சூலை 2023
சவூதி அரேபியாவின் செந்தமிழர் பாசறை உறவுகளோடு ஒரு சந்திப்பு
மணலும் மணல் சார்ந்த அழகிய பாலை நிலங்கள்…
பாலை நிலத்தின் புட்களை மேய்ந்திடும் ஒட்டகங்கள்….
பத்து வயதில் எனக்கு பாலை நிலத்தின் மீது இருந்த அலாதி பிரியம்…
மனதுக்குள் இனம் புரியாத மகிழ்வோடு தொடங்கியது கனவுகள் நனவாக எனது முதல் அயல்நாட்டுப் பயணம் சவுதி அரேபியா நோக்கி…
தாய்மொழி தமிழ் மீதும், தமிழ் நிலத்தின் மேலும் தீராத பற்றுக் கொண்டு வாய் மொழியாய் மட்டுமின்றி, வல்ல வினை வழியாக களத்திலே செயல்பாடுகளை நிகழ்த்தி வரும் தமிழ்த்தேசியக் களத்தின் வலிமை மிக்க ஆளுமையாக நிற்கும் அண்ணன் சீமான் அவர்கள் தான், இந்த வாய்ப்பை எனக்கு வழங்கினார்…
நமது முன்னவர்கள் விட்டுச் சென்ற கடமையைச் செய்து, எளிய பிள்ளைகளுக்குத் தமிழ்த்தேசிய அரசியலைக் கற்றுக் கொடுத்து வலிமைப்படுத்தும் பேராசான் … தமிழ் மண்ணிலே தமிழ்த் தேசியக் கருத்துக்களை விதைத்த பலருக்கு மத்தியில் களத்திலே நிற்கும் புரட்சியாளன் … அனைவரும் அன்பு கொண்டு நேசிக்கும் அண்ணன்…. என்னைப் போன்ற எளிய பிள்ளைகளை , வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து உயரத்தில் ஏற்றி அழகு பார்ப்பதால் ஆகச் சிறந்த புரட்சியாளராக உயர்ந்து நிற்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்….
கட்சிக் கட்டமைப்பின் ஒழுங்கமைவு சீர்மையோடு *செந்தமிழர் பாசறை* உறவுகள், தலைமையின் கட்டளைக்கு ஏற்ப என்னை அணுகிய விதம் முதலில் எனக்குள் இனம் புரியாத மகிழ்வை ஏற்படுத்தியது…
நுழைவு இசைவு எனக்குக் கிடைக்க செந்தமிழர் பாசறையின் பொறுப்பாளர்கள் இணையத்தில் நுழையாத இடமில்லை…
இருந்தும் இசைவு கிடைக்கவில்லை…
பொறுப்பாளர்கள் விட்டு விடவும் தயாராக இல்லை….
போட்ட திட்டத்தில் மாற்றங்கள்…. ஆனால் திட்டமிட்டபடி ஜூன் 29, 30 ஜூலை 1 நிகழ்வுகளில் ஏதும் மாற்றங்கள் இல்லை…
எடுத்த இலக்கில் வெற்றி கண்ட செந்தமிழர் பாசறையின் தீர மிக்க செயல் வீரர்கள்…
*ஒரு நாள் செல்லலாம், இரு நாள் செல்லலாம், பல நாள் பயின்று பலரோடு செல்லினும் தலை நாள் போன்ற விருப்பினன் மாதோ* என்ற ஔவைப் பாட்டியின் வரிகளின் உண்மை அன்பை அனைத்து நிலைகளிலும் நானும் உணர்ந்தேன் *செந்தமிழர் பாசறை மூலமாக*…
மிகச் சரியான திட்டமிடல்கள், பொறுப்பாளர்களின் நேர்த்தியான உரையாடல்கள், அறிவுத்தளத்தில் சிறந்த மூத்தவர்கள், தன்னை முன்னிலைப்படுத்தாத பொறுப்பாளர்கள், சரியான நேரத்தில் மிகச் சிறப்பாக முன்னெடுத்த தமாம், ரியாத் , ஜித்தா மண்டல கூட்டங்கள் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன்…
சவூதியில் செந்தமிழர் பாசறைக்கு அடித்தளமிட்ட சில அன்பு உறவுகள் தற்போது உயிரோடு இல்லை என்றாலும், அவர்கள் நம்மை ஆற்றலாக மாறி வழி நடத்துவார்கள் என்று நினைக்கும் போதே நம் கண்களிலும் நம்மை அறியாமல் கண்ணீர் …
செந்தமிழர் பாசறையின் ஒவ்வொரு பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளின் பெயர்களைத் தனிப்பட்ட முறையில் சொல்லிச் சிறப்பைக் குறிப்பிட்டுச் சொல்ல தற்போது இங்கு முடியவில்லை .. ஆனால் நாம் தமிழர் தத்துவ, சித்தாந்தப் புரிதலோடு அண்ணன் சீமான் அவர்களின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு செயல்படும் உறவுகளின் ஈடு இணையற்ற உழைப்பும், இலட்சிய உறுதியும் நிச்சயம் கால ஓட்டத்தின் வரலாற்றில் பதிவு செய்யப்படும்…
நமது நிகழ்வுகளுக்கு இடையிலே சவூதி நாட்டின் சில பதிவுகள் என்னுள் பதிந்தன…
காலத்தால் விழுந்து விடாமல் ஞாலத்திலே மக்கள் நன்றாய் வாழ அறிவியலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி மக்களின் நிகழ்காலத்திற்குத் தேவையான தடையில்லா மின்சாரத் தேவையை நிறைவு செய்யும் தொழில்நுட்ப அறிவு கண்டு வியந்தேன்…
நாகரீகம் என்ற பெயரில் நற்பண்புகள் சிதையாமல் பெண்களுக்கான அனைத்து உரிமைகளையும் ஆண்களுக்கு நிகராக பல நிலைகளில் வழங்கியுள்ளது கண்டு பெருமை அடைந்தேன்…

பாலை நில மண்ணிலே வருடத்தில் ஏதேனும் சில நாள் மழை பெய்யலாம்.. ஆனால் சுற்றுச்சூழலைக் காக்க மரங்கள் தேவை என்று நமது உறவுகள் வேப்ப மரங்களை நட்டு வளர்த்து வந்திருப்பது கண்டேன் … மனதிற்குள் அளவில்லா ஆனந்தம்… பொருள் தேடச் சென்ற இடத்தில் , வாழ்வதற்கு இடம் கொடுத்த மண்ணிலே நன்றிக் கடனாக மண்ணை வளமாக்கும் தமிழனின் மாண்பு…
நீரைக் காய்ச்சிட நெருப்பு உதவும்… நெருப்பை அவித்திட நீர் உதவும்… சூரிய நெருப்பு சுட்டெரிக்கும் நீரே இல்லா பாலைநில மண்ணில் மக்கள் மேல் கொண்ட அன்பினால் மாண்புமிகு அரசர் சல்மான் அவர்களும் நீர் மேலாண்மையைக் கையாண்டு மக்கள் தன்னிறைவடையும் வகையிலே மக்களுக்குத் தூய குடிநீர் கிடைக்க வழி வகை செய்திருப்பது ஆச்சரியத்தில் ஆழ்த்தியது…
மண்ணின் சுற்றுப்புறத் தூய்மையும் , மக்களின் ஒழுக்கமும், இஸ்லாமியச் சொந்தங்களின் உதவும் மனப்பான்மையும் எனக்குள் பெருமை உணர்வை ஏற்படுத்தின.
சவூதி மண்ணிலே எங்கு காணினும் தங்களின் தாய் மொழியாம் அரபு மொழியும், ஆங்காங்கு சில இடங்களில் ஆங்கிலமும் காணும் போதே , “செட்டிநாடு உணவகம்” என்று செந்தமிழில் எழுதிய பெயர்ப்பலகை என்னை சிந்தை குளிர வைத்ததோடு மட்டுமல்லாமல் அதன் உரிமையாளரான இஸ்லாமியச் சகோதரியும் அவரது கணவரும் அன்பு கொண்டு அனைவருக்கும் விருந்தோம்பல் செய்த விதம் என்றும் நெஞ்சம் விட்டு என்றும் நீங்காது…
கடல் நீரும் நீல வானும் கைகோர்க்கும் காட்சியினை மாலைப்பொழுது ஜித்தா மண்டலத்தில் கண்டேன்.. அனல் காட்டில் செம்பரிதி விழுந்தாலும் வெந்நீராகாமல் கடல் நீரின் குளிர்ச்சி கண்டு மெய்சிலிர்க்கும் முன்னே, பெரும் மணல் பரப்பில் உரித்த தாழம்பூவின் வாசம் காற்றோடு வருடிச் செல்ல… நேரம் முடியும் முன்பே என்னைச் சரியாக தாயகம் அனுப்பி வைத்து விட வேண்டும் என்ற பொறுப்பாளர்களின் உணர்வைப் புரிந்து கொண்டு பாலை நில மண்ணை விட்டு எனக்கு வர மனம் இல்லை என்றாலும், காலம் கடமையாற்ற எனக்கு மிகுந்த வலிமையை அந்த மண் தந்தது என்ற நிறைவோடு விடைபெற்றேன்…
எமது போராட்டம் தேச விடுதலையை மட்டும் நோக்கமாகக் கொண்டதல்ல. தேசத்தின் விடுதலையுடன் சமூக விடுதலையையும் இலக்காகக் கொண்டே நாம் போராடி வருகின்றோம். அரசியல் விடுதலை என்ற எமது குறிக்கோளுடன் பொருளாதார விடுதலையும் ஒன்றிணைந்து நிற்கிறது . வர்க்கம் , சாதி என்ற சுரண்டல் முறைகள் ஒழிக்கப்பட்டு, பெண் ஒடுக்குமுறை போன்ற சமூக அநீதிகள் அழிக்கப்பட்டு, உழைக்கும் பாட்டாளி மக்களின் சுவர்க்க பூமியாக சோசலிசத் தமிழீழம் திகழ வேண்டும். மக்களின் அடிப்படை உரிமைகள் பேணிப் பாதுகாக்கப்படுவதோடு மக்களே தமது அரசியல் சமூகப் பொருளாதார வாழ்வை நிர்ணயிக்கக் கூடியதான ஒரு உண்மையான மக்கள் அரசை உருவாக்குவதே எமது இலட்சியம் என்ற நமது தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் கருத்தை நினைவு கூர்ந்து நமக்கான ஒரு நாடு வேண்டும் என்ற இலட்சிய உறுதியை மேலும் வலிமையாக்கி சவூதியிலிருந்து சென்று பக்ரைன் நாட்டிலும் கால் பதித்து நமது உறவுகளின் வரவேற்பில் அகம் மகிழ்ந்து தாயகம் வந்தடைந்தேன்…
அண்ணன் சீமான் அவர்களையும் சந்தித்து விட்டு வீடு வந்து சேர்ந்தேன்…
பொருள் தேடக் கடல் கடந்து சென்றாலும் சென்ற இடத்திலும் செந்தமிழர் பாசறையைக் கட்டி அண்ணன் சீமான் அவர்களின் நம்பிக்கைக்குரிய படைத் தளபதிகளாக நிற்கும் சவூதி அரேபியா – செந்தமிழர் பாசறை தமாம் , ரியாத், ஜித்தா மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள் …
நன்றி!
நாம் தமிழர்!
மா.கி.சீதாலட்சுமி,
மாநில ஒருங்கிணைப்பாளர் – மகளிர் பாசறை,
நாம் தமிழர் கட்சி.