அக்டோபர் 2023
எழுத்தோலை
செயற்கை முறையில் அழிவு
அறியாமையினால் அழிவு:
நமது நாட்டின் பாரம்பரியப் பண்பாடு, கலை, வரலாறு பற்றிக் கூறும் அரிய சுவடிகள் அழிவிற்கு, மக்களின் சூழ்நிலை, தவறுகள், அறியாமை போன்றவையும் காரணங்களாக அமைகின்றன. எடுத்துக்காட்டாக குதிரைக்கு வெந்நீர் போடுதல், குளிர்காய எரித்தல், காணாமல் போனவை, அந்நியர்களால் ஏற்பட்ட அழிவுகள், அந்நியர்களுக்கு விற்றல் ஆகியவற்றைப் பார்ப்போம்.
சுவடிகளை எரித்தல்:
சுவடிகளின் அருமை தெரியாத சிலர் குதிரைக்கு வெந்நீர் வைக்க அடுப்பெரிக்கும் பொருளாகச் சுவடிகளைப் பயன்படுத்தி அழித்துள்ளனர். “காடக சோமாஜியாருக்கு ஏகபோகமதுவாக எழில் செப்பேடு கொடுத்தான், இவ்வூர் இரண்டின் செப்பேடு மறக்கேட்டில் அழிந்து போயின்” என்னும் குறிப்பிலிருந்து, மதுரை மாநாட்டுக்குத் தலைவராய் வந்திருந்த வேற்று நாட்டவர் ஒருவர், தமது குதிரைகளுக்கு வெந்நீர் காய்ச்சுவதற்கு இருநூறு நாட்களுக்கும் மேலாக, நம் முன்னோர் தேடித் தொகுத்திருந்த பழைய தமிழ் ஓலையேட்டுச் சுவடிகள் எரிக்கப்பட்டதாக அறியலாம். நுட்பமாக நோக்கினால் இதுவும் ஆரியத்தின் சூழ்ச்சி என உணரலாம்.
அதே போன்று வணிக நோக்கோடு வந்து நாட்டையே பிடித்துக் கொண்ட ஐரோப்பிய நாட்டவர்கள் குளிர்காய ஓலைச்சுவடிகளை எரித்த வரலாறுகளையும் காண்கிறோம். அந்நெருப்பிலிருந்து தப்பிப் பிழைத்தது தானே உலகப் பொது மறையான திருக்குறள். அதுவும் இன்றைக்கு நம்மிடம் இருப்பது 1330 குறள்கள் தானே.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனச் சுவடிக் காப்பகத்தில் 1550 குறள்களைக்கொண்ட திருக்குறள் சுவடி இருப்பதாக அந்நிறுவனச் சுவடி விளக்க அட்டவணை குறிப்பிடுகிறது. ஆனால் தற்போது அச்சுவடி அங்கு இல்லை. அச்சுவடி எப்படி, யாரால் காணாமற்போனது என்று அறிய முடியவில்லை. அறியாமைத் தீயிலும், அந்நியர் தீயிலும் எரிந்து சாம்பலான திருக்குறள்கள் எத்தனையெத்தனையோ!?
யாகம் வளர்த்து நெருப்பிலிடும் வழக்கத்தைக் கொண்டிருந்த ஆரியர்கள், ஓலைச்சுவடிகளை யாகத்தீயில் இடுவதையும் வழக்கமாக்கினர். நாடெங்கும் குதிரையை உலாவவிட்டு (அசுவமேத) யாகம் எனும் பெயரில் தமிழர் மரபியல் செல்வங்களைத் தேடித்தேடி அழித்திருக்கிறார்கள். நாமும் ஆரியக் கூற்றை நம்பி அழியக்கொடுத்திருக்கிறோம்.
வெளிநாட்டவர் எடுத்துச்செல்லல்:
ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்திற்கும் மேலைநாடுகளுக்கும் வணிகத் தொடர்பு இருந்தமையைத் தொல்பொருள் அகழாய்வின் மூலம் அறியமுடிகிறது. புத்த மதத்தின்பால் ஈடுபாடு கொண்ட கீழைநாட்டுக் கல்வியாளர்களும், பயணிகளும் தமிழகத்திற்கு வந்து கல்வி கற்றதுடன் நூற்றுக்கணக்கான சுவடிகளைத் தமிழகத்திலிருந்து எடுத்துச் சென்றுள்ளார்கள்.
தமிழகத்திற்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளில் முக்கியமானவர்களான பாகியான், யுவான்சுவாங், ஈத்சிங் போன்றோர்களும், கொரியா நாட்டிலிருந்து வந்த ஆர்யவர்மன், உய்நிச் (பிஷ்ஸ்வீ-ழிவீநீலீ) தாவோசி போன்றவர்களும் சுவடிகளை எடுத்துச் சென்றுள்ளனர் என்பதைப் பல குறிப்புகள் மூலம் அறியமுடிகிறது.
“கி.பி.629 – 645 இல் இந்தியாவுக்கு வந்த யுவான்சுவாங் காஞ்சி பாடசாலைக்கு வந்து சென்றதாகச் செய்திகள் உள்ளன. அவர் மட்டுமே 520 பெட்டிகளில் 657 வகையான நூல்களை எடுத்துச் சென்றதாகக் குறிப்புகள் கூறுகின்றன. கி.பி.964 – 976 இல் சீனாவிலிருந்து இந்தியா வந்த 300 துறவிகள் ஏராளமான சமயச் சுவடிகளைக் கொடையாகப் பெற்றுச் சென்றதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. சென்ற நூல்கள் அனைத்தும் பாதுகாக்கப் பெற்றனவா என்றும் அறியக் கூடவில்லை” என்ற குறிப்பிலிருந்து வெளிநாட்டவர்கள் இங்கிருந்து கொண்டு சென்ற நூல்கள் என்னவாயிற்று என்பதை அறியமுடியவில்லை.
வெளிநாட்டவர்க்குச் சுவடிகளை விற்றல்:
வெளிநாட்டவர்க்குச் சுவடிகள் விற்பதை அறியாமை அழிவு எனக் கூறலாம். மேலை நாட்டு ஆய்வாளர்களும், ஆர்வலர்களும், அறிஞர்களும் பல்வேறு கீழ்த்திசை நாடுகளில் கள ஆய்வுப் பணி செய்தவர்களும், வியாபாரத்திற்காக வந்த பல்வேறு நாட்டு வணிகர்களும், இந்நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்களும் சுவடிகளைக் கொண்டுச் செல்வதில் ஆர்வமாக இருந்திருக்கின்றனர்.
அப்படி வெளிநாட்டினர் ஆய்விற்காகவும், வேறுசில காரணங்களுக்காகவும் நம் நாட்டிற்கு வந்து செல்லும்போது இங்குள்ள செல்வங்களைக் கொண்டு சென்றதுடன் பல ஓலைச் சுவடிகளையும் தம்மோடு கொண்டு சென்றனர். அச்சுவடிகளைப் பணத்திற்காக நம் நாட்டவர்களே அவர்களிடம் விற்றுள்ளனர்.
தொன்மை வாய்ந்த அரிய பொருள்களைத் தேடுவதே இவர்களுடைய தலையாய நோக்கமாகும். படியெடுக்கப்பட்ட நூல்களை விட மூல நூல்களையே பெற முயலுகின்றனர். மேலும் இந்த முயற்சியில் அவர்களுடைய எண்ணம் ஈடேற நம் நாட்டுச் சூழ்நிலையும் ஓரளவு வாய்ப்பளித்துவிடுகிறது. அவர்கள் தேவையறிந்து ஒத்துழைப்பதற்கென்றே ஆங்காங்கு வியாபாரிகளும் தரகர்களும் காத்திருக்கிறார்கள்.
இவர்களுக்குப் பொருளே குறிக்கோளாதலின்ஞ் அரிய பதிப்புகளையும் சுவடிகளையும் சேகரித்து அவர்களிடம் மறைமுகமாக விற்று விடுகின்றனர். தமிழரின் அறியாமை மட்டுமின்றி ஏழ்மை காரணமாகவும் சுவடிகள் அந்நியர்களுக்கு விற்கப்பட்டுள்ளன என்பதை இதன் மூலம் அறியமுடிகிறது.
தமிழகத்திலிருந்து விற்கப்பட்டு அந்நியர்களால் விலைக்கு வாங்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான சுவடிகளில் பெரும்பாலானவற்றை மேலை நாட்டு நூலகங்களிலும், அருங்காட்சியங்களிலும் தலைப்பு கூடத் தெரியாமல் யாருக்கும் பயன்படாமல் காட்சிப் பொருட்களாக வைத்துள்ளனர். இதனால் அதில் பொதிந்துள்ள அரிய தகவல்களை நாம் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லாமல் போகிறது. இன்றும் தமிழகத்தில் பல்வேறு அரும்பொருள்களும், சுவடிகளும் சில விற்பனை நிலையங்களின் மூலம் மறைமுகமாக வெளி நாட்டவர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
திரு. ம.இராமகிருசுணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.