மார்ச் 2023
திருப்பி அடிக்கிறான்!
திருப்பி அடிக்கிறான் – இனத்தைத்
திரும்பிப் பார்த்ததால் – இன்று
திருப்பி அடிக்கிறான் – இலக்குடன்
திருப்பி அடிக்கிறான்.
அரசியல் பழகு என்கிறான் – நல்
அரசியல் தேடு என்கிறான் – நல்ல
அரசியலை நாடு என்கிறான்- நாட்டு
அரசியலை மாற்று என்கிறான்.
அரத்தால் தேய்ப்பது போல் – அழுத்தி
அறத்தைச் சொல்கிறான் – அறத்தை
மறந்த தாழ்நிலை கண்டு – அந்நிலை
மாற்றத் துடிக்கிறான்
உணர்வால் மீட்கிறான் – தமிழர்
உணர்வை மீட்கிறான்- தமிழினம்
உணர்ந்து கொள்ளவே – தமையனாய்
உணர்ந்து சொல்கிறான்
உணவை மீட்கிறான் – பழந்தமிழ்
உணவை மீட்கிறான் – பாரினில்
உழவு இல்லையேல் – பசிப்பிணியில்
உழலும் என்கிறான்
உலகைக் காக்கவே – உலகின்
உயிரைக் காக்கவே – உயிரெனும்
உழவை மீட்கிறான் – உழலும் உழவரை மீட்கிறான்
மழைக்காகப் பேசுகிறான் – மழை தரும்
மரத்துக்காகப் பேசுகிறான் – கனி தரும்
மரம் நடச் சொல்கிறான் – காப்பரண்
மரமே என்கிறான்
மண்ணுக்காகப் போராடுகிறான் – மண்ணின்
மக்களுக்காகப் போராடுகிறான் – மக்களின்
வாழ்வுக்காகப் போராடுகிறான் – வாழ்க்கையை
வளமாக்கப் போராடுகிறான்.
காடுகளுக்காகப் போராடுகிறான் – நன்செய்
கழனிகளுக்காகப் போராடுகிறான் – புன்செய்
நிலங்களுக்கும் போராடுகிறான் – நஞ்சைத்
தெளிப்பதற்கெதிராகப் போராடுகிறான்.
மலைக்காகப் போராடுகிறான் – ஆற்று
மணலுக்காகவும் போராடுகிறான் – ஆழ்
கடலுக்காகவும் போராடுகிறான் – நீள்
கரையைக் காக்கவும் போராடுகிறான்.
அகதியாகப் போவோம் என்கிறான் – விழித்தெழு
அடிமையாகச் சாவாதே என்கிறான் – போராடி
உரிமைக்காகச் சாவோம் என்கிறான் – உரிமை
உயிரினும் மேலானது என்கிறான்
மது ஒரு நோய்- ஒழிப்போமென்கிறான்
மாயத் திரை ஒரு நோய் – பழிப்போமென்கிறான்
மறதி ஒரு நோய் – விடுப்போமென்கிறான்
மறத்தமிழ் மருந்தால் நோய் – மாற்றுவோமென்கிறான்.
இனத்துக்கான போராட்டம் – எங்கும்
எதிரிகளின் பேயாட்டம் – என்றென்றும்
துரோகிகளின் மாறாட்டம் – எதற்கும்
துணிந்த களமாட்டம்.
திருப்பி அடிக்கிறான் – இனத்தைத்
திரும்பிப் பார்த்ததால் -இன்று
திருப்பி அடிக்கிறான் – இலக்குடன்
திருப்பி அடிக்கிறான்!!
திரு. ம.இராமகிருசுணன்,
ஆன்றோர் பேரவைத் தலைவர்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.