. அதன் பின் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி, இரஜினி மற்றும் கமலஹாசன் வரிசையில் இன்று விஜயும், அஜீத்தும் இருக்கிறார்கள். இவர்கள் தங்களது வியாபாரப் போட்டிக்காக ஒரே நாளில் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட தேவையற்ற விளைவுகள் பலரையும் முகம் சுளிக்க வைக்கின்றன. தற்போதைய அரசில் அதிமுக்கிய இடத்தைப் பெற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் படங்கள் என்பதால் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமே அதிக வசூலைக் குவிக்கும் முனைப்புடன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தடை செய்யப்பட்ட நள்ளிரவுக் காட்சிகள் அவசர உத்தரவின் பேரில் திரையிடல், கொள்ளை விலைக்கு அரங்க நுழைவுச் சீட்டுகள் விற்றல், மோதிக்கொண்ட இரசிகர்களால் பதாகைகள் கிழிப்பு, எரிப்பு, திரையரங்கத் தாக்குதல் மற்றும் சூறையாடுதல், வாய்த்தகராறுகள், கைகலப்புகள், கலவரங்கள், சட்ட ஒழுங்கு சீர்குலைவுகள் காரணமாக காவல்துறை தடியடிகள் ஆகியன நடந்தன.
சென்னையில் பார உந்து ஒன்றில் மேலேறி நடனமாடிய ஒரு அஜீத் இரசிகர் கீழே விழுந்து மரணமடைந்துள்ளார். இன்னொருவர் திரையரங்க வாசலில் காயமடைந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கும் போது முதல்காட்சி பார்க்கவிடாமல் செய்துவிட்ட தாகக் கதறியதோடு, பெற்றோரையும் படிப்பையும் விட துணிவு படத்தைப் பார்ப்பதே முக்கியம் என்ற அளவுக்கு இந்த திரைப்பட மோகம் இளைஞர்களை வெறி கொண்டு உன்மத்தமடைய வைத்திருக்கிறது. இவ்வாறு நடப்பது முதல்முறையில்லை என்பது போல இறுதிமுறையாகவும் இருக்காது என்பது நமக்குத் தெரியும். இதற்கெல்லாம் என்ன காரணம் உற்றுநோக்கும்போது தான், இளைய தலைமுறை தமிழ்ப் பிள்ளைகள் அடையாளச் சிக்கலில் உச்சத்தில் இருப்பது நமக்குப் புரியும். பொதுநோக்கும், சுய ஒழுங்கும் அடிப்படையாக அல்லாது வேலைக்குச் செல்வதற்கான தகுதியில் மட்டுமே குறியாக இருக்கும் வணிகமயமான கல்விமுறை, வாசிக்கும் பழக்கமற்ற வளர்ப்புச் சூழ்நிலை, விழுமியங்கள் சார்ந்த ஆளுமை வளர்ப்புக்கு வாய்ப்பற்ற வீட்டுநிலை, முற்றுமுழுதாக அரசியல் பங்கேற்பிலிருந்து இளம்பிள்ளைகள் ஒதுக்கப்பட்ட் அவலம் ஆகியனவே பொறுப்பற்ற, கொண்டாட்ட மனநிலை முற்றிய, அதீத நுகர்வு ஆவல் கொண்ட ஒரு இளைஞர் கூட்டத்தை உருவாக்கியிருக்கிறது.
திட்டமிட்டு வளர்க்கப்பட்ட சாதி மற்றும் மதப்பற்று, வலிந்து தவிர்க்கப்பட்ட இனமொழிப் பற்று காரணமாக ஒரு தொல்சமூகத்தின் தொடர்ச்சி நாம் என்பதை மறந்ததாலேயே, திரைநடிகர்களுக்காக இப்படி அறிவீனமாகச் சண்டை செய்ய எத்தனிக்கும் இழிநிலை வந்துள்ளது. தான் யார், தனது வரலாறு என்ன என்று தெரிந்த ஒருவர் இத்தகு கீழான செயல்களில் ஈடுபட மாட்டார். தனக்கும் பிறர்க்கும் நன்மை பயக்காத ஒரு விடயத்தை தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டு வெளிப்படையாக ஆராதிப்பதை அறிவுச் சமூகம் வெறுத்து ஒதுக்கும். தற்காலத் தமிழ்நாட்டில் பதின்ம வயதுப் பிள்ளைகளின் ஆதர்சமாக, வழிகாட்டியாக ஆழமான கருத்தாக்கங்களை உருவாக்கும் எழுத்தாளர்களோ, மேன்மைமிகு இலக்குகளை எட்ட உந்தித் தள்ளும் அறிஞர்களோ, மனிதத்தை மேம்படுத்தும் படைப்புகளைச் செதுக்கும் படைப்பாளிகளோ, தொலைநோக்கோடு சிந்தித்து சாதிக்கும் தலைவர்களோ இல்லாமல் போனதன் விளைவு, அவர்களின் இடத்தை நடிப்பதற்கு ஊதியம் வாங்கும் கதாநாயகர்கள் பிடித்துக் கொண்டார்கள். கடமை தவறிய பெற்றோர்கள், சேவை மனப்பான்மை இல்லாத ஆசிரியர்கள், மக்களை ஏமாற்றிச் சுரண்டும் ஊழல் அரசியல்வாதிகள், அவர்களுக்கு வளைந்து கொடுக்கும் மோசமான அதிகாரிகள், சமூகப் பொறுப்பற்ற ஊடகங்கள் எனப் பலதரப்புகள் இதற்குக் த்காரணமாக இருக்கின்றன. இந்த அடையாளச் சிக்கல் பல்தளங்களிலும் பாரதூரமான விளைவுகளை தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தி வருவது கண்கூடு.
நாம் தமிழர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, தீவிரமாக வளர்ந்துவரும் கடந்த பத்தாண்டுகளில், இக்கட்சியில் இணைந்து பயணிக்கும் பிள்ளைகள் குளம் தூர்வாருதல், பனைவிதை நடுதல், விதைப்பந்து தயாரித்தல், குருதிக் கொடையளித்தல், பொதுவிடங்களைத் தூய்மைப்படுத்துதல், சமூகச் சிக்கல்களுக்காகப் போராடுதல் போன்ற சேவைப்பணிகளைக் கையிலெடுத்து சீரிய முறையில் செயல்படுவதை அனைத்து தரப்பினரும் பாராட்டியுள்ளனர். கூட்டங்கள் நடத்தினாலும் பொதுமக்களுக்குத் தொல்லையளிக்காத வகையில் ஏற்பாடுகள் செய்து, அமைதியாகக் கலைந்து செல்வதோடு அவ்விடத்தையும் தூய்மைப்படுத்திவிட்டு நகரும் வழக்கத்தைப் பல நேரங்களில் காவல்துறையே பாராட்டியிருக்கிறது. இவ்வாறான ஆக்கப்பூர்வமான பணிகளில் இளம்பிள்ளைகளை ஈடுபடுத்துவதை விட்டுவிட்டு டாஸ்மாக் மது, திரைக்கவர்ச்சி, தரமற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கேளிக்கைளைக் குறிக்கோளாகக் கொண்ட வாழ்க்கை முறையைத் தான் அவர்களிடம் திராவிடம் திணித்திருக்கிறது. மாறிமாறி ஆண்ட நேர்மையற்ற திராவிடக்கட்சிகள் சமூகசீர்குலைவுக்கு இட்டுச் சென்றதன் விளைவு, பிற மாநிலங்களும், ஒட்டுமொத்த உலகும் தமிழ்ப்பிள்ளைகளின் திரைப்பட மோகத்தைப் பார்த்துச் சிரிக்குமளவுக்கு இருக்கிறது.
சிறந்த அடையாளம் ஒன்று எனக்கிருக்கிறது என்று நினைக்கும் ஒருவரது தன்விருப்பு அதிகமாகிறது. அதனால் தன்மதிப்பும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது. அவரே செயற்கரிய சாதனைகள் பலவற்றைச் செய்கிறார். அப்படிப்பட்ட மேம்பட்ட இலக்குகளை நோக்கி இளம்பிள்ளைகளைத் திருப்பும் ஒரு தலைவரைப் பின்தொடருவது தான் சரியானது; இலாபநோக்கிற்காக நடிக்கும் திரைக்கலைஞர்களைத் தவிர்ப்பதே நலம் பயக்கும் என்பதை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்களையே உங்களுக்குப் புதிதாகக் காட்டும், சிறப்பான உள்ளாற்றல்களை வெளிக்கொணரும், தனக்கும் பிறர்க்கும் பயனுள்ள வாழ்வை வாழ விரும்பும் புத்தெழுச்சி கொண்ட ஒரு தலைமுறை உருவாவதே தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் நல்லது. அதை தமிழிளம் பிள்ளைகள் உணர்ந்து கொண்டால் வேறொருவர் தன்னைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு பிழைப்பதை என்றுமே அனுமதிக்கமாட்டார்கள்; அவர்கள் உச்ச நடிகர்களாகவே இருந்தாலும் கூட.
திருமதி. விமலினி செந்தில்குமார்
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.