spot_img

எழுத்தோலை – ஓலைச்சுவடி படியெடுத்தல்

மார்ச் 2023

எழுத்தோலை

ஓலைச்சுவடி படியெடுத்தல்

சுவடி பிரதி செய்தல் அல்லது படியெடுத்தல் என்பது தொன்று தொட்டு இருந்துவரும் வழக்கம் ஆகும்.  படியெடுக்கும் வழக்கம் ஒன்றே, மிகப் பழைய நூல்கள் காலங்கள் பல கடந்தும் இன்றும் நம் கைகளில் தவழும் வாய்ப்பினைப் பெற்றுத் தந்துள்ளது எனலாம்.  தமிழர் நாட்டின்  தட்ப வெப்ப மாறுபாட்டினால் ஓலைச்சுவடிகளை 300 ஆண்டுகளுக்கு மேல் பாதுகாப்பது அரிது.  ஆகையால் ஒரு நூல் சிதிலமடையும் நிலையை எட்டியவுடன் தகுந்த நபரைக் கொண்டு படியெடுப்பதால் தொடர்ந்து அந்த நூலின் கருத்துக்களைப் பிற்காலச் சந்ததியினர்க்குப் பாதுகாத்து அளிக்கலாம். சுவடிகளில் எழுதப்பட்ட பொருளை அல்லது கருத்தினை நாம் படியெடுத்தல் மூலம் எளிமையாகப் பாதுகாக்க முடியும்.  இவ்வாறு பழைய சுவடிகளில் உள்ள கருத்துக்களைப் புதிய சுவடிகளில் படியெடுத்து இடமாற்றம் செய்யும் முறை மரபு வழியாகக் கையாளப்பட்டுள்ளது. இன்று நம் கைகளில் தவழும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட  தொல்காப்பியம், திருக்குறள் போன்ற பல்வேறு நூல்களும் இம்முறையிலேதான் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. 

மூலபாடத்திலிருந்து வழிச்சுவடிகள் தோன்றக் காரணங்கள் பல. ஒரு நூலை ஆசிரியரிடம் பாடம் கேட்கத் தொடங்கும் போது, அந்த நூல் தன்னிடமும் இருக்க வேண்டும் என்னும் நோக்கில் ஆசிரியரிடத்திலிருக்கும் சுவடியையோ அல்லது வேறு யாரிடமிருந்தாவது பெற்றோ படியெடுத்துக் கொள்வர். அந்தாதி ஒன்றைப் படிப்பவர் வேறு அந்தாதிகள் யாரிடமாவது இருக்கக் கண்டால், அது நமக்கு உதவும் என்று கருதி அதைப் படியெடுத்து வைத்துக் கொள்வது; ஆசிரியர்கள், புலவர்கள், செல்வந்தர்கள், பிற ஆர்வலர்கள் போன்றோர் இந்த நூல் நம்மிடம் இருக்கட்டும், நம் வீட்டு நூல்களோடு இருக்கட்டும் என்னும் பலவகை நோக்கங்களோடு படியெடுத்து வைத்துக் கொள்வது; அல்லது பிறரைக் கொண்டு படியெடுக்கச் செய்து பெற்றுக் கொள்வது; இந்தச் சுவடி மிகவும் பழையதாகிப் பொடிந்து போகிறதே; வேறுபடி எடுத்து வைத்துக் கொள்வோம் என்று புதிய படியெடுத்துக் கொள்வது; புதியபடி எடுக்கச் செய்வது வழக்கம். இந்த நிலை பாடம் நடத்துகின்ற ஆசிரியர்களிடையே மிகுதியாக ஏற்படுவதுண்டு.

புறச்சூழல்களாலும் கால எல்லைகளாலும் ஏற்படும் அழிவுகளைத் தவிர்க்கவும், சிதிலமடைந்த சுவடிகளைக் காக்கும் பொருட்டும், மற்றுமின்றி கற்றறிந்த பெரியோர்களின் கருத்துக்களைத் தங்கள் வசம் வைத்துக் கொள்ளவும் பழங்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள், செல்வந்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் ஆகியோர், ஓலைச்சுவடிகளில் எழுதும் பயிற்சி பெற்ற எழுத்தர்களைப் பணிக்கு அமர்த்தி ஏடுகளைப் படியெடுத்துள்ளனர்.  அரும் பெரும் பல சுவடிகளைக் காத்த பெருமை பயிற்சி பெற்ற எழுத்தர்களையே சாரும் எனலாம்.  சுவடிகளைப் படியெடுப்பவர் நல்ல கல்வி அறிவு உள்ளவராக இருத்தல் வேண்டும்.  இல்லையெனில் கருத்துப் பிழைகள் ஏற்பட வாய்ப்புகள் ஏற்படும்.  கல்வி கற்போர் தனது ஆசிரியர் வாய்மொழியாகக் கூறும் கருத்துக்களை எழுதுவதால் எழுத்துப் பிழையும், பாடவேறுபாடும் ஏற்படும்.  இதுபோன்ற சுவடிகளைப் படியெடுப்பதால் மேலும் பிழைகள் கூடும்.  இதனை ஒரே தலைப்பில் உள்ள பல்வேறு சுவடிகளில் உள்ள பாடவேறுபாடுகளைக் கொண்டு அறியலாம்.  எனவே ஏட்டுச் சுவடியிலிருந்து படியெடுப்பவர் தெளிவுடனும் பொறுப்புணர்வுடனும் படியெடுத்தல் வேண்டும்.

ஆசிரியர்கள் சுவடிகளைப் பல மாணவர்களைக் கொண்டு படியெடுத்து அவர்கள் செல்லும் இடங்களிலுள்ள முக்கிய நூலகங்கள் மற்றும் கல்வியாளர்களுக்குக் கொடுப்பது வழக்கம். அவ்வாறு படியெடுக்கும் பொழுது தவறு ஏற்படா வண்ணம் மிகவும் கவனமாகச் செய்தனர். ஒரு சுவடியைப் படியெடுக்க அச்சுவடியில் உள்ள ஏடுகளின் எண்ணிக்கைக்குக் குறையாமல் ஏடுகள் தயாரித்து ஒவ்வொரு மாணவரிடமும் கொடுத்து ஆசிரியர் வாசிக்க மாணவர்கள் எழுதுவார்கள்.  ஆசிரியர் வாசிக்கும் பொழுது மாணவர்களைப் பார்த்தால் கவனம் சிதறி பிழை ஏற்படும் என்பதால் ஆசிரியர் ஒரு வரி படித்தவுடன் மாணவர்கள் எழுதத் தொடங்குவார்கள்.  அவர்கள் எழுதி முடித்ததை ஆசிரியரின் உதவியாளர் மணி அடித்து அறிவித்ததும், ஆசிரியர் அடுத்த வரியைப் படிப்பார்.  இவ்வாறு கண்ணும் கருத்துமாகப் படியெடுக்கும் முறை அக்காலத்தில் இருந்தது.

சில மன்னர்கள் தாங்கள் செய்யும் தானங்களுடன் படியெடுக்கப்பட்ட சுவடிகளையும் தானம் செய்துள்ள னர். இன்று ஒரு புத்தகத்தைப் பல பிரதிகள் அச்சடிப்பது போல அன்று மூல ஓலைச்சுவடிகளில் இருந்து அதைப் படியெடுத்து எழுதுவதற்கென்றே தனியாக எழுத்தாளர்கள் இருந்தார்கள். இப்படிப் படியெடுப்பவர்கள் சுவடியின் கடைசி வரியின் கீழ் கையெழுத்திட்டு தமது பெயரையும், ஊரையும் தெரிவிப்பார்கள். இவர்களால் தான் ஒரு ஓலைச்சுவடி பல சுவடிகளாக உருவானது. சங்ககாலப் புலவர்களுள் ஒருவர் எழுத்தாளன் சேந்தன் பூதனார் என்னும் பெயருடையார். இவர் பாடிய பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை  ஆகியவற்றில் இரண்டிரண்டு காணப்படுகின்றன. இவருக்கு ‘எழுத்தாளன்’ என்னும் பெயர் பாடல்களைப் பாடியமையேயன்றி நூல்கள் பலவற்றைப் படியெடுத்தமையாலும் ஏற்பட்டிருக் கலாம். ஏட்டில் நூல்கள் முதலியவற்றை எழுதியோர், “எழுத்தாளர்” என்னும் சிறப்புக்குரியராகின்றனர்.  தமிழ்ச் சுவடிகளை எழுதிப் போற்றுவோரும் எல்லாக் காலத்தும் இருந்து வந்துள்ளனர். பிறர் பொருட்டு ஏடு பெயர்த்து எழுதித் தருதலைத் தொழிலாகக் கொண்டிருந்தோரும் அங்கங்கே இருந்தனர். அதனால் நூல்கள் பலவிடத்தும் பரந்து படிக்கப் பயன்பட ஏதுவாகியது.

முன்னாட்களில் ஓலைச்சுவடிகளை மக்கள் கூடும் இடங்களான கோவில்கள், அரண்மனைகள், அருங்காட்சியகங்கள், மடங்கள் ஆகியவற்றில் வைத்துப் பாதுகாத்தார்கள். அக்காலகட்டங்களில் திருக்கோயில்களும் சமயச்சார்பான திருமடங்களும் கல்வி நிலையங்களாகவும் விளங்கியதுண்டு. மாணவர் பலர் இங்கெல்லாம் தங்கியிருந்து கல்வி பயின்றனர். ஆகவே இத்தகு நிலையங்களில் பல சுவடிகள் இருந்தன. தில்லைச் சிற்றம்பலக் கோயிலிலிருந்து தேவாரத் திருமுறைகளை அநபாய சோழன் கண்டெடுத்து உலகிற்குத் தந்தார் என்பது வரலாறு.

திருவாவடுதுறை,தருமபுரம், சித்தாமூர், துறையூர்,   விருத்தாசலம், திருப்பனந்தாள், மதுரை, செப்பறை, வானமாமலை முதலிய ஊர்களில் உள்ள சமயஞ்சார்ந்த திருமடங்களில் சுவடிகள் பல காணப்படுகின்றன.  மருத்துவம், சோதிடம் ஆகியவற்றைத் தொழிலாகக் கொண்டிருந்த குடும்பங்களில் அப்பொருள்கள் பற்றிய சுவடிகள் பரவலாக உள்ளன.

இன்று நம்மிடையே கிடைக்கின்ற அனைத்துப் பொருட்சுவடிகளும் – அதாவது  இலக்கணம், இலக்கியம், கணிதம், மருத்துவம், சோதிடம் போன்ற அனைத்துப் பொருட்சுவடிகளும் நூலாசிரியர்களால் எழுதப்பெற்ற அல்லது நூலாசிரியர் சொல்ல, அவர் முன்னாலேயே இருந்து பிறரால் எழுதப்பெற்ற சுவடிகளாகிய மூலச் சுவடிகளைக் கொண்டு பிறரால் படியெடுக்கப் பெற்ற வழிச்சுவடிகளேயாகும். மூலச்சுவடி என்பது இன்று நம்மிடை எதுவும் இல்லை என்பது உறுதி என்றாலும் மிகவும் பிற்காலத்து, பத்தொன்பது இருபதாம் நுற்றாண்டுகளில் ஒரு சில சான்றோரால் எழுதப்பெற்ற சிற்றிலக்கியங்கள், மருத்துவம் போன்ற சில சுவடிகள் கிடைக்கின்றன. அவை மட்டுமே மூலச்சுவடிகளாகும். அச்சு வசதி கிடைத்துவிட்ட காரணத்தால் அத்தகு மூலச்சுவடிகள் அவ்வப்போது அச்சிடப்பெற்று விட்டன. அச்சிடாமல் இருக்கின்ற மிகப் பழங்காலத்துச் சுவடிகள் அனைத்துமே பிறரால் படியெடுக்கப் பெற்ற வழிச்சுவடிகளேயாகும் என்பது தெளிவான உண்மை.

வழி ஏடு தோன்றுவதில் முதல் நிலை அவரவர் தேவைக்கேற்ப ஒரு சுவடியைப் பார்த்துப் படியெடுக்கும்போது, முதலில் தோன்றுவது கையெழுத்துச் சிக்கல்களே! எல்லா வகையான வசதிகளோடு கூடிய எழுதுகோல்களைப் பயன்படுத்தும் இக்காலத்து எழுத்துகளிலேயே பலருடைய கையெழுத்தைப் படித்தறிவது கடினமாக உள்ளதை அனைவரும் அறிவோம். எழுத்தாணி கொண்டு ஓலையில் எழுதுவோரின் எழுத்து முறைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அ – சு இவற்றிடை வேறுபாடு தெரியாது. ஈ – ஈ – புறத்திலே புள்ளியிருக்கும். உ – 2 போல; ஊ – உள போல; இவ்வாறு வடிவங்கள் வேறுபடுவதால் இடத்திற்கேற்ப வெவ்வேறு சொற்களாகக் கருத நேரிடும். ஊக்கத்தோடு என்னுஞ்சொல் உறக்கத்தெரரு என்று தோன்றிப் பொருள் விளங்காது சிக்கலேற்படும். க ச தி த ந ல வ ஏ ற கு ரு டு போன்ற எழுத்துகளிடையே வேறுபாடு தெரியாது. இவற்றைப் போன்று பல சிக்கல்கள் தொடக்க நிலையிலேயே ஏற்படுவது கண் கூடு. ஒன்றை வேறொன்றாகக் கருதி எழுதி விடுவதே வழி ஏடுகளில் முதல் நிலை வேறுபாடுகளாகிவிடுகின்றன. எழுத்துச் சிக்கல் முதலாக ஏற்படும்போது இவ்வாறு பாடம் வேறுபடுவது பாடவேறுபாடு எனப் பெறுகிறது.

பாட வேறுபாடுகள்:

பாடம் என்பது மூலபாடம். நூலாசிரியர் உரையாசிரியர் ஆகியோர் நிறுவிய உண்மைத் தொடரே மூலபாடம் எனப்பெறுகிறது. அந்த உண்மைத்தொடர் சொல்வோராலும் படிப்போராலும் எழுதுவோராலும் வேறுபட்டு வழங்கப் பெறுமேயானால் அது பாடவேறுபாடு என்னும் பெயரைப் பெறும். ஒருவர் சொல்ல அல்லது பாடக்கேட்டு மற்றவர் எழுதுவதாலும், ஒருவர் ஒரு சுவடியிலிருந்து இன்னொரு சுவடியில் பெயர்த்து எழுதுவதாலும் பாடங்களில் வேறுபாடு ஏற்படுவதுண்டு. மூலபாடத்தைப் படியெடுப்பவர்கள் சமயம் சார்ந்தும், தங்களின் புலமைக்கேற்பவும், படியெடுக்கும் போது மாறுதலைச் செய்வதும் உண்டு. ஆசிரியர் விரைவாக உரைக்கும் போது கேட்டுப் படியெடுக்கும் பல மாணவர்கள் மாறுபாடாகவும், விடுபட்டும் எழுதியதும் உண்டு.

தென் மாவட்டங்களில் வில்லுப்பாட்டுச் சுவடிகளில் “தமிள்” என எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்.  “கைகாள் கூப்பித் தொழீர்”  என அப்பர்  “விளி”ப்பொருளில் எழுதிய பாடலைச் சுவடியில் எழுதுகையில், “கைகால்” எனப் பிழையாக எழுதியதுண்டு. ழ, ள  எழுத்துகள் தம்முள் மயங்கி வரும் வகையில் எழுதுவது தென்பாண்டிநாட்டு மரபு.

சொற்களின் வழக்கும் பொருளும்:

கால ஓட்டத்தில் மொழியில் சொற்களின் பொருள் மாறுபடும். இருபத்தைந்து ஆண்டுகளின் கால இடைவெளியில் இம்மாறுதல் நிகழலாம். புதுச் சொற்களின் வழக்கும் இவ்வாறே. கைமாற்று என்னும் சொல், ஒரு பொருளைத் தற்காலிகமாகப் பெற்றுப் பின்னர் திருப்பித்தருதலைக் குறிக்கும். இது மாற்றம் பெற்றுக் “குறியாப்பு” என்னும் சொல்லாக வழங்கியது. பலவிடத்தும், சுவடிகளில் ஒருநூல் பெயர்த்து எழுதப்படுகையில் இடைச் செருகல் நேர்வதுண்டு. கம்பராமாயணத்தில் வெள்ளிப்பாடலும், சீவக சிந்தாமணியில் கந்தியார் பாட்டும் இடைச்செருகல் எனப்படுகிறது.

காகிதமும் அச்சு இயந்திரமும் பெருகப் பெருக ஏட்டில் எழுதும் நிலை குறைந்துவரலாயிற்று. 1876 ஆம் ஆண்டுவரை வாழ்ந்த மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் காலத்தில் ஏட்டில் எழுதும் பழக்கம் பரவலாயிருந்ததென்பது தெரியவருகிறது. ஒரே மாதிரியாக அமைத்த வெற்றேட்டுச் சுவடிகளில் நூல்களை எழுதி வைத்துக் கொள்வதில் பிள்ளையவர்கள் பெருவிருப்புடையராயிருந்தனராம். மகாவித்துவான் அவர்கள் பாடியபோது மாணவர்கள் அதனைக் கேட்டு எழுதிய நிகழ்ச்சிகள் அவர்தம் சரித்திரத்தில் காணப்படுகின்றன. பழைய நூல்களை ஏடுகளிலிருந்து காகிதத்தில் பெயர்த்து எழுதும் நிலையும் சென்ற நூற்றாண்டில் புலவர்களிடையே புகுந்துவிட்டது.

காகிதம் எழுதுபொருளாகப் பயன்பட்டபோது பழஞ்சுவடிகளைக் காகிதத்திலும் பெயர்த்து எழுதிப் போற்றுவாராயினர். சென்ற நூற்றாண்டில் காகிதப் புழக்கமும் அச்சு இயந்திரங்களும் மிகுதிப்படவே தமிழ் நூல்கள் ஏட்டிலிருந்து அச்சுப்படிவமாக மாறத்தொடங்கின. அச்சில் வந்தபின் நூல்களை எளிதில் பெறவும் ஏட்டில் எழுத்துகளை நிதானித்துப் படிப்பது போலன்றி விரைவாக வாசிக்கவும் இயன்றது. ஆகவே, அச்சில் வந்த நூல்களின் தாக்கத்தால் சுவடிகளில் கற்றோரின் கவனம் செல்லவில்லை. அச்சு நூல்கள் மூலமே படித்தும் எழுதியும் பழகி வருவதோடு, சுவடிகளையும் அவற்றின் எழுத்து அமைப்புகளையும் அறியாதவர்களாகிய நமக்கு இன்று சுவடிகளைப் படிப்பது பெரும் சிக்கலே.

 ஏடுகளின் சிதைவு:

ஏட்டுச் சுவடிகளின்வழிப் படிக்கும் நிலை மாறியபோதே அவற்றின் சிதைவிற்கும் அழிவிற்கும் வித்திட்டாயிற்று. ஏட்டுச் சுவடியில் எழுத்தாணி கொண்டு எழுதும் பழக்கமும் வரவரக் குறைந்துவந்தது. அதனால் புதிய சுவடிகள் எழுதிவைக்கும் நிலைமையும் மாறிவிட்டது. ஒருசிலர் தாம் போற்றும் நூல்களைக் காகிதத்தில் படியெடுத்தும் கற்கலாயினர். பெரும்பாலான இடங்களிலும் இருந்த சுவடிகள் போற்றுவாரின்றி மூலைமுடுக்குகளில், பெட்டி பேழைகளில் அடைபட்டுப் பரண்களில் சிறைப்பட்டுவிட்டன. இவ்வாறு கவனிப்பாரின்றிக் கிடந்த சுவடிகள் பூச்சி புழுக்களுக்கும் எலிகளுக்கும் கறையானுக்கும் இரையாயின. சுவடிகளின் அருமை அறியாத மக்கள் அவற்றை நீருக்கும் நெருப்புக்கும் இரையாக்கி மகிழ்ந்தனர். இத்தகைய இன்னல்களையெல்லாம் தாண்டி இந்நாளிலும் சுவடிகள் அங்கங்கே இருந்து வருவது வியப்புத்தான்.

 – எழுத்தோலை நீளும்…

திரு. .இராமகிருசுணன்,

ஆன்றோர் பேரவைத் தலைவர்,

செந்தமிழர் பாசறை – அமீரகம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles