நவம்பர் 2023
வரலாற்று நாயகன்
இலக்கினை அடைந்திட வானில் சிறகினை விரித்தாய் தலைவா!
நமது வான்படை கொண்டு சமர்க்களம் நிகழ்த்திய முதல்வா!
போர்க்குணமின்றி வாழ்வில் புரட்சி காண்பது கடினமே!
தமிழ்க்குணம் மாறாது நீ தொட்ட இலக்குகள் அதிகமே!
தமிழினம் உய்ய அறத்தை நெஞ்சில் விதையாக்கினாய்!
பாதையைத் தேடாதே உருவாக்கெனத் துணிவைப் பயிராக்கினாய்!
நல்லொழுக்கத்தை உரமாக்கித் தமிழீழத்தை வளமாக்கியவரே!
தமிழன்னை மடியில் கருவாகி வளர்ந்து மேதகுவாய் உருவானவரே!
மேன்மைக்கடலாம் தலைவர் புகழும் கோபுரமாக உயர்ந்து நிற்குதே!
இருகரம் கூப்பியே தரணியில் தமிழினமும் நித்தமும் தொழுதே!
வான்பிறையில் கூடப் பல குறைகள் கண்டவருண்டு!
பாரறிந்த நம் தலைவரிடம் அவற்றைக் கண்டோரில்லை!
தன்னலம் பாராத தலைவன் என்றும் பொதுநலம் மிகுந்தவர்!
தமிழினத்தின் தலைவனாக வையத்தில் மேதகுவே சிறந்தவர்!
முக்கனியும் சேர்ந்த இன்பத் தமிழ் பேச்சுக்காரர்!
அறுபடைகள் கட்டியாண்ட அன்னைத் தமிழ் அரசனவர்!
தன்மீது உறுதிகொண்ட மக்கள் வாழப் படைகளைத் திரட்டியவர்!
தமிழ்மீது உறுதிகொண்டு போர்க்களங்களில் வெற்றிவாகை சூடியவர்!
தொல்லைகள் தந்தவரைத் தொடை நடுங்கிடச் செய்தவர்!
எல்லைகள் வகுத்து தமிழீழத்தை நாடாக்கித் தந்தவர்!
இடும்பர் சூழ்ச்சியால் நித்தமும் துன்பங்கள் விளைந்திடவே!
சூழ்ச்சியைக் களைந்து சூரப்புலியாய்ப் போராடி வென்றவரே!
தரணியில் வாழும் தமிழர்களின் உள்ளத்தில் நிறைந்தவரே!
தலைவா! உமது அகவைநாளில் வரலாறும் படைத்தீரே!
பாசத்தமிழ் வேந்தனே! கரிகாலனே! தமிழ் மண்ணைப் பாரீர்!
பச்சைத்தமிழ் மாந்தரும் உன்பால் கொண்ட அன்பைக் காணவாரீர்!
வாழிய வாழிய வாழியவே!
மேதகுவின் புகழ் வாழியவே!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.