செப்டம்பர் 2023
உழவனின் வலிகள்!!!
வாடிய பயிரும் வற்றிய வயிறும்
காய்ந்து போனதே!
வாராத காவிரியை எதிர்பார்த்து
கண்களும் தேடுதே!
விரிசல் விழுந்தது இங்கே
வயற்காட்டிலா?
விவசாயி எந்தன் ஒருசாண் வயிற்றிலா?
பச்சையாடை போர்த்தியதும் பருவமழை பொய்த்துப் போக!
வானம் பார்த்த பூமியை எண்ணி கால்களும் சோர்ந்து போக!
அரசியல் சதுரங்கத்தில் வெட்டுண்ட
காய்களானோம்!
பசித்த பயிர்களுக்கு தண்ணீர்விடாப் பாவிகளானோம்!
காவிரியில் அணைகட்டத் துடிக்கிறான்
அண்டை மாநிலக்காரன்!
தடுத்திடாமல் வேடிக்கை பார்க்கிறான்
திராவிட ஆட்சியாளன் !
உரிமைகள் இருந்தும் உதவிகள்
இன்றித் தவிக்கின்றோம்!
உணர்வுகள் இருந்தும் உயிறற்ற
சடலமாக வாழ்கின்றோம்!
சாதிக்கொருத் துன்பம் என்றால் சண்டையிட வீதிக்கு வருவார்!
சாப்பாடுதரும் உழவனுக்கு என்றால்
சத்தமின்றிக் கடந்து போவார்!
ஊருக்கொரு கட்சியும் வீதிக்கொரு வண்ணக் கொடிக்கம்பமும்
இருந்தென்ன?
ஏர்பிடிப்பவனுக்குப் பயனில்லா வெற்றுப் பிம்பங்களவை வேறென்ன?
முப்போகம் விளைந்த மண்ணிற்கு
முழுமையான முடிவுரையோ!
முன்னம்தோன்றிய உழவருக்கு மூச்சுக் காற்றாய் நெற்பயிரோ?!
உழவனும் இல்லை என்றால் உணவுக்கும் பஞ்சமாகும்!
உணவின்றி உயிர்களும் நாள்தோறும்
மாய்ந்து போகும்!
நாளொரு நீதி பொழுதொரு பொய்யால் வஞ்சித்தது போதாதா?
நாதியற்ற உழவர்களின் அழுகுரல் நாலுவாய் சாப்பிடும்போது கேட்காதா?
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.