spot_img

வீரமங்கை வேலுநாச்சியார்

சனவரி 2023

வீரமங்கை வேலுநாச்சியார்

வீரமங்கை வேலுநாச்சியாரின் கதை உலகின் பல்வேறு நாடுகளை காலனி ஆதிக்கத்தின்கீழ் ஆட்டிப்படைத்தவர்கள் ஆங்கிலேயர்கள். அப்படிப்பட்ட ஆங்கிலேயர்களுக்கே சிம்ம சொப்பனமாக  இருந்தவர் மைசூர் மன்னர் ஹைதர் அலி. அந்த சிங்கமே மிரண்டு நின்ற தருணம் ஒன்று வரலாற்றில் இருந்தது. அடர்ந்த காட்டில் உள்ள விருப்பாச்சி கோட்டையில் இருந்து எங்கள் நாட்டை மீட்க வேண்டும் என்ற கடிதம் ஒன்று திண்டுக்கல் கோட்டைக்கு பறக்கிறது. தொடர்ந்து மூன்று கடிதங்கள் வந்தாலும் ஹைதர் அலியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. மூன்று வீரர்கள் திண்டுக்கல் நோக்கி பயணம் செய்கிறார்கள். குதிரையில் இருந்து இறங்கிய மூன்று வீரர்களையும் ஹைதரலி பார்க்கிறார். அவ்வீரர்களிடம், ராணி எங்கே என்று கேட்கிறார். மறு நொடியில் ஆண்களைப் போல உடை அணிந்து ஒருவர் தலைப்பாகை கழட்டி உதறி நின்றார். வேலு நாச்சியாரை பார்த்து கொண்டு இருந்த ஹைதர் அலி மிரண்டு போனார்.

மாளிகையில் பட்டுப் பீதாம்பரத்தில் காட்சியளிக்க வேண்டிய வீர மங்கை வேலு நாச்சியார் எதற்காக காடுகளில் மறைந்து வாழ்ந்தார். ஹைதர் அலியிடம் உதவி கேட்க காரணம் என்ன? போர் வலிமை மிக்க மருது சகோதரர்கள் எதற்காக வேலு நாச்சியாருக்கு உதவினார்கள்? ஜான்சி ராணிக்கு முன்னதாகவே ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற வேலு நாச்சியாரின் வரலாற்று பக்கங்கள் மிகக் குறைவாக இருக்க காரணம் என்ன? வீரமங்கை வேலுநாச்சியார் வரலாறு 1730 தொடங்குகிறது. அன்றைய நாளில் இந்தியா என்று ஒரு நாடே கிடையாது. அரசர்கள் சிற்றரசர்கள் ஜமீன்கள் இப்படி தங்கள் ஆட்சித் திறமைக்கு ஏற்றார் போல் ஆண்டு வந்தனர். அந்த நேரத்தில் வணிகத்திற்காக வந்த ஆங்கிலேயர்கள் தங்கள் புத்தி சாதுரியத்தாலும் தந்திரத்தாலும் துப்பாக்கி போன்ற ஆயுதங்களாலும் மன்னர்களையும் ஜமீன்தார்களையும் தங்கள் ஆளுமைகளுக்கு கீழ் கொண்டு வந்தனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி முத்தாத்தாள் நாச்சியாருக்கு வீரக் குழந்தையாக பிறந்தார் வேலு நாச்சியார். தந்தை அனைத்து போர்க்கலைகளையும் தன் மகள் வேலுநாச்சியாருக்கு கற்றுத் தந்தார். அது மட்டுமல்லாமல், தமிழ், ஆங்கிலம், உருது போன்ற பல மொழிகள் கற்றறிந்தார். தனது 16 வயதிலேயே போருக்குப் போகும் அனைத்து திறமைகளையும் பெற்றார். வேலு நாச்சியார் சிவகங்கை மன்னரான முத்து வடுகநாதருக்கு மணமுடித்து வைக்கப்பட்டார். மாளிகையில் இருந்து மணமகிழ வேண்டிய வேலுநாச்சியார் முத்து நாதரின் படைக்கு தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். சுமார் 2000 படை வீரர்கள் இவர் ஆணைக்கும் கண் அசைவுக்கும் கட்டுப்பட்டு நின்றார்கள். அந்தப் படைக்கு சின்ன மருதுவும் பெரிய மருதுவும் சேனாதிபதியாக இருந்து வலு சேர்த்தனர்.

அந்த நேரத்தில் வரி கேட்ட ஆங்கிலேயரிடம் இந்த சிவகங்கை சமஸ்தானத்தில் இரத்த ஆறு ஓடினாலும் சரி என் உயிரே போனாலும் சரி வரி கொடுக்க முடியாது என்று தீர்க்கமாய் கூறினார் முத்து வடுகநாதர். இதனால் முத்து வடுகநாதரை ஆங்கிலேயர்களுக்கு பிடிக்காமல் போனது. ராணி வீரமங்கை வேலுநாச்சியார் முத்து வடுகநாதரின் அருகில் இருக்கும் வரை அவரை வீழ்த்த முடியாது என்று எண்ணிய ஆங்கிலேயர்கள், தங்கள் தளபதி பேச்சு வார்த்தை நடத்த வருகிறார் என்று வேலுநாச்சியாரை திசை திருப்பி அழைத்தார்கள். முத்து வடுகநாதர் சிவகங்கை கோயிலுக்கு தரிசனம் செய்யச் சென்ற வேளையில், ஆங்கிலேயர் படையால் சுற்றி வளைக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதை அறிந்த வீரமங்கை வேலுநாச்சியார் கொதித்தெழுந்தார். தன் கணவருடன் உடன்கட்டை ஏற முடிவெடுத்துச் சென்றார். ஆனால் மருது சகோதரர்கள் நாச்சியாரை நிறுத்தி உங்கள் கணவரின் சாவுக்கு காரணமாக இருந்த ஆங்கிலேயரை வீழ்த்த வேண்டும். அதற்கு நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம் என்று சொன்னார்கள். இதை ஏற்ற வீரமங்கை வேலுநாச்சியார் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட தன் கணவரின் சடலத்தின் முன் சத்திய பிரமாணம் எடுத்தார்.

வீரமங்கை வேலுநாச்சியார் பல கலைகளையும் கற்றறிந்தார். ஆங்கிலேயர்களுக்கு தெரியாமல் தலைமறைவாக சிவகங்கை கோட்டை பல்லாரி கோட்டை இப்படி ஒவ்வொரு கோட்டையாக அவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்ததோடு, ஒவ்வொரு இடத்திலும் பயிற்சிகளை மேற்கொண்டார். ஒரு அடர்ந்த காட்டுக்குள் செல்லும்போது தாகம் அதிகமாகவே, அங்கு ஒரு பெண்மணி உடையாள் என்ற தமிழச்சி தண்ணீர் கொடுத்தார். வீரமங்கை வேலுநாச்சியாருக்கு அப்போது ஆங்கிலேயர் படை பின் தொடர்ந்தது. நாச்சியாரை காட்டிக் கொடுக்கவில்லை உடையாள். இதனால் ஆங்கிலேயரால் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டார் உடையாள். இதை அறிந்த வேலுநாச்சியார் தன் மாங்கல்யத்தை கழற்றி உடையாள் மேல் வைத்து வணங்கினார். பிற்காலத்தில் வெட்டுடையாள் காளி என்ற தெய்வமாக நம் மக்களால் வணங்கப்படுகிறார். இதுவே சுதந்திரப் போராட்டத்தில் முதல் பெண்ணின் தியாகம். இருப்பினும் தமிழ்ப் பெண் என்ற ஒற்றைக் காரணத்தினால் வரலாற்றிலிருந்து இவர் மறைக்கப்பட்டுவிட்டார்.

ஆங்கிலேயரையை வீழ்த்த வேலுநாச்சியார் மைசூர் மன்னர் ஹைதர் அலியிடம் உதவி கேட்க முடிவெடுத்தார். மூன்று வீரர்கள் குதிரையில் இறங்கியதைப் பார்த்த ஹைதர் அலி அவர்களிடம் வேலுநாச்சியார் எங்கே என்று வினாவினார். அதற்கு ஒரு குதிரையிலிருந்து இறங்கிய தன் தலைப்பாகையைக் கழற்றிய வீரமங்கை வேலுநாச்சியாரைக் கண்டு வியந்தார் ஹைதரலி. நாச்சியார் ஹைதர் அலியிடம் உருது மொழியில் பேசி தனக்கு தங்களின் உதவி வேண்டும் என்று ஹைதர் அலியிடம் கேட்டார். வீரமங்கை வேலு நாச்சியாரின் திறமையையும் போர்க்குணத்தையும் கண்ட ஹைதர் அலி வேலு நாச்சியாருக்கு உதவுவாக  வாக்குறுதி அளித்தார். அதன்படி தன் குதிரை படை, யானை படை மற்றும் தனது மகன் மற்றும் லட்சம் பொற்காசுகளையும் நாச்சியாருக்கு அளித்து ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட உதவினார். பின் மருது சகோதரர்களின் துணையுடன் நாச்சியார் போருக்கு நாட்குறித்தார். விஜயதசமி அன்று போருக்கு நாட்குறித்தார் வேலுநாச்சியார்.

வேலு நாச்சியாரிடம் ஐந்தாயிரம் பெண்கள் படைகள் இருந்தது. அவர்கள் களரி போன்ற தமிழ்க் கலை அனைத்தையும் கற்றறிந்தவர்கள். அதற்கு தலைமை தாங்கியவர் குயிலி என்ற பெண். குயிலி தான் முதன் முதலில் தற்கொலை படைத்தாக்குதல் நடத்திய பெண். ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கை நோக்கி பயணித்த குயிலி தன் மீது எண்ணெயை ஊற்றிக் கொண்டே மனித வெடிகுண்டாக மாறி ஆங்கிலேயர்களின் ஆயுதப் பதுக்கல் கிடங்குகளில்  குதித்து அழித்த முதல் பெண். வீரமங்கை வேலு நாச்சியார் தனது படைகளுடன் முதலில் வென்றவர் திருப்பவனம் மல்லாரி ராவ். பின் அவரது தம்பியையும் மருது சகோதரர்கள் உதவியுடன் வீழ்த்தினார்.

தனது கணவர் சடலத்தின் முன் தான் ஏற்ற சத்தியத்தை நிறைவேற்றி ஆங்கிலேயர்களை வீழ்த்தி சிவகங்கை கோட்டையை பிடித்து ராணியானார் வீரமங்கை வேலுநாச்சியார். கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் சிவகங்கைச் சீமையில் வேலுநாச்சியார் சிறப்பாக ஆண்டு வந்தார். பின் உடல் நலக்குறைவு காரணமாக தனது மகள் வெள்ளந்தி நாச்சியார் வசம் ஒப்படைத்துவிட்டு மருது சகோதரர்களை தளபதியாக்கி ராணி வீரமங்கை வேலு நாச்சியார் ஓய்வு எடுத்துக்கொண்டார். பின் அவர் 1796 இல் மறைந்தார்.

வீரமங்கை வேலுநாச்சியார் சுதந்திரத்திற்கு முதல் வித்திட்ட வீரமங்கை. தமிழர்களின் வீரத்தையும் தியாகத்தையும் நாம் உணர்ந்து செயல்பட வரலாற்றை அறிந்து வாழ்வது அவசியம்.

திருமதி. அபிராமி திருமலைக்குமரன்

செந்தமிழர் பாசறை – அமீரகம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles