அக்டோபர் 2023
தமிழ்ப்பிறைச் சந்திரனுக்கு வாழ்த்துப்பா
தலைவனின் தவப்புதல்வனே
தமிழீழ மதியழகே!
தரணியின் கவியழகே
தமிழ்ப்பிள்ளை வடிவழகே!
துவக்குகள் ஏந்திய
தகப்பனின் கைகளிலே!
கட்டளையிடும் கரிகாலன்
கரங்களில் தவழ்ந்தாயே!
பெருநெருப்பு பெற்றெடுத்த சிறு நெருப்பே!
தமிழீழ மண்ணிலே
உன்பிறப்பும் தனிச்சிறப்பே!
துவக்குகள் பிடித்து நடையும்
தான் நிதம் பயின்றாயடா!
நீயும் தூரிகை கொண்டு
நன்கு வடித்த ஓவியமடா!
மாதர் குல மாணிக்கமாம்
மதிவதனி பெற்ற மகனே!
மாசற்ற எம் தலைவனின்
மறத்தமிழ்க் குகனே! நீயவனே!
உந்தன் நிலவு முகமோ
மங்காத பால்வண்ணம்!
எந்தன் மண்ணிலே உமது
குறும்புகள் பலவண்ணம்!
நின்றாடும் திங்களெனக்
குன்றாப் புகழுடையோனே!
மன்னுபுகழ் மாத்தமிழென
உன்பெயர் நிலைத்திருக்க!
நல்லதோர் பொழுதும்
நானிலத்திற் புலர்ந்திருக்க!
நற்றமிழ் நானெடுத்து
நற்கவி படைத்தேனே!
உனதகவையை வாழ்த்திப்
பாடுது தமிழ்மனம்!
உந்தன் பிறப்பை போற்றிப்
புகழுது தமிழினம்!
பொலிந்திடுவாய் வானுறையும்
பிறைச் சந்திரனாகவே!
வாழ்ந்திடுவாய்! மாறாத
மந்திரப் புன்னகையோடே!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.
அக்டோபர் – 1: தம்பி பாலச்சந்திரன் பிறந்த நாள் (1998)