spot_img

எழுத்தோலை – வெளிநாட்டினருக்கு விற்றல்

டிசம்பர் 2023

எழுத்தோலை

வெளிநாட்டினருக்கு விற்றல்

பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை வெளிநாட்டினர் பல்வேறு வழிகளில் தங்கள் நாட்டிற்கு எடுத்துச் சென்றனர். அவர்களுக்கு உதவியாக  இங்குள்ள தரகர்களும், சில அமைப்புகளும், அவர்களுக்கு உடந்தையாக திராவிட ஆட்சியாளர்களும்  தொடர்ச்சியாகச் செயல்பட்டு வந்திருக்கின்றனர். இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு “தமிழ் மரபு அறக்கட்டளை”  ஓலைச்சுவடிகளை வெளிநாட்டிற்குக் கொண்டு சென்று இணையத்தில்  விற்பனை செய்ததைப் பற்றிய செய்திகள் பரவி தமிழ் அறிவுச்சமூகத்தைப் பரபரப்புக்கு உள்ளாக்கின.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்   ஓலைச்சுவடிகளைச் சேகரிக்கத் திட்டமிட்ட போது, 2001 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தமிழ் மரபு அறக்கட்டளையும் தன்னார்வலராக அந்தத் தேடுதல் பணியில் தன்னை இணைத்துக் கொண்டதாகக் கூறுகிறது.

ஓலைச்சுவடிகள் சேகரிப்பு பணிகள்  இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. அதில் முதன்முறை தேடும்போது பல்கலைக்கழகத்திலிருந்து ஓலைச்சுவடிகள் துறைத் தலைவரும், குழுவினரும் சென்றனர். அவர்களோடு தமிழ் மரபு அறக்கட்டளைக் குழுவினரும் சென்றிருக்கின்றனர். அப்போது  துறைக் குழுவினர் நேரடியாக ஓலைச்சுவடிகளைப் பெற்றுக்கொண்டனர். 

இரண்டாவது முறை பல்கலைக்கழகத்தின் சார்பில் ஒருவர் சென்றார். தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் இந்தப் பணியில் அமர்த்தப்பட்டவரே நேரடியாக ஓலைச்சுவடிகளைச் சேகரித்திருக்கிறார். அவர் தான் பெறப்பட்ட சுவடிகளைப் பதிவு செய்திருக்கிறார்.  தேடிப் பெறப்பட்ட சுவடிகள் திருப்பித் தர வேண்டியவை, திருப்பித் தர வேண்டாதவை எனப் பிரிக்கப்பட்டன.

அறக்கட்டளை சேகரித்த ஓலைச்சுவடிகளை முழுமையாக பல்கலைக்கழகத்தில் ஒப்படைக்கவில்லை. தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ள நாலடியார், சிலப்பதிகாரம், குற்றாலக் குறவஞ்சி போன்ற நூல்களெல்லாம் எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை எனப் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது சேகரிப்பட்ட சுவடிகளில் என்ன தகவல்கள் இருக்கின்றன என்பது குறித்து பல்கலைக்கழகமே பதிவு செய்யாத நிலையில், தமிழ் மரபு அறக்கட்டளை தன்னிச்சையாகவே இணையத்தில்  பதிவு செய்திருக்கிறது.  தமிழ் மரபு அறக் கட்டளையின் வலைப்பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஓலைச்சுவடி நூல்கள் முழுமையாக பல்கலைக்கழகத்தில் ஒப்படைக்கப்படவில்லை.

ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் செய்யும் பணி என்பது எளிதானது  அல்ல. பல்லடுக்கு வேலைகளுக்குப் பிறகு கடைசிக் கட்டமாகத்தான் அது நடைபெறும். எங்களிடம் ஆள் பற்றாக்குறை இருப்பதால் உடனடியாகச் செய்ய முடியவில்லை எனப் பல்கலைக்கழக ஓலைச்சுவடிகள் துறைத் தலைவர் கூறியிருக்கிறார். அரசுத்துறை செய்ய இயலாததை வருமான நோக்குடன் தனியார் அமைப்பு செய்திருக்கிறது.

தமிழ் மரபு அறக்கட்டளை சுபாசினி அவர்கள் ஒரு நேர்காணலில் செய்தியாளரின் கேள்விக்கு, “ஓலைச்சுவடிகளில் இரு வகைகள் உள்ளன. ஒன்று தனிநபர்களின் சோதிடக் கணிப்பு மற்றும் குடும்ப விவரங்கள் அல்லது கோயில்களின் விவரங்கள். இவற்றையெல்லாம் அத்தகைய சுவடிகளை வைத்திருப்போர் பெரும்பாலும் யாருக்கும் காண்பிக்க மாட்டார்கள். இரண்டாவது வகை, படியெடுக்கப்பட்ட நூல்கள்… அதாவது சுவடிகள்.

அப்படி, தனிநபர் பாதுகாக்கும் ஓலைச்சுவடிகள், அதாவது இன்று நம்மிடம் புத்தகங்கள் எப்படி தனிநபர் சேகரிப்பில் உள்ளனவோ அப்படிச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஓலைச்சுவடிகள் பலரது இல்லங்களில் பாதுகாக்கப்பட்டன. எனவே, தனிநபர் பாதுகாப்பிலுள்ள ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் செய்து, அவை உடைந்து அழிவதற்கு முன்னர் மின்படிவமாகப் பாதுகாக்க முயற்சி எடுக்கும்போது அதற்கு உரிமையாளரின் அனுமதி இருந்தால் போதும்.” எனக் கூறியிருக்கிறார்.

பல்கலைக்கழகத்திற்கு உதவியாக தன்னார்வலராக இணைந்து கொண்ட தமிழ் மரபு அறக்கட்டளை, பின்னர் அனைத்து சேகரிப்புகளையும் தனதாக்கிக் கொண்டது. பல்கலைக்கழகத்திற்குத் தானே என ஆயிரக்கணக்கான சுவடி உடைமையாளர்கள் கொடையாக வழங்கிய சுவடிகளையும், விலை கொடுத்து வாங்கப்பட்ட எண்ணற்ற சுவடிகளையும் மின்னாக்கம் என்ற பெயரில் தன்னிடமே வைத்துக் கொண்டது.

பின்னர் இணையத்தில் ஒலைச்சுவடிகள் விற்பனை பற்றியும் விளம்பரம் செய்தது. இந்நிலையில் ஓலைச்சுவடிகள் பற்றிய சிக்கல்கள், ஐயங்கள், கேள்விகள் எழவும் அவ்விளம்பரம் அறக்கட்டளையின் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டது. எழுபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலான பழங்காலப் பொருள்களை எடுத்துச் செல்வது அல்லது பிரதியெடுப்பது சட்டப்படி தவறு. இதற்கு  தமிழ் மரபு அறக்கட்டளை யாரிடம் அனுமதி வாங்கியிருக்கின்றனர்? இதுவரை மின்னாக்கம் செய்யப்பட்ட ஓலைச்சுவடிகள் எங்கே இருக்கின்றன? ஆகிய கேள்விகளுக்கு இன்று வரை விடை கிடைக்கவில்லை.

மக்களின் அறியாமை, ஏழ்மையால் விலைக்கு வாங்கப்பட்ட சுவடிகள், தமிழ் மீது கொண்ட பற்றினால் அரசுக்குக் கொடையாகத் தரப்பட்ட  சுவடிகள் என, கணக்கு வழக்கின்றி இலட்சக்கணக்கான ஓலைச்சுவடிகளை ஒரு தனி அமைப்பு முறைகேடாகச் சொந்தமாக்கிக் கொள்வது, ஓலைச்சுவடிகளை கொள்ளையடிப்பதற்கு ஒப்பானதே. இம்முறைகேட்டிற்கு அரசியல்வாதிகளும் உடந்தையாக இருந்திருக்கின்றனர் எனத் தெரியவருகிறது.

ஆரிய திராவிடத்தின் கூட்டு ஒத்துழைப்புடன், இது போன்ற அமைப்புகளும், கடத்தல்காரர்களும், தரகர்களும் எண்ணற்ற பழங்காலச் சிலைகள், ஓலைச்சுவடிகள், கலைப்பொருட்கள் என தமிழ் மரபுச்செல்வங்களை, நேரடியாகவும் மறைமுகமாகவும் கொள்ளையடித்தனர்; இன்றும் கொள்ளையடித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

இத்தகு குளறுபடிகளுக்கிடையில், சிலைத்திருட்டு, ஓலைச்சுவடிகள், கலைப்பொருட்கள் திருட்டு ஆகியன சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது இதுபற்றி சம்பந்தப்பட்டவர்கள் உட்படப் பலர் கமுக்கமாக இருப்பது மேலும் ஐயத்தை ஏற்படுத்துகிறது.

நாம் தமிழர் கட்சியும் அதன் படைப்பிரிவுகளான தமிழ் மீட்சிப் பாசறையும், வீரத்தமிழர் முன்னணியும் தொடர்ச்சியாக திராவிட, ஆரியத்தின் சாதி, மதத் திருகுதாளங்களை, மரபுவளக் கொள்ளைகளை மக்களின் முன் பேசி விழிப்பூட்டி வருகின்றன. தமிழர்கள் அனைவரும் பெருமளவில் விழிப்புற்று எழுந்தால் ஒழிய, இம்மரபுச் செல்வங்களின் கொள்ளைக்கு விடிவு கிடையாது.

திரு. ம. இராமகிருசுணன்,

செந்தமிழர் பாசறை அமீரகம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles