ஆகத்து 2023
ஆறாது ! ஆறாது ! அழுதாலும் தீராது !
விந்தியக் கோடும் பொய்யே!
விரிகடல் அலையும் பொய்யே!
சந்திரன் எழிலும் பொய்யே!
தாரகை ஒளியும் பொய்யே!
இசைத் தமிழும் பொய்யே!
தென்திசைத் தமிழும் பொய்யே!
தென்றலும் பொய்யே!; காதல்
மந்திரம் பொழியும் மாதர்
மயக்கமும் பொய்யிற் பொய்யே!
இப்பொழுதிருந்தான் அண்ணன்
இன்று நான் பார்த்தேன்! காலை
துப்புர வெளுக்கும் போதும்
தூங்கினான்! கண்டேன் – கொஞ்சம்
அப்படி நகர்ந்தேன்! மீண்டும்
அருகினில் வந்தேன்! ஐயோ..!
எப்படிச் சொல்வேன்? அண்ணன்
இல்லையே.. இல்லை இல்லை!
கருணையும் மறையுமென்றால்
காலமோர் உண்மையாமோ?
பொறுமையும் அழியுமாயின்
பூதலம் உறுதியாமோ?
வருவதை வாரி வாரி
வழங்கிடும் அண்ணன் மேனி
எரிதழல் படுவக் காண்போர்
இப்புவி நிலையென் பாரோ!
இறந்தனன் என நினைக்க
இரும்பினால் நெஞ்சம் வேண்டும்!
வருந்துவர் வருத்தம் நீக்க
மறைந்தவன் வரத்தான் வேண்டும்!
அருந்தமிழ் ஆற்றல் கொண்டே
ஆயிரம் துயரம் தீர்ப்பர்!
இறந்த என் அண்ணன் தந்த
இத்துயர் தீர்ப்பா ரல்லர்!
நள்ளிராப் போழ்தில் ஓர்நாள்
நட என்றான்.. எங்கே? என்றேன்!
கள்ளரும் துயிலும் வேளை
கடற்கரைக் கென்றான்.. சென்றோம்..!
உள்ளூரும் மணற் பாங்கில் மேல்
ஓய்வுற அமர்ந்தோம்! அண்ணன்
வெள்ளிய மனத்தை ஆங்கே
விரித்தனன்! கதைகள் சொன்னான்..
பெரும் புகழ் பெறுவதாலே
பெற்றதோர் மகிழ்வும் சொன்னான்!
இருப்பினும் அமைதி மட்டும்
இல்லையே தம்பி என்றான்!
மனத்தினைக் குடையும் துன்பம்
மாற்றுவ தெவ்வா றென்றான்!
கனத்தினைத் தூக்கி இந்தக்
கடலிலே வீசும் என்றேன்!
கனப்பது மானம் என்றான்!
கலங்கினேன்.. பதிலா சொல்வேன்?
இதுவரை யாருக் கேனும்
இடர்கள் நான் செய்ததே இல்லை!
சதி புரிந்தொருவர் செல்வம்
சற்றுமே கொண்டேனில்லை!
கதியிலார்க் குதவ லின்றி
கைப்பொருள் காத்தேனில்லை!
மதிவழி வாழ்ந்தேன்! அந்தோ!
மனத்துயர் தவிர்த்தேனில்லை!
புண்ணிய நெறியில்லாத
புன்மை சேர் காலக் கூத்தே!
அண்ணனைக் கொன்றாய்! எங்கள்
அமைதியைக் கொன்றாய்!
இறந்தபின் முகத்தைப் பார்த்தேன்!
எழிலடா எழிலின் தேக்கம்
பொருந்திய அமைதியாலே
புன்னகை பொழிந்தான் அண்ணன்!
தப்பியே பிறந்த நெஞ்சம்
தாய் நெஞ்சம் பிள்ளை நெஞ்சம்
செப்பரும் கொடையின் நெஞ்சம்
தேனிலே தோய்ந்த நெஞ்சம்
ஒப்பிலா மணியாம் நெஞ்சம்
உயர்கலை வாணர் நெஞ்சம்
இப்புவி உளநாள் மட்டும்
இனி பிறர் காணா நெஞ்சம்
அருகிலே இருந்த காலம்
அலையென மோதி மோதி
உருகி என் மனத்தை வாட்டி
உருக்குலைக்கின்ற தையோ..!
கருகிய சடலத் தோடு
கலந்து நான் சென்றிடாமல்
இருப்பதேன்! கடின நெஞ்சம்
என் நெஞ்சம் பாவி நெஞ்சம்!
– கவியரசர் கண்ணதாசன்
(தனது 49ம் வயதில், 1957ல் காலமான கலைவாணர் நா. சு.கிருசுணன் அவர்களின் மறைவையொட்டி, கவிஞர் கண்ணதாசன் எழுதிய கண்ணீர் கவிதை)
ஆகத்து 30 (1957) – கலைவாணர் நாகர்கோவில் சுடலைமுத்து கிருசுணன்
நினைவு நாள்