சனவரி 2023
எழுத்தோலை
ஓலைச்சுவடியில் எழுத்து முறை
எழுத்துக்களின் பிறப்பை உணர்த்துதலை பிறப்பியல் என்றும், மொழிகளைப் புணர்க்கும் முறைமை உணர்த்துதலை புணரியல் என்றும், உருபுகளோடு பெயர் புணரும் இயல்பு உணர்த்துதலை உருபியல் என்றும், பெயர் இலக்கணம் உணர்த்துதலை பெயரியல் என்றும்”
தொல்காப்பிய நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் கூறும் கூற்றுப்படி எது எதை உணர்த்துகிறதோ அது ‘இயல்’ என்றாகிறது. அதுபோல், ஓலையில் எழுதப்பெற்ற செய்திகளை ஆய்வதும், அறிவதும், உணர்வதும் உணர்த்துவதும், கற்பதும் கற்பிப்பதும் ஆகிய தொடர் நிகழ்வுகளே “சுவடியியல்” என்றாகிறது.
கடந்த இதழில் குறிப்பிட்டதைப் போன்று வெள்ளோலை, கடைகளில் விற்கப்பட்டதை சங்கப் புலவர்களான ஓலைக்கடையத்தார் மகன் வெண்ணாகன், மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் ஆகியோரின் பெயர்கொண்டு அறியமுடிகிறது.
அது போன்றே ஓலைச்சுவடிகளில் எழுதும் முறையும் சிறப்பாக அமைந்திருக்கக் காணலாம். இப்பொழுது நாம் காகிதத்தில் எழுதும்போது ஓரங்களில் இடம்விட்டு எழுதுதல் போல ஓலையின் இடமும் வலமும் இடம்விட்டு எழுதுவர். இடக்கையால் சுவடியைப் பிடித்துக்கொண்டு வலக் கையால் எழுத்தாணி பிடித்து எழுத்துகளைப் பொறிக்கும் கலை ஒரு தனிக்கலையே. தட்டச்சுப்பொறிகளில் எழுத்துவரிகள் பொறிக்கப் பொறிக்கக் காகிதம் நகர்ந்து செல்வதுபோல் ஓலையும் விரலசைவால் நகர நகர, வைத்த கை வாங்காமலேயே எழுத்தாணியால் எழுதிக் கொண்டிருப்பர்.
இளமை முதலே ஓலையை இடக்கையில் பிடித்து, வலக்கையால் எழுத்தாணியைக் கொண்டு எழுதிப் பழகுவார்கள்.
ஏடு எழுதப் பழகிக் கொண்டோர் தமது இடக்கைப் பெருவிரல் நகத்தை வளர்த்து, அதில் பிறை வடிவில் பள்ளமாக்கி, அப்பள்ளப் பகுதியில் எழுத்தாணியை வைத்து, ஒலையில் வரிவரியாக ஓர் எழுத்தின் மீது மற்றோர் எழுத்துப் படாமலும், ஓரு வரியின் மீது மற்றோர் வரி இணையாமலும் போதிய இடம் விட்டு எழுதுவர். மிகச்சிறிய எழுத்துக்களாக, ஒரு பக்கத்தில் இருபது, முப்பது வரிகள் வரை எழுதுவர். மிக நுண்ணிய மெல்லிய எழுத்தாணியைப் பயன்படுத்துவர்.
மெல்லிதான பனையோலையில் இருபக்கமும் எழுதுவர். ஓலையின் இடப்பக்க வெற்றிடத்தில் ஏடுகளின் வரிசையைக் குறிக்க எண்ணிடுவர். தொடக்கத்தில் நூற்பெயர் மட்டுமோ அல்லது நூற்பெயரும் ஆசிரியர் பெயருமோ இடப்பக்க முதலிற் காணப்படும். நூற்பெயர் மட்டுமன்றி நூலின் உட்பகுதிகளாகிய படலம், சருக்கம் முதலியவற்றின் பெயர்களையும் இடப்பக்கம் தொடக்கத்தே எழுதி நூற்பகுதிகளின் முடிவில் இன்ன பகுதி முடித்தது என்றும் நூல் முடிவில் இன்ன நூல் முற்றுப்பெற்றது என்றும் குறிப்பிடுவர்.
சில ஏடுகளில் எழுதும்போது வரிகள் கோணாமல் நேர்நேராய் ஒன்றிற்கொன்று சம இடைவெளியுடையனவாய் எழுதிச் செல்லுகின்ற பாங்கு நம்மை வியக்கச் செய்யும். சில ஏடுகளில் வரி எண்களைக் குறிக்க 1, 2, என்னும் தொடர் எண் முதலிலும் முடிவிலும் தரப்படுதலும் காணப்படுகிறது. தொடர்ந்த வரிகளாய்ச் சொல்லுக்குச் சொல் இடைவெளியின்றி எழுதிச் செல்வதே பெரும்பாலும் காணப்பெறும். எனினும் சிறுபான்மையாகச் சிற்சில சுவடிகளில் நூற்பா அம்மானைப் பாடல் போன்றவற்றைப் பத்திபத்தியாய் அமைத்து எழுதுதலும் காணப்படுகிறது.
தொடர்ந்து பாடல்களை எழுதிச் செல்லும்போது ஒவ்வொரு பாடலுக்கும் தொடர்எண் தருகின்றனர். இதனைக் கொண்டு பாடல்களின் முதல் இறுதிகளை எளிதில் காண இயலும். நூலின் ஒரு பகுதி முடிந்ததும் இன்ன பகுதி முற்றும் என்று குறிப்பிடுவர். நூலின் ஒரு பகுதி முடிந்ததும் முடிவுக் குறிப்பு எழுதி அடுத்த பகுதியைத் தொடர்ந்து தொடங்குதலும் காணப்படும். இவ்வாறு இடையில் தொடங்கப்பெறும் புதுப்பகுதியின் தலைப்பு இடப்பக்க ஓர வெற்றிடத்தில்தான் அமைகிறது. சில ஏடுகளில் நூலின் ஒரு பகுதி முடிந்து மேலும் எழுத வெற்றிடம் மிகுந்திருப்பினும் அதனை விடுத்துப் புதிய பகுதியை அடுத்துவரும் பக்கத்தில் தொடங்குதலும் காணப்படுகிறது.
ஏட்டின் முடிவுக்குறிப்பு நூலின் முடிவில் நூல் முடிந்தது என்னும் குறிப்புடன் யாரால், யாருக்காக, எந்த நாளில் எழுதி முற்றுவிக்கப் பெற்றது என்னும் குறிப்புகளும் பெரும்பான்மைச் சுவடிகளில் ஏடெழுதுவோரால் தரப்படுகின்றன. நூல் முடிவுக் குறிப்பில் நூற்பெயருடன் ஆசிரியர் பெயரும் உடன் தரப்படுதலும் உண்டு. சிலர் இன்ன நாளில் தொடங்கி இன்ன நாளில் முற்றுப்பெற்றது என்னும் காலக்கணக்கு தருகின்றனர்.
ஆனால் பெரும்பான்மை ஏடுகளில் முற்றுப்பெற்ற நாள்தான் தரப்படுகிறது, காலக்குறிப்பில் ஆண்டு, மாதம், திதி, கிழமை முதலிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. இவற்றால் குறித்ததொரு ஏடு எழுதப்பெற்ற காலம் நமக்குத் தெளிவாகிறது. இவ்வாறு ஏட்டின் முடிவில் தரப்பெறும் இத்தகைய குறிப்புகள் அந்தச் சுவடி பற்றிய வரலாற்றோடு நூலாசிரியர், ஏடெழுதியோர் முதலியோர் வரலாறுகளும் அறியத் துணை செய்கின்றன. தொடக்கத்தில் வழிபடு கடவுளை வணங்கி நூலின் முடிவிலும் இன்ன தெய்வம் துணை, இன்ன தெய்வம் சகாயம் என்றவாறுள்ள குறிப்புகளும் பல சுவடிகளில் எழுதப்பட்டிருக்கும்.

ஓலைகளில் நார்த்தன்மை குறுக்கு வாட்டாக இருப்பதனால் ஆணியால் கிழித்து எழுதும்போதும், புள்ளியிடும்போதும், ஆணியை அடிக்கடி எடுத்து வைத்து எழுதும்போதும் இடர்பாடுகள் அதிகம் இருக்கும். ஆணியால் ஓலையில் எழுதும்போது, ஓலை கிழியாமல் எழுதுதல் வேண்டும். அதனால், எழுத்தாணிகளைக் கொண்டு பனை ஓலைகளில் எழுதும் போது கூட்டெழுத்தாகவே எழுதுவார்கள். மெய்யெழுத்துகளின் மீது புள்ளிகள் வைக்க மாட்டார்கள்.உயிர் மெய் எழுத்துக்களாகவே எழுதிவிடுவர். காரணம் புள்ளிகள் வைப்பதால் ஓலைகள் கிழிந்துவிடும். எனவே ஓலையில் எழுத்துக்கள் புள்ளிகள் இல்லாமலும் மயங்கி மாறுபட்டும், கூட்டெழுத்துக்களாகவும் அமைந்தன.
ரகரமும் உயிர்மெய் ஆகாரம் ஓகாரம் இவற்றைக் குறிக்க இணைக்கப்படும் கால்களும் ஒன்று போலவே இருக்கும். எகர ஒகரங்களுக்குரிய ஒற்றைக் கொம்பே ஏகார ஓகாரங்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும்.
ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு வேறுபாடு இருக்காது. எடுத்துக்காட்டாக, பேரன் என்பதனைப் பெரன என்றும் வாசிக்கலாம். பேரன என்றும் வாசிக்கலாம். சுவடி எழுத்துகளில் மெய்யெழுத்துகளுக்குப் புள்ளியிட்டு எழுதாத நிலையில், சரியாகப் புரிந்து கொள்ளுதல் கடினம்.
சேரல் மட வன்னம் என்பது சொல மட வனனம என்று எழுதப்படும்.
கேரளம் என்பது கொளம என்று எழுதப்படும்.
முன்னும் பின்னும் உள்ள வரிகளை வைத்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.
கணிதம், ஆவணம் மற்றும் வணிகச் சுவடிகளில் ஆண்டு, மாதம், தேதி, நிலம், பணம், பொன் பெயர்கள் போன்றவை திரும்பத் திரும்ப வரும்போது அவை சுருக்கி எழுதப்பட்டு, பழக்கமான குறியீடுகளாக மாறின.
சுவடிகளில் எழுதும்போது பொருண்மைக்குத்தக்க சில மாற்றங்களுடன் காணப்பட்டன என்பதை கீழ்க்காணுமாறு அறியலாம்.
தமிழகத்தில் கிடைக்கும் ஓலைச் சுவடிகள், இலக்கியம், மருத்துவம், மாந்திரீகம், சோதிடம், சமயம், வணிகம், ஆவணங்கள், பள்ளி மாணவர்களுக்கான அரிச்சுவடி, எண்சுவடி என்ற வகைகளில் அடங்கிவிடக் கூடியவை. பொதுவாக எல்லாச் சுவடிகளும் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஒவ்வொரு வகை ஓலைச்சுவடியிலும் ஒவ்வொரு வகையில் எழுதும் முறை தனித்துவம் பெற்றிருக்கும். இலக்கியச்சுவடிகளில் பாடல்களின் முடிவில் எண்களைக் காணலாம். இடதுபுற ஓரங்களில் அத்தியாயத் தலைப்புப் பெயர்களைக் காணலாம். மாந்திரியச் சுவடிகளில் பலவகைச் சக்கரங்களின் (இயந்திரம்) படங்களைக் காணலாம். சோதிடச் சுவடிகளில் ராசிச் சக்கரங்களைக் காணலாம். குறியீடுகளையும் காணலாம். பள்ளிச் சுவடிகளில் பக்கவாட்டில் மூன்று நான்கு பத்திகளாக பிரித்து எழுதப்பட்டுள்ளதையும் காணலாம்.
இக்காலத்தில் தாளில் எழுதுவதைப் போன்று மிக வேகத்துடன் ஓலையில் எழுதும் ஆற்றலும் முன்னோர்களிடம் இருந்திருக்கிறது. சுவடிகள் எழுதுவதற்கென்று ஆட்கள் இருந்தார்கள்.
இப்படி ஓலை எழுதுபவர்கள் ஓலையெழுதுவோர், ஓலை கணக்கர், ஏடெழுதுவோர், எழுத்தாளர், எழுத்துக்காரர் என்று அழைக்கப்படுவர். அவர்கள் வசிப்பிடம் எழுத்துக்கார வீடு, எழுத்துக் கடை, எழுத்துக்கார தெரு, எழுத்தாணிக்காரத் தெரு என்று அழைக்கப்பட்டது. இன்றும் பல ஊர்களில் எழுத்துக்காரத் தெரு என வழங்கிவருவதைக் காணலாம்.
-எழுத்தோலை நீளும்…
திரு. ம.இராமகிருசுணன்,
ஆன்றோர் பேரவைத் தலைவர்,
செந்தமிழர் பாறை – அமீரகம்.