spot_img

பற்றி எரியும் மணிப்பூர் மாநிலமும் மனச்சான்றற்ற பாஜகவின் அரசியலும்!

சூலை 2023

பற்றி எரியும் மணிப்பூர் மாநிலமும் மனச்சான்றற்ற பாஜகவின் அரசியலும்!

கடந்த மே மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கிய மணிப்பூர் கலவரம் இரண்டு மாதங்கள் கழித்து சற்று கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு போர் நடந்து முடிந்தது போன்று மணிப்பூர் மாநிலம் காட்சியளிக்கிறது.  நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்; ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.  50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்குச் சென்றுள்ளனர். வீடுகள், விவசாய நிலங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் என ஏராளமான சொத்துக்கள் வன்முறையால் நெருப்பிற்கு இரையாக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பதட்டமான சூழலே இருந்து வரும் நிலையில் மணிப்பூர் மக்களிடையே அமைதியான வாழ்க்கை மீண்டும் திரும்புமா என்ற ஏக்கம்தான் நிலவுகிறது.

மணிப்பூரின் மக்கள் தொகை தோராயமாக 35 லட்சம். இங்கு மெய்தேய், நாகா மற்றும் குக்கி என்று மூன்று பெரிய இனக்குழுவினர் வாழ்கின்றனர். வைணவ சடங்குகளைக் கைக்கொண்ட மெய்தேய் இன மக்கள் பெரும்பாலும் இந்து மதத்தை சார்ந்தவர்களாகவும், சிறிதளவு இஸ்லாத்தைப் பின்பற்றுவோருமாகவும் இருக்கின்றனர். மணிப்பூரின் மொத்த மக்கள் தொகையில் 64 சதவீதம் இருக்கும் பெரும்பான்மையினர் மெய்தேய் இனத்தைச் சார்ந்தவர்கள். மேலும் கல்வி, எழுத்தறிவு மற்றும் பொருளாதார ரீதியாக மற்ற வகுப்பினரை விட முன்னேறிய வகுப்பாகவே மெய்தேய் இன மக்கள் இருக்கிறார்கள்.

நாகர்கள் மற்றும் குக்கி இன மக்கள் பெரும்பாலும் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்கின்றார்கள். மணிப்பூரின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையான மொத்தம் 60 பேரில் 40 பேர் மெய்தேய் சமூகத்தைச் சார்ந்தவர்கள்; மீதமுள்ள 20 பேர் நாகா மற்றும் குக்கி சமூகத்தை சேர்ந்தவர்கள். மணிப்பூரின் முதலமைச்சராக பதவி வகித்த 12 பேரில் இருவர் மட்டுமே பட்டியல் சாதியை சார்ந்தவர்கள். மணிப்பூரின் புவியியல் அமைப்பு ஒரு கால்பந்து மைதானத்தைப் போல உள்ளது.  தலைநகரான இம்பால் பள்ளத்தாக்கு அந்த கால்பந்து மைதானத்திலுள்ள விளையாடும் இடத்தைப் போன்றுள்ளது.  விளையாட்டு மைதானத்தின் நான்கு புறமும் உள்ள பார்வையாளர்கள் அமரும் இடங்களை போன்று இந்த மாநிலத்தைச் சுற்றிலும் மலைப்பாங்கான பகுதி உள்ளது. 

இம்பால் பள்ளத்தாக்கின் 10 சதவீத இடத்திலேயே மெய்தேய் சமூகத்தினர் பெரும்பாலான எண்ணிக்கையில் வாழ்கின்றனர். அதே நேரம் மலைப்பாங்கான பகுதிகளின் 90 சதவீத நிலங்கள் குக்கி மற்றும் நாகா இனப் பழங்குடியினர் வசமுள்ளது. பழங்குடியினரின் சமூகப் பண்பாட்டுப் பொருளாதார உரிமைகளைக் காக்கும் பொருட்டு, மெய்தேய் இன மக்கள் பழங்குடியினருக்குச் சொந்தமான நிலங்களை வாங்க முடியாது என்ற சட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது. 

மணிப்பூர் மாநிலத்தில் 34 பழங்குடியினர் வாழ்ந்தாலும் இவர்களில் பெரும்பாலானவர்கள் குக்கி மற்றும் நாகா இனத்தை சார்ந்தவர்கள். ஆனால் மாநிலத்தில் பெரும்பான்மைச் சமூகமாக அதாவது 64 சதவீத மக்கள் தொகை கொண்ட மெய்தேய் இனச் சமூகம், தங்களையும் பழங்குடியினர் வகுப்பில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 10 ஆண்டுகளாகப் போராடி வந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த மணிப்பூர் உயர்நீதிமன்றம், ஏப்ரல் 19, 2023 அன்று, தனது உத்தரவில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் வகுப்பில் மெய்தேய் இன மக்களையும் சேர்ப்பது பற்றி நான்கு வாரங்களில் பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இது அங்குள்ள பழங்குடியின மக்களான குக்கி இனத்தவருக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் உண்டாக்கியது‌.

உயர் நீதிமன்றத்தின்  ஆணைக்கு எதிராக, தலைநகர் இம்பாலில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுராசந்த்பூர் மாவட்டத்தில் பழங்குடியின மாணவர் சங்கம் “ஆதிவாசி ஏக்தா மார்ச்” என்ற பெயரில் பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த பேரணியில் தான் தொடர் வன்முறைக்கான முதல் அத்தியாயம் எழுதப்பட்டது. இந்தப் பேரணியில் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்களுக்கு இடையே மோதல் வெடித்து, அந்தக் கலவரம் காட்டுத்தீ போல் பரவி மாநிலம் முழுவதும் வன்முறைக் காடாக மாற வித்திட்டது. மெய்தேய் சமூகத்தை ஒரு பட்டியலினப் பழங்குடியாக அறிவிப்பதை எதிர்க்கும் பல்வேறு பழங்குடியினரில், குக்கி  இனக்குழு மக்கள் முக்கியமானவர்கள்.

மணிப்பூரின் முக்கிய மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி பழங்குடியினரின்  மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதமாகும். ஏற்கனவே பொருளாதாரத்திலும், கல்வியிலும் உயர்ந்த சமூகமாக இருக்கும் மெய்தேய் இன மக்களை பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் வகுப்பில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்கினால், அந்த சமூகத்தைச் சார்ந்த பெரும்பாலானோர் மேலும் பயனடைவார்கள். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று உருவாக்கப்பட்ட இட ஒதுக்கீடு தவறாகப் பயன்படுத்தப்பட்டு, பழங்குடியின மக்களுக்கு கிடைக்கும் அரசு வேலை, அரசியல் அதிகாரம், கல்வி மற்ற பிற வாய்ப்புகளில் உள்ள இட ஒதுக்கீடு பறி போய்விடும் என்று அச்சம் தெரிவிக்கிறார்கள் குக்கி இன மக்கள். மேலும் மேய்தேய் சமூகம் ஏற்கனவே பிற பட்டியலின சமூகங்களுடன் பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பெற்றுள்ளது என்றும் அவர்கள் ஒருபோதும் பழங்குடியினர் அல்ல எனவே எஸ்சி மற்றும் ஓபிசி வகுப்பினருக்கு கிடைக்கும் இட ஒதுக்கீட்டின் பலனையே பெற முடியும் என்று குக்கி சமூகம் தன் வாதத்தைத் தீர்க்கமாக முன்வைக்கிறது. 

மிக முக்கியமாக மேய்தேய் சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கினால் அது பிற பழங்குடியினர் வசமிருக்கும் நிலங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும், பின்னாளில் ஒரு மிகப்பெரிய இன அழிப்புக்கு வித்திடும் என்றும் அஞ்சுகிறார்கள் குக்கி இன மக்கள். ஆனால் மெய்தேய் இன மக்கள் தங்கள் தரப்பு வாதத்தை முன் வைக்கும் போது 1949 இல் மணிப்பூர் இந்தியாவுடன் இணைவதற்கு முன்பு தாங்கள் ஒரு பட்டியலின பழங்குடி மக்கள் என்ற அந்தஸ்தில் இருந்ததாகவும் ஆனால் இந்தியாவிற்குள் இணைக்கப்பட்ட பின்பே தங்கள் இனத்திற்கு அந்த உரிமை மறுக்கப்பட்டது என்றும் கூறுகின்றனர். மேலும் மியான்மர் மற்றும் வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளிலிருந்து வரும் பழங்குடியினர் மணிப்பூரில் சட்டவிரோதமாக குடியேறுவதால் மேய்தேய் சமூகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றார்கள். மணிப்பூரின் பெரும்பான்மை மக்களாக வாழும் நாங்கள், மாநிலத்தின் பெரும்பான்மை பகுதிகளாக உள்ள மலைப் பகுதிகளுக்குச் செல்ல முடியாது என்றும் ஆனால் குக்கி மற்றும் இதர பழங்குடியினர் இம்பாலில் வந்து எங்களோடு வாழ முடியும் என்றும் கூறுகிறார்கள் மெய்தேய் சமூகத்தினர்.

எல்லா வன்முறை கலவரங்களுக்கும் பின்னாலும் பிரதான காரணமாக ஒன்று இருக்கும்; அதுபோல மறைமுகக் காரணங்கள் பல இருக்கலாம். வெற்றி தோல்விகளை மட்டுமே முன்னிறுத்திச் செய்யப்படும் அரசியல் சதுரங்கத்தில் மக்கள் பகடைக்காய்களாகக் கூட பயன்படுத்தப்படும் சூழல் தான் இங்குள்ளது.  இரண்டு மாத காலம் நடந்த வன்முறைகளைத் தடுக்க ஏன் இந்திய ஒன்றியத்தையும், மணிப்பூர் மாநிலத்தையும் ஆளும் பாரதிய ஜனதா அரசுகளால் இயலவில்லை என்ற கேள்விக்கு அவர்களின் அரசியல் இலாப நட்டக் கணக்குகள் காரணமாக இருக்குமோ என்ற ஐயம் இயல்பாகவே எழுகிறது.

இரண்டு இனக்குழுக்களின் போராட்டமாகப் பார்க்கப்பட்டாலும் இது இந்து மதத்தை பின்பற்றும் பெரும்பான்மை மக்களுக்கும் மற்றும் கிறிஸ்தவத்தை பின்பற்றும் சிறுபான்மை மக்களுக்கும் இடையே நடந்த மதப் போராட்டமாகவும் தெரிகிறது. இந்தியாவில் எங்கு மதப் போராட்டங்கள் நடந்தாலும் அதன் தொடக்கம் எங்கிருந்து உருவாகும் என்பதை இந்திய அரசியலை மேலோட்டமாக தெரிந்தவர்களே புரிந்து கொள்ளலாம். கலவரம் தொடங்கி உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் போது கர்நாடகத்தில் தெருத்தெருவாக சென்று வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்கள் இந்திய ஒன்றியத்தின் பிரதமரும், உள்துறை அமைச்சரும். கர்நாடகத் தேர்தல் முடிந்து ஒரு வாரம் கழித்த பின்பே மணிப்பூர் சென்று கலவர நிலவரத்தை பார்வையிட்டார் உள்துறை அமைச்சர்.

மணிப்பூர் மாநிலத்தைச் சார்ந்த பத்து எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியைச் சந்திக்க காத்திருப்பதாகவும் ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். தான் பிரதமராகப் பதவி வகிக்கும் நாட்டில், ஒரு மாநிலத்தில் நடக்கும் கலவரத்தைப் பற்றி வாயைக் கூட திறக்காத பிரதமர் மோடி அவர்கள், அமெரிக்க சுற்றுப்பயணத்தில்  ரஷ்யாவும், உக்ரைனும் தங்கள் சிக்கல்களை பேச்சு வார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தது முரண்களின் உச்சம். மணிப்பூர் கலவரங்கள் பற்றி ஊடகங்களில் பேசிய பேராசிரியை நிக்கொம்பம் ஸ்ரீமா “மக்களே தங்களை தற்காத்துக் கொள்ளும்படி அரசாங்கம் விட்டுவிட்டது. குக்கி மற்றும் மெய்தேய் ஆகிய இரு சமூகத்தினரும் அரசாங்கம் தங்களுக்காக எதையும் செய்யாததால், தங்களைத் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதன் காரணமாகவே வன்முறையைச் சமாளிக்க  வன்முறையே தீர்வு என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.” என்றார்.

குக்கி மற்றும் மெய்தேய் இன மக்களிடம் நீண்ட காலமாக வேறுபாடுகள் இருந்த போதிலும் அவர்கள் மணிப்பூரில் அமைதியாகவும் நிம்மதியாகவுமே இதுவரை வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் எந்த ஒரு வர்க்கக் கலவரத்தையோ அல்லது மதக்கலவரத்தையோ கண்டிராத மணிப்பூர் இன்று பற்றி எரிவது வியப்பானதுதான். அமெரிக்காவின் சுற்றுப்பயணத்தில் இந்தியாவில் சிறுபான்மையினர் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் வன்முறைகளைப் பற்றி, ஒரு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி “இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு; அங்கு ஜனநாயகத்தின் அனைத்து மதிப்பீடுகளும் பின்பற்றப்பட்டே வருகிறது” என்றார்.

உண்மையில் இந்தியாவில் ஜனநாயகத்தின் மதிப்பீடுகள் மதிக்கப்பட்டு, பின்பற்றப்பட்டால் நமக்கு மகிழ்ச்சிதான். இந்தியாவின் எல்லையோரத்தில் சீனாவுக்கு மிக அருகாமையில் உள்ள ஒரு மாநிலத்தில் நடக்கும் கலவரம் இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்குக்கும் மிகவும் ஆபத்தானது. ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு பேச்சுவார்த்தையின் மூலம் நிரந்தர தீர்வை காண்பதே நம்பிக்கையை இழந்து அச்சத்துடன் காணப்படும் இருதரப்பைச் சார்ந்த மக்களுக்கு நல்லது. ஏனெனில் உலகத்தின் எந்த பகுதியில் வன்முறைகள் நிகழ்ந்தாலும் பாதிப்புக்குள்ளாவது ஏழைகளும், விளிம்பு நிலை மக்களும் தானே!

திரு. அருண் தெலஸ்போர்,

செய்தித் தொடர்பாளர்,

செந்தமிழர் பாசறை – வளைகுடா.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles