spot_img

ஈழம்  சிதைத்து அழிக்கப்பட்ட  கனவும் எழுந்து நிற்கவேண்டிய இனமும்

மே 2023

ஈழம்  சிதைத்து அழிக்கப்பட்ட  கனவும் எழுந்து நிற்கவேண்டிய இனமும்

இலக்கிய வரலாற்றுச் சான்றுகளில் ஈழம் – இயக்கர்குல குவேனி முதல் மகாவம்சமே புகழும் எல்லாளன் வரை:

ஈழம் எனும் மூன்றெழுத்து, நமக்கு உணர்த்துவன ஆயிரமாயிரம். தமிழகத்துக்கும் ஈழத்துக்குமான உறவு, என்று தொடங்கியதென்றே தெரியாத பழைமைவாய்ந்தது. முதலாம் சங்கம் வரையிலும் நிலவழித் தொடர்போடு இருந்த இந்நிலம், கடல் கொண்டதால் வழியடைந்துபோனது காலத்தின் சதியோ?! நம் இனத்தின் விதியோ?! ஆனால் தமிழக வரலாறு, சான்றுகளூடே தொடங்கும் சங்க காலத்தினின்று, ஈழத்துக்கும் அதில் இடமுண்டு. சோழ வீதிகளில், ஈழத்து உணவு குவிந்திருந்ததை பட்டினப்பாலையும்,  தொன்மாவிலங்கை என ஈழத்தை சிறுபாணாற்றுப்படையும் பாட, ஈழத்து பூதந்தேவனார் பாடிய சில பாடல்களும் சங்க நூல்களில் நமக்குக் காணக் கிடைக்கின்றன.

பல ஆண்டுகளாக வாதப்பிரதிவாதங்களோடு நடந்து கொண்டிருக்கும் ஈழத்தின் பூர்வகுடி யார்? எனும் விவாதத்துக்கு, தமிழர்களின் பக்கம் உறுதியான சான்றாக இருப்பது, குவேனி – விஜயன் கதை தான். கி.மு ஆறாம் நூற்றாண்டில் ஒரு நாள், ஈழத்துக் கடற்கரையில் அமர்ந்து நூல் நூற்றுக் கொண்டிருந்த தொல்குடி இயக்கர்குலமகள் தமிழ்க் குவேனியை நோக்கி வருகிறது, எழுநூறு நண்பர்களுடன் வடக்கிலிருந்து வந்த விஜயனின் நாவாய். அவனை வரவேற்று விருந்தோம்பி, காதலுடன் மணந்து இரு மகவுகளையும் பெற்ற குவேனியை விடுத்து, அரசகுலத்தைச் சேர்ந்தவளே வேண்டுமென, பாண்டிய இளவரசியை மணந்து சிங்கள வம்சத்தைத் தொடங்கினான், விஜயன்.

கதறி அழுது குவேனி அன்று விட்ட சாபத்தாலேயே சிங்கள அரசுகள், இலங்கைத் தீவில் பெருவலிமையோடு, உறுதியான நல்லாட்சியைத் தரவே முடியாத நிலை இன்றும் தொடர்வதாகப் பரிகாரங்கள் இல்லாத இந்தப் பழியினைப் பற்றிய செவிவழிக் கதைகள், ஈழத்தில் சிங்களர்களிடமும் உலவுகின்றன. இது குறித்த அஞ்சல் தலையொன்றை வெளியிட்டுப் பின், தேள் கொட்டிய திருடனாய்த் திரும்பப் பெற்ற சிங்கள அரசு, பெரும்பான்மைவாதம் பேச முக்கிய ஆதாரமாய்க் காட்டும் “மகாவம்சம்” எனும் நூல் சொல்வதுதான், குவேனியின் வரலாறு. விஜயனுக்குப் பின் தோன்றி ஆண்ட அரசர்களின் சரித்திரத்தை, கி.மு இரண்டாம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட “எல்லாளன்” எனும் சீர்மிகு தமிழ்ப்பேரரசன் புகழை, அவனை சூழ்ச்சியால் வீழ்த்திய துட்டகாமினியை எனப்பல விடயங்களை, இந்த நூல் விளக்கிக் கூறுகிறது. பவுத்த சிங்களப் பேரினவாத மனப்பிறழ்ச்சியின் ஊற்றுக்கண்ணே இவ்வகை நூல்கள் தாம்.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின், சங்கம் மருவிய காலத்தின் முக்கியமான நூலான சிலப்பதிகாரம், தொல்லிலங்கையினின்று சேரநாட்டுக் கண்ணகி கோயிலின் விழாவுக்கு வந்த கயவாகு, தான் ஈழத்தில் அவளுக்கு எடுக்கப்போகும் கோவிலிலும் வந்து அருள் புரிய வேண்டுமென்று இறைஞ்சியதாகக் கூறுகிறது. இன்றும் கண்ணகி வழிபாடு, இலங்கையில் சிங்களர்களும் செய்யும் பத்தினி தெய்வ வழிபாடாக  இருக்கிறது. தமிழகத்தில் களப்பிரர்கள் அரசாண்டபோது, கலை இலக்கிய வளர்ச்சி குன்றியதால், அதனை இருண்டகாலம் என வரலாறு சுட்டும். அந்தக் குறுகிய காலத்தைத் தவிர, தொடர்ந்து பல இலக்கியங்களிலும், வரலாற்றுக் குறிப்புகளிலும் ஈழம் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. எ.கா. முத்தரையர்களுக்குப் பின் ஆட்சிக்கு வந்த பல்லவர்களுள், நரசிம்ம பல்லவன் காலத்தில், ஈழத்தின் மானவர்மன் அரசுக்கட்டிலில் ஏற, படையுதவிகள் செய்யப்பட்டன. பல்லவர்களுக்குப் பின், ஏற்றம் பெற்ற பிற்காலத் சோழர்களின் ஈழப்படையெடுப்பு உலகறிந்தது.

ஈழமெனும் மும்முடிச் சோழ மண்டலம் – இலங்கையில் அருண்மொழிச் சோழனும், அரசேந்திர சோழனும்:

ஈழத்தின் வடபகுதியை வென்று “மும்முடிச்சோழ மண்டலம்” என அதற்குப்  பெயரிட்ட அருண்மொழிச்சோழன், அனுராதபுரத்தைக் கைப்பற்றி “பொலநறுவை” எனும் புதிய தலைநகர் ஒன்றை நிறுவியதும், அதன்பின் அவன் மகன் அரசேந்திர சோழன், இலங்கை முழுவதையும் வென்றிட கி.பி 1070 வரையிலும் சோழர்கள் கட்டுப்பாட்டில் முழுத்தீவும் இருந்தது. ஈழ வெற்றி மூலம் செம்மை பெற்ற சோழக்கடற்படையின் திறம்,  கீழைக்கடல் நாடுகள் பலவற்றில் சோழர்களின் புலிக்கொடி பறந்ததற்கும், செல்வங்கள் பல கொணர்ந்து கற்றளிகள் எடுப்பித்ததற்கும், விஜயாலயன் தொடங்கிய பிற்காலச் சோழ அரசர்கள் “பேரரசுச் சோழர்கள்” எனப் பெயர்பெற்று விளங்கவும் அடித்தளமிட்டது என்றால் நிச்சயம் அது பொய்யில்லை.

மூவேந்தர்களில் முந்தையவர்கள், முச்சங்கங்களுக்கும் தலைமையேற்ற பாண்டியர்களே. இயல்பிலேயே ஈழத்துடன் நெடுங்காலம் தொடர்பில் இருந்ததாலும், புவியமைப்பின்படி தென்னகத்தில் நெருக்கமாக இருந்ததாலும், ஈழத்து அரசுகளுடன் பாண்டியர்கள் கொண்டிருந்த அணுக்கம் நோக்கற்பாலது. பல சிங்கள அரசர்கள் பாண்டியர்களுடன் மண உறவில் இருந்ததும், இலங்கையில் செழித்த சைவ வழிபாட்டின் ஆதிக்கமும், இதனால் ஏற்பட்ட விளைவுகளேயென்று புரிந்து கொள்ளலாம். அப்பாண்டியர்கள் தங்கள் பரமபகையாக சோழர்களுடன்  தமிழகத்தில் மோதிக்கொள்ளவும், பேரரசு அமைத்த சோழர்களைத் தங்கள் அடையாளமாக ஈழத்தமிழர்கள் வரித்துக் கொள்ளவும், இயல்பாகவே சிங்களர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இணக்கம் ஏற்பட்டது.

பிற்காலச் சோழர்களுக்குப் பின் தமிழகத்தில் எழுச்சி பெற்ற பிற்காலப் பாண்டியர்கள், ஈழத்துடன் வணிகம் செய்வதோடு நிறுத்திக் கொண்டனர். கால மாற்றத்தில், வட இலங்கையின் யாழ்ப்பாணத்தைப் பெரும்பாலும் தமிழ் அரசர்களும், மைய மலைப்பகுதி கண்டி அரசை இருவரும் மாறி மாறியும் (கண்டி இராச்சியம், சில காலம் மதுரை நாயக்கர்களுடனான மண உறவினால் கண்டி நாயக்கர்களாலும் ஆளப்பட்டது) தெற்கே கோட்டை அரசைப் பெரும்பாலும் சிங்கள அரசர்களுமாக, இலங்கைத் தீவு மூன்று கூறுகளாக நிர்வகிக்கப்பட்டது.

மகாவம்சம், தீபவம்சம், சூளவம்சம் ஆகிய நூல்கள், கிமு 543 முதல் கிபி 1815 வரை அரசாண்ட மன்னர்கள் பற்றிய விவரங்களைத் தருகின்றன. பெரும்பாலும் புத்த பிக்குத் துறவிகளால், சிங்களப் பெரும்பான்மைவாதம் பொங்க எழுதப்பட்டிருக்கும் இவற்றில், உயர்வு நவிற்சி அணியே அதிகம் பயின்றுவந்திருக்கும். அவ்வப்போது “எல்லாளன்” போன்ற தமிழ் மன்னர்களைப் பற்றியும் சில நற்குறிப்புகள் இருப்பதை மறுப்பதற்கில்லை என்றாலும், பெரும்பாலும் சிங்களப் பக்கச்சார்புடனே, பல விடயங்கள் எடுத்தாளப்பட்டிருப்பதைத் தெளிவாகக் காணலாம்.

குடியேற்றகாலக் கொடும்சாபம் – வெள்ளந்தி மனிதர்களை வேட்டையாடிய வெள்ளை ஏகாதிபத்தியம்

கிபி 1500களில் கடல் பயணவழிகள், நிலவழி வணிகத்துக்குப் பெரிய மாற்றாக முயன்று அறியப்பட்டன. பல சாகசக்காரர்கள், பெரும் புகழ் மற்றும் பொருளுக்காக, பெயர் தெரியாப் பல ஊர்களை நோக்கி, ஆபத்துக்களைப் பொருட்படுத்தாது பயணப்பட்டனர். அவர்களில் ஒரு சிலர் பெற்ற செல்வமும், செல்வாக்கும், ஐரோப்பிய நாடுகளில் இருந்து பல வணிக நிறுவனங்கள் கீழை நாடுகளை நோக்கி நகரக் காரணமானது. அவர்கள் முதலில் பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரிகளாகவும், பின்னர் வளங்களை சுரண்டிக் கொழுத்து, அரசர்களையே தீர்மானிக்கும் அதிகாரம் பெற்ற ஆட்சியாளர்களாகவும் மாறினர். போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர் மற்றும் அதிமுக்கியமான ஆங்கிலேயர்கள், ஒருவர் பின் ஒருவராக வந்து தங்களுக்குள்ளும், உள்ளூர் அரசர்களோடும் மோதி சக்தி சமநிலைகளை மாற்றி எழுதினர். பெரும் இந்தியத் துணைக்கண்ட நிலப்பரப்பையே அடக்கி ஆண்டவர்கள், இலங்கைத் தீவையும் விட்டுவைக்கவில்லை.

முதன்முதலில் போர்த்துக்கீசியர் தான், கி.பி.1500களில் ஈழ நிலத்தில் கால் வைத்தனர். பெரும்பாலும் பண்பாட்டுச் சின்ன அழிப்பு மற்றும் மதம் பரப்பும் வேலைகளை மும்மரமாகச் செய்து, வணிகத்தைப் பகுதி நேர வேலையாக மட்டுமே செய்து கொண்டிருந்தனர். இலங்கைத் தீவின் பல சிற்றரசர்களை வென்று, கரையோரப்பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டனர். இவர்களை விரட்ட டச்சுக்காரர்களோடு செய்த ஒப்பந்தத்தால், பேய் போய் பிசாசு வந்த கதையாய், போர்த்துக்கீசியரைத் துரத்திய பின்னர் டச்சுக்காரர்களிடம் மாட்டிக் கொண்டன, அந்த அரசுகள்; அதன் பின்னர் இன்னொருவரிடம் – ஆங்கிலேயர்கள். இவர்களின் சாதனையாகவும், தமிழர்களின் சோதனையாகவும் சொல்லப்படுவது, யாழ்ப்பாண அரசு, கண்டி அரசு, கோட்டை அரசு என்ற மூன்றையும் வென்று, ஒட்டுமொத்த இலங்கையையும் கி.பி.1815 ல் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவந்தது தான். இலங்கையின் இனவெறியாட்ட கோரமுகம், இந்தப் பறங்கியர் காலத்தில் தான் வலிந்து வளர்க்கப்பட்டது. 

பிரித்தானியப் பேரரசும், பிரித்தாளும் சூழ்ச்சியும் – இலங்கை இனச்சிக்கலின் இன்னாக் காலத் தொடக்கம்

அதுவரை தத்தமது எல்லைக்குள், கால மற்றும் அதிகார மாற்றங்கள் ஏற்படும்போது, அதற்கேற்றாற்போல அரசர்கள் மோதிக்கொண்ட போதும், இலங்கையின் இரு பெரும் இனங்களான தமிழ் மற்றும் சிங்களப் பொதுமக்கள், நல்லிணக்கத்துடன் தான் வாழ்ந்து வந்தனர். ஒருவருக்கொருவர் நட்புறவோடு இருந்தது மட்டுமல்லாது, மண உறவும் கொண்டு இயல்பாகவே இருந்தனர். வெளிநாட்டுக் கலப்பினால் உருவான பர்கர்கள், கிறித்தவத்தைத் தழுவியவர்கள், இசுலாத்தைத் தழுவிய சோனகர்கள்,  சிங்கள பவுத்தர்கள் என எல்லாரும், தீவின் எல்லாப் பகுதிகளிலும் பரவி வாழ்ந்திருந்தனர். ஆனால் அவ்வப்போது பெரும்பான்மை இனத்துக்கே உரிய சாபக்கேடான, சில அத்துமீறல்களும் நடந்ததை மறுக்கமுடியாது தான்.

ஆங்கிலேயர்களின் வணிக நோக்கங்களுக்காக, காபி, தேயிலை, இரப்பர் போன்ற “தோட்டப்பயிர்கள் விளைவித்தல்” பெரும் தொழிலாக, அவர்களின் எல்லாக் காலனி நாடுகளிலும் மாற்றப்பட்டது. அதற்குத் தேவைப்பட்ட அதீத மனித உழைப்பு, தமிழகம் உட்பட இந்திய ஒன்றியம் முழுக்க செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சங்களினால், வாழ்வாதாரம் இழந்து, கங்காணிகளால் வஞ்சிக்கப்பட்டு, இடம்பெயர்ந்த பண்ணைத் தொழிலாளர்கள் மூலம் சுரண்டிக்கொள்ளப்பட்டது. இவ்வாறாக இலங்கையில் தேயிலைத் தோட்டங்களுக்குக் கூலிகளாகக் கொண்டுவரப்பட்ட “மலையகத் தமிழர்கள்” எனும் தனிப்பிரிவும், ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. “இந்தியத் தமிழர்கள்” என்பவர்கள் இவர்களுக்கு முன்பே வந்து இலங்கையில் குடியேறியவர்கள். “இலங்கை பூர்வகுடித் தமிழர்கள்” என்போர், பல தலைமுறைகளாக இலங்கைத் தீவிலேயே தொடர்ந்து வாழ்ந்துவருவோர்.

போர்த்துகீசிய டச்சுக்காரர்கள், இலங்கையை ஆண்டவரை அதிகார மட்டத்தில் இருந்தவர்களைத் தான் ஆட்டிப்படைத்தனர். ஆனால் ஆங்கிலேயர் இலங்கையின் ஒட்டுமொத்த நிலப்பரப்பைப் பிடித்ததும், ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்விலும் அது ஏற்படுத்திய தாக்கம், இன்று வரையிலும் தொடர்கிறது. தங்கள் காலனி நாடுகள் எல்லாவற்றிலும் செய்தது போலவே, வளச்சுரண்டலை மட்டுமே முன்னிட்டு, தேசிய இனங்களின் எல்லை வரையறைகளை, புவியியல் பண்பாட்டுக்கு கூறுகளை, அரசியல் சமூகத் தேவைகளைப் பொருட்படுத்தாது, ஈழத்தின் மூன்று அரசுகளையும் நிர்வாக வசதிக்கென்று சொல்லி, ஒரே அரசாக்கினர். இந்திய ஒன்றியத்திலும் இவ்வாறு நடந்ததனாலேயே, ஆங்கிலேயர் உருவாக்கிய இந்த அமைப்பை, வடக்கர்களும் தங்கள் வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள நினைப்பதால், தேசிய இனங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றன என்பதை நாம் இங்கு உறுதியாக நினைவு கூற வேண்டும்.

இலங்கை விடுதலையும், ஏமாற்றப்பட்ட தமிழர்களும் – முற்றிய முறுகல் நிலை:

“மிண்டோ மார்லி” சீர்திருத்தத்தைக் கொண்டுவந்து, இந்திய ஒன்றியத்தில் குழப்பத்தை உண்டாக்கியது போலவே, கோல்புரூக், டொனமூர், சோல்பரி சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து, பெரும்பான்மைச் சமூகத்தை, சிறுபான்மை இனங்களோடு மோதவைத்து, பொது எதிரி குறித்த சிந்தனையை மட்டுப்படுத்தினர். அந்தந்த தேசிய இனங்களுக்கு உரிய பிரதிநிதித்துவதைத் தராமல், தங்கள் அடிப்படை உரிமைகளைக் கூட, பெரும்பான்மை சமூகம் மனது வைத்தால் மட்டுமே தரும், எதிர்கால உத்திரவாதமற்ற நிலையில் சிறுபான்மைச் சமூகத்தை அடக்கி வைத்திருத்தல் மூலமும், அது தொடர்ந்து நிகழச் சாத்தியமற்ற பட்சத்தில் எழும் முரண்பாடுகளைத் திட்டமிட்டு வளர்த்துப் பெரிதாக்கிவிடும் வழக்கமான குயுக்தியையும், இலங்கையிலும் நிகழ்த்தினர்.

ஆங்கிலேயர் எதிர்பார்த்தது போலவே, இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சி சிறப்பாக வேலை செய்து, ஒருகாலத்தில் ஒட்டுமொத்த இலங்கையின் விடுதலைக்காக அமைக்கப்பட்ட தேசிய சங்கத்தின் தலைவராக தமிழர் ஒருவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலை மாறி, சில ஆண்டுகளிலேயே சிங்களர்களை நம்ப முடியாத காரணத்தால், தங்களின் உரிமைகளைத் தாங்களே பெற, “அகில இலங்கை தமிழ்க் காங்கிரசு” எனும் அமைப்பைத் தமிழர்கள் உருவாக்க வேண்டி இருந்தது.

19ம் நூற்றாண்டின் ஆகப்பெரும் ஏகாதிபத்திய வல்லரசாக இருந்த ஆங்கிலேயப் பேரரசு, இரண்டு உலகப்போர்களில் பெற்ற வெற்றிகரமான தோல்வியால், ஒட்டுமொத்தமாகச் சீரழிந்திருந்தது. தனது நாட்டில், போர்களினால் ஏற்பட்ட சேதத்திலிருந்து, மீள்கட்டமைப்பு செய்யவே அமெரிக்காவிடம் வகைதொகையின்றிக் கடன் வாங்கிக் கொண்டிருந்த அதனால், அதைவிடப் பலமடங்கு பெரிய நிலப்பரப்புகளின் தொகுதியாக, உலகம் முழுவதும் இருந்த தன் காலனிகளை நிர்வகிக்க முடியவில்லை. எனவே அவற்றை அவசர அவசரமாக, கைகழுவ வேண்டிய கட்டாயத்தில் இருந்தது, பிரிட்டன். தொடர்ந்து அதிகாரம் தன் கையிலிருக்க, வலிந்து உருவாக்கப்பட்ட இனச்சிக்கல்களைத் தீர்க்காமல், பெரும்பான்மைச் சமூகத்துக்கு எல்லாப் பொறுப்புகளையும் கொடுத்துவிட்டு, “முடிந்தால் தீர்த்துக்கொள்; இல்லாவிட்டால் எங்களை போல் வன்முறையையும், சூழ்ச்சியையும் கையாண்டு கொள்” என்ற அனுபவப் பாடத்தையும் ஓதிவிட்டுச் சென்றது.

ஒரு வகையில் “செத்தும் கெடுத்த செவ்வூரான்” போல, நான் சென்ற பிறகும் நீங்கள் நிம்மதியாக இருக்கக் கூடாது என்ற நல்லெண்ணமாகக் கூட இது இருக்கலாம். இன்று வரை, உலகின் பல அண்டை நாடுகளுக்கிடையே நிகழும் எல்லைத் தகராறுகளுக்கும், உள்நாட்டில் நிலவும் தேசிய இனங்களுக்கிடையேயான மோதல்களுக்கும் முக்கியமான காரணமே, இந்த ஐரோப்பிய நாடுகளின் காலனியாதிக்க வெறி தான். இலங்கையிலும் இந்நிலை ஏற்பட, இனமோதல் முற்றி, விடுதலைக்குப் பின் கலவரங்களாக வெடித்தது.

சிங்களத் தலைவர்கள் எல்லா வகையிலும் தமிழர்களின் குரல்வளையை நெறிக்கும் வேலைகளை மட்டுமே செய்து வந்தனர். அவர்கள் அசந்தாலும் புத்தமத குருமார்கள் பெரும்பான்மைவாதம் எனும் விஷத்தைத் திகட்ட திகட்ட வலிந்து புகட்டினர். மதத்தை மட்டுமே முன்னிறுத்தி ஒரு நாடு ஆளப்படும்போது எப்படிப்பட்ட அனர்தங்களும், அநியாய உயிர்பலிகளும் நிகழும் என்பதற்கு இலங்கையும் உதாரணமாகிப் போனது.

விழலுக்கு இறைத்த நீர் – முப்பது வருட அறப்போராட்டத்தின் தோல்வியும், தமிழர்களை மூர்க்கத்தனமாக ஒடுக்கிய சிங்கள அரசுகளும்:

இலங்கை விடுதலையான ஆண்டே, 1948 இல், “இலங்கைக் குடியுரிமைச் சட்டம்” கொண்டுவரப்பட்டு ஏழு லட்சம் மலையகத் தமிழர்கள் நாடற்றவர்களாகி, வாக்குரிமையையும் இழந்தார்கள். இது தொடர்பில் இயற்றப்பட்ட நேரு – கொத்தவல ஒப்பந்தம், சிறிமாவோ – சாஸ்திரி ஒப்பந்தம், சிறிமாவோ – இந்திரா ஒப்பந்தம் போன்றவை தமிழர்களின் சிக்கல்களைத் தீர்க்க உதவவில்லை.

1956 இல் “தனிச்சிங்களச் சட்டம்” கொண்டுவந்து சிங்களத்தை மட்டும் ஆட்சி மொழியாக்கி, தமிழர்களின் மொழிப்பண்பாட்டு உரிமையைப் பறித்தனர். இந்தக் கொடிய சட்டத்தை எதிர்த்ததற்காக, பல தமிழர்கள் கலவரத்தின் மூலமாக கொல்லப்பட்ட போது, இந்த நாட்டில் இனி உயிருக்கு உத்திரவாதமில்லை எனப் பல தமிழர்கள், முதன்முதலாக பிற நாடுகளுக்கு இடம்பெயரத் தொடங்கினர்.

1967 இல் “கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்”, தமிழ்ப் பிள்ளைகளின் படிப்பை எட்டாக்கனியாக மாற்றின. அடித்தட்டு மக்கள் வரை கொதித்தெழுந்து அறப்போராட்டங்கள் செய்தும், எந்தப் பயனும் இல்லாமல் போனது, மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. ஏற்கனவே இழந்த எந்த உரிமைகளையும் சட்டப்படி பெற வாய்ப்பில்லாதபோது, 1972 இல் புதிய குடியரசு சட்ட அமைப்பு, சர்வ வல்லமை கொண்ட “ஜனாதிபதி” எனும் ஏதேச்சதிகார பதவியோடு அறிமுகப்படுத்தப்பட்டு,  தமிழர்களுக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச உரிமைகளையும் வழித்துத் துடைத்தெறிந்தது.

எண்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் அரசியல் முடிவுகளில், இலங்கை விடுதலை பெற்றதில் இருந்து செல்லாக்காசுகளாகவே தமிழ்ப் பிரதிநிதிகள் இருந்தனர். சிங்கள சந்தர்ப்பவாத அரசியல் தலைவர்கள், பதவியாசை, சூழ்ச்சி, சதி, பொய்யான வாக்குறுதிகள் இவற்றால் தமிழ்த் தலைவர்களை வளைத்து அடிமைப்படுத்திக் கொண்டிருக்கையில், உறுதியின்மை, ஒற்றுமையின்மை, தொலைநோக்கின்மை ஆகியவற்றால் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து, இனத்துக்கென ஒன்றாக இணைந்து செயல்பட முடியாத அவல நிலையும் தமிழ்த் தலைவர்களுக்கிடையே இருந்தது.

ஆனால் புதிய குடியரசு அமைப்பின் சட்ட திட்டங்கள் கொண்டுவந்த அடக்குமுறை, அதை உடைத்துத் தமிழ்த் தலைவர்களை ஒரு அணியில் திரட்டியதோடு, தேர்தலிலும் பெருவெற்றி பெற்றுவிட, எதிர்க்கட்சியாகப் பாராளுமன்றத்தில் அமர்ந்தனர், தமிழ்த் தலைவர்கள். ஆனால் அதன்பிறகும் ஒரு தீர்வை நோக்கி ஈழத்தமிழர்களின் சிக்கல் செல்லாதவாறு, இலங்கையின் அதிகாரமட்டம்  இருந்தது.

இலங்கையில் “சிங்களப் பேரினவாதம்” என்பது சிங்கள அரசியல் தலைவர்களை விடவும், புத்த மதத் தலைவர்களான பிக்குகளிடம் அதிகமிருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களின் முடிவுகளையே மாற்றச் செய்யும் அதிகாரத்தைக் கொண்டவர்களாக இவர்கள் இருந்ததால், இனச்சிக்கலை மட்டுப்படுத்த தமிழ் மற்றும் சிங்களத் தரப்பினின்று செய்யப்பட்ட

அத்தனை முயற்சிகளும் இவர்களின் அழுத்தங்களால் வீணாயின. இதற்கு பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம் (1957) , டட்லி சேனநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம்(1965)  என இன்னும் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம்.

கிட்டத்தட்ட அரசியல் சாசனமே தமிழர்களுக்கு எதிராகத் திருத்தி அமைக்கப்பட்டதினாலும், தமிழ்த் தலைவர்களால் நிரந்தரமான, வலுவான முன்னெடுப்புகளைச் செய்ய முடியாது போனதினாலும், ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்கும் நிலைக்கு, தமிழ் இளைஞர்கள் தள்ளப்பட்டனர். சில போராளிக் குழுக்கள், அவ்வப்போது சில தாக்குதல்களைத் தொடுத்திருந்தாலும், யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காம் உலகத் தமிழ் மாநாட்டின் இறுதி நாள் மரணங்கள், அதனால் நிகழ்ந்த மேயர் ஆல்பிரட் துரையப்பாவின் கொலை ஆகியன தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், ஆயுதப்போராட்டத்தின் முக்கியமான முகமாகக் காரணமாயின.

ஆயுதப் போராட்டத்தின் விதை – அரசபயங்கரவாதம்: தமிழர்களிடம் திணிக்கப்பட்ட துவக்குகள்:

தமிழ்த் தலைவர்களின் முப்பதாண்டு கால அரசியல் மற்றும் அறப்போராட்டங்கள் ஏதும் பலன் தராது போனதால், ஆயுதங்களை முன்னிறுத்திய போராட்டம் வேகம் பெற்றது. எப்படியும் மரணம் உறுதி என்றபோது அதைப் போராடி ஏற்றுக் கொண்டால், அடுத்த தலைமுறையேனும் தலைநிமிர்ந்து வாழுமே என்று பலர், தாமாகவே தன்னெழுச்சியோடு ஆயுதக்குழுக்களில் இணைந்தனர். கிட்டத்தட்ட இதே நேரத்தில் தான், தமிழீழத் தந்தை செல்வா வட்டுக்கோட்டையில், “வேறு வழியே இல்லை; தனித்த தமிழீழமே தமிழினத்துக்குத் தீர்வு” என உரக்கச் சொன்னார்.  ஆங்கிலேயரை வென்ற அகிம்சைக் கோட்பாட்டின் தோல்வி, அன்பை மட்டுமே போதித்த புத்தனை வழிபடும் தேசத்தில், தமிழர்களை ஆயுதம் ஏந்த வைத்தது, வரலாற்று அவலம்.

1970 களின் பின்பகுதியில், தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க்கட்சியாக அமரும் அளவுக்குத் தேர்தல் வெற்றிகளை ஈட்டியது, சிங்களத் தலைமைகளை எரிச்சலுறச் செய்ததால், நிலைமை இன்னும் மோசமாகியது. வெளிப்படையாகவே இனவழிப்பு வேலைகள் பெருமளவில் தொடங்கியதும் இந்தக் காலகட்டம் தான். 1977 இல் பெரும் கலவரங்கள், 1981 இல் பற்பல அரிய நூல்களையும், ஓலைச்சுவடிகளை கொண்டிருந்த “யாழ் நூலகம்” திட்டமிட்டுச் சாம்பலாக்கப்பட்டது என சிங்களக் காடையர்களின் கொடுமைகள், ஆயுதக்குழுக்களின் தாக்குதல்களைத் தீவிரமாக்கின.

“வெலிக்கடைச் சிறைப்படுகொலைகள்” போன்ற சோடிக்கப்பட்ட நிகழ்வுகளில், தேடித்தேடிப் பல ஆயுதப் போராளிகள் கொத்துக்கொத்தாக வேட்டையாடப்பட்டனர். 1983 இல் விடுதலைப்புலிகளின் இலங்கை இராணுவ வீரர்களின் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக, திருநெல்வேலி படுகொலைகளில் தொடங்கிய கலவரங்கள், கருப்பு யூலைக் கொடூரங்களாக நாடு முழுக்கவும் பரவின. அரசபயங்கரவாதத்தின் தீ நாவுகள், பல அப்பாவித் தமிழர்களின் உயிர்களைத் தின்று முடித்தன. தமிழகத்தில் இதன் தாக்கம் அரசியல் மற்றும் பொதுத்தளங்களில் கிளர்ச்சியை உண்டாக்கியபோது, இலங்கையைக் கைக்குள் வைத்திருக்க “இரா” உளவு அமைப்பின் மூலம் பல போராளிக்குழுக்களுக்குப் பயிற்சி அளித்திருந்த இந்திய ஒன்றிய அரசும், ஈழத்து அரசியலை உற்றுகவனித்துக் கொண்டிருந்தது.

இந்தியம் கற்றுத் தந்த இழவுப்பாடல்கள் – அமைதிப்படை அட்டூழியங்கள்

இந்திய ஒன்றியம் “திம்பு பேச்சுவார்த்தைகள்” மூலமாக தமிழர் தரப்பையும், சிங்களத் தரப்பையும், சிக்கல்களைப் பேசித் தீர்த்துக்கொள்ளச் சொல்லியபோது, “எங்கள் உள்நாட்டுப் பிரச்சனையில் நீங்கள் தலையிட முடியாது” என இலங்கை வெட்டி முறித்துக் கொண்டு சென்றுவிட்டது. தெற்காசியாவின் பெரியண்ணனாக தன்னை நிறுவிக் கொள்ள முயன்ற “இராஜீவ்” தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு, இலங்கை விவகாரத்தில் கை வைத்துக் கெடுத்த கதையின் ஆரம்பம் இது தான். இந்திய ஒன்றிய அரசினது, இலங்கை அரசுக்கான வெளியுறவுக் கொள்கைகளின் தோல்வியும், இந்த இடத்திலிருந்து தான் தொடங்குகிறது. இன்றுவரை, ஈழத்தமிழர்களின் விடுதலைக்குத் தடையாக இருப்பது, முற்றிலும் “அகந்தை” அடிப்படையிலான இந்திய ஒன்றிய அரசின்  நியாயமற்ற தந்திரோபாய  செயல்பாடுகள் தாம். தீர்க்கக்கூடிய உள்நாட்டுப் பிரச்சனையாக இருந்த தமிழர் – சிங்களர் இனச்சிக்கலை, உலகப் பிரச்சனையாக்கி, எவர் பொருட்டும், எந்தப் பலனும் கிட்டாத இடியாப்பச் சிக்கலாக மாற்றிய பெருமை, இந்திய ஒன்றியத்தின் இறுமாப்பு மிகுந்த வெளியுறவுத் துறை அதிகாரிகளையே சாரும்.

திம்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, வடக்கிலும் கிழக்கிலும் மரண ஒலமே தொடர்கதையாகியதோடு, “ஆப்பரேசன் லிபரேஷன்” எனும் பெயரில் புலிகளையும், பிற ஆயுதக்குழுக்களையும், பொதுமக்களோடு சேர்த்து அழித்தொழித்திட எல்லாவித தாக்குதல்களையும் முடுக்கிவிட்டது, இலங்கை அரசு. “பூமாலை நடவடிக்கை” மூலம் உணவுப் பொட்டலங்களை, வட இலங்கை வான்பரப்புக்குள் விமானங்கள் மூலம் வீசி, “இந்தச் சிக்கலுக்குள், என் வலுவான கையும் இருப்பதை மறந்து விட வேண்டாம்” என இந்திய ஒன்றியம், நேரடித் தலையீடு மூலம் இலங்கைக்கு நினைவூட்டியது. ஐயம் கலந்த ஆற்றாமையுடன் பேச்சுவார்த்தைக்கு இறங்கிவந்த சிங்களத் தரப்பும், இந்தியத் தரப்பும், தமிழர் தரப்பின் முகமாக இருந்த புலிகளை ஒதுக்கி, இந்திய அமைதிப்படையின் வருகை குறித்த சாசனத்தில் கைச்சாத்திட்டன. இது சிங்களத் தலைமையை மிரட்டி, “நானே உங்கள் நாட்டில் அமைதியைக் கொண்டுவருவேன்” என்ற வேடத்தில் புலிகளின் ஆயுதங்களைப் பிடுங்கி, பிற ஆயுதக்குழுக்களைக் கொம்புசீவி வளர்த்துவிடத்தான் என்பது அனைவருக்கும், கொஞ்ச காலத்தில் புரிந்தது.

புலிகள் எனும் தமிழ்ப்பேரரண் – இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் இன்றியமையாமை

இந்திராவின் இறப்புக்குப் பின், அரியணையில் வலிந்து திணிக்கப்பட்ட இராஜீவுக்கு, தன் தாயின் அனுபவ அறிவோ, தன்னம்பிக்கையோ இல்லாததால், நிர்வாகத்தில் அதிகாரிகளின் தனிப்பட்ட கருத்துக்களுக்கெல்லாம் அதீத முக்கியத்துவம் கொடுக்க நேர்ந்தது. தேசிய இனங்களது உரிமைப் போராட்டங்களை, எப்போதும் விரும்பாத இந்திய ஒன்றிய அரசுக்கு, கொள்கையை உயிராக வைத்துப் போராடும் புலிகளின் மேல் வெறுப்பு ஏற்பட்டதில் வியப்பொன்றுமில்லை. ஆரிய மேலாதிக்க மனப்பான்மையோடு இயங்கிய இந்தியத் தலைமை, தனது இரா உளவுப்பிரிவின் கைப்பாவைகளாக இருக்கும் ஆயுதக்குழுக்களை  வலுப்படுத்துவதிலும், அவற்றின் ஆள்காட்டிகள் மூலம் புலிகளையும், அவர்களின் ஆதரவாளர்களையும் ஒழித்து விடுவதிலும் மும்மரமாக இயங்கிற்று. இதற்குத் தடையாக இருந்த தமிழ் மக்களை, எல்லாவித கொடுமைகளுக்கும் உள்ளாக்கி மகிழ்ந்தது, காந்தி நாட்டு இராணுவம். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, பல முறைகளில் தமிழர் தரப்பிலிருந்து இந்தியத்துக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தம், வீண் என்பதை அகிம்சை முறையில் உண்ணாநோன்பு இருந்து உயிர்விட்ட, தியாக தீபம் திலீபனின் மரணம் மெய்ப்பித்தது. அன்னை பூபதி அவர்களும் அவ்வாறே தன் இன்னுயிரை ஈந்து மறைந்தார்.

வேறுவழியே இல்லாமல் புலிகள், தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், தமிழ் மக்களைக் காக்கவும், தங்கள் விடுதலைப் போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கவும், பல்வேறு இழப்புக்களை விலையாகக் கொடுத்து, விவரிக்க முடியாத தியாகங்களைச் செய்து, கற்பனைக்கு அப்பாற்பட்ட வீரத்துடன் சிறு குழுவாகப் போராடி, பெரும் எண்ணிக்கையிலான அமைதிப்படையை விரட்டி அடித்தனர். இது “முதலாம் ஈழப்போர்” என்று வரலாற்றாசிரியர்களால் குறிக்கப்படுகிறது. தோற்றுப்போன அவமானத்துடன் அன்று சதியைக் கையிலெடுத்த இந்திய ஒன்றியம், தன் பாதுகாப்பு நலன்களைக் கூடப் பணயம் வைத்து இழந்து கையறு நிலைக்கு வந்த பிறகும் கூட, ஈழம் குறித்த தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல், இன்று வரை தமிழர்களை வீழ்த்தி, அவர்கள் எழுந்துவிடா வண்ணம் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.

இந்திய அமைதிப்படையைத் துரத்தி அடித்ததன் மூலம், ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான ஒற்றை இயக்கமாக புலிகள் அமைப்பு, உலகத்தமிழர்களின் ஆதரவுடன் பரிணமித்தது. பிற ஆயுதக்குழுக்கள், தமிழர் அமைப்புகள் புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டன. வடக்கு கிழக்கை ஒருங்கிணைத்து உண்டாக்கப்படும் தனித்தமிழ் ஈழமே, தமிழர்களின் தன்னாட்சி மிக்க நலவாழ்வை உறுதி செய்யும் என ஈழத்து மக்கள் உறுதியாக நம்பினர். அதைச் சாத்தியமாக்க விடாமல், சிங்களப் பேரினவாத அரசின் இராணுவம்  முயன்றபோதெல்லாம், தங்களது தரைப்புலிகள் (பெண்புலிகள் பிரிவு உட்பட), கடற்புலிகள், வான்புலிகள், உளவுப்புலிகள், கரும்புலிகள், அரசியற்புலிகள் என்ற ஆறுபடைகள் மூலமாக, தவளைப்பாய்ச்சல், ஓயாத அலைகள் 1  மற்றும் 2 , கட்டுநாயக்க விமானப்படைத் தாக்குதல், ஆனையிறவுத் தளம் கைப்பற்றல் போன்ற சிறப்பான போர்வெற்றிகளின் மூலம் தங்கள் இராணுவ பலத்தை நிறுவிக் காட்டினர். இக்காலகட்டம், ஈழப்போர் இரண்டு மற்றும் மூன்று எனச் சுட்டப்படுகிறது.

புலிகளின் தாகம், தமிழீழத் தாயகம் – ஈழத்தமிழின விடுதலையில் மக்கள் இராணுவம்:

சிங்கள இராணுவம், தமிழ் மக்களையும், போராளிகளையும் அச்சுறுத்தும் பல அட்டூழியங்களையே தொடர்ந்து செய்து வந்தது. அவ்வப்போது  போர்நிறுத்த அறிவிப்புகளை வெளியிட்டாலும், அதனைத் தங்கள் இழப்புகளைச் சரிசெய்யும் இடைவெளிகளாக மட்டுமே பயன்படுத்திப் பாசாங்கு செய்தது. தங்களது பொய்ப்பிரச்சாரத்தின் மூலம், அப்பாவிச் சிங்களப் பொதுமக்களையும், உலக அரங்கையும் ஏமாற்றி, புலிகளை இரக்கமற்ற தீவிரவாதிகளாகக் காட்ட முனைந்தபோது, புலிகளின் வானொலி, இணையம் மற்றும் அச்சு ஊடகங்கள் ஆகியன, இலங்கை இராணுவத்தைத் தவிர சிங்களப் பொதுமக்களை ஒரு நாளும் தொடாததோடு, அவர்களில் பலரையும் புலிகள் காத்து நின்ற உண்மை நிலவரத்தை விளங்கக் கூறின.

அரசபயங்கரவாதத்தின் இன்னொரு முகமாக, சிங்கள அரசு வடக்கு கிழக்கு தமிழர்களை நிலவியல், சமயம், பண்பாடு ஆகியவற்றால் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டது. இதனால் எழுந்த முரண்பாடுகள், இனவிடுதலைக்கான தொடரோட்டத்தில் பல தடைகளை ஏற்படுத்தினாலும், தொடர்ந்து முன்னோடிக் கொண்டிருந்தது, புலிகள் இயக்கம். சிறு போராளிக் குழுவாகத் தொடங்கி, இலங்கை இராணுவத்துக்கு இணையாகத் தங்களை மரபுவழி இராணுவமாக உயர்த்திக் கொண்டதோடு, அரசியல்ரீதியாகவும், அமைதி வழியில் தீர்வுகளைக் காண புலிகள் இயக்கம் தயாராகவே இருந்தது. ஆனால் அப்படி ஒரு நேர்மையான, நிரந்தரத் தீர்வை நோக்கி நகர, சிங்களப் பேரினவாத, பவுத்த மதவாத, சந்தர்ப்பவாத இலங்கை அரசியல் தலைமைகள் தயாராக இல்லாதது, ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும், மிகவும் துயர்மிகுந்ததாக  இருந்தது.

புவிசார்அரசியலில் வல்லாதிக்கங்களின் போட்டி – அனைத்துலமும் சேர்ந்து தமிழர்களை அழித்தொழித்த காரணங்கள்:

2001 இல் உலக வர்த்தக மையத் தாக்குதலுக்குப் பின்பாக, சர்வதேச அரசியல் சூழ்நிலைகளின் மாற்றத்தை முன்னிட்டு, நார்வே தலைமையிலான போர்நிறுத்ததுடன் கூடிய சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு, புலிகள் இயக்கம் ஒத்துழைக்க முன்வந்தது. கிட்டத்தட்ட தமிழ் மக்களது தேவைகளை நிறைவு செய்யக்கூடிய “சமஷ்டி” எனும் கூட்டாட்சி அமைப்பைக் கூடப் பரிசீலிக்க முன்வந்தனர். ஆனால், திறந்த மனதுடன் இலங்கை அரசு செயல்படாததும், கொடுத்த சில வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றாமல் காலங்கடத்திக் கொண்டே இருந்ததும், குறைந்தபட்ச அதிகாரப்பகிர்வுக்குக் கூடத் தயாராக இல்லாததும், இரகசிய ஆயுதக்குவிப்பு செய்ததும், சமாதானப் பேச்சுவார்த்தைகளை நீர்த்துப்போகச் செய்து, போர்நிறுத்த ஒப்பந்தமும் ஒரு கட்டத்தில் கைவிடப்பட்டது.

சிங்களத் தலைவர்களிடம் இருந்த பதவிவெறிப் போக்கு, பொறாமையினாலும், உள்ளபடியே சிங்களப் பொதுமக்களுக்கும் அமைதியைத் தரக்கூடிய, ஒரு இறுதித் தீர்வை நாடும் மனமில்லாத காரணத்தாலும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் இலங்கையின் அமைவிடத்தினால் அதைக் கட்டுப்படுத்த எண்ணும் சீனா, அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் இலாப நட்டக் கணக்கீடுகளாலும், இவற்றின் கூட்டாளி நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இசுரேல், இங்கிலாந்து போன்ற நாடுகளின் தலையீடுகளினாலும், இந்த இனச்சிக்கல் முடியாமல் நீண்டுகொண்டே இருந்தது. தமிழர்களின் இறையாண்மைமிக்க தேசத்துக்கான அவசியமும், அவசரமும், நியாயமும், வரலாறு சார்ந்த உண்மையும் இருந்தபோதும், அண்டை நாடான இந்திய ஒன்றியம், பெரும் தடைக்கல்லாக சர்வதேசத்தின்முன் நின்று கொண்டிருந்தது.

ஒட்டுமொத்த இலங்கைக்கும் அதிபராக இருந்தாலும், சிங்களர்களின் தலைமையாக மட்டுமே சிந்தித்த, பேசிய, செயல்பட்ட இலங்கை அரசின் தலைவர்கள், சிங்களர்களுக்கே நேர்மையாக இல்லாது, இந்தச் சிக்கலை நல்ல வருமானம் வரும் வாய்ப்பாகவே பார்த்தார்கள். அதிலும் “மகிந்த இராஜபக்சே” தலைமையிலான அரசு, சில சிங்கள மேல்தட்டுக்குடியினரை மட்டுமே கவனித்து, எளிய உழவுக்குடியினரான அடித்தட்டுச் சிங்களர்களைப் புறக்கணித்த பழைய அரசுகளை விடவும், வித்தியாசமானதாக, தனது தம்பிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தை மட்டும் பேணும், அத்தனை அதிகாரத்தையும் ஒரே இடத்தில் குவித்த கொடுங்கோலாட்சியாக இருந்தது. எதிர்ப்பவர் அனைவருக்கும், எந்தப் பாகுபாடுமின்றி காணாமற்போதலும், வெள்ளைவேன் கடத்தலும், கொடூர மரணமுமே பரிசாக அளிக்கப்பட்டது. கள நிலவரத்தைத் துணிந்து கூறிய ஊடகவியலாளர்கள், மனிதவுரிமைச் செயல்பாட்டாளர்கள், ஏன் சிங்களச் சார்பு நிலை கொண்ட பலர் கூடக் கொல்லப்பட்டனர். தமிழர் அமைப்புகளுக்கும், புலிகளுக்கும் உதவிகள் வரும் வழிகள் நெருக்கப்பட்டன; உதவிகள் செய்தோர் மிரட்டப்பட்டனர்; முடிந்தால் மௌனிக்கப்பட்டனர் அல்லது முடித்துவைக்கப்பட்டனர்.

வளச்சுரண்டல் அரசியலின் கொடூர முகம் – தமிழர்களை அழிக்கும் வெறியில் தன்னையே விற்ற இலங்கை:

மகிந்த, தன் பரிவாரங்களோடு நின்றுகொண்டு, பகிரங்கமாகவே இலங்கையை ஏலம் விட்டார். சர்வதேசமும் இலங்கையின் வள விற்பனையில், தங்கள் பங்கைப் பெற்றுக் கொள்ள அலைந்தன. அவர்களிடம் “புலிகளை எங்களால் எந்த காலத்துக்கும், கனவில் கூட வெல்ல முடியாது!  நீங்கள் இலங்கைக்குள் வந்து ஆர்வமாகச் சுரண்ட விரும்பினாலும், அவர்கள் விடமாட்டார்கள்; அவர்களும் சுரண்ட மாட்டார்கள்; மக்கள், மண் விடுதலை என்பார்கள். எங்களை விடப் பன்மடங்கு வலுவான அவர்களை அழிக்கப் பெரும் பொருளுதவியும், படையுதவியும் தேவை. அதைச் செய்துகொடுத்தால், பதிலுக்கு நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் வளக்கொள்ளையடிக்க அனுமதி கொடுக்கிறோம். எங்களுக்கு அதில் ஒரு சிறு பகுதி மட்டும் தந்தால் போதும். ஆனால் வேலை முடியும்வரை எங்களை அதிகாரத்தில் இருத்திவைப்பதும், முடிந்தபின் உலக அமைப்புகளிடமிருந்து பாதுகாப்பதும், நம் ஒப்பந்தம் வெளியில் வராமல் பார்த்துக்கொள்வதும், உங்கள் பொறுப்பு. எந்தக் கேள்விகளும் நீங்கள் கேட்காவண்ணம் நாங்கள் செயலாற்றுவோம். முதலில் தமிழர்களை முடித்ததும், நம் வேலையை அடுத்த நொடியே தொடங்கி விடலாம்” எனத் தெளிவாகச் சொல்லிவிட்டார்.

வேறென்ன வேண்டும் வல்லாதிக்கங்களுக்கு? வேலைகள் அவசர அவசரமாக நடக்கத் தொடங்கின. கடன் கொடுத்தே, ஜிபௌத்தி போன்ற ஏழை ஆப்பிரிக்க நாடுகளை வளைத்த சீனா, பல காலமாகவே காத்திருந்த இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தியது. நாலாபுறமும் வந்த அனைத்து உதவிகளையும் வேண்டாமென்று சொல்லாமல் பெற்றுக் கொண்ட இலங்கை, இந்திய ஒன்றியத்தை வெறுப்பேற்றவே சீனாவை வாரி அணைத்துக் கொண்டது. சீனாவும் வகைதொகையின்றி, எவ்வித நிபந்தனைகளுமின்றி  அள்ளிக் கொட்டியதோடு, தொழில்நுட்ப உதவிகள், கட்டமைப்பு வசதிகள் வரை செய்துகொடுத்து இலங்கைக்கு உன்மத்தமேற்றியது. இதன் விளைவு தான், இன்று கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட பல வழிகளில் இலங்கை சீனாவின் கைப்பாவையாகவே மாறி நிற்கிறது. சீனாவை எதிர்கொள்ளவும், இயல்பாகவே புலிகளிடம் வாங்கிய சம்மட்டி அடிக்குப் பழி வாங்கவும், ஆள், அம்பு, சேனையோடு, செயற்கைக்கோள் மூலம் உளவு மற்றும் கடற்பரப்புக் கட்டுப்பாட்டு உதவிகளையும் போதும் போதுமென்ற வகையில் இலங்கைக்குச் செய்து, புலிகளை முடக்கியதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது.

சர்வதேசத்தின் ஒத்தாசைகளில், பெரும்பங்கை வாயில் போட்டுக் கொண்டு, குடும்பச் சொத்துக்களைச் சேர்த்து, வியாபாரப் பேரரசை விரிவுபடுத்தி முடித்த பிறகும் கூட, இராணுவத்துக்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்தும் கூட, மிச்சமிருக்கும் வகையில் அவ்வளவு பணம் சேர்ந்திருந்தது. சிங்களக் குடிமக்களைப் பற்றியோ, அவர்களின் எதிர்காலம், பாதுகாப்பைப் பற்றியோ முன் யோசனையின்றி, பெரும் கட்டுமான ஒப்பந்தங்கள், சீனர்களின் மூலம் சீனாவே முடிக்கும் வகையில் செய்யப்பட்டிருந்தன. அம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்று சீனாவின் இராணுவத் தளமாகவே இருந்தது. இந்தியா

 அங்கு இருந்த போக்குவரத்தே நடக்காத காலியான விமான நிலையத்தின் பொறுப்பை ஏற்றுச் சிறப்பித்தது. ஆயுதக்கிடங்குகள் அவசர அவசரமாய் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்டன. மனிதனின் அழிவு சக்திக்குக் கட்டியம் கூறும், அனைத்து வகை ஆயுதங்களும் இலங்கையில் தமிழர்களிடம் சோதித்தறியக் குவிக்கப்பட்டன. இந்திய ஒன்றியமும் தன் பங்குக்கு வேதிக் குண்டுகளை, பீரங்கிகளை, சிப்பாய்ப்படைப் பிரிவுகளை அனுப்பியது.

துரோகத்தால் வீழ்ந்த தமிழினம் – சில நன்றி கெட்ட நச்சுப்பாம்புகளும், பல பேராசைக் கழுதைப்புலிகளும்:

புலிகளின் உலக எதிரிகளை ஒருங்கிணைத்ததோடு, தமிழ்நாட்டில் ஒரு கருணாவையும், உள்நாட்டில் ஒரு கருணாவையும், வெளிநாட்டில் இன்னும் பலப்பல கருணாக்களான துரோகிகளையும் சேர்த்துக் கொண்டு, எந்த நாடும் அமைப்பும் தமிழர்களுக்கும், புலிகளுக்கும் ஆதரவாக இணைந்து விடாமல் இருக்க சாம, தான, பேத, தண்ட, தகிடுதத்தங்கள் செய்யப்பட்டன. தமிழகம் மற்றும் புலம்பெயர் மக்களின் உதவிகள் உள்நுழையா வண்ணம், கடற்பரப்பும் வான்பரப்பும் இறுக்கிக் கட்டப்பட்டு, கண்காணிப்பு வளையத்துள் வந்தன. புலிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும்,  பெரும் இழப்புகளுக்குப் பின்னே தான், ஒவ்வொரு நிலப்பகுதியும் கூட்டு இராணுவப் படைகளுக்குக் கிடைத்தது. ஒரு கட்டத்தில் அணை உடைப்பு, அமெரிக்கச் சார்பு நிலைப்பாடு போன்ற தற்காப்பு நடவடிக்கைகளை சில தளபதிகள் முன்வைத்தாலும், புலிகளின் தலைமை, எதிர்கால பாதிப்புக்களைத் தவிர்க்கும் பொருட்டு, அவற்றை வெறுத்து ஒதுக்கியது.

“வெற்றி அல்லது வீரமரணம்” என்பதை மட்டுமே ஒரே எண்ணமாகக் கொண்டு புலிகள் களமாடினர். இதற்கு முன்னும் அப்படித்தான் என்றாலும், நிலவரம் கடும் சிக்கலானது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். ஆயுதப்போராட்டத்தில் ஓங்கியிருந்த நம் கை, அமைதியான அரசியல் போராட்டத்தில் இறங்கியிருந்ததாகச் சிலர் நினைக்கக்கூடும். போதுமான சமாதான முயற்சிகளைச் செய்ய விரும்பாத, போர் வெறியர்களாக நம்மைக் கட்டமைக்கவே சிங்களத் தலைமை விரும்பியது. ஆனால் உலக நாடுகளில் பல, தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற உறுதியளித்த இலங்கையின் அரசபயங்கரவாத இனவழிப்பு இராணுவத்தை ஆதரித்து, கிட்டத்தட்ட சுயாட்சி பெற்ற சுதந்திரமான நாடாக, உலக அங்கீகாரம் மட்டும் இல்லாமல் செயல்பட்டுக்கொண்டிருந்த புலிகளின் தலைமையிலான தமிழீழத்தைச் சிதைக்க ஒப்புக்கொண்டது, யார் தவறு? என்பதைச் சிந்தித்தால், முழு விவரமும் புரியும். அதைத் தடுக்கப் புலிகள் செய்த அத்தனை முயற்சிகளும், இலங்கை பெற்றிருந்த, நாம் பெறாதிருந்த “தனி நாடு” என்ற ஒற்றைக் காரணத்தினால் முறியடிக்கப்பட்டது என்பதை விட, நம் உரிமைப் போராட்டம் சர்வதேசத்துக்கு இலாப வாய்ப்புக்களற்ற ஒன்றாக இருந்தது என்பதே மிகச் சரியானதாக இருக்கும்.

பற்பல நாடுகளின் காசில், இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் மேற்பார்வையில், ஏழு நாடுகளின் இராணுவப் பங்களிப்பில், இந்தியா மற்றும் சீனாவின் நேரடி வழிகாட்டலில், அமெரிக்காவின்.அலட்சியத்தில், இலட்சக்கணக்கான தமிழர்கள், “அனைவருமே புலிகள் தான்” என்ற ஒட்டுமொத்த அடையாளப்படுத்தலில் முற்றுமுழுதாக அழித்தொழிக்கப்பட்டார்கள்.

முள்ளிவாய்க்கால் முள்வேலிகளுக்குள் முடக்கப்பட்ட தொல்லினம் – இறுதிகட்ட இனப்படுகொலை எனும் பேரூழி:

மனிதம் என்று வரையறுக்கப்பட்ட எந்த மாண்பும் அங்கு பின்பற்றப்படாது, மனித உரிமை என்று மொழியப்பட்ட எந்த விளக்கங்களையும் பொருட்படுத்தாது, “தமிழர்” என்ற ஒரே காரணத்துக்காக மானமும், மரியாதையும், உடலும், உள்ளமும், நிலமும், பொருளும், குலையக் கொல்லப்பட்டனர்; அல்லது உயிருடன் அலையும் பிணங்களாகக் காலமுழுதும் வாழச் சபிக்கப்பட்ட “ஏதிலிகள்” ஆக்கப்பட்டனர். எல்லாவற்றையும் துறந்து, சரணடைய வந்தாலும், குருதி தோய்ந்த வெள்ளைக்கொடியோடு சேர்த்துச் சல்லடையாகும் வண்ணம், குண்டுகளால் துளைக்கப்பட்டார்கள். கடைசி ரவை தீரும்வரை களத்தில் நின்று காத்த புலிகள், மக்களோடு மக்களாகவே பெரும்பாலும் இறந்தார்கள். சிலர் அடையாளம் மறைத்து முகாம்களில் நுழைந்திருந்தாலும், ஆட்காட்டிகளால் மரணத்துக்கு விற்கப்பட்டார்கள். முப்பது ஆண்டுகால அகிம்சைப் போராட்டமும், முப்பத்து மூன்றாண்டுகால ஆயுதப் போராட்டமும் சேர்த்து ஆறு தசாப்தங்களுக்கும் மேலான தமிழர் விடுதலைப் போராட்டத்துக்கு, முள்ளிவாய்க்காலில் முடிவுரை எழுதப்பட்டுவிட்டதாகச் சிங்களக் கூட்டுப்படை எக்காளமிட்டது.

முனகக் கூட முடியாமல் முள்வேலிகளுக்குள் முடமாக்கப்பட்ட தமிழினம், “வெறுமை” எனும் குழியில் விழுந்து குமைந்தது. இனி எல்லாம் சூனியமாகத் தெரிய, வலியும் கூடப் பெரும் சுமையாக அழுத்தாத பிரக்ஞையற்ற மயான அமைதியில் சிக்கி உழன்றது. புலம்பெயர் தமிழர்கள் சென்று தட்டாத கதவில்லை; செய்யாத போராட்டமில்லை; தமிழகம் உட்பட உலகின் பல பகுதிகளினின்றும் உயிரைக்கூட கொடுத்துக் குரலெழுப்பியும், கொள்ளைத் திட்டங்களை எண்ணிக் கொண்டே, பொய்யுறக்கத்தில் சிறப்பாக நடித்துக் கொண்டிருந்த சர்வதேசம், அசையவும் விருப்பமின்றி அசட்டையாகவே இருந்தது. சில நாடுகள் செய்ய முடிந்ததைக் கூடச் செய்யாமல், பிற நாடுகளைப் பகைத்துக் கொள்ள விரும்பாது மௌனமாகவே இருந்து விட்டன. இந்தியமும் பழி வாங்கியது பாதி; பாராளுமன்றத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைத்துப் பதவி வந்தது மீதியென உற்சாகத்தில் மிதந்தது. தாய்நிலமாம் தமிழகம், துரோகத் திமிர்முகங்களது கோரத்தை நம்ப முடியாமல், தொப்புள் கொடி உறவுகளின் இரத்தக் கவுச்சியையும் தாங்க மாட்டாமல், இயலாமையின் எல்லையில் நின்றுகொண்டு, இழவுக்கு அழக்கூட அச்சப்பட்டு அங்கலாய்த்துக் கொண்டிருந்தது.

சமகால ஈழத்தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் – சமூகப் பொருளாதார பண்பாட்டு அரசியல் கோணங்கள்:

எல்லாம் முடிந்தது; அவ்வளவு தான் என்று இருப்பதை வைத்து, மீதம் இருக்கும் காலத்தை நகர்த்திட, நம் சனம் மீளமுடியாத சோகத்துடன், இலங்கையில் வாழத் தொடங்கியது. இராணுவ வதை முகாம்கள், கட்டாய சிங்களக் குடியேற்றம், ஊர்ப்பெயர்கள் சிங்களத்தில் மாற்றம், காணாமற்போதல், கடத்தல்கள், கொலைகள், கொள்ளைகள், பாலியல் கொடுமைகள், நினைவிடத் தகர்ப்புகள், வரலாற்றுச் சான்று அழிப்புகள், போர்க்குற்ற விசாரணைத் தொய்வு, சம்பிரதாயமான தேர்தல்கள், பயனற்ற வாக்குறுதிகள், சந்தர்ப்பவாதக் கூட்டணிகள், பதவிக்கான பிழைப்புவாதப் பேச்சுக்கள், பழி போடல்கள், தொடரும் சதிவலைப் பிரிவினைகள், பெயருக்கேனும் நடக்காத மீள்கட்டமைப்புப் பணிகள், தினம் முகத்தில் அறையும் வயிற்றுப்பாட்டுக்கான தேடல்கள், இருளடைந்த போர்ச்சூழல் நினைவுகள், ஆபத்தான மனச்சிதைவுகள், உடல் உபாதைகள், நிச்சயமற்ற எதிர்காலம், நிரந்தரமான வறுமை என கடக்கிறது, ஈழத்து உறவுகளின் சமகாலம்.

சீனா உள்ளிட்ட உலக நாடுகளிடம் நம்மை அழிப்பதற்கென்று வாங்கிய கடன்களும், அவற்றைக் கையாடல் செய்து சொத்துக்கள் சேர்க்க வேண்டி, பல துறைகளில் நீண்ட மோசமான குடும்ப அரசியலும் மிகவும் ஆபத்தான பொருளாதாரச் சிக்கலுக்கு இலங்கையை இட்டுச் சென்றிருக்கிறது. தேசியத் தலைவர் இதை பல முறை சிங்களர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த இலங்கையின் நன்மை கருதி தீர்க்கதரிசனமாகச் சொல்லியிருக்கிறார். வெறும் வெறுப்பரசியலை மட்டுமே தங்களின் கொள்கையாகக் கொண்டதும், குடும்ப உறுப்பினர்களைப் பல்வேறு மட்டங்களில் நிரப்பிச் செய்த அதிகாரக் குவிப்பும், எப்படிப்பட்ட வீழ்ச்சிக்கு ஒரு நாட்டைக் கொண்டு செல்லும் என்பதற்கு இலங்கை தெள்ளியதோர் எடுத்துக்காட்டு.

ஒரு காலத்தில் நம்மை இரக்கமின்றி கொன்றொழித்ததற்காக எந்த மண்ணை மகிந்த இராஜபக்‌ஷே முத்தமிட்டாரோ, எந்த மண்ணின் மக்கள் அவரை வெற்றியாளனாகக் கொண்டாடினார்களோ, அந்த மண்ணில் அவர் விரட்டப்பட்டார். தமிழீழம் அல்ல – தமிழர்களுக்கான ஒரு துண்டு நிலம் கூட இருக்ககூடாது என்று நினைத்தவர் தான், நமது தலைநகராக வரிக்கப்பட்ட திரிகோணமலையில், தமிழர் தாயகத்தில் ஒளிந்து கொண்டிருந்தார், அவரது இன மக்களாலேயே கொல்லப்படுவோமோ என்ற உயிரச்சம் கருதி.  எம்மினத்தில் விலைமதிக்க முடியாத உயிர்களையும், அறிவுக் களஞ்சியங்களையும் தின்ற தீநாவுகள், சிங்களத் தலைவர்களின் வீடுகளை எரித்தன.

அமைதியாக நடக்கும் அறப்போராட்டங்களை அடக்கியே பழக்கப்பட்டுவிட்ட சிங்களத் தலைமைகள், தன் சொந்த இன மக்களிடமும் அதே வேலையைக் காட்ட, இன்று கலவர பூமியாகியிருக்கிறது இலங்கை. குடும்பம் குடும்பமாக நம்மை அயலகத்துக்கு ஏதிலிகளாக விரட்டியவர்களின் குடும்பத்தினர் இன்று, அரசியல் அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் கோருவதும், சிங்களச் சிப்பாயே, தேசியத் தலைவர் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று சொல்வதும் எப்படிப்பட்ட தலைகீழ் மாற்றம்? ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சிலம்பு உரைத்த மூன்று உண்மைகள் சமகாலத்திலும் நிறுவப்படுவது தான் என்னவொரு வியத்தகு விந்தை?!

ஆனால் இப்போது சிங்களர்களிடம் ஏற்பட்டிருக்கும் மனமாற்றம், சிங்கள அரசியல் தலைமைகளிடம் வரும் என்றும், அதை பவுத்த மதகுருமார்கள் அனுமதிப்பார்கள் என்றும் நாம் எதிர்பார்க்க முடியாது. ஒரு நாட்டில் இனவெறி அல்லது மதவெறி ஆகிய இரண்டில் ஒன்று இருந்தாலே சமாளிப்பது கடினம்; இலங்கையிலோ இந்த இரண்டும் சேர்ந்த அழிவுக்கலவை அந்நாட்டின் வரலாற்றின் பக்கங்களிலெல்லாம் உதிரச் சிவப்பைத் தடவியபடி செல்கிறது. அந்த நாட்டின் அரசியல் அமைப்பே தமிழர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளபோது, சிங்களப் பொதுமக்களின் தமிழர்களை நோக்கிய பார்வை மாற்றமும், அதன் மூலம் கிடைக்கும் புலம் மற்றும் புலம்பெயர் தேசங்களிலிருந்து வரும் உள்ளார்ந்த ஆதரவும், உளப்பூர்வமான செயல்பாடுகளும், இழப்புகளுக்கான நியாயத்துடன் கூடிய நிரந்தரமான தீர்வும் தான், இதுவரை ஆறாமல் இருக்கும் நம் காயங்களுக்கான மருந்து. அதைச் சாதிக்க கால, நேர, தூர, தேச எல்லைகளைத் தாண்டிய தமிழர்களின் ஒற்றுமையே உடனடித் தேவை.

ஈழ விடுதலை எனும் பெருங்கனவு – அமைதி வழி தராததை, ஆயுத வழி பெறாததை, அரசியல் வழி வென்றெடுப்போம்: 

உலகத் தமிழினம் இரு பெரும் தாயகங்களான தமிழகம் மற்றும் ஈழத்தில் கடலாலும், நாடுகளின் எல்லை வரையறையாலும் பிரிக்கப்பட்டு இருக்கையில், இவ்விரு மரபுவழித் தாயகங்களினின்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் உலகெங்கும் சிதறவிட்ட நெல்லிக்காய் மூட்டையாகத் தெறித்துக் கிடக்கின்றனர். இவர்கள் அனைவரையும் “மொழி” எனும் கயிறு ஒன்றாய் இணைக்கச் சாத்தியம் இருந்தாலும், பற்பல தமிழர்கள், சாதி, சமயம், பழக்கவழக்கங்கள், வர்க்கம், வசிப்பிடம், அரசியல் சித்தாந்தங்கள் போன்றவற்றில் உள்ள வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தியே சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். வெட்டிக்கொள்ளவும் முடியாமல், வீசியெறியவும் முடியாமல், மொன்னைக் கத்திகளான இவற்றை வைத்துக் கொண்டு நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு தாயகத்தில் ஆயுதப் போராலும், இன்னொரு தாயகத்தில் அரசியல் போராலும் ஒடுக்கப்பட்டு, கேட்பாரற்றுக் கிடக்கிற இனத்துக்குக் கடந்த காலக் காயமோ, நிகழ்கால வலியோ, எதிர்காலக் கனவோ இல்லாமல், பொழுதை ஓட்டும் வயிற்றுப்பிழைப்புக்கு மட்டுமே நேரமிருக்கிறது.  ஈழசோகம் முடிந்து கிட்டத்தட்ட பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலான பின்னும், ஒற்றை அடையாளத்துடன் உலகத்தமிழர்களால் திரள முடியாமல் இருப்பது ஏன்? தடுப்பது என்ன? இனம் சாவதைத் தடுக்க முடியவில்லை என்ற குற்ற உணர்வோ, செத்தபின்பு வாய்விட்டு அழக்கூட முடியாத நிலையில், சர்வதேசச் சதிவலைக்குள் மாட்டிக் கொண்டதனால் ஏற்பட வேண்டிய கோபமோ, இதிலிருந்து எப்படி வெளிவரவேண்டுமென்ற நுண்ணறிவோ, இறந்த உயிர்களுக்கான நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய கடமையோ, புனர்வாழ்வு நோக்கி அவர்களை நகர்த்த வேண்டிய ஒட்டுமொத்த சமூகப் பொறுப்போ, இனியொருமுறை நம்மை யாரும் இப்படித் தாக்கி அழிக்காமல் இருக்க முன் தயாரிப்புகளைச் செய்யும் எச்சரிக்கை உணர்வோ, ஏன் இவ்வாறு நிகழ்ந்தது? என்ன தவறு செய்தோம்? இதைத் தவிர்த்திருக்க முடியுமா? என்ற சுய விமர்சனத்துடன் கூடிய தெளிவோ, அடுத்தகட்ட நகர்வுக்கான ஆயத்தமோ, இனி என்ன செய்ய வேண்டுமென்ற தொலைநோக்கோ, இனியேனும் இலக்கை நோக்கி ஓடுவோம் என்ற விடாமுயற்சியோ, இலக்கை அடையத் தேவையான முன்னெடுப்புகளைச் செய்ய அறிவுத்தேடலை நோக்கிய பாய்ச்சலோ என எதுவுமே இல்லாமல், ஒன்றுமே நடவாதது போல, பொழுதுபோக்குகளின், போதைகளின் பின்னால் பெரும்பான்மைத் தமிழ்ச் சமூகம் ஓடுகையில், அதன் சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றில் அடிப்படை மாற்றம் தேவை என்ற கசப்பான உண்மை புரிகிறது.

தமிழினம் ஓர்மை பெறவும், தங்களின் தேசிய இனத்துக்கான சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு விடுதலையை அடையவும், முதலில், அரசியல் விடுதலையைப் பெற்றுக் கொள்ள வேண்டிருக்கிறது. தெளிவான சட்ட திட்டங்கள், சுயநிர்ணய உரிமை மற்றும் இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான பெருமை மிக்க வாழ்வை எம்மினம் வாழ,  நமக்கு இந்த பூமிப்பந்தில் “தாயகம்” என ஒரு துண்டு நிலம் தேவைப்படுகிறது. நமது இனத்துக்குக் கிடைக்கும் அதிகபட்ச அங்கீகாரமாகவும், இனத்தின் பல சிக்கல்களுக்குக் கிடைக்கும் நிரந்தர தீர்வாகவும், அது மட்டுமே இருக்கும். தமிழர்கள் இதைக் கேட்பதற்கு, மிக நியாயமான வரலாற்று, தர்க்க, தார்மீக ரீதியான காரணங்கள் ஏராளம் உள்ளன. எட்டுகோடிக்கும் மேற்பட்ட தமிழர்களின், கண்ணெதிரே நடந்த ஈழ இனப்படுகொலையும் ஒரு மிக முக்கியமான முதன்மைக் காரணம். 

நாம் தமிழர் எனும் நன்னம்பிக்கை – தொப்புள்கொடி உறவுகளுக்கான நமது தமிழ்த்தேசிய அரசியல்:

தமிழர்களின் அரசியலைப் பேசும் தமிழ்த் தேசியம், மூவேந்தர்கள் காலத்துக்குப் பிறகு, ம.பொ.சி, சி.பா.ஆதித்தனார், பெருஞ்சித்திரனார் காலத்தில் தான் தீவிரமாகப் பேசப்பட்டது. ஆனால், அன்றைய அரசியல் சூழ்நிலைகளில், ஆரியத்திடம் மண்டியிட்டுச் சரணடைந்த, தமிழரல்லாதவர்களின் கூடாரமான “திராவிடம்” எனும் புனைவுக் கோட்பாடு, தென்னகத்தின் எந்த இடத்திலும் இல்லாமல், தமிழகத்தில் மட்டும் ஏன் ஆளும் இடத்துக்கு வந்தது? என்ற கேள்வியைக் கேட்காத அலட்சியத்தின் விளைவு, பல இலட்சம் தமிழர்களின் மரணத்துக்கு வித்திட்டது.

2009 க்குப் பின்னான தமிழகத் தமிழர்களின் ஏமாற்றமும், இயலாமையும், ஆரிய – திராவிடக் கூட்டு சதிக்கு முகங்கொடுத்துப் பெரும் இழப்புக்களைச் சந்தித்த ஈழத்தமிழர்களின் துயரும், வலியும்,  தாயகம் மீள்வோம் என்ற நம்பிக்கை தகர்ந்த நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்களின் வெறுமையும், விரக்தியும், பல இயக்கங்களை உருவாக்கின. அவற்றில் பல, காலத்தின் கடும் தேர்வில் தேறாது போய்விட சிற்சில அமைப்புகளே, தமிழர்களின் முக்கியமான பிரச்சனைகளுக்கு, உளமார, உண்மையான அக்கறையுடன் குரல் கொடுத்தும், களச்செயல்பாடுகளில் தீவிரமாகவும் இயங்குகின்றன. அவற்றில் நாம் தமிழரின் தமிழகம் மற்றும் உலகளாவிய செயல்பாடுகள், மிகுந்த நம்பிக்கை தருவனவாக தமிழ்ச் சமூகத்தில் அவதானிக்கப்படுகின்றன என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

தமிழகத்தில் சிறு அறிவுசார்குழுக்கள்,  அரங்கத்தினுள் மட்டுமே பேசிக் கொண்டிருந்த தமிழ்த் தேசியத்தை, கடந்த பதிமூன்றாண்டுகளுக்கும் மேலாக, தெருமுனைகள் முதல் வீட்டுமூலைகள் வரை வெகுசன மக்களின் உரையாடல்களில் பேசுபொருளாக்கியது, நாம் தமிழரின் இமாலய சாதனை.

 எவர் முன்னெடுத்தாலும், எந்த சூழ்நிலையிலும் வெல்லாது என உறுதியாகச் சொல்லப்பட்ட அந்தச் சித்தாந்தத்தைத் தேர்தல் அரசியலில் முன்னிறுத்தி தொடர்தோல்விகளுக்கு அஞ்சாது, கரும கடனாக தூக்கிப் பிடித்ததில், முப்பது இலட்சம் மக்களின் பேராதரவோடு, நான்காவது தேர்தலில் மூன்றாம் இடத்துக்கு, பெருவாரியான இளைய சமூகத்தினர் தேடும் மாற்றாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது, நாம் தமிழர். ஒற்றை ரூபாயை, சாராயத்தை, கறிசோற்றைக் கொடுக்காமல், கொள்கைக்காக மட்டுமே இந்த வாக்குகள் என்பது தமிழகத் தேர்தல் வரலாற்றில், முன்னெப்போதும் இல்லாத நம்பிக்கை ஒளிக்கீற்று.  ஆனால் இது போதவே போதாது. உலகின் ஒரே ஒரு இடத்தில் தமிழர் பெரும்பான்மையாக இருக்கும் இந்த நிலத்தில்,  தமிழர் நாட்டில், இன்னுமின்னும் இந்த எண்ணிக்கை வளர்ந்து, வென்று, தமிழர் அறத்தின்வழி ஆட்சி நடக்க வேண்டும். அது எளிதானது அல்ல என்றாலும், சாத்தியமாகக் கூடியதுதான் என்பதே கடந்த சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் காட்டும் தரிசனம். 

ஈழமும், தமிழகமும் – இணைந்து எட்ட வேண்டிய இனவிடுதலைக்கான இலக்குகள்:

இளம்பிள்ளைகள் தன்னார்வத்தில் சாரிசாரியாக வந்து இணையும் அரசியல் இயக்கமாக நாம் தமிழர் வளர்ந்துவிட்டது எப்படி உண்மையோ, அது போல இனி வரும் அடுத்த பத்தாண்டுகள் தாம், தமிழினத்தின் அடுத்த அரை நூறாண்டைத் தீர்மானிக்கப் போகிறது என்பதும் உண்மை. எப்படி ஒரு பெரிய புற்றைக் கட்டுவதில், சிறிய எறும்புகள் ஒவ்வொன்றாகத் தங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்கின்றனவோ, அது போல தம்மால் முடிந்த ஒவ்வொரு சிறு செயலையும், தமிழ்க்குடி மகன் மற்றும் மகள் செய்து, ஒருவரையொருவர் பலப்படுத்த வேண்டும். கடந்த தலைமுறை, நம் இனவரலாற்றை, இந்த தலைமுறைக்குத் தெளிவாக விளக்கி, அடுத்த தலைமுறையை அறிவுசார்புலத்தில் ஆழமாக நிலைநிறுத்திட உதவ வேண்டும்.

வரலாற்றில் தெளிவும், அறிவில் முதிர்ச்சியும், எண்ணங்களில் உயர்வும், சொற்களில் நாகரீகமும், செயலில் நேர்த்தியும், திறன்களில் கூர்மையும், திட்டங்களில் தொலைநோக்கும் கொண்ட ஒரு அறம்சார்ந்த தலைமுறையை நாம் உருவாக்க வேண்டும். பொருள்சார்ந்த வாழ்வில் துய்க்க மட்டுமே தெரிந்த இந்தத் தலைமுறைக்கு மாற்றாக அது உருவாகி, உலக அரங்குகளில் நம் உரிமைகளை உரக்கக் கோரிப் பெறாமல், அவர்களாகவே வந்து நம்மிடம் திணிக்கத் தந்துவிட வைக்கிற ஆற்றலுடைய, இனம் உய்விக்க வந்த பேராளுமைகளாகப் பரிமளிக்க வேண்டும்.

சரித்திரம் படைக்க உடைக்கப்பட வேண்டிய தடைகள் – தமிழ்ப் பேரினத்தின் அக புற சிக்கல்களும், அவற்றுக்கான தீர்வுகளும்:

உலகெங்கும் வாழும், இந்த தலைமுறைத் தமிழ்ப் பிள்ளைகள், தம்மைக் கூறு போடும் அனைத்தையும் புறங்கையால் ஒதுக்கி, “தமிழர்” எனும் ஒற்றுமையுடன் இணைந்து செயலாற்றிட வேண்டும்.  தமிழர் நிலத்தில், நாம் அரசியல் தளங்களில் பெறும் வெற்றி, சமூகப் பொருளாதாரக் கலைப் பண்பாட்டு மெய்யியல் தளங்களில், காலங்காலமாய் நம்மைக் கட்டி இறுக்கும் தளைகளை அறுக்கும் வாளாக மாற வேண்டும். நமது உடனடி சிக்கல்களுக்குத் தீர்வும், நம் பிள்ளைகளின் நீண்ட கால நல்வாழ்வுக்குத் தேவையான வளமூலங்களும், தமிழர் ஆட்சி மூலமாகவே இங்கு சாத்தியப்படும். தமிழர் தலைமை, ஆட்சிக்கட்டிலில் ஏறுவதற்கு முன், நமக்குள் இருக்கும் வேற்றுமைகள், பாடை கட்டிப் போக வேண்டியிருக்கிற கடுமையான சோதனைகளைத் தாண்ட வேண்டும்.

இலக்கு ஒன்றே; அது இனவிடுதலை என்றால், அதை நோக்கிய பயணம் என்பது மலர்விரிப்பாதை வழியே அல்லாது, முள்கிழிப்பாதையாக மட்டுமே இருக்கும். அப்பயணம் புலிகள் எதிர்கொண்ட சவால்களையும், துரோகங்களையும், சாபங்களையும், சண்டைகளையும் விட பன்மடங்கு உக்கிரமாக இருக்கும். ஏனெனில் அது, மரணம் ஒருமுறை மட்டுமே நிகழும் உயிராயுதப் போர்; இது நாம் மணிக்கொரு மரித்து உயிர்க்கும் அறிவாயுதப்போர். வெட்டுக்களும், வீச்சுக்களும் ஆழமாக, அகலமாக, தீவிரமாக, திகைக்கக்கூட நேரமின்றி மிக மிக வேகமாக நடக்கும். எனவே தேவை கவனம்; அதீத கவனம்.

நாம் தமிழர் தம்பிகளும், தங்கைகளும், களச்சமரே உங்களை மிகச்சிறந்த போராளியாக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு சொல்லும் செயலும், நடத்தையும், நாகரீகமுமே கவசமும், ஆயுதமும். கடைசி கட்ட வீரனின் பணிவும், தளபதிக்குரிய வீரமும், தலைமைக்குரிய தெளிவும், இவர்களையெல்லாம் பெற்று வளர்த்து, போருக்கு அனுப்பும் தாயின் நெஞ்சுரமும், நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும். இழக்கத் துணியாத உயிரையும், இழக்கக் கூடாத மானத்தையும்,  இழக்க விரும்பாத உரிமைகளையும் இழந்து, பதினான்காண்டுகளாய் ஒரு அடி கூட முன்னகராத ஈழத்தமிழரின் வாழ்வை மீள்கட்டமைக்க, அவர்களைக் காக்க முடியாத தவறுக்குக் குறைந்தபட்சப் பரிகாரமேனும் செய்ய, தமிழகம் உட்பட உலகின் அனைத்து மூலைகளிலும் நாம் ஒன்றுபட வேண்டும். அரசியல் உள்ளிட்ட அனைத்து பொதுத் தளங்களிலும், தமிழ்த் தேசியம் பேசப்பட வேண்டும்.

தமிழகத்தின் தேர்தல் வெற்றிகளில் தொடங்கும் “தமிழர் ஆட்சி” எனும் அடித்தளத்தின் மீது, தற்சார்புப் பசுமை உற்பத்திப் பொருளாதார மேம்பாடு, தமிழ்த்தேசிய முதலாளிகளின் பெருக்கம், சிறந்த கல்வி, சுகாதாரம் மற்றும் இதர உறுதியான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கம், தமிழ்ச் சமூகத்தில் சாதி, சமய, பாலின, வர்க்க, வட்டார வேறுபாடுகள் களைதல், தமிழ்க்கலைகளின் மீட்பு மற்றும் புத்துயிராக்கம், தமிழ் வழிபாடு மற்றும் மெய்யியலில் மீளெழுச்சி மற்றும் புனர்நிர்மாணம் போன்ற பல கட்ட செயல்பாடுகள், ஒவ்வொரு செங்கலாய் இருந்து, நமக்கான இடத்தை இப்புவியில் பெற்றுக் கொடுக்கும். நாம் கேட்டும் தராத அங்கீகாரம், நம்மை நாம் உயர்த்திக் கொள்கையில், தாமே வலிந்து வந்து நம்மைச் சேரும்.

அதுவரை நீளும் இப்பயணத்தில், நமக்கான ஆன்ம பலத்தைப் பெற்றுக் கொள்ள, தொடரோட்டத்தை ஓடும் நம் பாதங்களில் முன்னவர்களின் சுவடுகள் பதிய, இந்த இனவழிப்புக் கால நினைவுகளை ஆழ்ந்து உள்வாங்கிட வேண்டும். உயிர் போவதை விடவும், உரிமைகள் போவதே உண்மையான இழப்பு. இந்த நிமிடம் வரை, நம்மைக் கொல்லாத எதுவொன்றும் நம்மை வலிமைப்படுத்துவது உண்மையாயின், சாவினும் கொடிய, சொல்லொணாக் கொடுமைகளை அனுபவித்த, அனுபவித்துக் கொண்டிருக்கிற, நம் சக தமிழ்மக்களின் மனத்திடம், நமக்கு கலங்கரை விளக்கம் போல வழிகாட்டட்டும்;

முள்ளிவாய்க்கால் மண்ணின் சிவந்த நிறத்துகள்கள், நம் நினைவுப் பரப்பெங்கும் விரியட்டும்;  நிலைகொள்ளாத நம் மனங்கள், நிரந்தரமான அமைதியைத் தேடி ஓடட்டும்; இனி வரும் ஏதோ ஒரு தமிழ்த் தலைமுறை, செங்குத்தாய் நிமிர்ந்தெழ வேண்டி, சாய்ந்த தலைகளின் கோணம் தந்த துயரம் நம்மைத் துரத்தட்டும். அதிலேனும் இந்த சனம் விழித்து உழைக்கட்டும். தமிழினம் இனியேனும் தழைக்கட்டும்! தழைக்கட்டும்!! தழைக்கட்டும்!!!  

திருமதி. விமலினி செந்தில்குமார்,

செய்தித் தொடர்பாளர்,

செந்தமிழர் பாசறை – வளைகுடா.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles