சனவரி 2023
தமிழும் அறிவும்
திராவிடம் தீது
பனையூரில் வசிக்கும் ஒரு அழகான குடும்பம். மாறன் அவன் மனைவி பொற்கொடி. அவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன். மகள் அறிவுச்செல்வி. ஒன்பது வயதாகிறது. அவ்வூரிலுள்ள அரசு ஆரம்ப பாடசாலையில் நான்காம் வகுப்பு படிக்கிறாள். படிப்பில் கெட்டிக்காரி. பெயருக்கேற்றார் போல் அறிவோடு திகழ்பவள்.
மகன் தமிழ்ச்செல்வன். ஆறுவயதாகிறது. அதே பாடசாலையில் முதலாம் வகுப்பு மாணவன். பாடசாலையில் சேர்ந்து நான்கு மாதங்களே ஆகிறது. துருதுருவென்று எதையும் அறிந்து கொள்ளும் வகையில் ஐயத்துடன் வினாக்களை எழுப்பிக் கொண்டே இருப்பான்.
அக்காள் அறிவுச்செல்வி பாடசாலைக்கு நடந்து செல்லும் வழியிலும், வீட்டிலிருக்கும் போதும், அவனது ஐயங்களுக்கு தனக்குத் தெரிந்த அளவில் விடையளிப்பாள்.
பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய அறிவும், தமிழும் சற்று நேர ஓய்விற்கு பின் தத்தமது பாடப்புத்தகங்களை எடுத்து படிக்கத் தொடங்கினர்.
தமிழ்ச் செல்வன் படங்களை பார்த்து, அதனருகில் உள்ள எழுத்துக்களை கூட்டி படித்துக் கொண்டிருந்தான்.
அறிவுச்செல்வி தமிழ் புத்தகத்தை திறந்து, வகுப்பில் இன்று கற்பித்த செய்யுள் பகுதியை படிக்கலானாள்.
“வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நிலம் உயரும்
நிலம் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயர்வான்”
என்று படித்தவள், தந்தை மாறனை நோக்கி அப்பா, நம் முன்னோர்கள் பட்டறிவின் மூலமாகவும், அறிவியலின் செறிவின் மூலமாகவும், இயற்கையுடன் இயைந்து, பெரியப்பா செந்தமிழன் சீமான் அவர்கள் கூறுவது போல மலை! மரம்! மழை! ஊற்று! ஓடை! அருவி! ஆறு! ஏரி! குளம்! குட்டை என பெருகும் நீரால், ஏர்! உழவு! உணவு! பயிர்! உயிர் என எத்தனை சிறப்புற வாழ்ந்திருக்கிறார்கள் என்று வியப்புடன் கூறினாள்.
தாய் பொற்கொடி: அதனை ஆமோதித்து. ஆம், மகளே நீரும் சோறும் இன்றி யாரும் வாழமுடியாதல்லவா என்றாள்.
அறிவு: அப்படியெனில், நாள்தோறும் தொலைக்காட்சியில் மலை உடைப்பு, ஆற்றுமணல் கொள்ளை, வளக் கொள்ளை என செய்திகள் வருகின்றனவே. இந்த இயற்கை அழிப்பினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது அரசாங்க அதிகாரிகளுக்கு தெரியாதா?
பொற்கொடி: அதிகாரிகளுக்கும் தெரியும். ஆனால், இன்றைய ஆட்சியாளர்களாலும், முந்தைய ஆட்சியாளர் களாலும் அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இயற்கை வளங்களை வரம்பற்று அழித்து கொள்ளையடிக்கின்றனர். அதிகாரிகள் அவர்களை எதிர்த்து எதுவும் செய்ய முடிவதில்லை.
அறிவு: ஓகோ, இதனால் தான் மலை, மரம், மணல், துட்டு, வெட்டு என்று இயற்கையை அழிக்கும் இந்த ஆட்சியாளர்களை பார்த்து பெரியப்பா கோபமாக பேசுகிறாரோ?
மாறன்: ஆமாம் அறிவு. நம் மண்ணின் வளங்கள் அழிக்கப்படுவதின் ஆதங்கத்தின் வெளிப்பாடு.
அறிவு: வளங்களைப் பற்றி இன்றைய அரசுகளின் நிலைப்பாடு தான் என்னப்பா?
மாறன்:
“நீரழிக்க மலை அழிப்பான்
நிலமழிக்க விடம் தெளிப்பான்
நெல் அழிக்க விதையழிப்பான்
குடியழிக்க குடி கொடுப்பான்”
“மதுவால் தமிழன் மதியிழந்து அடிமையானான்”.
தமிழ்: குடியழிக்க குடி கொடுப்பான் என்றால் என்னப்பா?
பொற்கொடி: தமிழ்க்குடியை, மதுக்குடியால் மயங்க வைத்து இனத்தையும், வளத்தையும் அழிக்கின்றனர்”.
அறிவு: ஐயோ! எப்படி வாழ்ந்த நம்மினத்திற்கு ஏனிப்படி ஆனதம்மா?
பொற்கொடி: பார் போற்றும் பழந்தமிழர் அறிவை கைவிட்டதனால்
பார் தூற்றிட திராவிடம் தந்த இழிவை பெற்றோம்.
அறிவு: திராவிடம் எப்படி தமிழருக்கு இழிவைத் தரும்?
மாறன்:
தமிழர் மெய்யழித்து
திராவிட பொய்யுரைத்து
ஆரிய பகை வெருட்டி
தமிழர் வளம் சுருட்டும்
திராவிடம் எனும் தீங்கு.
பொற்கொடி: திராவிடம் தமிழர்க்கு என்றுமே தீதே.
அறிவு: இந்நிலைக்கு தீர்வுதான் என்ன?
மாறன்: திராவிடம் எனும் தீங்கினை எரித்து, அண்ணன் சீமான் அவர்கள் கூறுவது போல், அரசியல் விழிப்பு பெற்று, அனைவரும் நாம் தமிழர் என ஒன்றிணைந்து மண்ணுக்கும் மக்களுக்குமான தூய்மையான, நேர்மையான அரசியலை நிறுவினால் மட்டுமே நமது நிலத்தையும் வளத்தையும் காக்க முடியும்.
தமிழ்: அந்த நல்ல ஆட்சி நமக்கு எப்போ கிடைக்கும்?
பொற்கொடி: அந்த நல்ல ஆட்சியை கொண்டு வரத்தான் அனைவரும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். விரைவில் தமிழர் ஆட்சி வரும்.
அறிவு: இயற்கையோடு இயைந்து அந்த நல்லாட்சியில் நலத்தோடும், வளத்தோடும் நாம் வாழ வேண்டும் என ஆவலாக இருக்கிறது அம்மா.
தமிழ்: ( எழுந்து நின்று கை உயர்த்தி உரக்கச் சொன்னான்) நல்ல ஆட்சிக்கு நாம் தமிழர்! நாம் தமிழர்! நாம் தமிழர்!.
திரு. ம.இராமகிருசுணன்,
ஆன்றோர் பேரவைத் தலைவர்,
செந்தமிழர் பாறை – அமீரகம்.