அக்டோபர் 2023
பொதுவுடைமைப் புரட்சியாளன் சேகுவேரா
உலக அளவில் இன்று வரை புரட்சிக்கும் ஈகத்திற்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் ஒரு மாமனிதன் சேகுவேரா. கியூபாவின் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்ட ஒரு பெயரது. இவர் பன்முகங்கள் கொண்ட போராளி, மருத்துவர், அரசியல்வாதி, இலக்கிய ஆளுமை எனப் பல துறைகளில் புரட்சிக் கருத்துக்களை வித்திட்டவர்.
சேகுவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் நாள் அர்ஜென்டினாவில் உள்ள ரொசாரியே எனும் இடத்தில் எர்னஸ்டோ குவேரா லின்ஞ் மற்றும் சிசிலியா தம்பதிகள் பெற்ற தங்க மகன் ஆவார். தன் இரண்டாவது வயதில் ஆஸ்துமா என்ற கொடிய நோய் பற்றி, இவரை வாழ்நாள் முழுவதும் துன்புறுத்தியது. எனினும் அக்கொடிய நோயை வென்று, புரட்சி செய்த மாவீரன் சேகுவேரா என்று உலகம் என்றும் போற்றும்.
மருத்துவத்திற்கான புத்தகங்களை வீட்டிலிருந்தே கற்று பல்கலைக்கழக அளவில் தேர்ந்த கல்வி மேதை இவர். புயனஸ் அயரிஸ் பல்கலைகழகத்தில் மருத்துவப் படிப்பைத் தொடரும்போது ஓராண்டு விடுமுறை எடுத்துக்கொண்டு தன் நண்பர்களுடன் அமேசான் நதிக்கரையோடு, இருசக்கர வாகனத்தில் 3000 கிலோமீட்டர் பயணித்தார். தொழு நோயால் வாடிய அங்குள்ள மக்களின் துன்பத்தைப் போக்க இயன்றவரை மருத்துவ உதவிகளைச் செய்தும், அக்கொடிய நோயால் மாளும் மக்களுக்கு ஆறுதலாகவும் இருந்தார். தொழு நோயாளிகளால் தொற்று ஏற்படும் என்று எவரும் அஞ்சும் வேளையில் அவர்களைத் தொட்டு சேவை புரிந்த தியாக உள்ளம் கொண்டவர் சேகுவேரா.
புத்தகங்கள் மீது அவர் தீராக் காதல் கொண்டிருந்தார். 3000 புத்தகங்களுக்கு மேல் தன் வீட்டில் வைத்திருந்தார். அத்துடன் ரக்பி என்னும் விளையாட்டில் தலைசிறந்தவராகவும் விளங்கினார். அவரின் புரட்சிமிகு சிந்தனைக்கு வித்திட்டவை அவ்வமயம் கியூபாவில் நிலவிய வறுமை , அடக்குமுறை , வாக்குரிமை பறிப்பு ஆகியனவே ஆகும். கியூபப் புரட்சி ஏற்பட்டபோது பிடல்காஸ்ட்ரோவின் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1959 ஆம் ஆண்டு அந்த இயக்கம் வெற்றி பெற்று கியூபாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.
பின்பு 14 ஆண்டுகள் கியூபாவின் மத்திய வங்கியில் சேகுவேரா தலைவராக பணியமர்த்தப்பட்டார். அக்காலகட்டத்தில் அவர் போர்முறைகள் சார்ந்த பல நூல்களையும் கட்டுரைகளையும் படைத்தார். 1964 ஆம் ஆண்டு கியூபாவின் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் சபையில் பத்தொன்பதாவது பொது அமர்வில் பெரிய உரை நிகழ்த்தினார். 1965 ஆம் ஆண்டு கியூபாவை விட்டு வெளியேறினார். அவ்வாண்டில் காங்கோ (ஜனநாயக குடியரசு) என்ற நாட்டிற்கும் பொலிவியா போன்ற நாட்டிற்கும் பொதுவுடைமைவாதப் போராட்டத்திற்காக, தனது பங்களிப்பைத் தொடர்ச்சியாகச் செய்து வந்தார்.
1966 ஆம் ஆண்டு கொரில்லா போரைத் தொடர பொலிவியா நாட்டிற்குச் சென்றார். அங்கு நிலவிய ஏழ்மையும், சமூகப்பொருளாதார சூழலும் அங்கு புரட்சி வெடிக்கக் காரணமாயிற்று. அங்கு அவரது போராட்டம் தொடர்கையில் அமெரிக்க இராணுவத்தால் 1969 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் நாள் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார். கைது செய்யப்பட்ட இறுதி தருணத்தில் “என் நெஞ்சில் சுடுங்கள்” என்று முழங்கி தோட்டாக்களை நெஞ்சில் ஏந்தி மரணித்த மாவிரன் சேகுவேரா, தன் இறுதி நொடி வரை உலக மக்களுக்காக வாழ்ந்த போராளி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அவர் வாழ்ந்த நூற்றாண்டில் நாமும் வாழ்ந்தோம் என்ற திமிரும் பெருமையும் நமக்குள் இருத்தல் வேண்டும். இவ்வுலகம் உள்ளவரை சேகுவேரா எனும் புரட்சிமிகு மனிதனின் புகழ் மறையாது நிற்கும்.
சேகுவேரா உலகிற்குக் கூறிய தத்துவங்கள் :
= விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை.
= விதைத்து கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்.
= புரட்சி தானாக உண்டாவதில்லை; நாம் தான் அதை உருவாக்க வேண்டும்.
= எதிரிகள் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவன் முழுமையாக வாழவில்லை என்றே பொருள்.
= எங்கெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களின் இதயத்துடிப்பு கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்.
= எனக்கு வேர்கள் கிடையாது; கால்கள் மட்டுமே உண்டு!
= மண்டியிட்டு வாழ்வதை விட, நிமிர்ந்து நின்று சாவதே மேல்.
= நீ உண்மையான வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே சம்பாதித்துக் கொள்ள முடியும்.
= நீ ஊமையாய் இருக்கும் வரை, உலகம் செவிடாய்த் தான் இருக்கும்.
= நான் சாகடிக்கப்படலாம்; ஆனால் ஒரு போதும் தோற்கடிக்கப்பட மாட்டேன்.
= ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தால் அதிர்ந்து போவாயானால், நீயும் என் தோழனே!
= எல்லா மனிதர்களுக்கும் அன்பும் மனிதமும் சரிசமமாகக் கிடைக்கும் வரை நாம் போராடிக் கொண்டே இருக்க வேண்டும்.
= நமது ஒவ்வொரு நடவடிக்கையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர்க்குரலாக, மனித சமுதாயத்தின் நன்மைக்காக மக்களை ஒன்றுபடுத்தும் அறைகூவலாக இருக்கட்டும்.
= உன்னால் செய்ய முடியாததை நீ மற்றவர்களிடம் எதிர்பார்க்காதே.
திரு. பாலகிருஷ்ணன்,
சுபைல் மண்டலம்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.