spot_img

பகுத்தறிவுப் பாட்டன் அயோத்திதாசர்

மே 2023

பகுத்தறிவுப் பாட்டன் அயோத்திதாசர்

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதித்தமிழ்க்குடி மக்களின் முன்னேற்றத்துக்காக அரசியல், சமயம்,  இலக்கியம் ஆகிய தளங்களில் தீவிரமாகச் செயல்பட்டவர். தமிழனுக்கு அதிகாரத்தைத் துணிந்து கேட்ட ஈடு இணையற்ற மாமனிதரும் அவரே.

 20.5.1845 ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இவர் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் காத்தவராயன். இவர் தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி , சமூக சேவகர், தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவர்  என்பதோடு தமிழில் ஆழ்ந்த புலமை கொண்டவரும் கூட. ஆங்கிலம், வடமொழி மற்றும் பாலி போன்ற மொழிகளிலும் இவர் சிறந்து விளங்கினார்.  வல்லக்காளத்தி என்பவரிடமும், தன் தந்தையிடமும் அயோத்திதாசப் பண்டிதர் கல்வி கற்றார். இவர் தன் குருவின் மீது கொண்ட மதிப்பால் “காத்தவராயன்” என்ற தனது பெயரை அயோத்திதாசர் என்று மாற்றிக் கொண்டார்.

இவருடைய தாத்தா கந்தப்பன் அவர்கள் தான், பிரதிகள் அழிந்து நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளைத் தன் குடும்பச் சேமிப்புகளில் இருந்து மீட்டு, ஆங்கிலேயரான எல்லிசு என்பவரிடம்  வழங்கியவர். அதன் பின்னர் தான், திருக்குறள் இன்றைய அச்சு வடிவத்திற்கு வந்துள்ளது. 1891 இல் நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஆதிதிராவிடர்கள் தங்களை இந்துக்கள் என அடையாளப்படுத்திக் கொள்ளாமல் “சாதியற்ற தமிழர்கள் ” எனப் பதிவு செய்யுமாறு வலியுறுத்தினார்.

சென்னை இராயப்பேட்டையில் இருந்து 1907 ஆம் ஆண்டு, நான்கு பக்கங்களுடன் காலணா விலையில், “ஒரு பைசா தமிழன்” என்ற பெயரில் பண்டிதர் அவர்களால் ஓர் இதழ் வெளியிடப்பட்டது. ஓராண்டுக்குப் பிறகு அவ்விதழ் “தமிழன்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது . தமிழன் இதழில் வெளிவந்த செய்திகள் அனைவரையும் கவர்ந்தன. பின்னர், தமிழர்கள் அதிகம் வசித்த கர்நாடகா கோலார் தங்க வயல், குடகு, பர்மா, தென்னாப்பிரிக்கா, இரங்கூன், சிங்கப்பூர் போன்ற இடங்களிலும் தமிழன் இதழ் பரவத் தொடங்கிற்று.

1870 களில் அயோத்திதாசர் நீலமலைத்தொடர் மற்றும் பிற மலைவாழ் மக்களை ஒருங்கிணைத்தார். 1912 அக்டோபர் 30 அன்று தமிழன் இதழில், இந்தியாவிற்கு விடுதலை அளித்தால் இம்மண்ணின் மைந்தர்களாம் ஆதித்தமிழர்களிடம் அரசியல் அதிகாரத்தை வழங்க வேண்டுமென ஆங்கிலேயரிடம் கோரிக்கை வைத்தார். நேற்று குடியேறி வந்தவர்களையும், முன்பு குடியேறி வந்தவர்களையும் சுதேசிகள் எனக் கருதி, அவர்கள் வசம் சுயாட்சி ஆளுகையைக் கொடுத்தால் நாடு பாழாகி சீர்கெட்டுப் போகும் என்று எழுதினார்.

ஆதிதிராவிடர்கள் என அன்று சொல்லப்பட்ட ஆதித்தமிழர்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இந்தியாவில் தமிழனுக்குக் கிடைக்க வேண்டிய அதிகாரத்தைத் துணிந்து கேட்ட ஈடு இணையற்ற மாமனிதர் அவர் என்பது மிகையாகாது. பண்டிதர் அயோத்திதாசர் சுமார் 25 நூல்கள், 30 தொடர்கட்டுரைகள், இரண்டு விரிவுரைகள், 12 சுவடிகளுக்கு உரை, அரசியல் கட்டுரைகள், கேள்வி பதில்கள், பகுத்தறிவு கட்டுரைகள் எனச் சில நூறு படைப்புகளை நமக்குத் தந்தவர்.

தமிழகத்தில் எந்த இயக்கமும் தோன்றாத காலத்தில் சமூக நீதி, சமூக மதிப்பீடுகள், விளிம்பு நிலை மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் குறித்துப் பேசினார். இதழியலிலும் அரசியலிலும் நவீனம் குறித்த கருத்தாக்கங்கள் தமிழன் இதழிலிருந்து துவக்கம் பெற்றன. பல இயக்கங்களுக்கு ஒரு முழுமையான அரசியல் கொள்கைத் தொகுப்பை வழங்கிய தமிழன் இதழின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாடி பெருமைப்படுத்தியது.

திருமதி. இராசலட்சுமி கருணாகரன்,

செந்தமிழர் பாசறைஅமீரகம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles