அக்டோபர் 2023
வனக்காவலர் வீரப்பனார்!
அடவிக்குள் வலம் வந்த
தனிக்காட்டுச் சிங்கம்!
வனத்தினுள் கேட்குமே
காலடி யோசை எங்கும்!
முண்டாசு கட்டாத
முறுக்கு மீசைக்காரன்!
முகவரி தேடி
வருவோருக்குப் பாசக்காரன்!
ஐயாவின் சின்ன விழியசைவில்
காவிரியும் எல்லை தாண்டும்!
தடுப்பவர்க்குக் கையசைவில் பாடம்
புகட்டினார் மீண்டும் மீண்டும்!
காவிரி நீருக்கு மாநில
எல்லை உண்டோ!
அதைக்கணப் பொழுதில்
உணர்த்திய தமிழனன்றோ!
சந்தனக் காடு
இவரது வீடு!
அமைதியாக வாழ்ந்த
அழகான கூடு!
மும்மாநில அரசியல்
சதுரங்கத்தைக் கணித்தவர்!
ஒலிநாடாவில் தண்ணீர்ச்
சிக்கலைத் தீர்த்தவர்!
வந்தாரை வாழ வைக்கும்
தமிழ்த் திருநாடாம்!
வணங்கா முடிக்கு
அடிபணிந்தானே கருநாடகன்!
தனக்கென வனத்தினுள்
தனியரசைக் கட்டியவன்!
கயவருக்குச் சிம்மமாய்க்
காட்டினுள் வாழ்ந்தவன்!
ஒழுக்கத்திற்கு வீரப்பனாரே
தகுந்த அடையாளம்!
அதை என்றும் பறைசாற்றுமே
சத்திய மங்கலம்!
துவக்குடன் தமிழர்
எல்லை காத்த மாவீரன்!
எளியோரை வாழவைத்த
தூயதோர் போர்வீரன்!
முடிசூடா மன்னவனும்
துரோகத்தால் வீழ்ந்திட!
முல்லைக் காடும்
கண்ணீரால் நனைந்ததே!
தமிழர் உரிமைக்குக் குரல்
கொடுத்த காவல்காரன்!
தன்னலம் பாராது வாழ்ந்து
மறைந்த வீரமறவன்!
வனத்தின் வேங்கைக்கு
வீர வணக்கம்!
வேட்டைக்கார வேந்தனுக்கு
வீர வணக்கம்!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.
அக்டோபர்- 18 (2004): வனக்காவலர் வீரப்பனார் நினைவு நாள்