சூன் 2023
நாளைய தமிழனுக்கு வரலாறு எ(ஏ)து?!
யார் கடந்த காலத்தைக் கட்டுப்படுத்துகிறார்களோ, அவர்கள் தான் எதிர்காலத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள்” என்கிறார், ஆங்கில எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல் அவர்கள்.
நாளைய தமிழனுக்கு எது தமிழனின் உண்மையான வரலாறு என்ற ஐயம் கூட எழலாம்; அதைக் கூட ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால், ஆளுகின்ற திருட்டு திராவிடக் கும்பலால் நாளைய தமிழனுக்கு ஏது வரலாறு? என்ற நிலை வந்துவிடுமோ என்ற அச்சம் நமக்கு வருவதொரு பேரபாயத்தின் சமிக்கை. அந்த அளவுக்கு நமக்கு அடையாளச் சிக்கல்களை ஏற்படுத்தி அலைகழிய வைத்திருக்கின்றன திராவிடக் கட்சிகள். இன்றைய நிகழ்வு – நாளைய வரலாறு; இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். பெரும்பாலும் வரலாறு என்பது மண்ணை ஆட்சி செய்பவர்கள் உருவாக்கி வைத்த பதிவுகளும், அவற்றைப் பள்ளிகளிலே பாடத்தில் படிப்பதும் தான் என வெகுசன மக்களிடம் ஒரு தட்டையான புரிதல் இருக்கிறது.
வென்றவன் சொன்னதே வரலாறு என்பது போல, தமிழ்நாட்டை ஆண்ட, ஆளுகின்ற பிறமொழியாளர்கள் திராவிட மொழிக் குடும்பம், திராவிட நாகரிகம், திராவிட இலக்கியம், திராவிட மாடல், திராவிடக் களஞ்சியம் என எங்கு பார்த்தாலும் திராவிடம் திராவிடம் என்று இல்லாத ஒன்றை இருப்பது போலாக்க முயற்சிக்கிறார்கள். திராவிடம் என்னும் காரிருளை வைத்து தமிழம் என்னும் கதிரவனை மறைக்கப் பார்க்கிறார்கள். முழுக்கவுமே திராவிடம் உள்ளீடற்ற வெறும் கூடு தானென்றாலும், அதிகாரம் அவர்களிடத்தில் இருப்பதனால், அது தரும் வலிமையினால் அவர்கள் இதுவரை செய்ததையும், இனி செய்யப் போவதையும் கருதி, நாம் அச்சம் கொள்ளத் தேவை இருக்கிறது.
நாடு விடுதலை அடைந்ததிலிருந்து, இந்தியாவை ஆட்சி செய்கின்ற ஆரிய அரசுகளும், தமிழ்நாட்டை ஆட்சி செய்கின்ற திராவிட அரசுகளும் தமிழரின் வரலாற்று ஆய்வுக்குப் பெரும் தடைகளாகத்தான் இருந்திருக்கின்றன. அண்மையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கீழடி ஆய்வு எவ்வளவு இடையூறுகளைத் தாண்டிச் சாத்தியப்பட்டது என்பது நமக்குத் தெரியும். இடையறாது இயங்கிய சில நேர்மையான அதிகாரிகளுக்கும், நாம் தமிழர் கட்சி போன்ற பல தன்னலமற்ற இயக்கங்களுக்கும், பல தமிழ் பற்றாளர்களின் உளப்பூர்வமான போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி தான் அது. இத்தனைக்குப் பிறகும், ஆளும் வர்க்கத்தினர் இதனை திராவிட நாகரிகம் என்றுதான் பதிவு செய்கின்றார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
ஒன்றிய அரசு ஏன் தமிழர்களின் தொல்லியல் ஆய்வுகளைப் பெரும்பாலும் விரும்புவதில்லை? சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், தமிழர்களின் நாகரிகத்துக்கு முன்னால் இந்தியாவின் நாகரீகம் என்ற கற்பிதம் காணாமல் போய்விடும். தமிழர்களின் உயரிய பண்பாட்டுக்கு முன்னால் இந்தியப் பண்பாடு எடுபடாமல் போய்விடும் என்ற அச்சம் அவர்களுக்குள் இருக்கிறது. ஏனென்றால் நம்மைப் பற்றிய வரலாறு முழுவதும் தெரிந்தவர்கள் தான் அவர்களை இயக்குகின்றனர். தமிழர்களின் உண்மையான வரலாறு அனைத்தும் வெளிவந்து விடக்கூடாது என்பதற்காக ஆரியமும், திராவிடமும் ஆயிரம் தடைகளை உருவாக்குகிறது. ஆர்எஸ்எஸ் எனும் நாக்பூர் தலைமை உள்ளிட்ட அதன் துணை அமைப்புகளும், அவற்றுக்கு அடிவருடி அடிமைகளாக இருக்கும் திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகளும் நமக்குத் தரும் இன்னல்களைச் சொல்லி மாளாது.
தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற வரலாற்றுப் புதையல்களான கல்வெட்டுக்கள், சிலைகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை ஒன்றியத் தொல்லியல் துறை ஏன் தமிழகத்தில் பாதுகாத்து வைக்காமல் பக்கத்து மாநிலத்தில் பாதுகாத்து வைக்கிறார்கள்? இதை ஏன் தமிழக தொல்லியல் துறை கேள்வி கேட்பதில்லை? கர்நாடகாவோ காவிரி நீர் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் நம்மைப் பரம எதிரியாக நினைக்கிறது! எதிரியின் வீட்டிற்குச் சென்று எனது பொருளைப் பத்திரமாக பாதுகாத்து வைத்திருங்கள் என்று எவனாவது கூறுவானா!?
வரலாற்றைத் தெளிவாக எழுத உதவும் முக்கியமான இந்த ஆதாரங்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் கர்நாடக மாநிலத்திற்கு எடுத்துச் சென்று என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லை. பல கல்வெட்டுக்கள் படிக்கப்படாமலும், படியெடுக்கப்படாமலுமே அழிக்கப்படுகின்றன என்றும் செய்திகள் வருகின்றன. இந்தியாவில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் 60% கல்வெட்டுக்கள் தமிழ்க் கல்வெட்டுகள்; அப்படி இருக்கையில் ஏன் திராவிடக் கல்வெட்டுகளை ஆய்வு செய்கிறோம் என்று சொல்கிறீர்கள்? என நீதிமன்றமே கேள்வி எழுப்பியது. கர்நாடக மாநிலத்தில் இருக்கின்ற தமிழ்க் கல்வெட்டுகள் அனைத்தையும் தமிழகத்திற்குக் கொண்டு வந்து பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல தீர்ப்பையும் கொடுத்தது. ஆனால் திருட்டு ஆரிய, திராவிடக் கூட்டம் இன்று வரை நீதிமன்றத்தின் தீர்ப்பை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை.
தமிழ்நாடு தொல்லியல் துறை என்ற ஒன்று இருந்தது; தற்பொழுதும் இருக்கிறது. இது திராவிட ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டுக்கு என்ன செய்தது? தமிழர்களின் வரலாறு புதைந்திருக்கும் இடங்களை எல்லாம் வெளியே வரவிடாமல் மறைத்து வைத்திருந்தது. குறிப்பாக திரு.நாகசாமி என்பவர் தொல்லியல் துறை இயக்குனராக திராவிடம் பேசுவோரால் திட்டமிட்டு நியமனம் செய்யப்பட்டார். இவர் 1966 முதல் 1988 முடிய தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனராக இருந்தவர்; சமஸ்கிருதத்தில் பட்டம் பெற்றவர் என்பதோடு, எல்லாவற்றையும் சமஸ்கிருதக் கண்ணாடி போட்டுக் கொண்டே பார்க்கக் கூடியவர்; வருணாசிரமத்தைப் பின்பற்றும் ஆரியக் கூட்டத்தினரிடம் ஆலோசனை கேட்டுவிட்டே அனைத்தையும் செய்பவர்.
இவருடைய காலத்தில் தான் மதுரை திருமலை நாயக்கர் மஹால் சீரமைக்கப்பட்டது மற்றும் கட்டபொம்மன் இருந்த இடம் புனரமைக்கப்பட்டது. மேலும் பல வரலாற்று இடங்களைப் பராமரித்து பாதுகாத்து தமிழகத்திற்குக் கொடுத்தார். ஆனால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வரலாற்று நாயகர்கள் வாழ்ந்த இடங்களைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் தவறிவிட்டார். மேலும் தமிழ் மொழி குறித்த பல ஆய்வுகளையும், அந்த ஆய்வுகள் கூறும் வரலாற்று உண்மைகளையும் வெளிவரவிடாமல் தடுத்து மறைத்தார்.
நாகசாமி தமிழ் மொழி, தமிழ் வரலாறு, திருக்குறள் போன்றவற்றின் மீது மிகுதியான திரிபுகளை மேற்கொண்டவர். இதற்கு எடுத்துக்காட்டாக தமிழ் – சமஸ்கிருதத்தின் கண்ணாடி” (The mirror – Tamil and Sanskrit) என்ற பெயரில் இவர் எழுதிய நூலில், தமிழின் எழுத்து முறை பிராமணர்களிடமிருந்து பெறப்பட்டது என்றும் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, சிலப்பதிகாரம் முதலியவை சமசுகிருத நூல்களைப் பார்த்து எழுதப்பட்டவை என்றும் கூறியுள்ளார். மேலும் செம்மொழிக்கான தகுதிகளாக வரையறை செய்யப்பட்டுள்ளவை எதுவும் தமிழுக்கு இல்லை என்றும், தொல்காப்பிய நூல் சமசுகிருதத்திலிருந்து வந்தது என்றும், தமிழ் சமசுகிருதத்திலிருந்து கடன் பெற்றுதான் செம்மொழியாக வளர்ந்தது என்றெல்லாம் கூறியுள்ளார். இவர் செய்த மற்றொரு திரிபானது வேதங்களின் சாரம் – திருக்குறள் (Tirukkural – an Abridgement of Sastras) என்று இவரால் எழுதப்பட்ட ஆங்கில நூலுக்கு, இவர் எழுதிய விளக்கங்களையும், திரிபு வேலைகளையும் கண்டு தமிழ் அறிஞர்கள் அதிர்ச்சியடைந்து, கண்டனங்களை வெளியிட்டனர்.
இந்தத் திராவிடர்களின் ஆட்சி இனியும் தொடருமே யானால், தமிழர்களின் வரலாறு என்னவென்று கிஞ்சித்தும் தெரியாத தமிழர்களைத் தமிழர்களின் தாய்நிலத்தில் உருவாக்கி விடுவார்கள். பல திட்டங்கள் தீட்டி மக்களை பொழுதுபோக்குக்கும், போதைக்கும் மடை மாற்றி கிட்டத்தட்ட இரு தலைமுறைகளை தமிழுணர்வு மழுங்கியவர்களாக ஏற்கனவே மாற்றி வைத்திருப்பவர்கள் தான் இவர்கள். திராவிடம் தான் இங்கு எல்லாம் செய்தது; திராவிடத்தின் வருகைக்குப் பின் தான் தமிழினம் எழுச்சி கொண்டது எனத் தொல்தமிழரின் ஆயிரமாயிரம் ஆண்டு வரலாற்றை வெறும் கடந்த நூறாண்டுளுக்குள் சுருக்கும் சூழ்ச்சி வலைக்குள், திராவிடம் மிகத்தெளிவாக தமிழர்களைத் தள்ளி இறுக்கி வைத்திருக்கிறது. தமிழராகிய நாம் விழித்துக் கொண்டு அவர்களின் இந்த மாய வலையை அறுத்து வெளிவருவதையும், உண்மையான நம் வரலாற்றை வெளிக்கொணர்வதையும் நமது இலக்காகக் கொண்டு பயணிக்க வேண்டும்.
தற்கால இளைஞர்களுக்குத் தமிழர்களின் உண்மையான வரலாற்றைத் தொடர்ந்து கற்பிக்கும் ஆசானாக இருக்கும் செந்தமிழன் சீமான் அவர்கள், தமிழ்த்தேசியத் தத்துவம் தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும்பொழுது தான் தமிழ் மக்களிடத்தில் தமிழர்களின் உண்மையான வரலாறு சென்று சேரும் என்கிறார். ஒரு தமிழர் ஆளும் அரசாக அப்பணிகள் வெகுவிரைவில் தொடங்கப்பட நாம் ஆவன செய்தல் அவசியம் .
“உன்னைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்த போதும் நீ உறக்கத்தில் இருந்தாய் என்றால்; அதற்கு பெயர் உறக்கம் அன்று; உயிரற்ற பிணம்!” உடனே விழி தமிழா! உனக்கான உரிமையைப் பெறுவதற்கும், அழிக்கப்படும் உனது வளங்களைக் காப் பாற்றுவதற்கும், சாலைக்கு ஒரு சாராயக்கடையை திறந்து தமிழ் சமுதாயத்திற்குச் சரித்திரக் குறையை நல்கியதோடு, தமிழரை எல்லாத் தளங்களிலும் வேட்டையாடிப் பிழைக்கும் இந்த வல்லூறுக் கூட்டத்தை விரட்டுவோம்; நம்முடைய வரலாற்றை நாளைய தலைமுறை நம்பிக்கையோடு படிக்கும்படி செய்வோம்; இன்னும் சிறப்பான வரலாற்றைப் படைத்துப் பாரினில் தமிழின் கொடியை உயரப் பறக்க வைப்போம்!!!
திரு. க.நாகநாதன்.
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – ஓமன்.