spot_img

நான்கு மெழுகுவர்த்திகளின் கதை

டிசம்பர் 2023

நான்கு மெழுகுவர்த்திகளின் கதை

இருள் சூழ்ந்த அறை, எங்கு பார்த்தாலும் தூசியும், அழுக்கும்…  அமைதியான அறையின் நடுவே ஒரு மர மேசை; மேசையின் மேல் நான்கு மெழுகுவர்த்திகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு மெழுகிற்கும் ஒரு பெயர் சூட்டப்பட்டிருந்தது. அவை அழகிய மங்கிய மஞ்சள் ஒளியில் அழகாக ஒளிர்ந்து கொண்டிருந்தன. தென்றல் காற்று மெலிதாக வீச, திடீரென்று ஒரு அழுகைக் குரல். அமைதி கலைத்த அந்த தென்றல் காற்று, யார் அழுவது என்று சுற்றிச் சுற்றித் தேடிப் பார்த்தது.

மேசையின் அருகே வந்த போது நான்கு மெழுகுவர்த்திகளில் ஒன்றான “இயற்கை” என்ற மெழுகு கண்ணீர் வடித்து உருகி அழுது கொண்டிருந்தது. அதனிடம் நெருங்கிச் சென்ற தென்றல் காற்று இயற்கை மெழுகிடம் ” ஏன் இயற்கையே… எதற்காக அழுகிறாய் ? என்ன ஆனது ? அழகே உருவான நீ கலையிழந்து அழுவது என்னையும் கவலை கொள்ள வைக்கிறது. என்னவென்று என்னிடம் சொல்! என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.” எனக் கூறியது.

இயற்கையோ அழுகை ததும்பிய குரலில் “எனக்கு வாழவே பிடிக்கவில்லை. என்னை உன் சுவாசக் காற்றால் அணைத்து விடு. இந்த உலகில் நான் ஏன் வாழ வேண்டும்?” என விம்மி அழுதது.

தென்றல் காற்றோ இயற்கையின் அழுகையை நிறுத்த முடியாமல் உறைந்து போய் நின்று,  இயற்கையிடம் இவ்வாறு கூறியது,  “இவ்வுலகில் வாழும் அனைத்து உயிருக்குமே நீ தானே தாய்! நீ இன்றி எந்த உயிருமே வாழ முடியாதே! ஏன் இந்த முடிவுக்கு வருகிறாய்?” எனக் கேட்டது.

இயற்கையோ மறுமொழியாக “இவ்வுலகின் மனிதருக்கு அவன் வாழ அனைத்தையுமே கொடுத்தேன். என் இரத்தத்தை நீராகக் கொடுத்தேன்; என் உடலில் இருந்து மரம், செடி கொடிகளை அவர்களின் வாழ்விடங்களை உருவாக்கக் கொடுத்தேன்; அவர்களின் பசியை அனுதினமும் போக்கினேன்; அவர்கள் சுவாசிக்க என் மூச்சுக்  காற்றையே கொடுத்தேன். இத்தனையும் கொடுத்த என்னால் அவர்களின் பேராசைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. என் ஆடையான மரங்களை எல்லாம் வெட்டி என்னை நிர்வாணமாக்கிவிட்டார்கள்; என் இதயமான மலைகளை வெட்டி கல் குவாரிகளாக மாற்றி என்னைப் பரிதவிக்க விட்டார்கள்; என் தோலை உரிப்பது போல ஆற்று மணலைச் சுரண்டிச் சுரண்டி என்னைத் தொழு நோயாளியாக்கி விட்டார்கள்…”

“இன்னும் எத்தனை எத்தனையோ கொடுமைகள்… ஸ்டெர்லைட் போன்ற ஆலைகள், நிலக்கரி சுரங்கங்கள், ஈத்தேன், மீத்தேன் என என்னுள் துளையிட்டுத் துளையிட்டு புற்றுநோயாளி போல் மாற்றி விட்டார்கள். இதற்கு மேல் நான் ஏன் வாழ வேண்டும்? நான் சாகப் போகிறேன்! இவர்களுக்கு மத்தியில் நான் வாழ விரும்பவில்லை… என்னைக் கொன்று விடு” எனக் கதறி அழுதது. இவற்றை எல்லாம் கேட்டு இதயம் நொறுங்கிப்  போய் நின்றது தென்றல் காற்று. ஆறுதல் கூற மனமில்லாமல் தன் மூச்சுக் காற்றால் இயற்கை மெழுகை அணைத்தது. பின் சோகம் தாளாமல் ஒரு மூலையில் சென்று முடங்கிக் கிடந்தது.

மீண்டும் அந்த அறை பேரமைதியைத் தழுவிக் கொண்டது. சிறிது நேரம் கழித்து திடீரென அலறலும் அழுகையும் அறை முழுதும் எதிரொலித்தது. பதறிப்போன தென்றல் காற்று மேசையின் அருகே சென்று பார்த்தது. இரண்டாம் மெழுகான “பெண்மை” என்ற மெழுகுவர்த்தி அச்சத்துடன் அழுது கொண்டிருந்தது. தென்றல் காற்றால் பெண்மை மெழுகின் அழுகையை நிறுத்தவே முடியவில்லை. “ஏன் பெண்மையே என்ன ஆயிற்று? ஏற்கனவே இயற்கையின் இறப்பால் நான் நொந்து போய் இருக்கிறேன்; நீயும் எதற்காக அழுகிறாய்?” என வினவியது. அதற்கு பெண்மை மெழுகு “எனக்கு வாழவே பிடிக்கவில்லை. என்னையும் கொன்று விடு!” என உருகி அழுதது.

“இயற்கையின் குழந்தையான நான் பெண்மை என்ற பெருமையோடு பிறந்தேன். ஆனால் இனியும் என்னால் மானத்தோடு வாழ முடியாது. எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமைகள்; கண்களாலேயே காம எச்சிலை உமிழும் கயவர்கள்; பள்ளிக்குப் படிக்க சென்றால் கற்பிக்கும் ஆசானே எங்களை வேட்டையாடுகிறான்; பேருந்தில் சென்றால் கண்ட இடங்களில் உரசும் இழிமனிதர்கள்; ஆறு மாதக் குழந்தை என்றாலும் அறுபது வயதுப் பெண்ணாக இருந்தாலும் காமக் கொடூரர்களின் இச்சைக்கு இரையாகிறேன்; ஆணுக்கு பெண் சமம் அல்ல… ஆணும் பெண்ணுமே சமம் என்று பிறந்தேன். ஆனால் ஆணாதிக்கச் சமூகத்தில் எனக்கு நிகழும் கொடுமைகள் ஏராளம்…”

“வரதட்சணைக் கொடுமை, கோவிலில் தீட்டு, இட ஒதுக்கீட்டில் பின் தள்ளப்பட்டு நசுக்கப்படுகிறேன்;  வேலைக்குச் சென்றாவது சமூகத்தில் உயர்ந்திட நினைத்தேன். ஆனால் அங்கோ கண்ணியமிக்க காக்கி உடையை அணிந்தாலும் பொதுக்கூட்டங்களில் நடுவே எனக்கு பாலியல் சீண்டல் கொடுக்கிறார்கள். கை இருந்தும் ஊனமாகக் கூனிக் குறுகி நிற்கிறேன்; எத்தனை எத்தனையோ கொடுமைகள்… நீதி கேட்டு யாரிடம் போவேன்? நீதிமன்றங்கள் அநீதி இழைப்பவர்களின் கூடாரமாக மாறிப்போயின… நீதி தேவதையும் பெண் தான்! ஒவ்வொரு நாளும் நீதி தவறும் போதெல்லாம் அவளும் சீரழிக்கப்படுகிறாள்! ஒவ்வொரு நாளும் இந்தக் கொடும் நெருப்பில் வெந்து வெந்து சாவதை விட, எனக்கு உன் மூச்சு காற்றால் நிம்மதியாக இறந்தால் போதும் என்றிருக்கிறது!” எனத் துடிதுடித்துக் கதறியது பெண்மை மெழுகு. இயற்கையின் இறப்பிலிருந்தே மீளாத தென்றல் காற்று, பெண்மையின் கண்ணீர்க் கதையைக் கேட்டு நொறுங்கிப் போனது. வேறு வழியின்றி தன் மூச்சுக் காற்றை ஊதி, பெண்மை மெழுகின் ஒளியை அணைத்தது.

நிசப்தமான பேரமைதி மீண்டும் அந்த அறையை ஆட்கொண்டது. தென்றல் காற்று மீண்டும் மூலையில் முடங்கிப் போனது. இந்த மயான அமைதி வெகுநேரம் நீடிக்கவில்லை… மீண்டும் ஓர் அழுகுரல்.  ஓவென ஓலமிட்டு அழுதது மூன்றாம் மெழுவர்த்தியான “உரிமை” மெழுகு. தென்றல் காற்று உரிமை மெழுகிடம் வந்து, “உனக்கு ஆறுதல் கூறும் நிலையில் நான் இல்லை. இப்பொழுது தான் இயற்கையும் பெண்மையும் இறந்தனர். அவர்களின் இழப்பையே என்னால் தாங்க முடியவில்லை. நீயாவது என்னுடன் இரு!” எனக் கெஞ்சியது தென்றல் காற்று. அதற்கு உரிமை மெழுகு “இயற்கையும், பெண்மையும் மனிதர்கள் செய்த பெரும் பாவத்தால் இறந்தனர். ஆனால் நானோ மனிதருள் வாழும் சில எளியோருக்காய் அழுகிறேன். இந்த மண்ணில் நான் பிறந்ததே ஒவ்வொரு மனிதரும் அவரவர் மண்ணில் நிறைவாக வாழ்வதற்காக தான்.

ஆனால் இங்கோ ஒரு இனம் மற்ற இனத்தின் நிலத்தைப் பறித்து, உடைமையைப் பறித்து, உணர்வுகளையும் மிதித்து நாடற்ற அகதிகளாய் மாற்றி விட்டார்கள்; தனிப்பட்ட இனவெறிக்காகவும், இரத்த வெறிக்காகவும் குழந்தை என்றும் பாராமல் பெண்கள் என்றும் பாராமல் ஆடைகளைக் கிழித்து அவமானப்படுத்தி, இரக்கமின்றி மானபங்கப்படுத்தி, கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்தார்கள்;  அரசியல் என்ற பெயரில் அத்தனையும் கூறு போட்டு விற்று தன் குடும்பம், தன் சொந்தம் எனச் சொத்து சேர்த்து, அப்பாவி மக்களின் உரிமையைப் பறிக்கிறார்கள்;  பெண்ணுரிமை பேசியவர்கள் பெண்களை பாலியல் சீண்டல் செய்கிறார்கள். கல்வியுரிமையைப் பெற்றுத் தந்தது நாங்கள் தான் என்றவர்கள், இன்று கல்விச்சாலை வியாபாரிகளாக மாறி குழந்தைகளின் கல்வியை விலை பேசுகிறார்கள். மண்ணுரிமை பேசியவர்கள் வண்டி வண்டியாக மண்ணைச் சுரண்டிச் செல்கிறார்கள். கருத்துரிமைக் காவலர்கள் என்றவர்கள் அநீதியை எதிர்த்துப் பேசினால் சட்டம் கொண்டு கழுத்தை நெறிக்கிறார்கள்”

“பிறப்பால் சமம் எனப் பேசியவர்கள் நான் மேல் சாதி… நீ கீழ் சாதி என்கிறார்கள். ஆலயம் சென்று தொழ நினைத்தேன். அங்கேயும் கட்டை போட்டு தடுத்து நானும் செருப்பும் ஒன்றெனக் காட்டுகிறார்கள். உரிமை எனும் நான் மண்ணுள் புதைந்த பிணத்தைப் போல் தான் கிடக்கிறேன். இனியும் என்னால் எழ முடியாது . என்னை மீட்டெடுக்க இம்மண்ணில் யாரும் இல்லை… என்னையும் இயற்கை, பெண்மை போல இறக்கவிடு! போராடித் தோற்றுவிட்டேன்… எனக்கு விடை கொடு!” என்று கதறி அழுதது உரிமை மெழுகு. உறைந்து போன தென்றல் காற்று என்ன செய்வதென்று தெரியாமல் நின்றது. பின்னர் தன் மூச்சு காற்றால் உரிமை மெழுகை ஊதி அணைத்து விடை கொடுத்தது. அறை முழுதும் சோகத்தால் மூழ்கிப் போனது; மனம் நொந்த தென்றல் காற்று மீண்டும் மூலையில் தன்னை முடக்கிக் கொண்டது.

சிறிது நேரம் கடக்கவே அறையின் கதவு மெல்லத் திறந்தது. கதவின் அருகே ஒரு சிறுவன் எட்டிப் பார்த்தான். மெழுகுகள் அணைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் மேசை அருகே வந்தான். இறந்து கிடக்கும் மெழுகுகளைப் பார்த்து விம்மி அழத் தொடங்கினான். இதனைப் பார்த்த தென்றல் காற்று வாயடைத்துப் போய் மௌனமானது. சிறுவனோ தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தான். அவனை நோக்கி கணீர் என்ற கனத்த குரல் கேட்டது. சற்று திரும்பிப் பார்த்தான்; அது நான்காவது மெழுகுவர்த்தியான “நாம் தமிழர்” என்ற மெழுகின் குரல். அது அச்சிறுவனை நோக்கி “என் அன்புக் குழந்தையே அழாதே!” என்று ஆறுதல் கூறியது.

மேலும் அச்சிறுவனைப் பார்த்து “நான் உனக்கானவன்… உன்னோடு நானிருக்கிறேன்; கவலைப்படாதே! யார் உன்னை விட்டுப் போனாலும், ஒரு போதும் நான் உன்னை விட்டுவிட மாட்டேன். நான் உருகி உருகி மண்ணோடு மண்ணாகப் போனாலும், இறுதி வரை உனக்கான வெளிச்சத்தைக் கொடுத்துவிட்டுத் தான் சாவேன்… இவ்வுலகம் உன்னை மட்டம் தட்டி, உன்னால் முடியாது, நீ தோற்றுப் போவாய் எனக் கேலிக்கூச்சல் போட்டாலும் உனக்காக முதல் ஆளாய், உன் வலிகளைத் தாங்க நான் முன்னிற்பேன்.

இருள் நிறைந்த காட்டினுள் வழியறியாமல் நீ நின்றாலும், உனக்கான பாதையைத் தேர்ந்தெடுக்க நான் வெளிச்சம் கொடுப்பேன். என்னில் உள்ள நெருப்பு என் நெருப்பல்ல; அணையாச் சுடரை ஏந்திய மாவீரனின் பெரும் நெருப்பு. ஆகவே என் அன்பு மகனே! கலங்காதே! கண்ணீரைத் துடைத்து கொள். நான் இருக்கும் வரை இயற்கையையும், பெண்மையையும், உரிமையும் இறக்க விட மாட்டேன். என் உயிரைக் கொடுத்தேனும் அவற்றை மீட்பேன். என்னை எடுத்து இறந்து கிடக்கும் மெழுகுகளுக்கு ஒளியை ஏற்று! அவை மீண்டும் உயிர் பெற்று ஒளிரட்டும்” என்று நாம் தமிழர் மெழுகு கூறியதும், அச்சிறுவன் கண்களைத் துடைத்து கொண்டு நாம் தமிழர் மெழுகை கையில் எடுத்து அணைந்து கிடந்த இயற்கை, பெண்மை, உரிமை ஆகிய மூன்று மெழுகுகளையும் பற்ற வைத்தான். மீண்டும் புத்துயிர் பெற்று ஒளிர்ந்த அவை, அறை முழுதும் ஒளி பரப்பின. தென்றல் காற்று இவற்றைக் கண்டு மகிழ்ச்சியில் ஆனந்தமாகச் சுற்றி வந்தது; அச்சிறுவனும் அளவற்ற  மகிழ்ச்சி அடைந்தான்.

அன்பு உறவுகளுக்கு வணக்கம்! இது வெறும் கதையல்ல… இன்றைய சமகால களச்சூழ்நிலை…! இதை மாற்ற நமக்கிருக்கும் கடைசி ஆயுதம் நம் வாக்கு மட்டுமே. இழந்த அனைத்தையும் நாம் மீட்க, நாம் தமிழரின் விவசாயி சின்னத்தைத் தவிர வேறு வழி இல்லை. நாம் தமிழரைத் தேர்ந்தெடுப்போம்! மாற்றத்தை உருவாக்குவோம்!

திரு. வ. இலெனின்,

செந்தமிழர் பாசறை – அமீரகம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles