மார்ச் 2024
நாம் தமிழர் கட்சி – ஆக்கமும் நோக்கமும்
நாம் தமிழர் கட்சியை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, தமிழ்நாட்டின் மற்ற கட்சிகள் போன்று நாம் தமிழர் கட்சியும் ஒரு அரசியல் கட்சி தான் எனச் சிலர் எண்ணுகின்றனர். ஆனால் சற்று ஆழமாகப் பார்த்தால் தான், அதன் நோக்கம் அக்கட்சிகளினின்று வேறுபட்டது என்பது தெரியும். “வெறுமனே ஆட்சிக் கட்டிலில் அமரும் நோக்கில் தோன்றியதல்ல இக்கட்சி; தமிழருக்கேயுரிய மரபுவழித்தாயகங்களினைத் தமிழரல்லாதோரின் பிடியில் இருந்து மீட்டெடுத்து, தமிழர் ஆட்சியுரிமையை மீளப்பெறுவதையும், தமது இயற்கை வளங்களைக் காப்பதையும், தரம் தாழ்ந்த அரசியலில் தடம் தெரியாது வீழ்ந்து கிடக்கும் பல இலட்சக்கணக்கான இளைஞர்களை மீட்டெடுத்துத் தமிழ்த் தேசிய அரசியல் பயிற்றுவித்தலையும் தனது உன்னதமான நோக்கங்களாகக் கொண்டிருக்கும் கட்சியிது” என்ற உண்மை புரியும்.
நடைமுறை அரசியலில் ஏற்படும் சிறுசிறு குறைகளைக் காணாது நாம் நிறைகளைப் பார்க்க வேண்டும். இனவழிப்பின் பேரூழிக்குப் பின், இரத்தசகதியினூடே முளைத்த நாம் தமிழர், தமிழருக்கான புதிய வரலாற்றை பல்வேறு தடைகளுக்கும் துன்பங்களுக்குமிடையே தன்னந்தனியே நின்று தளராமல் தானே படைத்துவருகிறது. நம் அளவுக்கு திராவிடத்தையும், தீய ஆரியத்தையும் எதிர்க்கும் திறனுள்ளோர் உண்டா? துணிவுள்ளோர் உண்டா..?
திட்டமிட்டே தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆட்சி செய்யக்கூடாது என அவர்களைச் சாதி மத சாராய போதைக்கு அடிமையாக வைத்து, பொறுப்பற்ற முறையில் பொழுதுபோக்கும் சோம்பேறிகளாக மாற்றி, நாட்டைக் கொள்ளை அடித்து, வளவேட்டை நடத்தி மண்ணையும், நீரையும், காற்றையும், கடலையும் மாசுபடுத்தி, அடுத்த தலைமுறை வாழ வழியில்லாத நிலைக்குத் தமிழ்நாட்டைத் தள்ளியிருக்கும் ஆண்ட அரசுகளின் கயமைத்தனத்தை உணர்ந்து தெளிந்தால் மட்டுமே, நாம் தமிழர் கட்சி பேசும் அரசியல் இங்குள்ளோர்க்கு விளங்கும்.
என்று ஓரினம் தமது இறையாண்மையை இழக்கிறதோ அன்று முதல், அதன் அடையாளங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் அழிப்புக்கு உள்ளாகும்; வளங்கள் சூறையாடப்பட்டு, மக்கள் உரிமைகள் பறிக்கப்படும்; அவ்வினத்தின் பெருமைகள் இருட்டடிப்பு செய்யப்பட்டு வரலாறு திரிக்கப்படும்; மொழி பண்பாடு சிதைவதால் சொந்த நிலத்திலேயே நாம் அடிமைகளாக வாழ நேரிடும்.
இத்தனையும் தமிழருக்குச் சமகாலத்தில் நிகழ்வதைக் கண்டு கவலைகொள்ளாமல் இருப்பது பெரும் ஆபத்து. தமிழ்நாட்டையும், அதன் எதிர்காலத் தலைமுறை தமிழ்ப் பிள்ளைகளையும் காப்பாற்றப் பாடுபடும் மானத்தமிழர் கூட்டம் கொண்ட இயக்கம் நாம் தமிழர் தான். இது மற்றுமொரு அரசியல் கட்சியன்று; மாற்றத்துக்கான எளிய மக்களின் புரட்சி!
திரு. சி.தோ. முருகன்,
துணைச் செயலாளர்,
இணையதள பாசறை,
செந்தமிழர் பாசறை – குவைத்.