சூலை 2023
பட்டினப்பாலை
(பாடல் 195 – 220/301)
நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும்
ஏமாப்ப இனிது துஞ்சி
கிளை கலித்து பகை பேணாது
வலைஞர் முன்றில் மீன் பிறழவும்
விலைஞர் குரம்பை மா ஈண்டவும்
கொலை கடிந்தும் களவு நீக்கியும்
அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும்
நல் ஆனொடு பகடு ஓம்பியும்
நால் மறையோர் புகழ் பரப்பியும்
பண்ணியம் அட்டியும் பசு பதம் கொடுத்தும்
புண்ணியம் முட்டா தண் நிழல் வாழ்க்கை
கொடு மேழி நசை உழவர்
நெடு நுகத்து பகல் போல
நடுவு நின்ற நல் நெஞ்சினோர்
வடு அஞ்சி வாய் மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள்வதூஉம் மிகை கொளாது கொடுப்பதூம் குறை கொடாது
பல் பண்டம் பகர்ந்து வீசும்
தொல் கொண்டி துவன்று இருக்கை
பல் ஆயமொடு பதி பழகி
வேறு வேறு உயர்ந்த முதுவாய் ஒக்கல்
சாறு அயர் மூதூர் சென்று தொக்கு ஆங்கு
மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்து
புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்
முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
வார் இரும் கூந்தல் வயங்கு இழை ஒழிய
வாரேன் வாழிய நெஞ்சே கூர் உகிர்

பொருளுரை:
புகார் துறைமுகத்திலும் தெருக்களிலும் தமக்குப் பகைவர் இவர் என்ற அச்சமின்றி, மக்கள் இனிது உறங்குவர். வலைஞர்களின் முன்றில்களில் மீன்கள் நிரம்ப இருக்கும். விலைஞர்கள் இல்லங்களில் ஆடு மற்றும் கோழி போன்ற விலங்குகள் அவர்கள் விற்பனை செய்ய ஏதுவாக நிறைந்து இருக்கும். களவும் கொலையும் அற்று, சான்றோர்களைப் போற்றியும் மற்றும் நான்மறை புகழ் பரப்பியும் , ஆக்களோடு எருதுகளையும் பாதுகாத்தும், தம்மிடம் வருகின்ற விருந்தினர்க்குப் பல பண்டங்களை வழங்கியும், இனிய மொழி கூறி அறத்துடன் மக்கள் வாழ்வர்.
உழவர் மக்கள் உழுகின்ற ஏர்க் கலப்பையின் நடுப்பகுதியைப் போன்று நடுவுநிலை மாறாது, அளவு குன்றியோ மிகாமலோ துல்லியமாகப் பண்டங்களை வணிகர்கள் விற்பர். பல தேயத்தின் பல மொழி பேசும் சிறந்த அறிவு கொண்ட மக்கள், இணக்கத்துடன் உரையாடி மகிழ்ந்து திருவிழாவிற்குக் கூடுவதைப் போன்று திரளும் தன்மையுடையது புகார்நகரம். இத்தகைய சிறப்பு வாய்ந்த புகார் நகரே கிட்டினாலும் என் நெஞ்சம் நிறைந்த, நீண்ட கூந்தலுடைய என் தலைவியை நீங்கிச் செல்லமாட்டேன் என்றான் தலைவன்.
திரு. மறைமலை வேலனார்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.