பிப்ரவரி 2024
எழுத்தோலை
பிற்கால சுவடி திரட்டும் முறைகள்
பன்னிரண்டாம் நூற்றாண்டில் தமிழ் மன்னர்களின் ஆட்சிக்குப் பிறகு சுவடிகளின் பயன்பாடு குறைந்த நிலையில், அந்நியர் ஆட்சிக்காலத்தில் பலவாறான அழிவுகளிலிருந்தும் தப்பிய தமிழ்ச்சுவடிகள் பிற்காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக ஓரளவு தேடித் திரட்டப்பட்டுப் பாதுகாக்கப்பெற்றுள்ளன. இக்காலமே பிற்கால சுவடி திரட்டுதல் காலம்.
அழிவிலிருந்து சுவடிகளைக் காக்கவேண்டி, அவற்றைத் திரட்டும் பணிகளை அந்நியராட்சி அதிகாரிகளான மெக்கன்சி, லெய்டன், பிரௌன், எல்லீஸ் போன்றவர்கள் மேற்கொண்டு, இந்தியாவில் பல்வேறு இடங்களில் இருந்த பல்வேறு வகைப்பட்ட சுவடிகளைத் திரட்டியிருக்கின்றனர்; இச்சுவடிகளின் தொகுப்பே இன்றைய கீழ்த்திசைச் சுவடிகள் நூலகங்களாகத் திகழ்கின்றன.
மெக்கன்சி :
1753இல் ஸ்காட்லாந்தில் பிறந்த காலின் மெக்கன்சி, தமது இருபத்தொன்பதாவது வயதில் ஆங்கில அரசுப் படையின் ஒரு பிரிவுக்கு அதிகாரியாக நியமிக்கப்பட்டதால் சென்னையில் தங்க வேண்டியிருந்தது. அப்போது ஈழத்திற்குச் சென்று, ஈழம் பற்றியச் செய்திகளையும் தொல்பொருள்களையும் திரட்டத் தொடங்கினார். தொடர்ந்து தென்னிந்தியா முழுவதிலும் இப்பணியை மேற்கொண்டார். 1811இல் லார்டு மிண்டோவின் அனுமதி பெற்று, ஜாவாவில் சுவடிகளையும் செய்திகளையும் திரட்டினார். இறுதியாக இந்தியா முழுவதிலும் இப்பணியை மேற்கொண்டிருக்கிறார். இலட்கபணய்யா போன்ற அறிஞர்களைத் தம் சொந்தச் செலவில் இப்பணிக்காக அமர்த்திக்கொண்டு, அவர்களை கிராமங்கள்தோறும் அனுப்பி சுவடிகளைத் திரட்டியிருக்கிறார். இவரது சுவடிகளுள் பெரும்பாலானவை வரலாற்றுச் செய்திகளடங்கியவையேயாகும்; அவையும் செல்வாக்குமிக்க மக்களிடம் எழுதிவாங்கப் பெற்றவையாகும். எவ்வாறாயினும் அந்நியர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் சுவடி திரட்டும் பணிக்கு வித்திட்டவர் காலின் மெக்கன்சி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மெக்கன்சி இறந்தபிறகு 1821இல் கவர்னர் ஜெனரல் ஹேஸ்டிங்ஸ் பிரபு திருமதி மெக்கன்சியிடமிருந்து அச்சுவடிகளைப் பத்தாயிரம் பவுண்ட் விலை கொடுத்து, கம்பெனி சார்பாக வாங்கினார். பிறகு வில்சன் என்பவரால் அவை அட்டவணைப்படுத்தப்பட்டன. அவற்றுள் ஒரு பகுதி இங்கிலாந்திற்கு அனுப்பப்பெற்று இந்திய அலுவலக நூலகத்தில் வைக்கப்பெற்றுள்ளது. ஒரு பகுதி கல்கத்தா பண்டைப்பொருள் சேமிப்பு நிலையத்தில் இருக்கிறது. தென்னாட்டுச் சுவடிகள் சென்னை அரசினர் சுவடி நூலகத்தில் இருக்கின்றன.
லெய்டன் :
1803 முதல் 1811 வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்துவந்த டாக்டர் லெய்டன் என்பவர் ஓலைச்சுவடிகளைத் திரட்டியுள்ளார். அவை தமிழ் உட்பட பல மொழிகளில் ஆனவை. அச்சுவடிகளையும் கிழக்கிந்தியக் கம்பெனியார் விலைக்கு வாங்கி, இலண்டனில் உள்ள இந்திய அலுவலக நூலகத்தில் வைத்தனர்.
சி. பி. பிரௌன் :
1837க்குப் பிறகு இந்திய அரசுபணியில் (Indian Civil Service) உயர் அலுவலராகப் பணியாற்றிய சி. பி. பிரௌன் என்பவர் சிறிது சிறிதாகப் பல சுவடிகளைத் திரட்டினார்; அவை பெரும்பாலும் தாள்-சுவடிகள். சி. பி. பிரௌனின் முயற்சியால் இலண்டனிலிருந்த டாக்டர் லெய்டன் திரட்டிய சுவடிகள், லெய்டனின் மறைவுக்குப் பிறகு இந்தியாவிற்குக் கொண்டுவரப் பெற்றன. மெக்கன்சி, லெய்டன் ஆகியோர் திரட்டிய சுவடிகளுடன் பிரௌன் திரட்டிய சுவடிகளையும் அவ்வப்போது சென்னைக் கல்விச் சங்கத்தில் சேர்த்துப் பாதுகாக்கச் செய்தனர். இம்மூவரின் சுவடிகளும் 1855ஆம் ஆண்டுவரை இக்கல்விச் சங்கத்தில் சேர்க்கப்பெற்றுள்ளன. இவை 1870இல் சென்னை மாநிலக்கல்லூரிக்கு மாற்றப்பட்டன. பேராசிரியர் பிக்போர்டு அவர்களின் தலைமையில் இவற்றிற்கு விளக்க அட்டவணையும் தயாரிக்கப்பட்டது.
அரசினர் சுவடி நூலகம் மேற்குறிப்பிட்ட சுவடிகளையும் விளக்க அட்டவணைகளையும் கொண்ட தனி நூலகம் ஒன்று, 1939 சனவரியில் அமைக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகக் கட்டிடத்தில் அமைக்கப்பெற்ற இந்நூலகம் இன்றுள்ள, மிகப்பெரிய, அரசினர் சுவடி நூலகமாகும். தமிழ்நாடு அரசு இந்நூலகத்தின் மூலம் தொடர்ந்து சுவடிகளைத் திரட்டி, முறைப்படுத்தி, சுவடிகளின் அகரவரிசைப்பட்டியல், விளக்க அட்டவணை ஆகியவற்றை வெளியிட்டுப் பாதுகாத்துவருகிறது.

எல்லிஸ்:
வீரமாமுனிவர் எழுதிய ஏட்டுச்சுவடிகள் பல்வேறு இடங்களில் சிதறிக் கிடந்தன. பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் என்பவர் சென்னை மாவட்ட ஆட்சியாளராக இருந்தபோது 1816இல், சென்னைக் கல்விச்சங்க மேலாளராக இருந்த புலவர் முத்துசாமிப் பிள்ளையை மாவட்டம்தோறும் அனுப்பி, வீரமாமுனிவர் எழுதிய சுவடிகளைத் திரட்டச்செய்தார். அதன்படி தென்னாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திரட்டப்பெற்ற சுவடிகளுள் கொடுந்தமிழ், சதுரகராதி, தேம்பாவணி, பரமார்த்த குருவின் கதை, பேதசு மறுத்தல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை; முழுமையானவை; அவை தொடர்ந்து அச்சிடப்பெற்றன.
எடோர்ட் ஏரியல் :
புதுச்சேரியில் கடற்படைத் தளபதியாகப் பணிபுரிந்த எடோர்ட் ஏரியல் என்னும் பிரஞ்சுக்காரர் 1854 வரை ஓலைச்சுவடிகளையும் அச்சிட்ட நூல்களையும் திரட்டி வைத்திருந்தார். அவருடைய மரணத்திற்குப் பிறகு அவை பாரிஸ் தேசிய நூல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளன.
அந்நியராட்சியின் கீழ் வாழ்ந்த மன்னர்களும் சுவடிகளைத் திரட்டிப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். குறிப்பாக, தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் சரபோஜி அவர்கள், தனது ஆட்சிக்காலத்தில் (கி.பி. 1798-1832) இந்தியா முழுவதும் சுற்றி ஆங்காங்கே கிடைத்த சித்தா, யுனானி, ஆயுர்வேத மருத்துவச் சுவடிகளையும், உடன் கிடைத்த இலக்கியச் சுவடிகளையும் தொகுத்துத் தஞ்சையில் “சரஸ்வதி பண்டாரம்” என்னும் சரஸ்வதி மகால் நூலகம் அமைத்திருக்கின்றார். சில ஜமீன்களும், செல்வந்தர்களும், தமிழறிஞர்களும் சுவடிகளைத் திரட்டியிருக்கிறார்கள்.
பாண்டித்துரைத்தேவர்:
மதுரையில் பாண்டித்துரைத் தேவர் அவர்களின் பெரு முயற்சியால் நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவி, இச்சங்கத்தின் அங்கங்களுள் ஒன்றாக, தமிழ்நாட்டிலுள்ள அரிய தமிழ் நூல்களனைத்தையும் ஒன்றாகத் தொகுத்து வைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் ‘பாண்டியன் புத்தகாலயம்’ ஒன்றும் அமைக்கப்பெற்றது. அச்சில் வாராத நூற்றுக்கணக்காக தமிழ் நூல்கள் இப்புத்தகாலயத்தில் தொகுக்கப்பெற்றன.
கனகசபைப்பிள்ளை:
தாம் சென்ற இடங்களில் எல்லாம் அச்சில் வாராத தமிழ் நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தேடிப் பெறுகின்ற முயற்சியைக் கைக்கொண்டவர் கனகசபைப்பிள்ளைவர்கள். ஏராளமான ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்து வைத்திருந்தார். அவற்றை தாளில் பெயர்த்தெழுதுவதற்கு அப்பாவுப்பிள்ளை என்ற ஒருவரை அமர்த்தி 20 ஆண்டுக் காலமாக தம்முடனே வைத்துக் கொண்டிருந்தார்.
இரா. இராகவையங்கார்:
இராகவையங்கார் அவர்கள் அரிதில் தொகுத்த ஏட்டுச் சுவடிகள் இப்பொழுது பலருக்கும் பயன்படுமாறு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து நூல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி – ஈசுவரமுர்த்திப்பிள்ளை:
திருநெல்வேலி மேலை வீதியில் உள்ள கவிராஜ ஈசுவரமூர்த்திப்பிள்ளை வீட்டில் இருந்த புத்தக அறையைக் கண்ட உ.வே.சா. அவர்கள், தமிழ்ச் சங்கத்தில் முன்பு இப்படித்தான் சுவடிகளை வைத்திருந்தார்களோ என்று விம்மிதமடைந்தாராம். ஏட்டுச் சுவடிகளை அடுக்காகவும் ஒழுங்காகவும் வைத்திருந்தார்கள்; புழுதி இல்லை; பூச்சி இல்லை; ஏடுகள் ஒன்றோடொன்று கலக்கவில்லை என்று கூறி வியப்படைந்த உ.வே.சா. அவர்களைக் கண்ட கவிராஜ ஈசுவர மூர்த்திப்பிள்ளை அவர்கள், “இந்த வீடு ஒன்றுதான் இப்படி இருக்கிறதென்று நீங்கள் நினைக்க வேண்டாம்! இங்கே இன்னும் சில வீடுகளில் பலவகையான ஏட்டுச்சுவடிகள் இருக்கின்றன. ஸ்ரீவைகுண்டம் முதலிய ஊர்களில் பல கவிராயர் வீடுகள் உண்டு. ஆயிரக்கணக்கான ஏடுகளை அவ்வீடுகளிற் காணலாம்” என்று கூறினாராம். இவ்வாறு நிறுவனங்கள், தனியார் என்ற பாகுபாட்டில் சுவடிகள் திரட்டப்பெற்றன என்றாலும், அனைத்தும் பாதுகாத்துவைக்கும் நோக்கமுடையனவாகவே அமைந்தன.
உ.வே. சாமிநாதையர் தொகுத்த சுவடிகள் சென்னையில் உ.வே. சாமிநாதையர் நூலகமாகத் திகழ்கிறது. இவ்வாறு தமிழறிஞர்கள் திரட்டிய சுவடிகள் பல நூலகங்களாகத் திகழ்கின்றதை காணமுடிகிறது. தனியார் திரட்டைப் போல் அண்மைக் காலத்தில் அரசு மற்றும் நிறுவனங்களும் சுவடிகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டு பல சுவடி நூலகங்களை உருவாக்கி இருக்கின்றன. குறிப்பாக, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறை சுவடிகள் நூலகம், சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை ஆசியவியல் நிறுவனம், அடையாறு நூலகம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

தனிமனிதரால் சுவடிகளைத் திரட்டிப் பாதுகாப்பது போல பாரி நிலையம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், உ.வே. சாமிநாதையர் நூலகம், திருவாவடுதுறை ஆதீனம், பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம், திருப்பதி தேவஸ்தானம், பேரூர் ஆதீனம், தஞ்சை ஆதி பீமாராவ் கோஸ்வாமி மடம், திருவான்மியூர் ஆசியவியல் நிறுவனம், சென்னை அடையாறு நூலகம், திருவண்ணாமலை இரமணாச்ரம நூலகம், சென்னை சி.பி. இராமசுவாமி அய்யர் பவுண்டேசன், திருவனந்தபுரம் அரண்மனை நூலகம் போன்ற தனியார் நிறுவனங்களும், திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகம், கல்கத்தா தேசிய நூலகம், தஞ்சை சரஸ்வதிமகால் நூலகம், சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், மைசூர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், ஐதராபாத் தேசிய கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், குதாபக்ஷ் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்,ஈரோடு கலைமகள் கல்விநிலையம் போன்ற அரசு நிறுவனங்களும் திரட்டிப் பாதுகாத்து வருகின்றன.
கற்கும் நிலையில் சுவடிதிரட்டுதல் :
அக்கால கல்வி முறையில் சுவடிகளைத் தேடிப் பெற்றே கற்க வேண்டிய சூழ்நிலை காணப்பட்டமையினால், கற்பதற்காகச் சுவடியைத் தேடித் திரட்டிய சில நிகழ்ச்சிகளையும் காண வேண்டியுள்ளது. தொடக்கக் கல்வியைக் கற்றவர்கள், மேற்கல்வியைக் கற்க விரும்பியவர்கள்,
மேலும் சில சிறந்த நூல்களைக் கற்க விரும்பினார்கள். விரும்பியவர்கள் தாம் விரும்பிய நூலைக் கற்பிக்கும் ஆசிரியரைத் தேடிச் சென்றனர். அவ்வாறு கற்க விரும்பும் நூல்களை முன்கூட்டியே எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். விரும்பிய நூலைப் பலவிடத்தும் தேடிச் சென்றே பெற்றனர். தம்மிடம் இல்லாத சுவடிகளைப் பிறரிடம் வாங்கிக் கொண்டோ படியெடுத்துக்கொண்டோ எடுத்துச் சென்றிருக்கின்றனர்.
பெற்ற நூல்களைப் படியெடுத்துக் கொண்டு உரியவரிடம் திருப்பிக்கொடுத்து வந்தனர். இம்முறையில் சுவடிகளைத் திரட்டிப் படித்தவர்களில் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ.வே. சாமிநாதையர், யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். பிறர் படிப்பதற்காகவும் பலர் சுவடிகளைத் தேடிக் கொணர்ந்திருக்கின்றனர். மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் படிக்க விரும்பிய சுவடிகளைச் சண்பகக் குற்றாலக் கவிராயர் தேடிக் கொணர்ந்திருக்கின்றார்.
அச்சிடுவதற்காகத் திரட்டிய சுவடிகள்:
சுவடிகளை அச்சேற்றம் செய்வதற்காகவும் சுவடி திரட்டும் பணி நடந்திருக்கிறது. சி.வை. தாமோதரம் பிள்ளை, சிவன்பிள்ளை, கனகசபை பிள்ளை, உ.வே. சாமிநாதையர் போன்றோர் திரட்டிய சுவடிகள் பல அச்சேற்றம் பெற்றிருக்கின்றன. திருத்தப் பதிப்பு செய்வதற்காகவும் பலர் சுவடி திரட்டும் பணியைச் செய்திருக்கின்றனர். குறிப்பாக, ஔவை சு. துரைசாமிப்பிள்ளை, உ.வே. சாமிநாதையர் போன்றோர் இப்பணிக்காகவும் சுவடிகளைத் திரட்டி இருக்கின்றனர்.
அச்சுக்கலை தோற்றத்தின் காரணமாக படிப்பதற்காகவும் பாதுகாக்கவும் திரட்டிய சுவடிகள், படிப்படியாக இன்றுவரை பற்பல எண்ணிக்கையில் அச்சேறி வருகின்றன. இப்பதிப்புகள் சுவடிப் பதிப்பாகவும், திருத்தப் பதிப்பாகவும் வெளிவந்துள்ளன. தனியார் முதல் நிறுவனங்கள் வரை இச்செயலில் ஈடுபட்டுள்ளன. பல பதிப்பாசிரியர்கள் தங்களின் ஆர்வத்தால் சுவடிகளைப் பதிப்பித்து இருக்கிறார்கள். குறிப்பாக, ‘சென்ற நூற்றாண்டின் முதற்பகுதியில் அ. முத்துசாமிப்பிள்ளை, புதுவை நயனப்ப முதலியார், முகவை இராமானுஜ கவிராயர், வீராசாமிச் செட்டியார், திருத்தணிகை சரவணப் பெருமாளையர், திருத்தணிகை விசாகப்பெருமாளையர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவர்கள் பதிப்பாக நாலடியார், திருக்குறள், ஆத்திசூடி முதலிய நீதிநூல்களும், நன்னூல், அகப்பொருள் விளக்கம், வெண்பாமாலை, தண்டியலங்காரம், நேமிநாதம் முதலிய இலக்கண நூல்களும், தஞ்சைவாணன் கோவை, பெரிய புராணம், அந்தாதி, சதகம், கோவை முதலிய சிற்றிலக்கியங்களும் அச்சாயின.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல புராண நூல்கள், கம்பராமாயணம், பாரதம், கந்தபுராணம், காஞ்சிப்புராணம், தணிகைப் புராணம் முதலிய புராணங்கள், பல்வேறு வகையான சிற்றிலக்கியங்கள், இலக்கண நூல்கள் பல வெளிவரலாயின. வடலூர் வள்ளலாராகிய இராமலிங்க சுவாமிகள், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தியாகராச செட்டியார், சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார், எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை, கோமளபுரம் இராசகோபாலப் பிள்ளை, திருமணம் செல்வக்கேசவராய முதலியார் ஆகியோர் சுவடிப்பதிப்புகளை வெளிக்கொணர்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாவர். டாக்டர் உ.வே. சாமிநாதையர் காலத்தில் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், இராசகோபால அய்யங்கார், வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார், மறைமலையடிகள், சுன்னாகம் அ. குமாரசாமிப்பிள்ளை, வ.உ. சிதம்பரம்பிள்ளை ஆகியோரும் சுவடிப்பதிப்புப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து சங்கம், கழகம், நிறுவனம், பல்கலைக்கழகம் எனப் பல அமைப்புகளின் வாயிலாகச் சுவடிப்பதிப்புகள் முதற்பதிப்புகளாக (திருத்தப் பதிப்பு/சுத்தப் பதிப்பு) வெளிவரலாயின. இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் மதுரைத் தமிழ்ச் சங்கம் வாயிலாகப் பல சுவடிப்பதிப்புகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக, இரா. இராகவையங்கார், மு. இராகவையங்கார், திரு. நாராயணையங்கார், சேற்றூர்ச் சுப்பிரமணியக் கவிராயர், மு.ரா. அருணாசலக் கவிராயர், மு.ரா. கந்தசாமிக் கவிராயர், தி.கி. இராமானுஜ ஐயங்கார், டாக்டர் உ.வே. சாமிநாதையர், பேரா. வையாபுரிப்பிள்ளை ஆகியோரின் பதிப்புகள் இதிலடங்கும்.
சென்னையில் சரவணப்பவானந்தம் பிள்ளையவர்கள் நிறுவிய பவானந்தர் கழகத்தின் வாயிலாக பவானந்தர், கா.ர. கோவிந்தராஜூ முதலியார், மகாவித்துவான் மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை ஆகியோரின் பதிப்புகள் வெளிவந்துள்ளன. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னைக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், உ.வே. சாமிநாதையர் நூலகம், ஆசியவியல் நிறுவனம், திருப்பதி தேவஸ்தானம் திருவேங்கடவன் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களும் சுவடிப்பதிப்புகளாகப் பல பதிப்புகளைப் பலப்பல பதிப்பாசிரியர்களைக் கொண்டு வெளியிட்டுள்ளன.
திருத்தப் பதிப்பிற்காகத் திரட்டிய சுவடிகள்:
சுவடிப்பதிப்பு வெளியிடுவதிலும் சுத்தப்பதிப்பாக, திருத்தப்பதிப்பாக வெளியிடுவதில் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை, உ.வே. சாமிநாதையர், பேரா. வையாபுரிப்பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். ஆறுமுக நாவலர் அவர்கள் பல சுவடிகளை ஒப்பு நோக்கி, உண்மைப் பாடங்களை வரையறுத்துப் பிழையின்றி நூல்களை அச்சிட்ட பெருமைக்குரியவர். திருக்குறள், பெரியபுராணம், திருவாசகம், திருக்கோவையார், வில்லிபாரதம், சூடாமணி நிகண்டு, தொல்காப்பியச் சொல்லதிகாரச் சேனாவரையர் உரை, நன்னூல் காண்டிகையுரை, நன்னூல் விருத்தியுரை முதலியன இவர்தம் திருந்திய பதிப்புகளாகும்.
சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் பல சுவடிகளை ஒப்புநோக்கி மூலபாடம் உரைபாடங்களை எழுத்து வேறுபாடுகளால் அமைத்துத் தந்துள்ளார். வீரசோழியம், தொல்காப்பியம்-சொல்லதிகாரம் மற்றும் பொருளதிகாரம், இறையனார் அகப்பொருள், இலக்கண விளக்கம், கலித்தொகை, சூளாமணி, தணிகைப்புராணம் முதலியன இவர்தம் பதிப்புகளாகும்.
டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் சங்க நூல்களுள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகையுள் புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் என்பவற்றையும், ஐம்பெருங்காப்பியங்களுள் சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றையும் சீரிய முறையில் பதிப்பித்துள்ளார். இவை தவிர, நன்னூல் மயிலைநாதர் உரை, புறப்பொருள் வெண்பாமாலையுரை, பெருங்கதை, திருவிளையாடற்புராணம், அந்தாதி, உலா முதலிய பல சிற்றிலக்கிய வகைகளிலும் நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
பேரா. வையாபுரிப்பிள்ளை அவர்கள் நாமதீபநிகண்டு, பொதிகை நிகண்டு, அரும்பொருள் விளக்க நிகண்டு, கயாதர நிகண்டு, தொல்காப்பிய பொருளதிகாரத்தின் இளம்பூரணர் உரை முதலிய நூல்களைப் பதிப்பித்துள்ளார். இவர்களன்றி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கம்பராமாயணக் காவியத்தை காண்டங் காண்டமாகச் சுவடி நுண்பதிப்பாக வெளியிட்டுள்ளார்கள். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையின் வாயிலாகத் தொல்காப்பியம் செய்யுளதிகாரம் மற்றும் பொருளதிகாரம், குறுந்தொகை, சீவேந்திரர் சரிதம், செழியதரையன் பிரபந்தங்கள், ஆத்திசூடி, அகத்தியர் வைத்திய காவியம் 1500, நோயும் மருந்தும், வைத்திய சிந்தாமணி, நான்மணிக்கடிகை, சாந்தாதி அசுவமகம் போன்ற நூல்களைப் பதிப்பித்துள்ளனர்.
திரட்டுதலின் பயன்கள்:
எழுத்து வடிவம் பெற்றுப் பலவிடங்களில் முடங்கிக் கிடந்த சுவடிகளைத் தேடித் தொகுத்ததின் விளைவாக பல நூல்கள் அச்சேற்றம் பெற்று தமிழை வளம் பெறச் செய்திருக்கின்றன. அச்சேற்றம் பெற்ற நூல்களுக்கு மேலும் சுவடிகள் கிடைக்குமாயின் பாடவேறுபாடு-மூலபாடம் ஆகியவற்றைத் தெளிந்து பதிப்பிக்க உதவியிருக்கின்றன.
ஒரு நூலுக்கான சுவடிகள் ஒரே மாதிரியாகக் கிடைப்பதில்லை. சுவடி திரட்டும் போது ஒரு நூலின் மூலம் மட்டுமோ, உரை மட்டுமோ, மூலமும் உரையும் மட்டுமோ, புத்துரையாகவோ கிடைக்கலாம். அவை முழுமையாகவோ குறைவாகவோ கூடக் கிடைக்கலாம். முதலும் முடிவும் இல்லாததாகவும், இடையிடையே சில பகுதிகள் இல்லாததாகவும் கிடைக்கலாம். இவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ஒப்பு நோக்குவோமாயின் திருத்தமான- தெளிவான-சரியான-முழுமையான பாடத்தைத் தெளிய வாய்ப்பேற்படும்.
அச்சான நூல்களின் சுவடிகளுள் மூலம் மட்டும் கிடைப்பின் மூல வேறுபாடுகள் திருத்தம் பெறுகின்றன. உரையுடன் கிடைப்பின் மூலபாட வரிகள், உரையில் மீண்டும் எடுத்தாளப்பட்டுள்ள அவ்வரிகள், உரையின் பொருத்தம் ஆகியவற்றின் துணைகொண்டு பொருத்தமான மூலபாடத்தை உறுதிப்படுத்த இச்சுவடிகள் பயன்படும். சுவடி தொகுத்தலின் பயனாக புதிய நூல்களின் பெயர்களைத் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிட்டும். இப்புதிய நூல்களின் வரவால் தமிழ் இலக்கிய இலக்கண எல்லை பெருகும்.
திரு. ம. இராமகிருசுணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.