சனவரி 2024
குழந்தைகள் நினைவு கூர்ந்த மாவீரர் நாள்
“ஒரு புனித இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்திற்காகப் போராடி, அந்த இலட்சியத்தை அடைவதற்காக தமது வாழ்வைத் தியாகம் செய்த மாவீரர்கள் மகத்தானவர்கள்” – மேதகு வே.பிரபாகரன்.
செந்தமிழர் பாசறை அமீரகத்தின் மகளிர் பாசறை சார்பாக மாவீரர் நாள் இணைய வழியில் டிசம்பர் 23, 2023 ஆம் நாள் முன்னெடுக்கப்பட்டது. ஷார்ஜா புத்தகத் திருவிழா மற்றும் தமிழ்நாடு நாள் கொண்டாட்டங்களின் நடுவே தொடர் விடுமுறை காரணமாக, இந்நிகழ்வு நடத்தத் தாமதமானது என்றாலும், குளிர்காலப் பள்ளி விடுமுறையில் நம் பிள்ளைகள் மாவீரர் நாளின் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக, மாவீரர் நாளை பெரும்பாலான குழந்தைகளின் பங்களிப்போடு நடத்திட ஆவன செய்யப்பட்டது.
குழந்தைகள் ஈழ விடுதலைப் போராட்ட நிகழ்வுகளையும், அதில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் கவிதையாக கட்டுரையாக மாவீரர்களது வாழ்க்கைக் குறிப்புகளாகப் பதிவு செய்தார்கள். இன விடுதலைப் போராட்டத்தில் இன்னும் தீவிரமாக இயங்க அவர்களின் நினைவிடங்களின் முன்னே உறுதி ஏற்றுக் கொள்கின்ற உன்னத நாள் தான் மாவீரர் நாள் என்பதை மாணவர்கள் தங்கள் பேச்சின் மூலம் வெளிப்படுத்தினர்.

தாயக விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, அக வணக்கம் வீரவணக்கம் உறுதிமொழியோடு நிகழ்வு தொடங்கியது. ரோஸ்னா மற்றும் சின்மயி ” கொடி பறக்குது பார் ” என்ற பாடலைப் பாடினார்கள். “தலைவர் பிரபாகரன்” என்னும் காவிய நாயகனையும் மக்களை காத்த மாவீரர்களையும் வாழ்த்திப் பாடுவதாக அமைந்திருந்தது அந்தப் பாடல். தருண் பிரபாகரன், ஆதன் பிரபாகரன், நவிலன் இவர்கள் மூவரும் தங்கள் கவிதைகளால் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள். தக்க்ஷன்யா மற்றும் அத்ரிதா “கல்லறைக்குள் தூங்கும் கண்மணிகள் காலடியில் போட கார்த்திகைப் பூ” கவிதையின்வழி தமது வீரவணக்கத்தைத் தெரிவித்தார்கள்.
எட்ரிக், தளபதி பால்ராஜ் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை தனது வீரியம் மிகுந்த பேச்சினால் பதிவு செய்தார். “மரணத்தை வென்றவர்கள் மாவீரர்கள்” என்று கென்ரீட்டாவும் கவிநிலாவும் கவிதை பாடி வீர வணக்கம் செய்தார்கள். “மாவீரர்கள் இறக்கவில்லை; அவர்கள் விதைக்கப்பட்டுள்ளார்கள்” என்று கார்த்திக் கண்ணன் தனது பேச்சால் அந்த ஒன்றுகூடலை எழுச்சிமிக்க ஒரு நிகழ்வாக மாற்றினார். “ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத் தமிழர்களும் ஈழப்போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வது, மதித்துப் போற்றுவது நமது அடிப்படை கடமைகளில் ஒன்று” என்று இயல்வெண்பா தனது கவிதையில் பதிவு செய்தார்.
இசைக்குழலி மற்றும் குறளினியன் தங்களது இனிமையான குரலில் “இராஜகோபுரம் எங்கள் தலைவன் பாரெங்கும் புகழ்கின்ற எங்கள் தலைவன்” பாடலைப் பாடி வீரவணக்கம் செய்தார்கள். “நாம் இறந்தவர்களுக்காக அழுகிறோம்; ஆனால் மாவீரர்கள் நாம் அழுதவர்களுக்காக இறந்தவர்கள்” என்று சரவணன் தனது கவிதையால் வணக்கம் செலுத்தினார்.
நிகழ்வின் இறுதியாக நம்மிடையே அமீரக செந்தமிழ் பாசறைத் தலைவர் அண்ணன் திரு. இரவி முத்து அவர்கள் நிகழ்வு தொடர்பான தனது கருத்துக்களைப் பதிவு செய்தார். அவருடைய சொற்கள் ஒவ்வொன்றும் குழந்தைகளுக்குத் தாய் -தந்தை தன் குடும்பத்தில் நடந்த நிகழ்வுகளை விளக்குவது போல், நிகழ்வின் முக்கியத்துவத்தை பிள்ளைகளுக்கு தனது பேச்சின் மூலம் கடத்துவதாக அமைந்திருந்தது. உணர்ச்சிப்பூர்வமாக நடந்த இந்த நிகழ்வில் அமீரக செந்தமிழ் பாசறை உறவுகள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.