சனவரி 2023
பட்டினப்பாலை
பாடல் (77-105 / 301)
கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி
நடுகல்லின் அரண் போல
நெடும் தூண்டிலின் காழ் சேர்த்திய
குறு கூரை குடி நாப்பண்
நிலவு அடைந்த இருள் போல
வலை உணங்கு மணல் முன்றில்
வீழ் தாழை தாள் தாழ்ந்த
வெண் கூதாளத்து தண் பூ கோதையர்
சினை சுறவின் கோடு நட்டு
மனை சேர்த்திய வல் அணங்கினான்
மடல் தாழை மலர் மலைந்தும்
பிணர் பெண்ணை பிழி மாந்தியும்
புன் தலை இரும் பரதவர்
பைந்தழை மா மகளிரொடு
பா இரும் பனி கடல் வேட்டம் செல்லாது
உவவு மடிந்து உண்டு ஆடியும்
புலவு மணல் பூ கானல்
மா மலை அணைந்த கொண்மூ போலவும்
தாய் முலை தழுவிய குழவி போலவும்
தேறு நீர் புணரியோடு யாறு தலை மணக்கும்
மலி ஓதத்து ஒலி கூடல்
தீது நீங்க கடல் ஆடியும்
மாசு போக புனல் படிந்தும்
அலவன் ஆட்டியும் உரவு திரை உழக்கியும்
பாவை சூழ்ந்தும் பல் பொறி மருண்டும்
அகலா காதலொடு பகல் விளையாடி
பெறற்கு அரும் தொல் சீர் துறக்கம் ஏய்க்கும்
பொய்யா மரபின் பூ மலி பெரு துறை !

பொருளுரை:
(தோல்)கேடயங்களை வரிசையாக( கூரைபோல் சாய்த்து) அடுக்கி, வேலை ஊன்றி, நடுகல்லின் அரண் போல நடுகல்லுக்கு வைத்த பாதுகாப்பு போல, நீண்ட தூண்டிலில் இரும்பு முள் சேர்த்துவைக்கப்பட்ட குறுகிய கூரைச் சரிவுகளையுடைய குடியிருப்புகளின் நடுவில், நிலவின் நடுவே சேர்ந்த இருளைப் போல வலைகிடந்து உலரும் மணலையுடைய முற்றத்தைக்கொண்ட இல்லங்களில், தாழ்ந்த விழுதையுடைய தாழையின் அடியில் இருந்த வெண்கூதாளத்து பூ மாலையையுடையோர் சினைப்பட்ட சுறா மீனின் கொம்பை நட்டு, மனையில் ஏற்றிய துடியான தெய்வம் காரணமாக,மடலையுடைய தாழையின் மலரைச் சூடியும், சொரசொரப்பான பனைமரத்துக் கள்ளை உண்டும்,பரட்டைபாய்ந்த தலையினையுடைய கரிய பரதவர் பசிய தழையை(உடுத்திய) மாநிற மகளிரோடு, கடல் வேட்டம் செல்லாது பரந்த கருமைநிறமுடைய குளிர்ந்த கடலில் மீன்பிடிக்கச் செல்லாது, உவாநாள்(பௌர்ணமி/அமாவாசை) ஓய்வு அனுசரித்து உண்டும் விளையாடியும்; முடைநாற்றமுள்ள மணலையும் பூக்களையும் உடைய கடற்கரையில், கரிய மலையைச் சேர்ந்த மேகம் போலவும், தாயின் முலையைத் தழுவிய பிள்ளையைப் போலவும், தெளிந்த கடலின் அலைகளுடன் காவிரியாறு கலக்கும் மிகுந்த அலை ஆரவாரம் ஒலிக்கும் புகார்முகத்தில், தீவினை போகக் கடலாடியும்,(பின்னர்)உப்பு போக (நல்ல) நீரிலே குளித்தும், நண்டுகளை அலைக்கழித்தும், தொடர்ந்து வரும் அலைகளை மிதித்து விளையாடியும், (ஈர மணலில்) உருவங்களை உருவாக்கியும்; ஐம்பொறிகளால் நுகரும்பொருள்களை நுகர்ந்து மயங்கியும், நீங்காத விருப்பத்துடன் பகற்பொழுதெல்லாம் விளையாடி, பெறுவதற்கு அரிய தொன்றுதொட்ட மேன்மையுடைய சுவர்க்கத்தைப் போன்ற, பொய்க்காத இயல்புடைய, மலர்கள் மிக்க பெரிய துறைகள் உள்ள காவிரிப்பூம்பட்டினம்!
தமிழ்த்திரு. மறைமலை வேலனார்,
துணைத்தலைவர், சுபைல் மண்டலம்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.