நவம்பர் 2023
மாவீரர் நாள் எழுச்சியை மழுங்கடிக்கச் செய்யும் மடைமாற்ற முயற்சி
மாவீரர் நாள் வரலாறு:
ஈழப் போரில் இறந்த போராளிகளை நினைவுகூறுவதை, மதித்துப் போற்றுவதை தமது அடிப்படைக் கடமைகளில், தத்துவக் கொள்கைகளில் முதன்மையாகக் கருதுபவர்கள் தமிழர்கள்…
கொடியேற்றுதல்:
முதல் மாவீரர் நாளாக நவம்பர் 27, 1989 அறிவிக்கப்பட்டது. அன்று முதல் மாவீரர் நாள் நிகழ்வுகளில் தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றிப் போற்றுதல் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. தமிழீழத் தேசியக் கொடி மாவீரர் குடும்ப உறுப்பினர்களால் ஏற்றப்படும். கொடியேற்றப்படும் போது ஈழத்துப் பாவலர் புதுவை இரத்தினதுரையால் எழுதப்பெற்ற “ஏறுது பார் கொடி ஏறுது பார்…” என்ற உணர்வுமிக்க பாடல் ஒவ்வொரு முறையும் ஒலிக்க விடப்படும்.
மாவீரர் நாள் உறுதிமொழி:
உலகத் தமிழர் அனைவரும் மாவீரர் நாளன்று தமிழ் மக்களைக் காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவர்கள் கண்ட தமிழீழக் கனவை நனவாக்க அரும்பாடுபடுவேன் என உறுதிகூறியும் கீழ்க்கண்ட உறுதிமொழியை எடுப்பார்கள்.
“மொழியாகி,
எங்கள் மூச்சாகி – நாளை
முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை
உருவாக்கும் தலைவன்
வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கு
துயில்கின்ற வேங்கை
வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்
தமிழீழப் போரில்
இனிமேலும் ஓயோம் உறுதி!”
ஈகைச்சுடரேற்றுதல்:
தொடக்க காலங்களில் மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்தது. பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டதற்கும் ஒரு காரணம் உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற்களப்பலியான சங்கர் வீரமரணமடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு. லெப். சங்கர் தனது தாய்நாட்டுக்காகத் தன் உயிர்ச்சுடரை அணைத்துக் கொண்ட அதே நாள், அதே நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர்நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது. ஈகைக்சுடரேற்றும் போது மாவீரர் துயிலுமில்லப் பாடல் பாடப்படும்.
மாவீரர் நாள் உரை:
மாவீரர் நாள் உரை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனால் ஒவ்வோர் ஆண்டும் மாவீரர் நாளில் உரைக்கப்பட்டது. இவ்வுரை தமிழீழத்தில் இருந்து ஆற்றப்பட்டாலும் உலகின் பல நாடுகளுக்கும் நேரடி ஒலிபரப்பாகவும், ஒளிபரப்பாகவும் எடுத்துச் செல்லப்பட்டது. இவ்வுரை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் பற்று கொண்டோர்களால் மட்டுமன்றி, விடுதலையில் அக்கறை கொண்ட மற்றைய அமைப்பினர்களாலும், மாற்றுக்கருத்து கொண்ட அமைப்பினர்களாலும், விடுதலைப்போரையே வெறுப்பவர்களாலும், சாதாரண தமிழ் மக்களாலும், சிங்கள அரசினாலும் கூட மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டுச் செவிமடுக்கப்பட்டது.

தமிழர் எழுச்சியை மடைமாற்றும் முயற்சி:
நவம்பர் மாதம் என்பது தமிழர்களின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த மாதம் ஆகும். தேசியத்தலைவர் பிறந்த நாளோடு, ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் இன்னுயிரை மண்ணின் விடுதலைக்காகத் தியாகம் செய்த வீரமறவர்களையும் நினைவு கூறும் மாதமாக இது இருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் மாவீரர் நாள் அனுசரிப்பு உள்ளிட்ட வரலாற்றுச் சுவடுகளை, அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதைத் தடுக்கும் நோக்கில் திராவிடச் சார்புடைய நடன இயக்குனர் கலா என்பவர், அண்மையில் இலங்கையில் நவம்பர் மாதத்தில் மாபெரும் நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்த முயற்சித்தார்.
புலம்பெயர் தேசங்களில் இருந்து வாழும் தமிழர்கள் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தால், தற்போது அந்த நடன நிகழ்ச்சியை திசம்பர் மாதத்துக்குத் தள்ளி வைத்துள்ளார்கள். இதே நடன இயக்குனர் கலா 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் உச்சக்கட்ட போர் நடந்து கொண்டிருந்தபோது, தமிழ்நாட்டில் அதனால் இனவழிப்புக்கு எதிராகவும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் தமிழக மக்கள் ஒன்றிணைந்து விடக்கூடாது என்ற சில கயவர்களின் சூழ்ச்சிக்கு ஒத்துழைத்து “மானாட மயிலாட” என்ற நடன நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் அரங்கேற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இலங்கை வந்து அங்கிருந்து ஊடகங்களுக்கும் இவர் பேட்டி கொடுக்கிறார். இங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் எப்படியெல்லாம் கொல்லப்பட்டார்கள் என்று இங்கு வந்தே பிறகே தெரிந்து கொண்டேன் என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார். அதைப் பார்த்த திரைப்பட மோகம் கொண்டுள்ள இளம் தலைமுறையினர் பலர், “ஐயோ! இந்த அக்கா அழுவதை பாருங்கள்! எங்கள் மக்களுக்காகக் கண்ணீர் வடிக்கிறார்” என்று பேசி அங்கலாய்த்துக் கொள்வதைப் பார்க்கும்போது “ஆடு நனைகிறதே என ஓநாய் அழுகிறது” என்று சொல்வார்களே, அந்தச் சொலவடையில் சொல்லப்படும் ஆடுகளாக அவர்கள் இருக்கிறார்கள் என எண்ணத் தோன்றுகிறது.
இனமீட்சிக்காக இயக்கம் கட்டிப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளை அவதூறாகப் பேசிய நடிகை குஷ்புவின் வருகையைப் பலர் கண்டித்த நிலையில், அவர் பங்குபெறும் நிகழ்வும் நிறுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி நமக்காக ஈகம் செய்த மாவீரர்களுக்கு மனதார நன்றி நவில வேண்டிய காலத்தில், இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் தேவையற்ற மிகைக்கொண்டாட்டங்களுக்கு இடமளித்து தமிழரின எழுச்சிக்கு உளவியல் தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.
தமிழின உணர்வை மழுங்கடிக்கச் செய்யப்படும் சூழ்ச்சி:
திரைப்படம் என்னும் மாயை மூலம், இன்றைய இளம்தலைமுறையினரை மண் விடுதலை, இனத்தின் உரிமை, எதிர்கால நலன் குறித்த சமூக அக்கறை ஆகியவை குறித்த சிந்தனையின்றித் திரிய வைக்கிறது தமிழ்த்திரைத்துறை. அதிலும் திரைப்படங்களில் புகைப்பது, மது அருந்துவது, போதைப்பொருட்களை உட்கொள்வது போன்ற காட்சிகளைப் பொதுமைப்படுத்தி, கதாநாயகர்கள் போலவே கதாநாயகிகளும் புகைப்பதும், குடிப்பதுமான காட்சிகளை ஏதோ அன்றாட வாழ்வில் இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வைப் போல் காட்சியமைக்கின்றனர். இவை முற்றிலும் தவறான செயல்கள் என்று கற்பிக்க வேண்டிய நிலையில், சில படங்களில் படத்தின் இறுதியில் ஏதோ பெயரளவுக்கு அவர்கள் திருந்துவது போலவும், பல படங்களில் அந்தக் காட்சியும் கூட இல்லாமலும் படைப்புகள் வெளிகின்றன.
இளம் வயதினரைப் பாலியல் ரீதியான தூண்டுதலுக்கு ஆளாக்கும் விதமாக படங்கள் தயாரிக்கபட்டு, ஏதாவது எதிர்மறையான விமர்சனங்கள் எழுகிறது எனில் உடனே சில தரம் தாழ்ந்த மனிதர்களை விவாதம் என்ற பெயரில் அமர்த்தி “அந்தக் காட்சிகளை தவறாகப் பார்க்கக்கூடாது; அவற்றை ஆபாசமாக பார்ப்பது பார்ப்பவர்களின் குற்றம்; அதாவது சமூகத்தின் குற்றம்” என்பது போல மடைமாற்றுவார்கள். இதே மண்ணிலும், சமூகத்திலும் தான் தாங்களும் தங்களது குழந்தைகளும் வாழ்கிறோம் என்ற அடிப்படையை மறந்துவிட்டு இவர்கள் பேசுவது பேராபத்தாகும்.
2009க்குப் பிறகாக முள்வேலி முகாம்கள், சிங்களக் குடியேற்றங்கள், இராணுவமயப்படுத்தல் என நேரடியாகவும், புலிகள் காலத்தில் தடை செய்யப்பட்டிருந்த சாராயம், போதைப்பொருட்கள் மற்ற பல வேண்டத்தகாத கூறுகளை கட்டற்று அனுமதித்து பண்பாட்டுச் சீரழிவுக்கு மறைமுகமாகவும் திட்டமிட்டு வித்திடுகிறது, இலங்கை அரசு. புத்தபிக்குகளின் தமிழர் காணி ஆக்கிரமிப்பு மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து நேரடியாகவே ஊடகத்தில் “தமிழர்களைத் துண்டு துண்டாக நறுக்கிக் கூறு போட வேண்டும்” என்று கொக்கரிப்பதே கள நிலவரமாக இருக்கிறது. இவ்வாறாக ஈழம் மற்றும் தமிழகத்தில், இன உணர்வைக் குன்றச்செய்து, பெருமைமிகு தமது அடையாளங்களை மறந்த, காயடிக்கப்பட்ட அடிமைச்சமூகமாகவே நம்மை வைத்திருக்க பல சூழ்ச்சிச் செயல்திட்டங்கள் நடத்தப்படுகின்றன என்பதை நாம் உணர்ந்து தெளிய வேண்டும்.
நன்றி மறவாதே மனமே! மறந்தால் ஒன்று சேராதே இனமே!
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இன எழுச்சி மாதமாகவும், நவம்பர் மாதம் தலைவர் மற்றும் மாவீரர்களைப் புகழ்ந்தேத்தும் மாதமாகவும் ஏன் அனுசரிக்கப்படுகிறது என்ற வரலாற்றை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டியது தமிழ்த்தேசிய இன மக்களின் தலையாய கடமை என்பதை மறக்கக்கூடாது. இந்த அவசியமற்ற கொண்டாட்டங்கள் நமக்குச் சோறு போடாது; சுதந்திரம் தராது; அடிமைத்தன வாழ்வில் இருந்து மீட்காது; மாறாக நம் பணத்தை நம்மிடம் இருந்து உருவிக்கொள்ளும்; நம்மை நாமே அறிந்து கொள்ள விடாமல் அறியாமை இருளில் தள்ளும். இனிமேலாவது இதுபோன்ற திரைத்துறையினர், மெத்தப்படித்த மேதாவிகள், தொழிலதிபர்கள், கலைஞர்கள் என்ற போர்வையில் வரலாற்றைத் திரிக்கிற முயற்சிகளை முன்னெடுக்கும் நபர்களின் உள்நோக்கம் என்னவென்று தெரியாமல் அவர்களைப் பின்தொடர்வதை, பெரிதுபடுத்திப் பேசுவதைக் கைவிடுவோம். திரைப்படங்கள் மூலமும், ஊடகங்கள் மூலமும் நம்மை அவதூறு செய்வோரை, சரித்திரக் குழப்பம் விளைவிப்போரை உறுதியாகப் புறந்தள்ளுவோம்.
தமிழன் என்று சொல்லடா…!
தலை நிமிர்ந்து நில்லடா…!
தமிழால் இணைவோம்…!
தமிழர்களாய்த் தலைநிமிர்வோம்…!
திரு. இளையராஜா முத்தையா,
துணைச் செயலாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.