டிசம்பர் 2023
பெருந்தகப்பன் கோ.நம்மாழ்வார்
இயற்கை வேளாண் விஞ்ஞானி – தமிழ்
நிலத்தின் உழவுத்துறை போராளி!
மரபணு மாற்றிய விதை துறந்து
மரபு விதைகளைப் போற்றியவர்!
இரசாயன உரங்களை மறுதலித்து
இயற்கையெரு போதுமெனக் காட்டியவர்!
உயிர்சார் உற்பத்தி பேணியவர்! – உழவுநம்
பண்பாடு வழிப்பட்டதென நிறுவியவர்!
வேப்ப மரத்தின் காப்புரிமை அயலகப்
பெருநிறுவனம் அநியாயமாய்க் கோரியதே!
“எமது வாழ்வியலில் தவிர்க்க முடியாத
ஓர் அங்கமடா – வேம்பு
தமிழ் முன்னோர் கொடுத்த தங்கமடா!”
என்றுநம் பாரம்பரீயத்தின் பெருமை
அத்தனையும் நம்மாழ்வார் உரக்கக் கூறிடவே
பன்னாட்டுச் சதியும் வீழ்ந்ததுவே!
தமிழ்நிலம் கடல்கொண்ட ஆழிப்பேரலையால்
விளைநிலம் பலவும் பாழாகியதால்
அதன் வளங்களை மீட்க பாடுபட்டார்!
உழவர் ஓங்கிடச் சூடுபட்டார்!
உயிர் வளர்க்கும் உணவு தரும்
வேளாண்மை – புவியில் கடைசி
மனிதன் வாழும் வரை தேவைப்படும்!
அப்போது யார்விளைப்பார் அரிசி?
வியாபாரம் அல்ல விவசாயம் என்று
வீதிவீதியாய் எடுத்துக் கூறியவர்!
இறுதி மூச்சுவரை உழவுபற்றி ஓடியோடி
உறுதியாய் உண்மைகள்பல பேசியவர்!
தாய்நிலம் பேணிய பெருந்தகையான் – அவன்
தமிழ்நில வேளாண் பெருந்தகப்பன்!
வேதம் நான்கும்தமிழ் செய்த மாறனாம்
அன்றைய ஆழ்வார் நம்மாழ்வார்!
வேளாண்மை காக்கத்தமிழ் தந்த வீரனாம்
இன்றைய சீராளர் நம்மாழ்வார்!
திரு. ப. காந்தி மோகன்,
செந்தமிழர் பாசறை – ஓமன்.