பிப்ரவரி 2023
தமிழறிஞர் வீரமாமுனிவர்
பெருமைக்குரிய தொல்மொழிகளை அழித்து அவற்றின்மீது தத்தம் மொழிகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான மன்னர்கள், மதபோதகர்கள் மற்றும் ஆளும் வர்க்கத்தினரின் நோக்கமாக இருந்திருக்கிறது, ஏன் இன்றும் அவ்வாறே இருக்கிறது எனலாம். ஒருவர் தம் தாய்மொழியைக் கற்பதற்கும், காப்பதற்கும், வளர்ப்பதற்கும் பல முயற்சிகள் மேற்கொள்ளலாம். ஆனால் மாற்றாரின் மொழியைக் கற்பதற்கும் வளர்ப்பதற்கும் உறுதுணையாய் நின்றவர்கள் வரலாற்றில் சிலரே.
“வீரமா முனிவர் தைரிய நாதர் விரிதமிழ்க் கலைமணம் கமழும்
ஆரமா முனிவர் அகத்தியர் போல அருளினார் அரிய நன்னூல்கள்.
சாரமாந் தேம்பா வணியினைத் தொடினும் தமிழ்மணங் கமழுமென் கரமே!
ஈரமா நெஞ்சில் இடம் பெற்ற நட்டால் இன்பமாய் மலருமென் வாழ்வே!”
என்று கவியோகி சுத்தானந்த பாரதியாரால் போற்றப்பட்டவர் வீரமாமுனிவர்.
இத்தாலி நாட்டில் பிறந்து துறவறம் பூண்டு, பதினெட்டாம் நூற்றாண்டில் சமயப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ்ப் புலமை பெற்ற மையால் ‘இத்தாலியத் தமிழ் வித்தகர் ‘என்றும், சீரிய அறிவு கொண்டு திகழ்ந்தமையால் ‘தெருட்குரு’ என்றும், தமிழ் இலக்கிய ஓலைச்சுவடிகளை தேடித் தேடி எடுத்தமையால், ‘சுவடி தேடும் சாமியார் ‘ என்றும், சதுரகராதியை இயற்றியமையால், “தமிழ் அகராதித் தந்தை” என்றும் தமிழ் மண்ணில் அறியப்பட்டவர் வீரமாமுனிவர்.
மறைபணியாற்ற முற்பட்டுத் தமிழ்ப்பணி ஆற்றியவர். பெரும்பான்மையான தமிழ்த்தேசிய ஆளுமைகள் தங்களது பிறமொழிப் பெயர்களைத் தனித்தமிழில் மாற்றி வைப்பதே தமிழுக்குத் தாங்கள் ஆற்றும் முதன்மையான கடமையாக எண்ணி வந்தனர். அங்ஙனமே, இவரும் பெஸ்கியாக இந்தியாவிற்குள் வந்து, தைரியநாதசாமியாக தமிழகத்தில் வலம் வந்து, வீரமாமுனிவராக வாழ்ந்து தமிழ்த் தொண்டாற்றியவர். மதபோதனையை மேற்கொள்ள மொழி பெரும் தடையாக இருப்பதை அறிந்த வீரமாமுனிவர், தமிழ் கற்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் புலமையும் பெற்றார். அவ்வாறு மக்களுக்கு நீதி நெறிகளை மதக்கோட்பாடுகளுடன் போதிக்க முற்படுகையில், உலகப் பொதுமறையாம் திருக்குறளில் எண்ணற்ற அறநெறிகள் இருப்பதை கண்டு வியந்து திருக்குறளைக் கற்கலானார். உலக மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய நீதிநெறிகள் திருக்குறளில் இருப்பதனால் அதனை மொழி பெயர்க்கும் பேராவல் கொண்டு அறத்துப்பாலையும் பொருட்பாலையும் மொழிபெயர்க்கலானார்.
ஆத்திசூடி, தேவாரம், திருப்புகழ், நன்னூல் போன்ற பல தமிழ் நூல்களை பின் நாட்களில் மொழிபெயர்த்தார். தான் தேடிக் கண்டடைந்த பல ஓலைச்சுவடிகளையும் மொழிபெயர்த்தார். தமிழ் மொழியில் தோன்றிய நிகண்டுகளில் சிறப்பானதாய்க் கருதப்படுவது சதுரகராதி. ஒரு மொழியில் உள்ள சொற்கள் அனைத்தும் அகர முதலிய எழுத்து வரிசையில் தொகுக்கப்பட்டு, அச்சொல்லின் பொருளோடு அதன் உச்சரிப்பு, தோற்றம், இலக்கியத்தில் வந்துள்ள இடம், அது வழங்கும் நாடு முதலியனவும் அகராதியில் குறிக்கப்படும். சொற்பொருள் கொண்ட பெயர் அகராதி, ஒரு பொருளைக் குறிக்கும் பல சொல்கொண்ட பொருள் அகராதி, இலக்கிய கலைச் சொற்கள் கொண்ட தொகை அகராதி, எதுகை கொண்ட தொடை அகராதி ஆகிய நான்கு பிரிவுகளைக் கொண்டது சதுகராதி. பழைய நூல்களை கவனமாகப் பார்வையிட்டு, படி எடுப்போரால் வந்த பிழைகளை நீக்கி, வடமொழிச் சொற்களை அம்மொழி அறிஞர் துணைகொண்டு திருத்தி, நிகண்டுகளைப் பயன்படுத்தி சதுரகராதி என்னும் கருவூலத்தை உருவாக்கியவர் வீரமாமுனிவர்.
தேம்பாவணி என்னும் முதல் தமிழ் கிறித்தவக் காப்பியத்தை 3 காண்டங்கள் 36 படலங்கள், 3615 விருத்தப்பாக்கள் கொண்டு இயற்றினார் வீரமாமுனிவர். அதில் முதன் முயற்சியாக கதை மாந்தர்களின் பெயர்களை தமிழ்ப்படுத்தினார். உதாரணமாக, ஜோசப் என்பதற்கு வளன் என்று மாற்றி அதற்கு மூல மொழியின் அர்த்தத்தை பயன்படுத்தினார். கிறித்தவத்தில் இன்று வரை குறிக்கபெறும் பெரும்பான்மையான வார்த்தைகள் இவர் பயன்படுத்தியவையே. தமிழ் இலக்கியத்தில் செய்யுள் மட்டுமே பரவலாக காணப்பட்ட காலத்தில் உரைநடையைப் பயன்படுத்தி அதை எளிய முறையில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர உழைத்தவர் . `பரமார்த்த குரு கதை’ அத்தகைய உரைநடை நூலாகும். அந்நூல் `எள்ளல் சுவை’ மிகுந்த இலக்கிய உரைநடை என்பதால், இவர், `உரைநடைச் செம்மல்’ எனவும் அழைக்கப்பட்டார்.
அகராதி, இலக்கணம், இலக்கியம், சிறுகதை போன்ற பல்வேறு துறைகளில் தமிழ்ப் பணியாற்றியவர். இருபதிற்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழுக்கு வழங்கியவர். ‘தொன்னூல் விளக்கம்’, `செந்தமிழ் இலக்கணம்’ , `கொடுந்தமிழ் இலக்கணம்’, ஆகிய இலக்கண நூல்களையும், `திருக்காவலூர் கலம்பகம், `கித்தேரியம்மாள் அம்மானை’, `அடைக்கல மாலை’, `அடைக்கலநாயகி மேல் வெண் கலிப்பா’ முதலிய சிற்றிலக்கியச் செய்யுள்களையும், `வேதவிளக்கம்’, `வேதியர் ஒழுக்கம்’, போன்ற உரைநடை நூல்களையும் படைத்த பெருமைக்குரியவர். “பெஸ்கியாரின் உரைநடை நூல்களுள் வியத்தகு நூல் வேதியர் ஒழுக்கமே” என்று ஜி.யூ.போப் குறிப்பிட்டுள்ளார். பலரும் படித்து பயன் பெறத்தக்க வசன நூல்கள் பலவற்றைத் தமிழ் மொழிக்குத் தந்த வீரமாமுனிவரை ‘வசன நடை வல்லாளர்’ என்றும் ‘தமிழ் மறுமலர்ச்சி உரைநடையின் தந்தை’ என்றும் போற்றுகின்றனர். கீழ்க்காணும் பாவை வீரமாமுனிவர் எழுதித் தமிழுக்களித்தார்:
“தாள் அணிந்த மதிமுதலாத் தமியனும் அக்
கமலத்தாள் தாங்கி லேனோ
கோள் அணிந்த குழலணிதார் குடைவண்டாப்
புகழ்பாடி மதுவுண் ணேனோ
வாள் அணிந்த வினைப்படைவெல் வலிச்சிங்கம்
ஈன்ற ஒரு மானாய் வந்தாள்
கேள் அணிந்த காவல்நலூர்க் கிளர்புனத்துப்
பசும்புல்லாய்க் கிடவேன் நானோ
தமிழ் எழுத்துக்களில் அவர் கொணர்ந்த சீர்திருத்தங்கள் ஏராளம் எனலாம். வீரமாமுனிவர் காலத்தில் ஆகாரத்தை எழுதும் பொழுது அகரத்தின் மேல் புள்ளியிட்டு எழுதியதை விடுத்து அகரத்திற்கு சுழியிட்டு ஆகாரத்தை எழுதினார். ஒகரத்தையும் ஓகாரத்தையும் வேறுபடுத்தல், எகர ஏகார உயிர்மெய் வேறுபடுத்தல், ஒகர ஓகார உயிர்மெய் வேறுபடுத்தல், எகரத்தையும் ஏகாரத்தையும் வேறுபடுத்தல், உயிர்மெய்யெழுத்தில் ஆகாரத்தையும் ஓகாரத்தையும் சுட்டும் ரகரத்திலிருந்து வேறுபடுத்தல் போன்ற பல்வேறு சீர்திருத்தங்களை இவர் கொண்டுவந்தார். ஐரோப்பிய மொழிகளான இலத்தீன், பிரெஞ்ச் போன்றவற்றையும், தமிழையும், திருச்சியை ஆண்ட மன்னருடன் உரையாடுவதற்காகவே உருது மொழியையும் கற்ற இவர், திருக்காவலூரில் கல்லூரி ஒன்றைத் துவங்கி அதில் தாமே தமிழாசிரியராகப் பணியாற்றி மாணாக்கர்களுக்கு தமிழ் இலக்கணங்களைக் கற்பித்தார். கற்றலையும் கற்பித்தலையும் தமிழுக்கு ஒருசேரச் செய்தவர், தமிழால் ஈர்க்கப்பட்டுத் தமிழனாய் வாழ்ந்து மறைந்தவர் வீரமாமுனிவர்.
இன்றும் என்றும் அவர் புகழ் போற்றி போற்றி !!!
திருமதி. பவ்யா இம்மானுவேல்
செந்தமிழர் பாசறை – அமீரகம்.