spot_img

எழுத்தோலை – சுவடிகளின் அழிவு

செப்டம்பர் 2023

எழுத்தோலை

சுவடிகளின் அழிவு

“அவ்வாறான முன்னேற்பாடான முறைகள் தமிழகத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. இலக்கியச் செய்திகளை அடுத்த தலைமுறையினரும் பயன்படுத்தும் வகையில், அவை பாதுகாக்கப்படவில்லை என்பதை அறியமுடிகின்றது. அயல்நாட்டில் குடிபெயர்ந்த தமிழர்களைக் காட்டிலும், தமிழகத்திலிருந்த தமிழர்களுக்கு வரலாற்றுப் பார்வை குறைவாகவே காணப்பட்டதை அறிய முடிகின்றது.

பரிபாடல் தரும் வானியல் தொடர்பான செய்திகளும், மணிமேகலை தரும் அணுவியல் தொடர்பான செய்திகளும் இந்நூல் இயற்றப்படுமுன்பே, தமிழர்களால் அறியப்பட்டிருந்தவைகளாகும். அவைகளைப் பற்றிய செய்திகள் எவையும் மேற்கண்ட நூல்களில் சொல்லப்படவில்லை. அழிந்துபட்ட பூம்புகார் நகரம், கணக்கியலை அடிப்படையாகக் கொண்ட கட்டிடவியல் நுணுக்கங்களைக் காட்டுகின்றது. ஆனால் கணக்கியல் தொடர்பான நூலெதுவும் தமிழில் கிடைக்கவில்லை. தமிழ் இலக்கியங்கள் யாவும் அழிந்துபட்டமைக்கான கரணியம், அவை முறையாகப் பாதுகாக்கப்படவில்லை என்பதே உண்மை நிலையாகும். ஆரியர்களின் தமிழக வருகைக்குப் பிறகு, பல நூல்கள், மூட நம்பிக்கையின் அடிப் படையில் தமிழ்ப் பகைவர்களின் சதி யால், ஆற்றில் வீசப்பட்டன என அறிகிறோம்.

விலைமதிப்பற்ற இலக்கியச் செல் வங்கள் அனைத்தும், ஆற்றில் வீசப்பட்ட அவல நிகழ்வு, தமிழகத்தைத் தவிர வேறெங்கும் காண வியலாத ஒன்றாகும். எஞ்சியிருந்த பல ஆவணங்களும், மன்னர்களால் பகைமையின் கரணியமாக, தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இயற்கையாகவும், செயற்கையாவும் அழிந்துபட்ட இலக்கியங்களை விடுத்து, இன்று தப்பிப்பிழைத்த இலக்கியங்களே பல்வேறு செய்திகளைத் தெரிவிக்கின்றன எனும் போது, அழிக்கப்படாதிருந்த இலக்கியங்கள் கிடைக்கப் பெற்றிருப்பின், தமிழர்களின் வரலாறு இன்று நிலைநிறுத்தப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.”

வரலாற்று ஆய்வாளர், தகைசால் தமிழறிஞர், ஐயா. மா.சோ விக்டர் அவர்கள்,  குமரிக்கண்டம் நூல் ( பக்கம் 61)

ஆரியம் பல்வேறு முறைகளில், தமிழை, தமிழினத்தை, தமிழர் மரபுச் செல்வங்களைத் தொன்றுதொட்டே அழித்து வந்திருக்கிறது. தமிழர் மொழியை, இறையை, வழிபாட்டை, பண்பாட்டுக் கூறுகளை, விழாக்களைக் கவர்ந்து திரித்து தனக்கானதாகவும் சமைத்துக் கொண்டது. தமிழை கூடியவரையில்  திருடி தனக்கானதாக ஆக்கிக் கொள்வது  அல்லது திட்டமிட்டு நேரடி சூழ்ச்சிகளால் மறைமுக சதிகளால் அழிப்பது, ஆரியத்தின் குறிக்கோள். ஆரியத்தின் அத்தகைய  குறிக்கோளால் நெருப்பிலும் நீரிலும் இட்டுத் தமிழர் தொன்மங்கள் அழிக்கப்பட்டன.

முற்காலத்தில்  தமிழர்களுக்கும்,  ஆரியர்களுக்கும்  தத்தமது இலக்கண இலக்கிய படைப்புகளுக்கும், சமயங்களுக்கிடையே ஏற்பட்ட போட்டி, சமய மோதல்களின் காரணமாகவும், என்னுடைய சமயம் உயர்ந்தது, உன்னுடைய சமயம் தாழ்ந்தது என்று கூறி வாக்குவாதம் ஏற்பட்டபோதும்  நூல்களை எரியும் நெருப்பிலும், ஓடும் நீரிலும் போட்டுப் பரிசோதித்தனர். இதற்கு அனல்வாதம், புனல்வாதம் என்று பெயர். இருதரப்பினருக்கும் ஏற்பட்ட சண்டை, பொறாமையின் காரணமாகப் பல சுவடிகள் நெருப்பிலும் நீரிலும் இட்டு அழிக்கப்பட்டன. நல்ல நூல்கள் அனலில் எரியாது; புனலில் மூழ்காது; எதிர்க்கும் என்று வலுச் சண்டைக்கிழுத்து புறம்  பேசி, அனல் வாதம் புனல் வாதம் காரணமாக ஏராளமான நூல்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டும், தீக்கிரையாக்கப்பட்டும் அழிக்கப்பட்டன.

மதுரையில் சமணர்களுக்கும், ஞானசம்பந்தருக்கும் ஏற்பட்ட அனல் வாதத்தின் போது அவரவர் தாங்கள் எழுதிய சுவடிகளை நெருப்பிலிட்டுள்ளனர். சமணர்கள் எழுதிய ஓலைகள் தீயில் எரிந்து சாம்பலாக, சம்பந்தர் எழுதிய ஓலைகள் நெருப்பில் எரியாமல் அப்படியே இருந்தன எனவும்; அதேபோன்று புனல் வாதத்தின் போது எழுதி ஆற்றில் விட்ட சுவடிகளில் சமணர்கள் எழுதிய ஓலைகள் வைகை நீரில் அடித்துச் செல்ல, சம்பந்தர் எழுதிய ஓலைகள் மட்டும் ஆற்றை எதிர்த்துச் சென்று ஓதுங்கின எனவும் கூறப்படுகின்றன.

நாலடியார் என்ற நூலின் பாடல்களை எண்ணாயிரம் புலவர்கள் பாடியதாகவும் அவற்றை ஆற்றில் போட்டபோது நானூறு பாடல்கள் மட்டும் நீரின் போக்கிற்கு எதிராக வந்ததாகவும், அப்பாடல்களின் தொகுப்பே நாலடியார் என்றும் பேச்சு வழக்குக் கதை ஒன்று கூறுகிறது.

அனல் வாதம் புனல் வாதம் நிகழ்வுகளை விஞ்ஞானப்பூர்வமாகச் சிந்திந்தோமானால், ஓலைகள் தீயில் எரியாமலும், நீரில் மூழ்காமலும் இருக்க ஏதேனும் காப்பு முறைச் செய்திருக்கக் கூடும் என எண்ணலாம்.  ஆனாலும், அதனை ஒரு சில சித்தர்கள் மட்டுமே அறிந்திருந்திருக்கலாம். அவர்களும் தம் மாணாக்கர்களுக்கும், தம் குடும்பத்தினருக்கும் மட்டுமே மறைபொருளாக பாவித்திருப்பதை தமிழர் வரலாற்றின் வாயிலாக நாம் அறியமுடிகிறது. இந்தக் காப்பு முறை செய்யப்பட்ட ஓலைகளிலும் குறிப்பிட்ட அளவே தப்பிப்பிழைத்தன. மீதமுள்ளவையும், காப்புச் செய்யப்படாத ஓலைச்சுவடிகளும் நீரிலும் தீயிலும் அழிந்து போயின.

இதுபோன்று அழிந்த சுவடிகள் எத்தனை எத்தனை கோடிகளோ தெரியவில்லை. பெருந்தொகையிலான தமிழர்களின் எண்ணற்றச் சுவடிகள் இப்படி வஞ்சகத்தால் அழிக்கப்பட்டன. இழந்தது தமிழும், தமிழரும்!!  ஆரியம் தமது  புனைவு ஓலைகளை ஆற்றில் விட்டது. அதனால் அதற்கு இழப்பொன்றும் இல்லை. ஏனெனில், ஆரிய சமற்கிருதத்திற்கு ஏது வரலாறு? ஏது இலக்கண இலக்கியங்கள்? உருக்கு வேதம் முதல் அனைத்தும் திருடிச் சோடித்து சமைத்தது தானே!

பிற்காலத்தில் தமிழ்த்தாத்தா உவே. சாமிநாதர் அவர்கள் சுவடிகளைப் பதிப்பித்து வெளியிடும் பொருட்டு பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். சுவடிகளை குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டம் கரிவலம் வந்தபோது, அங்கு தல்லூர் வரகுணபாண்டியனின் ஏட்டுச் சுவடிகள் கோவிலில் இருக்கிறது என்பதைக் கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைந்துள்ளார். பின், கோயில்  தர்மகர்த்தாவைப் பார்த்துக் கேட்ட பொழுது, அவரோ “பழையச் சுவடிகளைக் கண்ட கண்ட இடங்களில் போடக்கூடாது எனச் சிலர் கூறியபடி அக்கினி வளர்த்து சுவடிகள் நெய்யில் தோய்க்கப்பட்டு ஆகுதி செய்யப்பட்டுவிட்டன” எனக் கூறியதைக் கேட்டு மிகவும் கவலை கொண்டிருக்கின்றார்.

சுவடிகளை நெருப்பில் இட்டது போன்று காலத்தால் பழைய சேதமடைந்த சுவடிகளைப் பார்த்துப் படியெடுத்துக் கொண்டு இனி பழைய சுவடிகள் பயன்படாது என அறிந்த பின் அதில் உள்ள தூசிகளும், பூஞ்சைகளும், பூச்சிகளும் மற்ற சுவடிகளுக்குப் பரவுதல் கூடாது என்ற எண்ணத்தில் புதுப் பிரதி செய்த பின் பாதிப்படைந்தச் சுவடிகளைச் சில நல்ல நாட்களில் ஆற்றிலிடுவது வழக்கமாக இருந்துள்ளது. தமிழகத்தில் புதுப்புனலைக் கொண்டாடும் நாளான ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கு அன்று சிதிலமடைந்த சுவடிகளை ஆற்றில் விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். இதுபோன்ற காலங்களில் செய்யப்படும் ஒரு வகையானச் சடங்காக நல்ல சுவடிகளையும் ஆற்றில் வீசுவதும் தொடர்ந்து நடந்திருக்கின்றன.

இதே போன்று தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதர் அவர்கள் ஏடு தேடும் பணியாக திருநெல்வேலிக்குச் சென்றிருந்தபோது அங்குத் தெற்குப் புதுத் தெருவில் வசித்த வழக்கறிஞர் சுப்பையா பிள்ளை என்பவரிடம் சில ஏடுகள் உண்டென்று கேள்வியுற்று அங்குச் சென்றார். அவர்கள், ‘எங்கள் வீட்டில் ஊர்க்காட்டு வாத்தியார் புத்தகங்கள் வண்டிக்கணக்காக இருந்தன. எல்லாம் பழுதுபட்டு ஒடிந்து பயனற்றுப் போய்விட்டன. இடத்தை அடைத்துக் கொண்டு பயன்படாமல் இருந்த அவற்றை என்ன செய்வதென்று தெரியவில்லை. அவற்றில் என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்கோ எனக்குத் திறமை இல்லை. அழகான அச்சுப் புத்தகங்கள் வந்துவிட்ட இந்தக் காலத்தில அந்தக் குப்பையைச் சுமந்து கொண்டிருப்பதால் என்ன பயன் என எண்ணி ஒரு ஆடி பதினெட்டாம் பெருக்கன்று சுவடிகளைத் தேர் போலக் கட்டி விடுவது சம்பிரதாயமென்று சில முதிய பெண்மணிகள் கூறினார்கள்; நானும் அப்படியே எல்லா ஏடுகளையும் ஓர் ஆடி மாதம் பதினெட்டாம் தேதி வாய்க்காலில் விட்டுவிட்டேன் என்று கூறியதைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்டிருக்கின்றார்.

இவ்வாறாக ஓலைச்சுவடிகளை தேடித் தொகுத்தவர்களின் ஒருசில குறிப்புகளே எண்ணற்ற சுவடிகளை அழியக்கொடுத்ததற்குச் சான்றாக உள்ள நிலையில்,  கடந்த நான்கைந்து நூற்றாண்டுகளாக கணக்கற்ற சுவடிகளை அறியாமையினாலே இழந்துவிட்டோம்.

நமது முன்னோர்கள் பின்பற்றிய சரியான காரணத்தை அறியாத மூடப் பழக்கங்களாலும் பாதுகாப்பு என்ற பெயரில் செய்த தவறான பாதுகாப்பு முறைகளாலும் அழிந்திருக்கின்றன; சுவடிகளைத் தீயிலிடல் சமயப் பூசல்கள் மட்டுமின்றி அறியாமையினாலும் சுவடிகளைத் தீயிலிட்டுள்ளனர். இயற்கைக் காரணிகளால் சிதிலமடைந்த சுவடிகளில் உள்ள பூச்சிகள் மற்ற சுவடிகளுக்குப் பரவுவதைத் தடுக்க சிதிலமடைந்த சுவடிக்கு மாற்றுச் சுவடி எடுத்துக்கொண்ட பின் பழைய சுவடிகளை நெருப்பில் இட்டு அழிப்பதை வழமையாகக் கொண்டிருந்தனர்.

ஆரியர்களின் கெடு மூளை இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ஓலைச்சுவடிகளை நெய்யில் தோய்த்து யாகம் செய்யும் நெருப்பிலிட வேண்டும் என திரித்துள்ளது. பலநூறு வருடமாக தமிழைத் திரிக்கும் செயல்பாடுகள் நடந்துகொண்டே தான் இருந்திருக்கின்றன .

சிலப்பதிகாரத்தின் மீட்டெடுக்கப்பட்ட வரலாற்றின் மூலம் இதை அறியலாம். தற்பொழுதுள்ள பெரும்பாலான நூல்களைத் தொகுத்த தாத்தா உ வே சாமிநாதர் அவர்கள், ஒருசமயம் அவர் தேடிக்கொண்டிருந்த நூல் ஏதோ ஒரு பிராமணரிடம் இருப்பதாகக் கேள்விப்பட்டு அதனை அச்சு எடுத்துத் தருவதாக கேட்டுள்ளார். அதற்கு அந்த பிராமணர் “எங்க பெரியவாளாம் இதுங்கள ஆடிப்பெருக்கு அப்போ ஆத்துல விடுறதுக்காக வச்சிருக்கா! நாளைக்கு ஆடிப்பெருக்கு… அதனால நானும் அத செஞ்சாதான் புண்ணியம்” என்று மறுத்துவிட, அந்த ஊரின் திண்ணையிலே படுத்திருந்து மறுநாள் காலையில் ஆற்றில் விட்டபிறகு அதை எடுத்து கொண்டுவந்திருக்கிறார். இதன்மூலம் கிடைத்ததே மகத்தான காப்பியமான சிலப்பதிகாரம்.

நல்ல வேளையாக மூட்டையாக ஆற்றில் விட்டதால் சிலப்பதிகாரம் முழுமையாக கிடைத்தது அதிலும் சிலர், ஏன் ஒரே மூட்டையாக விடாமல் ஒவ்வொரு ஆண்டும் சிறிது சிறிதாக ஆற்றில்  விடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஏனெனில், ஒரேநேரத்தில்  மொத்தமாக ஆற்றில் விட்டுக் கரை ஒதுங்கி யார் கையிலாவது கிடைத்துவிட்டால், தமிழைத் திரித்துச் சொல்லமுடியாது.  அதுமட்டுமல்ல மற்ற நூல்களும் கிடைத்துவிட்டால்  சமற்கிருதம் தான் பெரியதென்று நிறுவ இயலாதல்லவா?! இப்படியும்  எத்தனையோ ஆண்டுகளாக நாம் நமது சுவடிகளை  இழந்திருக்கிறோம்.

மூதாதையர்கள் இறந்தபின் அவர்கள் பயன்படுத்திய சுவடிகளை நெருப்பிலிட வேண்டும் எனச் சாத்திரம் உரைப்பதாகக் கூறி சுவடிகளை அழித்திருக்கிறார்கள். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற  தமிழரின் புத்தாண்டுப் பிறப்பு தைப்பொங்கலை முன்னிட்டு வீடுகளைச் சுத்தம் செய்து, பழுதுபார்த்து, வெள்ளையடித்து, புத்தரிசிப் பொங்கலிட்டு, மண்ணுக்கும் மக்களுக்கும், வீட்டு விலங்குகளுக்கும் கூட நன்றி செலுத்தி, இயற்கையைப் போற்றுவதை வழக்கமாக கொண்ட தமிழ்ப் பேரினத்தை எப்படி  மடைமாற்றியிருக்கிறார்கள்?!

புத்தாண்டை ஏற்று, கடந்த ஆண்டைப் போக்கும் வழமையை, போகி என மாற்றி, தங்கள் மரபுச் செல்வங்களைத் தங்கள் கைகளாலேயே தீவைத்து எரிக்கும்  கலாச்சாரத்தை விதைத்தனர்.  அந்தத் தீவிதை இன்று இரப்பர் வண்டிச் சக்கரங்கள் போன்ற வேதிக் கழிவுகளையும் எரிக்கும்  போகித்தீயாக மாறி, இத்தமிழர் நிலத்தை விசப் புகைத்தீவாக மாற்றி இயற்கையை மாசுபடுத்திக் கொண்டிருக்கிறது.

இப்படிப் பலவாறாகப் பிற்காலத் தமிழர்களின் அறியாமையைப் பயன்படுத்தி ஆரியம் சோதிட, சாத்திர, தெய்வ அச்சமூட்டி சுவடிகளை அழித்து வந்திருக்கிறது. தமிழினத்தின் தமிழிலக்கியங்களை அந்நிய நாட்டவர் வந்து அழிக்கத் தேவையில்லை. ஆரிய சூழ்ச்சி, புரட்டுக்களை நம்பி தமிழ் மக்களான நாமே சம்பிரதாயம், சாத்திரம் என சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்டு அழித்துக் கொண்டோம்; விழிப்புணர்வற்று இன்றும்  அழித்துக் கொண்டிருக்கிறோம்.

திரு. .இராமகிருசுணன்,

செந்தமிழர் பாசறை – அமீரகம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles