மே 2023
அங்கயற்கண்ணிகள்!
சங்ககாலம் தொட்டே தமிழ்ப் பெண்களின் வீரமும் தீரமும் நிறைந்த எண்ணற்ற நிகழ்வுகள் வரலாற்றின் பக்கங்களில் இருக்கும்போதிலும், அதே வீரம் நிறைந்த வரலாறு, இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் எழுதப்படக் காரணம், நம் தமிழீழத் தேசியத்தலைவரின் பெண் படையணிகள். அவர்களுள் வீரமும் தீரமும் சாதுரியமும் செயல்திறனும் நிறைந்த ஒரு வீரமறத்தி குறித்த உண்மை நிகழ்ச்சியை, தமிழர் இன எழுச்சி மாதச் சிறப்பிதழில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
யாழ்ப்பாணத்தில் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்பில் வேலணை என்ற ஒரு தீவு உண்டு. அந்தத் தீவைக் கைப்பற்றுவதற்காக பௌத்தப் பேரினவாதச் சிங்கள இலங்கை அரசு, கட்டளையிடும் தலையாய தாய்க்கப்பல் மற்றும் மிகப்பெரிய ஒரு ஆயுத கப்பலுடன் காங்கேசன் துறைமுகத்தில் ஆணவத்துடன் முகாமிட்டு நிற்கிறது.
அந்த ஆயுதம் தாங்கிய கப்பலைப் பாதுகாக்க எண்ணற்ற இரேடார்கள் மற்றும் இரோந்து கப்பல்கள் கடல் பகுதி முழுவதும் இரவும் பகலுமாக கண்காணித்துக்கொண்டே இருக்கின்றன. எந்தப் படையாலும் இந்தக் கப்பலைத் தாக்க முடியாது என்ற ஒரு இறுமாப்பில் இருக்கிறார்கள் இலங்கை சிங்களப் படையினர், அவர்களது திட்டத்தைத் தவிடுபொடியாக்க ஒரு வீரமறத்தி வந்து கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்திராமல்.
ஆம்! 1994ம் ஆண்டு ஆகத்து 16-ம் நாள், இரவு 12.35 மணிக்கு, திடீரென்று அந்தக் கட்டளையிடும் தாய்க் கப்பல் மற்றும் ஆயுதம் தாங்கிய போர்க்கப்பல் இரண்டும் வெடித்துச் சிதறின. அந்த இடமே தீப்பிழம்பாகிறது. அவர்களுடைய திட்டமும் முறியடிக்கப்படுகிறது. சிங்களப் படையினருக்கு ஒன்றுமே புரியவில்லை. எப்படி இத்தனை பாதுகாப்பையும் தாண்டி வந்து தாக்க முடியும் என்று கதிகலங்கிப் போனார்கள். இறுதியாக அவர்களின் கேள்விக்கு ஒரு விடை கிடைத்தது. கப்பல்களைத் தாக்கி அழித்தது ஒரு பெண்; ஆம்! ஒரே ஒரு பெண்.
17 கடல் மைல்கள் அதாவது 35 கிலோமீட்டர் தொலைவு வரை, தன் உடம்பில் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு 8 மணி நேரம் கடலுக்கு அடியில் நீந்தி வந்து 6300 டன் எடை, 326 மீட்டர் நீளம், 51 மீட்டர் அகலம் கொண்ட கப்பலின், கட்டளைகள் பிறப்பிக்கக்கூடிய (commanding section) வடக்குப் பகுதி முழுவதையும் தகர்த்தெறிந்திருக்கிறாள் அப்புலிமகள் என்ற செய்தி அறிந்ததும், இலங்கை அரசாங்கமே அதிர்ந்து தான் போனது. அந்த வரலாற்றுப் பெருமைமிக்க சாதனையை நிகழ்த்திக் காட்டியவர் தான், நம் உடன்பிறந்தாள் கப்டன் அங்கயற்கண்ணி.
தனி ஒரு பெண்ணாக பப்பாளி மரத்தின் தண்டு போன்ற ஒரு குழலை வாயில் கவ்விக்கொண்டு, உடலில் வெடிமருந்து மூட்டைகளைக் கட்டிக்கொண்டு 35 கிலோமீட்டர் தூரம் கடலில் நீந்தி, அந்த ஆயுதக்கப்பலைத் தகர்த்த முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் வீரத்தை நாம் மறந்து கடந்து போகலாமா?
அங்கயற்கண்ணி! கொக்குவில் என்ற சிறு கிராமத்தில் 1973 ஆம் ஆண்டு பிறந்த அவர், அங்கே இருந்த போர்ச்சூழல் காரணமாகத் தனது தாயாருடன் வேலணை என்ற ஒரு கிராமத்துக்குக் குடி பெயர்கிறார். அங்கயற்கண்ணி அமைதியான பொறுப்புள்ள பெண். தன் தங்கைகளைத் தாய்ப்பாசத்தோடு பார்த்து கொண்டவள். எங்கே சென்றாலும் தன் தாயோடு தான் செல்வாள்.
காலம் கடக்கிறது. பௌத்த சிங்களவாத இலங்கை படையினரின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன.
ஒரு நாள் கடலில் பயிற்சி எடுக்கும்போது, ஈழ மீனவர்கள் அலறி அடித்துக்கொண்டு கரைக்கு ஓடி வருகிறார்கள். ஏன்? என்று கேட்கும் போது அவர்கள் சொல்கிறார்கள் “இலங்கைக் கடற்படையினர் எங்கள் படகுகளையும், பிடித்த மீன்களையும் பிடுங்கிக் கொண்டு எங்களைத் தாக்கினார்கள்; பலர் இறந்து விட்டார்கள்; மீதமிருக்கும் நாங்கள் மட்டும் தப்பி வந்தோம்!” என்று. அன்றைக்கு இரவு முழுவதும் ஒரே மரண ஓலமாய் இருந்தது. குழந்தைகள் பசியால் அழுவதைப் பார்க்கிறாள்.
இனிமேலும் பொறுத்திருந்து பயனில்லை. விடுதலை ஒன்றே ஒரே தீர்வு என்று இலட்சிய வெறி கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்கிறாள்; அதுவும் மாவீரர் கேணல் கிட்டு, தமது தோழர்களுடன் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட அதே நாளில். அவளுக்குக் கடற்புலிகளின் மகளிர் படையணியில் பயிற்சி அளிக்கிறார்கள். அனைத்து பயிற்சிகளிலும் அவர் ஆகச்சிறந்து விளங்குகிறார்.
பௌத்த சிங்களவாதக் கடற்படைக்கு எப்படியாவது ஒரு பதிலடி கொடுத்தே தீர வேண்டும்; அதுவும் கரும்புலியாக மாறி, தன் உயிரைக் கொடுத்தாவது இவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று சூளுரை ஏற்று, அந்த எண்ணத்தைத் தனது தளபதியான நளாயினியிடம் கூறுகிறாள். அதற்கு அந்தப் படைத்தளபதி “காலம் வரும்; காத்திரு!” என்று சொன்னார்கள். காலமும் வந்தது. அந்தக் குறிப்பிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வும் நடந்தேறியது.
அவர்களது வீரத்தை ஒப்பிடுகையில் நாம் செய்து கொண்டிருக்கின்ற இந்த இனத்திற்கான பணி எல்லாம் எம்மாத்திரம்? இவர்களெல்லாம் தெய்வப் பிறவிகள். நம் அடுத்த தலைமுறைக்கு இந்த வரலாற்றை நாம் கடத்திக் கொண்டே இருக்க வேண்டும். பதினெட்டாம் நூற்றாண்டில் வீரமங்கை வேலுநாச்சியாரின் தாயக மீட்புப்போரில் குயிலி நடத்தியது தான் வரலாற்றில் முதல் தற்கொலைப்படைத் தாக்குதல். அவரும் ஒரு பெண் தான்.
இது போலப் பல பெண்கள் உள்ளிட்ட எண்ணற்ற போராளிகள், பல்வேறு தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் புனித ஆத்மாக்கள். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அவர்களின் புகழைக் கடத்திக்கொண்டே இருப்போம். இலக்கை அடையும் வரை அவர்தம் ஈகத்தை நினைவுபடுத்திக் கொண்டே இருப்போம்.
திரு. தமிழன் ரகு,
தலைவர், செந்தமிழர் பாசறை – குவைத்.