மார்ச் 2023
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணச்சுந்தரம்
நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணியில், எனது சொந்த ஊரான பட்டுக்கோட்டையைப் பாட்டுக்கோட்டையாக மாற்றிய மக்கள் கவிஞன் கல்யாணசுந்தரம், மறைந்தும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இறப்பே இல்லாத இறையருள் மாணிக்கம். இவர் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் & விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதிசுந்தரம் என்கிற மூத்த சகோதரரும், வேதநாயகி என்கிற இளைய சகோதரியும் உள்ளனர். பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் சுயமரியாதை இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவம்மாள். 1959-ஆம் ஆண்டு குமரவேல் என்ற ஆண் மகன் பிறந்தார். பத்தொன்பதாவது வயதிலேயே கவிதை எழுதுவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் யாவும் பாட்டாளி வர்க்கத்தின் வாழ்வியலைப் பட்டிதொட்டியெங்கும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.
பாடல்களின் வரிகளால் சாமானியனையும் சிந்திக்கத் தூண்டியவர். மனித மனங்களில் களைய வேண்டிய குறைகளையும், வளர வேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், பாடல்களாக இசைத்தார். இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிக்கை வெளியிட்டு வந்தது. 1954ஆம் ஆண்டு “படித்த பெண்” திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்த இவர், ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. தன்னை பொதுவுடைமைவாதியாக அடையாளப்படுத்திக் கொண்டதால் இளம் வயதிலேயே விவசாய சங்கத்திலும், பொதுவுடைமைக் கட்சியிலும் (கம்யூனிஸ்ட் கட்சி) ஈடுபாடு கொண்டிருந்தார்.
தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை ஊரெல்லாம் கொண்டு சேர்ப்பதிலும், கலை வளர்ப்பதிலும் சலியாது ஈடுபட்டார். நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின்பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்த்துத் தீவிரமாகப் பங்கெடுத்தார். தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடுமேய்ப்பவர், மாட்டு வியாபாரி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி, உப்பளத் தொழிலாளி, எந்திரம் ஓட்டுனர், தண்ணீர் வண்டிக்காரர், அரசியல்வாதி, பாடகர், நடிகர், நடனக்காரர் மற்றும் கவிஞர் போன்ற பல்பரிமாணங்களுக்குச் சொந்தக்காரர், கல்யாணசுந்தரம் அவர்கள்.

சென்னை இராயப்பேட்டையில் வறுமையோடு வாழ்ந்த பட்டுக்கோட்டையாருக்கு, பொதுவுடைமை இயக்க தோழர் பா.ஜீவானந்தம் நெருங்கிய நண்பர் ஆனார். அவர் மூலமாக ஜனசக்தியில் பாடல்கள் எழுதினார். முதல் பாடல் ஜனசக்தியில் 1954இல் வெளிவந்தது. ஜீவாவின் உதவியால் பொதுவுடைமை இயக்க நாடகமான “கண்ணின் மணிகள்” நாடகத்திற்கும் பாடல்கள் எழுதினார். திரைப்படங்களில் பாடல் எழுத வாய்ப்புத் தேடி பட்டுக்கோட்டையார் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல; அதுவும் பல நாட்கள் பட்டினியோடு. 1954ஆம் ஆண்டு முதல் முதலாக “படித்த பெண்”என்ற திரைப்படத்திற்குப் பாடல்கள் எழுதினார். கவிஞரின் இரண்டாவது படம் மஹேஸ்வரி, 1956இல் முதன்முதலாக பட்டுக்கோட்டையாரின் பாடல்களைத் தாங்கி வெளிவந்தது. நாடகங்களில் நடிப்பதை விட்டுவிட்டு முழுநேரமும் பாடல்கள் எழுதுவதில் ஈடுபட்டார். 1956ஆம் ஆண்டிலேயே “பாசவலை” படம் வெளிவந்தது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மக்கள் அனைவராலும் போற்றிப் புகழப்பட்ட கவிஞர் ஆனார். அன்று தொடங்கிய வெற்றிப் பயணம் அவரது இறுதி நாள் வரை தொடர்ந்தது.
எம்.ஜி.ஆர்- சிவாஜி படங்களில் கல்யாண சுந்தரத்துக்கு வெற்றிமேல் வெற்றி குவியத் தொடங்கியது. 1956-க்கு பிறகு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்களோடு பல படங்கள் வெளிவரத் தொடங்கின. குறிப்பாக எம்.ஜி.ஆர். படங்களில் தத்துவப் பாடல்கள் இடம் பெற்றன. அவை அவரை புகழ் ஏணியின் உச்சிக்கே கொண்டு சென்றன. 1981ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, கவிஞருக்கு பாவேந்தர் விருது வழங்கியது. கவிஞரின் அனைத்துப் பாடல்களும் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. காலம் அக்டோபர் 8, 1959 ஆண்டு அவரை நம்மை விட்டுப் பிரித்து விட்டது.
கவிஞர்களே வியந்த மக்கள் கவிஞன்..
“எத்தனை காலம் மனிதன்
வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை..
அவன் எப்படி வாழ்ந்தான்
என்பதை உணர்ந்தால்
வாழ்க்கையில் தோல்வி இல்லை..”
வாலியின் இந்த வைர வரிகள் கச்சிதமாக பொருந்துபவர்களில் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தைத் தவிர்க்கவே முடியாது.
சக்ரவர்த்தி திருமகள் படத்தில், “மனுஷன் பொறக்கும்போது இருந்த குணம் போகப்போக மாறுது” பாடலில்,
“புரளி கட்டி பொருளைத் தட்டும் சந்தை
பச்சைப் புளுகை விற்று சலுகை பெற்ற மந்தை
இதில் போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை
உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால்
நம்பி ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால் &
நாம் உளறி என்ன கதறி என்ன
ஒண்ணுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா”
இப்படி சமூகத்தின் அவலநிலையை வெகுவாகச் சாடினார் பட்டுக்கோட்டை.
“திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது
திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது
அதைச் சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
திருடராய்ப் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஓழிக்க முடியாது
திருடராய்ப் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஓழிக்க முடியாது.
இன்றும் இதுவே நடக்கிறது!”
என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால் எது என்று எனக்கு தெரியாது; ஆனால் நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் புகழக் காரணம் பகுத்தறிவு மிக்க பாடல்களே! தமிழும் தமிழினமும் இருக்கும் வரை பட்டுக்கோட்டையார் பாடல்கள் காற்றோடு கலந்த கீதங்களாக தலைமுறை கடந்தும் பகுத்தறிவு சிந்தனையைத் தட்டி எழுப்பும்.
திரு. ச.பாலமுருகன்,
சுபைல் மண்டலப் பொறுப்பாளர்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.