மே 2023
ஈழத்தில் அதிகரிக்கும் பாசகவின் தலையீடு – தமிழர்களை இறுக்கும் சதிவலைகள்
கடந்த சில மாதங்களாகவே, தமிழீழ தேசியத் தலைவரது இருப்பு குறித்த கேள்விகளும், கணிப்புகளும் தமிழ்ச்சமூகம் மட்டுமின்றி அனைத்துலகின் பேசுபொருளாக மீண்டும் மாறியிருக்கிறது. ஈழத்தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்குக் காரணமான இலங்கை அரசுக்கு ஆதரவளிப்பதிலும், இறுதித் தீர்வுக்கான தேர்வுகளில் தமிழீழம் கிடையாது என்ற நிலைப்பாட்டிலும் காங்கிரசு மற்றும் பாசகவுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. அரசியல் காரணங்களுக்காகவேனும் காங்கிரசின் ஈழமக்கள் குருதி படிந்த கரங்களைக் காட்டிக் கொடுக்காமல், கைகுலுக்கி கயமைத்தனமான திட்டங்கள் தீட்டிட உத்தேசித்திருக்கிறது ஒன்றியத்தை ஆளும் பாசிச பாசக.
வல்லாதிக்கங்களின் புவிசார்அரசியல் போட்டியில், இலங்கைக்கு எல்லாவித உதவிகளையும் செய்த மேற்குலகம், காவு கொடுக்கப்பட்ட தமிழினத்தை நினைத்துப் பார்க்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது தான். ஆனால் பத்து கோடிக்கும் மேற்பட்ட தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தமிழ்நாடு எனும் நிலப்பரப்பைத் தன்னகத்தே கொண்ட இந்திய ஒன்றியம், காங்கிரசு கொடுத்த காயத்தைக் கிண்டி, தனது மதவாத இலக்குகளை எட்ட ஈழத்தில் முயற்சிப்பது பச்சை அயோக்கியத்தனம். பாசக போன்ற ஒரு கட்சியிடம் வேறென்ன நாம் எதிர்பார்க்க முடியும் என்றாலும் கூட, ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தையும் ஆளும் இடத்தில் அது இருக்கிறது என்பதால், அச்சமூட்டும் விளைவுகளை எண்ணி உலகத்தமிழினம் கவலை கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. ஏற்கனவே இந்தியத்தின் அகந்தையால், திராவிடத்தின் துரோகத்தால் பெருவிலையைக் கொடுத்திருக்கும் தமிழினம், இன்னும் கவனத்துடன் இந்திய ஒன்றியத் தலைமையை அணுகுவது நலம் பயக்கும் நன்முறையாக இருக்கும்.
2009 முதல் 2014 வரை, அதாவது இறுதிகட்டப் போருக்குப் பின்னும், இந்திய ஒன்றியத்தில் பாசக ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னும், நேரடியாகவே போரை முன்னின்று நடத்திய காங்கிரசு ஈழத்தமிழ் மக்களுக்கு சொல்லொணாத் துன்பங்களை விளைவித்தது. அனைத்துலகின் முன் இலங்கையின் தமிழின அழிப்பு அணுகுமுறையையும், தமிழர்கள் மீதான மனிதவுரிமை மீறல்களையும், ஈழத்தில் நடத்திய போர்க்குற்றங்களையும் கொண்டு செல்லப் பெருந்தடையாக காங்கிரசு இருந்தது. வளர்ச்சி – குசராத் மாடல் – ஊழல் எதிர்ப்பு போன்ற கவர்ச்சியான கொள்கைகளை அரிதாரமாகப் பூசிக்கொண்டு வந்தாலும், ஆரிய இந்துத்துவ அடிப்படைவாத வலதுசாரியான பாசக ஆட்சிக்கு வந்தால் இனப்படுகொலை விவகாரங்களில் இந்தியத்தின் அணுகுமுறை மாறலாம் அல்லது குறைந்தபட்சம் மட்டுப்படலாம் என்றே தமிழ்ச்சமூகம் நினைத்தது. அதற்கேற்றார்போல 2014க்கான நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் ஈழம் குறித்த எந்த வெளிப்படையான வாக்குறுதியையும் பாசக தரவில்லை என்பதோடு, தனது அதிகார வேட்கைக்கான உணவு, இந்தி பேசும் மாநிலங்களில் இருந்துதான் கிடைக்கும் என்பதால் நாக்பூர் தலைமை தனது கவனத்தை முழுவதையும் வட இந்தியாவில் குவித்திருந்தது வெளிப்படையாய்த் தெரிந்தது.
தேர்தல் முடிவுகள் பாசகவுக்கு ஆதரவாக வந்தபொழுது, உண்மையில் தமிழர்கள் அழவோ ஆனந்தமடையவோ ஏதுமில்லாமலிருந்தது. ஆண்டாண்டுகளாய் நம்மை அடக்க முயலும் ஆரிய தில்லியில் தலைமை மாறுமே தவிர தத்துவம் மாறாது என்பது அறிவுத்தளத்தில் இயங்கிய தமிழர்களுக்குத் தெரியும். அதை உண்மையாக்கும்படி இரண்டு இலட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்ய இலங்கைக்குத் துணை நின்றது, அந்தக் குற்றத்திலிருந்து தப்பிக்கப் பன்னாட்டு அரங்கில் ஆதரவளிப்பது, இராணுவப் பயிற்சியளிப்பது என்று காங்கிரசு செய்ததைத் தொடர்வதோடு, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவரவும் பல உதவிகளை இந்திய ஒன்றிய அரசு, இலங்கையை இன்னும் நெருங்கிய நட்பு நாடாகக் கருதிச் செய்துவருகிறது. வழமைபோலவே அந்த நன்றி சிறிதுமின்றி இலங்கை சீனாவுடன் சேர்ந்து இந்தியாவிற்கு எதிராகவே தொடர்ந்து செயற்பட்டு வருகிறது.
வாச்பாய் காலந்தொட்டு மோடி காலம் வரை ஈழத்தமிழர்கள் மீதான பார்வை பாசகவுக்கு ஒன்றுதான். இலங்கையில் நடப்பது உள்நாட்டுப்போர்; தமிழர்களுக்குத் தனிநாடாகத் தமிழீழம் அமைவதை பாசக ஆதரிக்காது என பொன்.இராதாகிருசுணன் உள்ளிட்ட தமிழக பாசக தலைவர்கள் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழர்களை அழித்தபின், இசுலாமியர்களைக் குறிவைத்து ஒடுக்க முயலும் இலங்கை மீது தன் கவனத்தைத் திருப்பியிருக்கிறது, பாசக. அதுவும் குறிப்பாக ஈஸ்டர் நாள் குண்டுவெடிப்புகளுக்குப் பின், வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்களை மத மற்றும் சாதி அடிப்படையில் மோதிக்கொள்ள வைக்க காவிகளை இறக்கி பாசக உள்ளடி வேலை செய்கிறது. கோவில் புனரமைப்புகள், வீடுகள் கட்டிக்கொடுத்தல், அவற்றை இந்துத்துவத் தலைவர்களை வைத்துத் திறத்தல், தமிழக பாசக தலைவரின் இலங்கை பயணங்கள் என்று பாசக ஈழத்தில் காலூன்ற முனைவது தெளிவாகத் தெரிகிறது. அங்குள்ள தமிழ்த் தலைவர்களை வளைக்கவும், பாசகவுக்கு ஆதரவாக இயங்க வைக்கவும் முயற்சிகள் நடப்பதன் தொடர்ச்சியே, தமிழ்நாட்டில் இருக்கும் (நாம் தமிழர் நீங்கலான) ஈழ ஆதரவுத் தலைவர்கள் பாசகவினை ஈழப்பிரச்சனையைத் தீர்க்கவல்ல அமைப்பாகக் காட்டும் போக்கு.
நாம் தமிழரைப் பொறுத்தவரை இருந்தால் அவர் எங்கள் தலைவன்; இல்லாவிட்டால் அவர் எங்கள் இறைவன் என்பதே நமது நிலைப்பாடு. ஒரு வகையில் புலிகளின் மீதான தடையை நீக்க மேற்குலகில் செய்யப்பட்டுவரும் முன்னெடுப்புகளுக்கு முட்டுக்கட்டை போட விரும்பும் இந்தியத்தின் சூழ்ச்சி என்றே இத்தகு விடயங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ச்சியாகத் தலைவர் மீது திட்டமிடப்பட்ட அவதூறுகளை அவ்வப்போது அள்ளித் தெளிக்கும் திராவிடமும், நாம் தமிழரின் ஈழ நிலைப்பாட்டினால் பெருகும் பொதுமக்கள் ஆதரவை மடைமாற்ற, இது போன்ற குழப்பங்களை வளர்த்தெடுக்க உதவுகிறதா என்றும் வினவ வேண்டியுள்ளது. ஏற்கனவே ஒர்மையும், ஆட்சியதிகாரமும் அற்ற நிலையில் இனப்படுகொலைக்கு முகங்கொடுத்த தமிழினம், பாசக காட்டும் பொய்யான பரிவையும், பரிதாபத்தையும் நம்பி ஏமாறக் கூடாது. தலைவர் இருந்தவரை ஏதும் பேசாமலிருந்த பாசக இன்று இந்து ஈழம் அமைப்போம் என உரைப்பதும், தலைவரை ஒரு மகாத்மா எனப் புகழ்வதும், காலச்சக்கரத்தைத் திருப்பி நகர்த்தி இனப்படுகொலையைத் தடுக்கும் வரம் கேட்போம் என்று கூறுவதும், இன எழுச்சி மாதத்தில் நினைவேந்தல் நடத்தி தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளைப் பற்றி உணர்வுப்பூர்வமாகப் பேசுவதும் ஏமாற்று வேலை தான் என ஒன்றிய பாசக அரசின் வெளியுறவுக் கொள்கை சொல்லாமல் சொல்கிறது.
இனப்படுகொலை மற்றும் போர் குற்ற விசாரணை மீதான வாக்கெடுப்பின்போது, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வலுப்பெற்றன. இந்நிலையில், 2021 மார்ச்சில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவையில் நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. 13-வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை இலங்கை அமல்படுத்த வேண்டும் என்றும், மாகாணத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியதே தவிர, இலங்கை மீதான போர்க்குற்றங்கள் குறித்தும், மனித உரிமை மீறல்கள் மீதும் எந்தக் கருத்தையும் இந்தியா தெரிவிக்கவில்லை. இதற்கு முன்னர் இலங்கைக்கு 2009 ல் ஆதரவு, 2012 மற்றும் 2013 ல் எதிர்ப்பு என இந்தியா மூன்று முறை மட்டுமே வாக்களித்துள்ளது. பாசக ஆட்சிக்கு வந்தபின் 2014 மற்றும் 2021ல் வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்வதென்பது ஆதரவு கொடுப்பது போலத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையைப் பொறுத்தவரை இந்தியாவைவிட சீனாவையே முதன்மையான நட்பு நாடாகக் கருதி முக்கியத்துவம் அளித்துவருகிறது. இந்தியாவின் பாதுகாப்பு குறித்து எள்முனை அளவும் கவலையின்றித் தனது துறைமுகங்கள் மற்றும் கடற்பரப்பை சீனாவிற்குத் தாரைவார்த்ததோடு, இந்தியாவின் எச்சரிக்கையையும் மீறி சீன உளவுக்கப்பலை துறைமுகத்திற்குள் அனுமதித்து இந்தியாவின் முகத்தில் கரியையும் பூசியது. கடந்த அக்டோபரில் அதைவிடப் பேராபத்தாக சீன இராணுவத்தையே தன் நாட்டிற்குள் அதிகளவில் குவிக்க அனுமதித்து, சீனாவின் ராஜதந்திர சூழ்ச்சிகளுக்குத் துணைபோய் இந்தியாவின் பாதுகாப்யையே முற்று முழுதாகக் கேள்விக்குறியாக்கியது. தமிழீழ மக்கள் இராணுவமான விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் ஈழ மண்ணில் நிலைபெற்றிருந்த நாள்வரை, இலங்கைக்குள் எந்த இடத்திலும் சீனாவால் கால் ஊன்றவே முடியவில்லை என்ற உண்மையை இந்தியப் பெருநாட்டின் ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.
ஈழ விடுதலைப் போராட்டத்தை அழிக்கத் துணைபோனது எவ்வளவு பெரிய வரலாற்றுப் பிழை என்பதை சமகால அரசியல் சூழல் இந்தியாவிற்கு உணர்த்தத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் உண்மையான பாதுகாப்பு என்பது ஈழமும், தமிழர்களும் தானே தவிர இலங்கையும், சிங்களர்களும் அல்ல என்பதை இந்திய அரசு இனியாவது உணர்ந்து, இலங்கையை நட்பு நாடு என்று கூறுவதைக் கைவிட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இந்தியாவின் தென்பகுதியைத் தாக்குவதற்கான ஆயுதப் படைத்தளமாக இலங்கையைப் பயன்படுத்த நினைக்கும் சீனாவின் முயற்சியை இந்தியா முறியடிக்காவிடில் மிகப்பெரிய இழப்பை இந்தியப் பெருநாடு சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் நாம் தமிழர் அறிவுறுத்தியது.
ஆகவே, இந்தியாவிற்கு எதிரான சீனாவின் சூழ்ச்சிகளுக்குத் துணைபோகும் இலங்கைக்குப் பதிலடி தரும் விதமாக, அந்நாட்டுடனான அரசியல் மற்றும் வர்த்தக உறவை உடனடியாகத் துண்டித்து, இலங்கை குறித்தான வெளியுறவுக் கொள்கையையும் மாற்ற வேண்டும்; மேலும், பன்னாட்டு அரங்கில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே என்பதை நிறுவுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, தமிழீழ விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கான நுட்பமான முன்னெடுப்புகளையும் இந்திய அரசு தொடங்க வேண்டும் என நாம் தமிழர் கோரியது. அக்டோபரில் இலங்கையில் குவிக்கப்பட்ட சீன இராணுவத்தினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலிலிருந்து தென் மாநிலங்களை, குறிப்பாக இந்திய ஒன்றியத்திலேயே எங்கும் இல்லாத வகையில் கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் ஆகிய இரு அணுமின் நிலையங்கள் இருக்கும் தமிழ்நாட்டைப் பாதுகாக்க கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பினை அதிகப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் வலியுறுத்தியது.
இந்திய உளவுத்துறையைக் கையில் வைத்திருக்கும் பாசகவோ இந்த எச்சரிக்கைகள் அனைத்தையும் புறந்தள்ளி, ஈழ ஆதரவு ஆளுமைகள் மற்றும் அமைப்புகளை தலைவரது இருப்பு குறித்து அறிவிப்பு வெளியிடச் செய்து, உலகத்தமிழ் மக்களைக் குழப்ப எண்ணுகிறது. இதனால் சீனாவுடனான நெருக்கத்தைக் குறைக்கவும், அதற்கு மாற்றாக இந்திய ஒன்றியச் சார்புடன் நடந்து கொள்ளவும் சிங்கள அரசுக்குச் சமிக்கைகள் அனுப்புகிறதா பாசக என்று நாம் ஐயமுற வேண்டியுள்ளது. மேலும் காற்றாலை மின் உற்பத்தி சார்ந்து மோடிக்கு நெருக்கமான அதானியின் நிறுவனம் இலங்கையில் செய்துள்ள முதலீடுகள் மற்றும் வணிக நோக்கங்களினை முன்னிட்டு, பாசக ஈழ விவகாரம் மூலம் அந்நாட்டை கைக்குள்ளும் கட்டுக்குள்ளும் வைத்திருக்க நினைத்து இச்சதி வேலையை நடத்துகிறதா என்றும் பார்க்கத் தேவையிருக்கிறது. எது எவ்வாறாயினும் ஈழத்தமிழ் மக்களின் சிக்கல்களை இப்படிப்பட்ட விவாதங்கள் மேலும் மோசமாக்கும் என்பதே நம் பெருங்கவலையாய் இருக்கிறது. பொருளாதார நெருக்கடியினால் சிங்கள மக்களிடம் சரிந்த தம் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள விழைகிற இலங்கை, தலைவர் திரும்பி வருவார் என்று சொன்னால் தான் அச்சமுற்று சிங்களப் பொதுமக்கள் இராசபக்ச குடும்பம் போன்றவர்களை நாடுவார்கள் எனவும் கணக்கு போடும். அதை வைத்து இன்னும் அதிகமாகத் தமிழர்களை ஒடுக்கும் வேலையைச் செய்ய, இலங்கை இதனை நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும்.
ஈழத்தமிழர்களின் விடுதலைக் கனவு நிறைவேற வேண்டுமெனில், தமிழ்நாட்டில் தமிழர் தலைமை அமைவதென்பது அடிப்படையான அத்தியாவசியமான தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஏனெனில் அன்னைத் தமிழருக்கு மட்டும் தான் ஈழம் என்பது உயிர்த் துடிப்பு! மற்றபடி தமிழரல்லாத திராவிடத்துக்கோ, தமிழரின் வரலாற்று எதிரியான ஆரியத்துக்கோ, வளச்சுரண்டல் செய்ய நினைக்கும் வல்லாதிக்கங்களுக்கோ ஈழம் என்பது வணிக வாய்ப்பு அல்லது இலாபகரமான பிழைப்பு மட்டுமே! எனவே நம்மைச் சுற்றி இறுக்கும் அரசியல் சதிவலைகளை அறிவாயுதம் கொண்டு அறுப்போம்! நம்மை ஏய்த்துப் பிழைக்க நினைக்கும் தேசிய திராவிடக் கட்சிகளின் நரித்தனத்தை வெறுப்போம்! இவர்களின் அரசியல் சதுரங்க ஆட்டங்களில் பகடைக்காய்களாக இருந்திட மறுப்போம்! எதிரிகளையும் துரோகிகளையும் சரியாக அடையாளங்கண்டுக் கடுமையாக ஒறுப்போம்! நம்மைக் கூறு போடும் வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுபட உலகத்தமிழனத்தை அழைப்போம்! இந்த இன எழுச்சி நாளில் உறுதியேற்று இன விடுதலையை விரைந்து எட்டச் சேர்ந்து உழைப்போம்! உவரிசூழ்ப் புவியில் நமக்கே நமக்கென ஒரு நிலத்தை அடைந்து தழைப்போம்! அப்போது தான் யாரையும் அண்டி நிற்காமல், ஆற்றல் மிகப்பெற்றுப் பிழைப்போம்!
நாம் தமிழர்!!!
திருமதி. விமலினி செந்தில்குமார்
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.