மே 2023
தமிழக அரசியல் களத்தில் ஈழ ஆதரவு - அன்றும் இன்றும்
தமிழீழத்தில் தமிழர்களின் தன்னாட்சி கோரும் விடுதலைப் போராட்டத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டு அரசியல் களத்தில் நின்ற மறுமலர்ச்சி திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை பல்வேறு ஆதரவு மற்றும் கவன ஈர்ப்புப் போராட்டங்களை நடத்தி வந்துள்ளன. இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு சிங்களப் பேரினவாத அரசு நடத்திய மாபெரும் தமிழினப் படுகொலையின்போது, உலகில் தடைசெய்யப்பட்ட இராசயனக் குண்டுகள் மற்றும் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தி, பல்வேறு நாடுகளின் துணையோடு இலட்சக்கணக்கான தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டனர். தமிழ்நாட்டிலிருந்து சில காத தூரங்களில் இருக்கும் ஈழத்தில் நடந்த இந்த மோசமான பேரழிவைப் பற்றியோ, அப்பட்டமான மனித உரிமை மீறல்களைப் பற்றியோ, சிங்கள அரசின் கொடூரமான போர்க்குற்றங்களைப் பற்றியோ தமிழ்நாட்டில் இருந்த பெருவாரியான ஊடகங்கள் பேசாமலிருக்கவும், மீறிப் பேசினாலும் அது இலங்கையில் உள்நாட்டுப் போர் என்ற அளவில் சிறு செய்தியாக மட்டும் காட்டிவிட்டுக் கடந்து செல்லும்படியும் பணித்தது, அன்றைய ஆளும் திமுக .
அத்தகைய ஈவு இரக்கமற்ற கொடுஞ்செயலைப் பற்றிய செய்திகளை தமிழ்நாட்டில் பரவாமல் தடுத்து, அன்றைய காங்கிரஸ் கட்சியைப் பாதுகாத்திட மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, தமிழின விரோத போக்கைக் கடைபிடித்துத் தனது கட்சிக்கு மத்திய அமைச்சரவையில் முக்கிய துறைகளைக் கேட்டுப் பெற்றுக் கொண்டது. குறிப்பாக ஏப்ரல் 27, 2009 அன்று, அன்றைய தமிழ்நாடு அரசின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி போர்நிறுத்தம் செய்யக் கோரி உண்ணாநோன்பு இருப்பதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். இதை மட்டும் ஒரு பரபரப்புச் செய்தியாக மீண்டும் மீண்டும் தமிழக ஊடகங்களைப் பேச வைத்து, ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலை குறித்த செய்திகளைப் பின்னுக்குத் தள்ளி தந்திரமாக மக்களைத் திசைதிருப்பியவர் கருணாநிதி. காலை மெரினா கடற்கரைக்குக் காற்று வாங்கச் சென்றவர், அண்ணா நினைவிடத்திற்குச் சென்று உண்ணாநோன்பு இருக்கப் போவதாக அறிவித்தார். இதனால் அன்று இலங்கைப் போர் குறித்த காணொளிகளைப் பரப்புவதை விட, கருணாநிதியின் உண்ணாநோன்பு நாடகத்தை ஊடகங்கள் நேரலை செய்து கொண்டிருந்தன .
இப்படிச் செய்த கருணாநிதியின் வஞ்சகத்தை அன்றிலிருந்து தொடர்ந்து ஐந்தாறு ஆண்டுகள் மிகக்கடுமையாக விமர்சித்து வந்தவர்களில் மதிமுகவின் வைகோவும், விசிகவின் திருமாவளவனும் மிக முக்கியமானவர்கள் ஆவார்கள்.
அதாவது இருவருமே “ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்கக் காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியுடனும், அதற்குத் துணையாக நின்ற திமுக உடனும் இனிமேல் தங்களது உயிர் உள்ளவரை கூட்டணி வைக்க மாட்டோம்! அப்படி கூட்டணி வைத்தால் எங்களது ஆவி கூட எங்களை மன்னிக்காது!” என்று ஆவேசமாக முழங்கி வந்தனர். 2016 சட்டமன்ற தேர்தல் வரை அதே நிலைப்பாட்டிலும் இருந்தனர். ஆனால் 2016ல் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் மதிமுக, விசிக, தேமுதிக, மார்க்கசீய பொதுவுடைமைக் கட்சி, இந்திய பொதுவுடைமைக் கட்சி ஆகியவை ஒன்றுசேர்ந்து தேர்தலைச் சந்தித்தன. ஆனால் அந்தத் தேர்தலில் அவர்கள் படுதோல்வியை அடைந்த பின், தமிழினப்படுகொலையைக் கண்டித்து வந்த அவர்களின் நிலைப்பாடு மாறத் தொடங்கியது. தங்களது அரசியல் இருப்பினைத் தக்கவைத்திடவும், ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்துக் கொள்ளவும் வேண்டி அந்நாள் வரையிலான ஈழ நிலைப்பாட்டை அவர்கள் மாற்றிக் கொள்ளவேண்டியதாயிற்று.
காங்கிரஸ் கட்சி மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளோடு ஒருபோதும் கூட்டணி வைக்கமாட்டோம் என்று அதுவரை முழங்கியவர்கள், அடுத்து வந்த தேர்தலின்போது வேறுமாதிரி பேசினார்கள். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பது அன்றும் இன்றும் என்றும் மாறாத கோட்பாடு என்பதை மறந்து, தங்களது அற்ப அரசியல் தேவைகளுக்காக, கொண்ட கொள்கையில் இருந்து பின்வாங்கினார்கள். 2019 பாராளுமன்றத் தேர்தலில் எந்த காங்கிரஸ், திமுகவோடு கூட்டணி வைத்தால் தங்களது ஆவி கூட மன்னிக்காது என்றார்களோ, அவர்களுடனே கூட்டணி வைத்தார்கள். இத்தனை ஆண்டுகளாக திமுகவையும், காங்கிரசையும் எதிர்ப்பதாக அவர்கள் ஆடிய நாடகத்துக்கு அவர்களே முற்றுப்புள்ளி இட்டார்கள். கூடுதலாக, தமிழினப்படுகொலைக்கு எதிராக உறுதியான என்றும் மாறா நிலைப்பாட்டைக் கொண்ட நாம் தமிழர் கட்சியை இன்றளவும் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தவறாகக் காட்சிப்படுத்தும் தரம்தாழ்ந்த அரசியலை திமுகவை மகிழ்விக்கும் பொருட்டு செய்து வருகின்றனர்.
நேரடித் தேர்தல் அரசியலில் உள்ளவர்கள் தான், பதவி ஆசைக்காக ஈழம் சார்ந்த தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்கள் என்றால், அரசியல் கட்சியாக இல்லாமல் இயக்க அரசியலில் ஈடுபட்டு மக்கள் நலனுக்கு எதிரான விடயங்களை எதிர்ப்போம் என்று கூறிவரும் திராவிட இயக்கத் தலைவர் கி. வீரமணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன், திராவிட விடுதலை இயக்கத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிட கழகப் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன், மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி போன்றோரும், ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்குக் காரணம் காங்கிரசு – துணை நின்றது திமுக என்று ஒரு காலத்தில் கடுமையாக எதிர்த்து விட்டு, தமிழினப் படுகொலைக்கு உதவிய திமுக – காங்கிரசு கூட்டணியை இன்று ஆதரிப்பது வேடிக்கையானது.
இப்படி நிலைப்பாட்டில் மாற்றம் வந்ததற்குக் காரணமாகச் சிலர், இனப்படுகொலை நடந்து பதினான்கு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது! இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அதையே பேசுவது? என்று தங்களது கொள்கை மாற்றத்துக்கு நியாயம் கற்பிக்கின்றனர். அதாவது இனிமேல் ஈழப்படுகொலை பற்றிப் பேசவேண்டிய அவசியமில்லை என்று பொய்யாகக் கட்டமைத்து, அவ்வாறே மக்களும் நினைப்பதாகப் பேசி தங்களது உறுதியற்ற தன்மையை, தவற்றை மறைக்க விரும்புகின்றனர். சிங்களப் பேரினவாத எதிர்ப்பு நிலையில் இருந்து பின்வாங்கிய அவர்கள், தங்களைப் போலவே நாம் தமிழர் கட்சியினரும் மாற வேண்டும் என்று எண்ணுகிறார்கள் போலும். அவர்களது இந்தக் கீழான எதிர்பார்ப்பைப் பொய்யாக்கியதோடு, இனச்சாவிற்கு நீதி பெற்றுத் தரவும், இந்த மனிதப்பேரவலத்துகுக் காரணமான ஆரிய இந்துத்துவ மற்றும் தமிழரல்லாத திராவிடத்தை எதிர்ப்பதிலும் களத்தில் உறுதியாக நிற்கிறது, நாம் தமிழர் கட்சி. இதைத் தொடர்ந்து கவனிப்பதால் நாம் தமிழருக்குக் கூடிவரும் மக்கள் ஆதரவைக் கண்டு பொறுக்காத பலர், கூலிக்கு வேலை செய்யும் ஆட்களை நியமித்து நாள், வாரம், மாதம் என்ற வகையில் அவர்களுக்குப் பணம் கொடுத்து ஈழப்படுகொலை குறித்தும், நாம் தமிழர் கட்சி குறித்தும் அவதூறு பரப்பி வருகின்றனர். இவர்களுக்கெல்லாம் புரவலராக திமுக செயல்பட்டு வருகிறது என்பது ஊரறிந்த உண்மை.
2009 முதல் 2017 வரை தமிழக அரசியலில் தமிழீழப்படுகொலையின் மனித உரிமை மீறல்களைக் குறித்து வீராப்பாகப் பேசி வந்தவர்களே, இன்று நாம் தமிழர் கட்சியினர் அதை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்று கூசாமல் பொய்யுரைக்கிறார்கள். இதனை வெறும் விமர்சனமாக நம்மால் கடந்து போக முடியாது; போகவும் கூடாது. ஏனெனில் தங்களது தன்னல அரசியல் நோக்கங்களுக்காக நிலைப்பாட்டை மாற்றி கொண்ட இந்த சந்தர்ப்பவாதிகள், வெளிப்படையாகத் தனது ஈழ நிலைப்பாட்டை அறிவித்து, அதில் கிஞ்சித்தும் பின்வாங்காத நாம் தமிழர் கட்சி மீது அவதூறு பரப்பி, அவர்களை அவர்களே அம்பலப்படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள் கருத்துப்படி பார்த்தாலும் கூட இடைப்பட்ட ஐந்தாறு ஆண்டுகளில் ஈழப்படுகொலையை இவர்கள் எதிர்த்தது வந்தது சரியென்றால், அதை இன்றளவும் சமரசமின்றி செய்து வரும் நாம் தமிழர் கட்சி சரியானதைச் செய்கிறது தானே? எனில் குறைசொல்லவோ, கூடிச் சிரிக்கவோ இதில் என்ன இருக்கிறது?
தமிழீழ இனப்படுகொலையை ஆதரித்துப் பேசினால் உலக நாடுகளுக்கு புலம் பெயர்ந்து சென்ற ஈழத்தமிழர்கள் பெருவாரியான நிதி தருவார்கள் என்று கூறும் இவர்கள், 2009 முதல் 2017 வரை அவர்களிடமிருந்து எவ்வளவு தொகை பெற்றார்கள் என்று கூறுவார்களா? இந்த மண்ணின் மைந்தர்கள் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருந்திருந்தால், ஈழப்போருக்கு எதிர்ப்பு வலுத்திருக்கும்; ஈழத்தில் இனப்படுகொலையை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும்; தமிழர் தலைமை இங்கு இல்லாமல் இருந்ததால் தான், இனப்படுகொலையை நேரடியாகத் தடுக்க முடியவில்லை; கொன்றொழிக்க திமுக துணை நின்றதையும் தட்டிக் கேட்க முடியவில்லை. எனவே தமிழர் அல்லாதவர்கள் இங்கு வரலாம்; வாழலாம்; ஆனால் ஆளும் இடத்தில் தமிழர்களே இருக்க வேண்டும் என்பது தான் நாம் பட்டறிந்து கற்ற பாடம். இந்தியாவின் பிற மாநிலங்களில் எல்லாம் அந்த மண்ணைச் சார்ந்தவர்களே ஆட்சியமைத்து நிர்வகிக்கும்போது, தமிழ்நாட்டிலும் தமிழர்களே ஆளவேண்டும் என்ற அடிப்படை அரசியல் உரிமையை மேடைகளிலும், போராட்டங்களிலும் நாம் தமிழர் முழங்கி வருவது எவ்வகையில் தவறாகும்? தமிழர்களிடம் இயல்பாகவே உள்ள ஆரிய எதிர்ப்பினை நமக்கு எதிராகத் திருப்பிவிடவே உச்சபட்ச அவதூறுச் சேறாக, நாம் தமிழர் கட்சியை பாசிச பாசக கட்சியின் பி டீம் என்று மனச்சான்றின்றி திரும்பத் திரும்பக் கூறி பொய்யை உண்மையென்று நிறுவ வீண்முயற்சி செய்து தோற்கிறார்கள்.
தமிழக அரசியல் களத்தில் ஈழத்தில் நடந்த தமிழினப்படுகொலையில், அன்று எதிர்ப்பு நிலைப்பாடும், இன்று அதை நடத்தத் துணை நின்றவர்களோடு கூட்டணி என்ற எதிர்நிலைப்பாடும் எடுக்காமல் அன்றும் இன்றும் இனி என்றும் காங்கிரஸ் மற்றும் திமுகவோடு கூட்டணி அல்ல; எந்த தேசியக் கட்சி, திராவிடக் கட்சியோடும் கூட்டணி இல்லை என்று முன்னறிவித்து, அதைச் செயலிலும் செய்து காட்டி, எந்தவித சமரசமும் இன்றி நின்று களமாடும் ஒரு அரசியல் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே. இது தொடர்பில் எவ்வளவு அரசியல் அழுத்தம் வந்தாலும், ஆட்சி அதிகாரத்தை வைத்து மிரட்டினாலும் அவற்றுக்கெல்லாம் அஞ்சாமலும், பின்வாங்காமலும் தொடர்ந்து 2009 இல் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையில் சிங்கள இனவெறியர்களால் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களைத் தோலுரித்தும், அதை அரங்கேற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஈழத்தமிழ் மக்கள் தன்னாட்சி உரிமையோடு தலைநிமிர்ந்து வாழத் தேவையான அரசியல் தீர்வை எட்டவும் ஐக்கிய நாடுகள் சபையில் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி வாதாடும்.
ஈழத்தில் இலங்கை விடுதலை அடைந்ததில் தொடங்கி, 2009 இல் நடந்த இறுதிகட்டப் போர் வரை திட்டமிட்டுப் பல்லாண்டுகளாகத் தொடர்ந்த தமிழினப் படுகொலையை உலக அரங்கில் உரக்கச் சொல்லி, பலருக்கும் தெரியப்படுத்த வேண்டிய அரசியல் தேவை தமிழ்ப்பேரினத்துக்கு உள்ளது. ஏனெனில் ஐநா தந்திருக்கும் இனவழிப்பு என்ற வரையறைப்படி, ஒரு இனத்தின் சமூகப் பொருளாதார, பண்பாடு, அரசியல் கட்டமைப்புகளை வலிந்து சிதைத்து, சிறிதும் மனிதத்தன்மையின்றி பாடசாலைகள், மருத்துவமனைகள், சரணடைந்த மக்கள் வாழும் முகாம்கள் ஆகியவற்றைத் தேடித்தேடிக் கண்டறிந்து, போர்விமானங்கள் மூலம் குண்டு வீசி கொன்றொழித்த சிங்களப் பேரினவாதிகளைக் கூண்டிலேற்றி, அப்பாவித் தமிழ் மக்களுக்கு நீதி பெற்றுத் தரவேண்டியது தமிழ்ப் பேரினத்தின் தலையாய கடமையாகும். தமிழினப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களை, அடக்குமுறைக்கெதிராகக் கிளர்ந்து, இன்று வரை போராடும் அம்மக்களின் விடுதலை வேட்கைக்கான நியாயத்தைக் கொச்சைப்படுத்தும் ஆரிய திராவிடக் கூட்டத்தின் சூழ்ச்சியை முறியடிப்போம்! கூடி நின்று ஓங்கிக் குரலெழுப்பி குள்ளநரிகளை விரட்டியடிப்போம்!
திரு. இளையராசா முத்தையா,
துணைச்செயலாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.