செப்டம்பர் 2023
அணையாத் தீபம் திலீபன்
அணையாத் தீபமாய்
நாளும் ஒளிவீசும் கதிரவன்!
மருத்துவ மாணவன்
மங்காத மாணிக்கச் சுடரவன்!
எம்மின மக்கள்படும் துயரைக்
கண்டு துடித்தவன்!
தமிழீழம் காத்திடத் தன்னுயிரைக் கொடையாகக் கொடுத்தவன்!
ஆயுதம் ஏந்திய கரங்களிலே துவக்கும் இல்லை!
விடுதலை வேண்டிய தேகத்திற்கு நீரும் இல்லை!
உள்ளபடியே உண்ணா நோன்பிருந்து!
உறுபசியைத் தான் துறந்து!
விடுதலைக் கனவைச் சுமந்து! கணப்பொழுதும் அதனை நினைந்து!
உறுதிபட அறவழியில் நின்றவன்!
நாட்களும் நகர்ந்திட
நாவும் வறண்டதே!
யாக்கையும் மெலிந்திட
மக்களும் திரண்டதே!
உயிரும் பிரிந்திட
நானிலம் இருண்டதே!
ஈழத்து மாந்தரின் கூக்குரல் எதிரொலிக்க!
பன்னிரெண்டாம் நாளில் பவளவுடல் களைத்திருக்க!
செந்நீர் மிகுந்த தேயத்திலே
கண்ணீரும் சூழ்ந்ததே!
தமிழீழம் நலம்பெற நல்லதோர் வீணை செய்தோம்!
அதனை நல்லூரில் பறிகொடுக்கச் சிந்தை நொந்தோம்!
வரலாற்று நாயகன் வானளவு உயர்ந்து நின்றான்!
உளமாற உன்னதக் கனவைத் தாங்கிச் சென்றான்!
தமிழர் எண்ணங்களில் நீங்காது வாழ்ந்து வென்றான்!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.