spot_img

இனமீட்சியின் தொடக்கம் – உலகத் தமிழர் ஒற்றுமை!

மே 2024

இனமீட்சியின் தொடக்கம் – உலகத் தமிழர் ஒற்றுமை!

“உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம்.

எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம்.

பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களை எல்லாம் தனித்து நின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.

இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.”

2008 மாவீரர் நாள் உரையில் தேசியத் தலைவர் குறிப்பிட்ட கருத்துக்களில் முக்கியமானது மேற்காண் கூற்று. எந்த சூழ்நிலையிலும் எவ்வளவு பெரிய சிக்கலைத் தமிழினம் சந்திக்கும்போதும், அதனை எதிர்கொண்டு வெல்ல நமக்கிருக்கும் ஒரே வழி – உலகத்தமிழர் ஒற்றுமையே என்பது தான், வரிகளுக்கிடையே வாசிக்கும்போது, தலைவர் நமக்குச் சொல்லும் செய்தி. 

தமிழினப் படுகொலை – ஒரு சுருக்கமான வரலாறு:

உலகெங்குங்கும் வசிக்கும் மாந்தர்கூட்டத்தில், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மைவாய்ந்த வரலாறு கொண்ட சில இனங்களுள் தமிழ் இனம் முக்கியமானது. கோடிக்கணக்கான மக்களைத் தன்னகத்தே கொண்ட இவ்வினம் உலகெங்கும் பல நாடுகளில் பரவி வாழ்ந்து வந்தாலும், தனக்கான மரபுவழித் தாயகப்பரப்பில் தன்னாட்சி உரிமையுடன் கூடிய ஒரு நாட்டைக் கோரியமைக்காக உலக நாடுகளின் ஒத்துழைப்பில், இந்திய ஒன்றியத்தின் மேற்பார்வையில், சிங்கள பௌத்தப் பேரினவாத இலங்கை அரசால் ஈழத்தில் தமிழினவழிப்பு கற்பனைக்கும் எட்டாத கொடூரத்தோடு நடத்திமுடிக்கப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கைத் தீவில், ஆங்கிலேயரது பிரித்தாளும் சூழ்ச்சி காரணமாக, சிங்களருக்கும் தமிழருக்குமான உரிமைப் பகிர்வு தொடர்பான பிணக்குகள் இனமோதலாக வெடித்து, இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழின அழிப்பில் வந்து நின்றன என்பதே பொதுவான அவதானிப்பு.  என்றாலும் இதன் பின்னணியில் தமிழரை அழித்தொழிக்க எண்ணிய, அது குறித்து தொடர்ச்சியாகப் பேசி வந்த, திட்டமிட்ட செயல்படுத்திய, இதற்கு கணக்கின்றி உதவிய, இது தொடர்பில் ஏதும் செய்யாமல் வேடிக்கை பார்த்த, இந்த மனிதப் பேரவலத்தை இரசித்த ஆற்றல்களுக்கும் தமிழருக்குமான முரண்பாடுகளும், வெறுப்புணர்வும், பாரபட்சமான மனநிலையும் இந்த ஒரு நூற்றாண்டுக்குள் உண்டானவை எனச் சுருக்கிவிட இயலாது.

தமிழரின் அதிகாரப்பரவல் மற்றும் அதனோடு நேரடியாகத் தொடர்புடைய சமூகப் பொருளாதார பண்பாட்டு மெய்யியல் தளங்களில் நம்மினம் பலரோடு பொருதியதால் பெற்ற வெற்றி தோல்விகள், அதன் நேர்மறை மற்றும் விளைவுகளுடன் கூடிய பல்லாண்டுகால வரலாற்றுப் பின்புலத்தில், தமிழினப் படுகொலையை ஆய்வது, காலத்தின் கட்டாயம். அதன் மூலமாகவே பல இலட்சக்கணக்கான தமிழர்களின் உரிமை, உயிர் உடைமை, வாழ்வாதாரம் பறிபோன பேரழிவின் அடிமுடியை நாம் அறிய இயலும். ஒரு வகையில் இதுவரை இழந்தவற்றை மீளப்பெறவும், இருப்பதைத் தற்காத்துக் கொள்ளவும் நமக்கிருக்கும்  வாய்ப்புகளைத் தெரிந்தெடுக்க இந்தப் புரிதல் மிக அவசியம்.

இனவழிப்புக்கான காரணங்களும், கருத்தாக்கங்களும்:

அண்மைக்கால உலக அரசியல் போக்கில், இரண்டு உலகப் போர்களின் முடிவில் புதிதாகத் தோன்றிய  தெற்காசிய நாடுகளில், இந்திய ஒன்றியத்துக்குள்ளும், இலங்கைக்குள்ளும் தமிழர் சிறுபான்மைகளாகிவிட்டது தான், தமிழர் எதிர்கொண்ட இனப்படுகொலைக்கு அடிப்படைக் காரணம் என அறுதியிட்டுச் சொல்ல முடியும். உலகின் மிகப்பெரும் மக்கள்தொகையைக் கொண்ட இந்திய ஒன்றியம் எனும் இந்நாட்டில் வாழும் பல்வேறு தேசிய இனங்களில் ஒன்றாகத் தமிழினம் சுருங்கிப் போனது.

ஐரோப்பியக் கண்டத்தின் பல நாடுகளை விடவும் பெரிய நிலம் மற்றும் அதிக மக்கள் தொகை அளவை தமிழ்நாடு கொண்டிருந்தாலும், அதற்குள் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், இந்திய ஒன்றியத்தின் அரசமைப்பின்படி கட்டுப்படுத்தப்பட்ட குறைந்தபட்சமான சமூகப்பொருளாதார அரசியல் உரிமைகளை மட்டுமே கொண்டிருக்கும் ஒரு மாநிலத்துக்குள் தமிழர் அடைபட்டுப் போனது, ஒரு இனப்படுகொலையைத் தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாத இயலாமைக்குள் தமிழரைத் தள்ளியது. இது எவ்வளவு உண்மையோ, அதை விடவும் சுடும் உண்மை என்பது தமிழருக்கு அந்தக் குறைந்தபட்ச உரிமைகளைப் பெற்றுத்தர வேண்டிய அதிகாரமட்டத்தில் தமிழர் அல்லாத தலைமைகள் இல்லாததால் தான், அன்று இனப்படுகொலையை எதிர்த்து மனிதாபிமான அடிப்படையில் கூடத் தமிழ்நாடு உரத்த குரல் கொடுக்க முடியாமல் போனது தொடங்கி, எழுந்த சில குரல்களும் முற்றுமுழுதாக அடக்கப்பட்டது, இன்றுவரை மே மாதத்தில் நினைவேந்தல் கூட நடத்த இருக்கும் தடைகள் ஆகியன தொடர்வதற்குக் காரணம் என்பதும்.

தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தமிழ் நாட்டில், தமிழருக்கென்று மக்களாட்சி அடிப்படையில் ஒரு அரசு இருக்கும்போது, இனப்படுகொலை நடந்து முடிந்த இத்தனை ஆண்டுகளில் ஒரேயொரு முறையேனும் இறந்த தமிழர்களை நினைவு கூர அரசு சார்பாக ஒரு நிகழ்வு நடந்துள்ளதா? என்ற கேள்விக்கும், இந்த அரசு தமிழுக்கும் தமிழருக்குமானதா என்ற கேள்விக்கும் ஒரே பதில் இல்லை என்பது தான். “உலகெங்கும் விடுதலைப் போராட்டங்கள்” எனும் நூலில் தமிழர்: எழுச்சி – வீழ்ச்சி – நீட்சி, தமிழீழ விடுதலைப் போராட்டம், ஈழத்தின் குருதிக்குளியல் – இந்தியத்தின் இனப்பகை ஆகிய கட்டுரைகளில் ஐயா மணியரசன் அவர்கள் விளக்கும் கருத்துகள், நமக்குள் பல கேள்விகளை எழுப்புகின்றன.

ஆரிய வருணாசிரமக் கொள்கையைத் தனது தத்துவமாகக் கொண்டு, சமூகம் மற்றும் அரசியல் அதிகாரத் தளத்தில் முற்றுரிமை பெற்ற பார்ப்பனர்களும், பொருளாதாரத் தளத்தில் மேலாதிக்கம் செலுத்தும் மார்வாடி குஜராத்தி சேட்டு பனியாக்களும் சேர்ந்து, இந்தி பேசும் மாநில மக்களின் மூலம் பெற்ற பெரும்பான்மையைப் பயன்படுத்தி மற்ற தேசிய இனங்களை, குறிப்பாகத் தமிழர்களை ஒடுக்குகின்றனர்; இந்திய தேசியம் என்பதே இந்தி – இந்துத்துவத்தை அடிப்படையாக கொண்டது தான்; இந்த இந்திய ஒன்றியக் கட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் காங்கிரஸ், பாஜக, பொதுவுடைமைக் கட்சி என எது இருந்தாலும் அது தமிழருக்கு எதிராகவே இயங்கும்; இந்திய ஒன்றியத்தின் மிகப்பெரிய சந்தையைக் கட்டுப்படுத்துவதிலும், இந்நாட்டின் இயற்கை வளங்களைச் சுரண்டுவதிலும் உள்நாட்டு வெளிநாட்டுப் பெருமுதலாளிகளின் வேட்டைக்கு ஒத்துழைக்க நினைக்கும் இந்தத் தலைமைகள், தேசிய இனங்கள் தன்னாட்சி உரிமையுடன் இருப்பதை விரும்பமாட்டா” என ஐயா மணியரசன் கூறுகிறார்.

இந்திய ஒன்றியம் இவ்வாறாக தமிழ்நாட்டுத் தமிழர்களை ஒடுக்குவது போன்றே, புத்த பிக்குக்கள் ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட்ட சிங்கள பௌத்தப் பேரினவாத இலங்கை அரசு, தமிழர்களை ஒடுக்கி அழிக்க எண்ணும்போது அங்கு எழுந்த விடுதலைப் போராட்டம், அகிம்சை வழியில் வெற்றியடையாத போது, ஆயுதக்குழுக்கள் தோன்றின. பல்வேறு துரோகங்கள் மற்றும் சூழ்ச்சிகளுக்கிடையே ஈழத்தமிழரின் ஒருமித்த குரலாக புலிகள் காலப்போக்கில் பரிணமித்து ஆயுதப்போரியல் சமநிலையை எட்டிய போது, அது இந்திய ஒன்றியத்துக்கு மட்டுமில்லை; அனைத்துலகுக்குமே உவப்பானதாக இல்லை என்பதற்குக் காரணம்,  தொன்றுதொட்ட தமிழரின் வரலாறுதான்.

இலங்கையைக் கட்டுக்குள் வைத்திருக்க நினைத்த இந்திய ஒன்றியம், இனப்பகை காரணமாக தனது பாதுகாப்புத் தேவைகளையும் விட தமிழின அழிப்புக்கே முன்னுரிமை கொடுத்தது. இந்தியச் சந்தை வாய்ப்புகள் மற்றும் இந்திய ஒன்றியத்தை வைத்து தெற்காசியப் பகுதியில் சீனாவைக் கட்டுப்படுத்த நினைத்ததால், மேற்குலக நாடுகள் இந்தியத்தின் மோசமான நிலைப்பாட்டைக் கண்டிக்க முன்வரவில்லை. சொல்லப்போனால் “ஓபரேசன் பியேகான்” என புலிகளை அழிக்கத் திட்டம் தீட்டி கொடுங்கோலன் இராஜபக்சேவுக்குத் தந்ததே மேற்குலக நாடுகள் தாம். சீனாவின் பிடிக்குள் இலங்கை போகாமலிருக்க, கச்சத்தீவு முதற்கொண்டு பல கோடிகளை வாரியிறைத்தும் இலங்கையின் தேர்வு என்றுமே சீனா தான் என்பதை இன்றுவரை இந்திய ஒன்றியம் உணரவேயில்லை.

புலிகளை மட்டுமல்ல; வடக்கு கிழக்கு ஈழத்தில் வாழும் தமிழர் ஒவ்வொருவரையும் கொல்லத் துணிந்து, ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்தை சீனாவின் துணையோடும், இந்திய ஒன்றியத்தின் மேற்பார்வையோடும் குரூரமாக ஒடுக்கிய இலங்கை, இன்று சீனாவின் காலனி நாடு போல மாறியதை இந்திய ஒன்றியத்தால் தடுக்க இயலவில்லை. இத்தனைக்குப் பின்பும், இன்றைய இந்திய ஒன்றியத்தின் மோடி தலைமையிலான பாஜக அரசு, தமிழகத்திலும் ஈழத்தில் தனது அடிப்பொடிகள் மூலம் குழப்பம் விளைவித்து “இந்துத் தமிழீழம்” அமைக்கவிருப்பதாகக் கூறி திரைமறைவு வேலைகள் நடத்திவருகிறது. இலங்கையோ, தனது அரசின் அரசியல் நிச்சயமற்ற தன்மையைச் சரிசெய்வதைக் காட்டிலும் இன்னும் தமிழர் பிரதேசங்களில் இராணுவக் கட்டுப்பாடு, சிங்களக் குடியேற்றங்கள், காணி பறிப்பு, கட்டற்ற போதைப்பொருள் விநியோகம், புத்த பிக்குகளை ஏவி வழிபாட்டுத் தலங்களைக் கவர்வது என தமிழர்களைத் தொடர்ந்து அடக்குமுறைக்குள்ளாக்கி வருகிறது.

தமிழின விடுதலையில் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு அரசின் வகிபாகம்:

1950 களில் தொடங்கி, 2009 வரையிலாக படிப்படியாக அழிக்கப்பட்ட தமிழினம், தன்னை ஒடுக்க நினைக்கும் சிங்களப் பேரினவாத அரசுக்குத் தன் தரப்பு நியாயங்களை அகிம்சை வழியிலும்,  ஆயுத வழியிலும் சொல்லிய பின், தற்போது அறிவாயுதம் ஏந்திய அரசியல் வழியிலும் சொல்ல நினைக்கிறது. ஆனால் இது ஈழத்தில் இலங்கை நாட்டுக்குள் இருந்த சிக்கலாகத் தொடங்கி, உலகமயமாக்கல் பின்னணியில் பல நாடுகளின் பங்களித்த விடயமாக மாறிப் பல ஆண்டுகளாகிவிட்டது. ஆயினும் மற்ற எந்த நாட்டைக் காட்டிலும் இந்திய ஒன்றியமும் அதன் ஒரு மாநிலமாக இருக்கும் தமிழ்நாடும் எடுத்த தமிழீழ விடுதலைப் போராட்டம் சார்ந்த நிலைப்பாடுகள் மற்றும் முடிவுகளே, அப்போராட்டத்தின் செல்நெறியில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.

இந்திய அரசியல் தலைமைகள் ஒடுக்கப்ப்பட்ட தமிழர்களுக்கு அல்லாது, ஒடுக்கிய இலங்கை அரசுக்கு ஆதரவளித்த நிலையில், ஈழத்தில் தமிழினம் முன்னெடுத்த விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களை, இந்திய ஒன்றியத்தில் வாழ்ந்த பிற தேசிய இனங்கள் அறிந்துகொள்ளா வண்ணம், பார்ப்பன பனியா கும்பல் அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள், திரைப்படங்கள், அறிவியக்கப் புலத்தில் தமிழர் வெறுப்பு கொண்ட ஆளுமைகளின் திட்டமிட்ட சதிகள் மூலம் ஒரு பொய்யான கருத்துருவாக்கம் வலிந்து ஏற்படுத்தப்பட்டது. பிராந்திய வல்லரசுப் பட்டத்துக்காக அமைதிப்படையை ஏவி ஈழத்தமிழரை வேட்டையாடிய இராஜீவ் காந்தியின் மரணத்துக்குப் பின்னாக, இந்த உள்நோக்கம் கொண்ட சூழ்ச்சி தீவீரப்படுத்தப்பட்டது.

ஒன்றிய வெளியுறவுத் துறையில் கோலோச்சிய பார்ப்பனர்களும், மலையாளிகளும் தமிழர் மீதான வன்மத்தை ஆகக்கூடிய வகையில் வெளிப்படுத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில், டெல்லியில் ஓரளவு ஆதிக்கம் செலுத்திவந்த தமிழகத் தலைவர்களும் தேர்தல் அரசியல் கணக்குகளின் பொருட்டு, இந்தப் பாரபட்சமான நடவடிக்கைகளைத் தடுக்கத் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை. தமிழர் அல்லாத, தமிழர் நலம் நாடாத தமிழக அரசியல் தலைமைகள், தங்களது அதிகார வெறி காரணமாக தமிழர் உரிமைகளை இந்திய ஒன்றிய அரசுக்கும், அண்டைத் தேசிய இனங்களுக்கும் விட்டுக் கொடுத்தன. இதற்கு மாற்றாகத் தங்களது வசதிவாய்ப்புகளைப் பெருக்கிக் கொண்டதோடு, அதிகாரத்திமிரில் செய்த ஊழல் உள்ளிட்ட பல குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொண்டு, ஒன்றிய அமைச்சரவையிலும் பங்கெடுத்துத் தன்னலத்துக்காக அவ்வதிகாரங்களையும் பயன்படுத்திக் கொண்டன.

இனவழிப்பு உச்சத்தில் இருந்த 2008 – 2009 காலகட்டத்தில், தமிழகத்தில் கிளர்ந்து எழுந்த மக்களைக் கட்டுப்படுத்தவும், அவர்களின் போராட்டங்களைக் குலைக்கவும், மீறிப் பேசியவர்களை அடித்து நொறுக்க, சிறையிலிட்டு அடைக்க ஒரு காலத்தில் ஈழ ஆதரவு பேசிய திமுக மும்மரமாகச் செயல்பட்டது என்றால், எதிர்க்கட்சியான அதிமுக தேர்தல் வெற்றிக்காக மட்டுமே மேம்போக்கான ஈழ ஆதரவு நிலைப்பாட்டை  எடுத்தது. தமிழ்ப் படைப்பாக்க உலகில், இலக்கிய வெளியில், திரைப்படத் துறையில் இருந்த திராவிட சார்பு, ஈழ ஆதரவு, தமிழின விடுதலை குறித்த காத்திரமான படைப்புகளை நல்கவில்லை அல்லது தமிழ்நாட்டின் அரசியல் சூழல் படைப்பாளிகளை நல்க விடவில்லை. இதனால் அரசியல் புரட்சிக்கு முன்பாகத் தோன்ற வேண்டிய சமூகப் பண்பாட்டுப் புரட்சி ஈழத்தோடு நின்றுவிட்டது.

எவ்வாறாயினும், தமிழ்நாட்டு அரசியல் தலைமைகளின் தான்மையும், தனிப்பட்ட பகைமையும், கொள்கையுறுதியின்மையும், அதிகாரவெறிப் போக்கும், தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு உதவவில்லை என்பதை விட ஊறுகளையே அதிகம் தந்தது. இப்போராட்டத்தினை முன்னின்று வழிநடத்திய புலிகளின் தலைமைக்கும், தமிழரைப் பெரும்பான்மையாகக் கொண்ட அரசில் இயங்கிய தமிழகத் தலைமைகளுக்கும் சிந்தனையோட்டத்திலேயே பெரிய வேறுபாடுகள் இருந்தது, பிணக்குகளுக்குக் காரணமாயிற்று. அடிப்படையிலேயே தமிழ்நாட்டு அரசியல், தமிழர் நலன் சார்ந்து அமையாததன் விளைவு, உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஒருங்கிணைந்து நிற்க முடியாமல் போக ஈழத்தமிழர்கள், சர்வதேசத்தின் உதவியோடு  அழிக்கப்பட்டதை நம்மால் தடுக்க முடியவில்லை. ஆனால் பேரழிவின் முடிவில் அதிகவிலை கொடுத்து தமிழர் கற்ற பாடம் நம்மில் ஒற்றுமை இல்லாத காரணத்தால் தான், புறப்பகையைக் காட்டிலும் அகப்பகையினால் தான் நாம் வீழ்த்தப்பட்டோம் என்பதுவே.

இனமீட்சியின் தொடக்கம் – உலகத் தமிழர் ஒற்றுமை:

கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன; ஈழத்தின் தமிழ் அரசியல்வாதிகளால், குறிப்பிடத்தக்க வகையில் தமிழர் புனர்வாழ்வுக்கான அரசியல் மாற்றங்களைக் கொணர இயலவில்லை. எந்த வகையிலும் தமிழர் தலைதூக்காதவாறு, உரிமைக்குரல் எழுப்பிடாதவாறு இலங்கை அரசு தொடர்ந்து தமிழர்களை வதைத்து வருகிறது. தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற உன்மத்தத்தில் அரசபயங்கரவாதத்துக்காய் வரைமுறையற்று செய்யப்பட்ட செலவுகளும், ஊழல் மலிந்த தவறான தலைமைகளின் நிர்வாகத்திறனின்மையும், மோசமான பொருளாதார நிலைக்கு இட்டுச்சென்றதால், சீனாவின் கடன்பொறிக்குள் சிக்கிய மற்றுமொரு நாடாக இன்று இலங்கை நிற்கிறது.

புலம்பெயர்ந்த தமிழர்களும், இரு மரபுவழித் தாயகப் புலத்தில் வசிக்கும் தமிழர்களும் குறைந்தபட்சம் இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத் தரவேனும் ஒரேயொரு பொதுத்தளத்திலேனும் இன்னும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவில்லை என்பது இனப்படுகொலை எனும் பேரூழி கூட இன்னும் உலகத்தமிழர்களின் ஒற்றுமைக்கு வித்திடவில்லை எனும் கசப்பான உண்மையை நமக்குச் சொல்கிறது. இனவழிப்புக்குப் பின்னாக தமிழ்நாட்டில் தமிழருக்கான அரசு அமைய வேண்டி, தமிழ்த்தேசியக் கருத்தியல் வேகமாக வளர்ந்து வருவது தான் ஒரே ஆறுதல். ஒவ்வொரு தேர்தலுக்கும் இக்கருத்தியல் பெறும் வளர்ச்சி அசாத்தியமானது என்பதோடு வணிகமயமான சமகால அரசியல் சூழலில் ஆச்சரியமானதாகவும் இருக்கிறது. ஆனால் ஆட்சியதிகாரத்துக்கான போட்டியில் முன்னோடும் நாம் தமிழர் கட்சிக்கு, இனிதான் அதிக சவால்கள் காத்திருக்கின்றன.

தமிழ்நாட்டில் வளர்ந்துவரும் தமிழ்த்தேசியம் வெகுசன மக்களின் அங்கீகாரத்தைப் பெற்று, தேர்தல் அரசியலில் பெறும் வெற்றிகள், தமிழின விடுதலைக்கு உண்மையாகவே உதவப்போவதில்லை என்றும், இந்திய ஒன்றியத்தின் அரசியலமைப்புக் கூறுகளால் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள், குறைந்தபட்ச தற்காலிகமான தீர்வுகளையே அவை அளிக்கக்கூடும் என தேர்தல் அரசியலில் நம்பிக்கை இல்லாத இயக்கங்கள் சொல்வதை முற்றுமுழுதாக மறுக்கவியலாது. ஆனால் அவ்வியக்கங்களே கூட அரசியல்படுத்தப்பட்ட மக்கள் திரளின் எழுச்சிமிகு போராட்டங்களே, தமிழின விடுதலைக்கு வழிகோலும் என்று ஒப்புக்கொள்கின்றன. எனில் அதனைச் சாத்தியப்படுத்த, அன்றாடப் பிரச்சனைகளில் மட்டுமே அக்கறை கொள்ளும் பொதுமக்களைத் தொலைநோக்குடன் சிந்திக்க வைத்து அரசியல் அறிவூட்டும் சூழலை உண்டாக்க, யாரால் எப்போது எப்படி எதன்மூலம் இயலும்?

வெகுசன மக்களுக்குப் புரியும் மொழியில் பேசி, அவர்களது சிக்கல்களுக்கான காரணத்தையும், அவற்றைச் சரிசெய்வதற்குரிய வழிமுறையையும் விளக்கி, மக்களை அரசியல்படுத்தினால் மட்டுமே, இன விடுதலை எனும் தொடரோட்டத்தில் அயர்ச்சியின்றி முன்னகர முடியும். அதற்கான வெளியை, மூலவளத் திரட்டலை, செய்நேர்த்தியுடன் கூடிய ஒருங்கிணைப்பை, வினைத்திட்பத்துடன் கூடிய செயலாக்கத்தைச் சாதிக்க, நமக்கு அந்தக் குறைந்தபட்ச அதிகாரமேனும் அவசியமாக இருக்கிறது. ஒன்றியத்தின் மற்ற  தேசிய இனங்களுக்காக மொழிவாரி பிரிக்கப்பட்ட மாநிலங்களில், அந்தந்த மண்ணின் மகன் ஆளும்போது, இனத்துக்கு ஒரு சிக்கலென்றால் கட்சி வேறுபாடின்றி ஒன்றுபட்டு நிற்கும் அரசியல் சூழல் இருப்பதால் தான், இந்திய ஒன்றியத்துக்கு அழுத்தம் கொடுத்து அவற்றைத் தீர்ப்பதில் அவ்வினங்கள் வெற்றி கண்டுள்ளன. இதற்கென அரசியலமைப்பையும் மீறி நடப்பதையோ, உச்சநீதி மன்றத்தின் உத்தரவைப் பின்பற்றாது இருப்பதையோ, பொதுமக்கள் ஆதரவு இருப்பதன் பொருட்டு ஒன்றியத்தால் கேள்வி கேட்கமுடிவதில்லை என நமக்கும் அண்டை மாநிலங்களுக்கும் நடக்கும் நதிநீர்ப் பங்கீட்டுச் சண்டைகளில் நாம் காண்கிறோம்.

தமிழரால் அமைக்கப்படும் தமிழ்நாட்டு அரசு தமிழர் நலனுக்காக இயங்கத்தொடங்கும்போது, அரசியல் அதிகாரம் எனும் ஆற்றல், சமூகப் பொருளாதார கலையிலக்கியப் பண்பாட்டுத் தளங்களிலும் அளப்பரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். அவை தனிமனிதர்களின் மேம்பாட்டுக்கும், ஓரினத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் அடிகோலும். இதற்கு உலகெங்கும் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்ல இயலும். தமிழர்களின் ஒற்றுமைக்கு இன்றுவரை பெருங்கேடாக இருக்கும் சாதீயப் படிநிலை வேறுபாடுகள், பெண்ணடிமைத்தனம் போன்றவை ஈழத்தில் புலிகளின் ஆட்சி நிர்வாகத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு களையப்பட்டதும்,  பொருளாதாரத் தடைகள் இருந்த காலத்தே கூட, தற்சார்புப் பொருளாதாரம் சார்ந்த உற்பத்தி நடவடிக்கைகளின் மூலமும், புத்தாக்கத்தினால் உண்டான கண்டுபிடிப்புகளாலும் பல நடைமுறைப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டதையும் நாம் உற்றுநோக்க வேண்டும். இத்தனைக்கும் ஒரு ஆயுதப்போரின் நடுவே புலிகள் இயக்கம் இவற்றைச் சாதித்தது தமிழரின் மேலான செயலாண்மைக்குத் தக்கதோர் சான்று.

இங்கு அதிகாரம் கிடைப்பதை விடவும், அதிகாரம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை கிடைப்பது அதிக உள்ளாற்றலை, மக்களிடையே பெரும் மனமாற்றத்தைத் தரும் உளவியலை அளிக்கக்கூடும். எனவே அதிகாரம் கிடைக்கவும், அதிகாரம் கிடைக்கும்போது அதன்மூலம் இன முன்னேற்றத்துக்கான பாதையில் தடையின்றி நடைபோடவும் அரசியல்படுத்தப்பட்ட மக்கள் அவசியமாகின்றனர். அதற்கேனும் தமிழ்த்தேசியம் ஆளும் இடத்துக்கு வர வேண்டியது மிக மிக அவசரமான தேவை. பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டாலும் தேசியத் தலைவரால் “மாமனிதர்” என்று அங்கீகரிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் தராக்கி சிவராம், தனது சில கட்டுரைகளில் இப்பொருண்மைகளில் பேசியிருக்கிறார். “காலத்தின் தேவை அரசியல் வேலை” எனும் கட்டுரையில் மக்களை அரசியல்படுத்துதல் பற்றி 2004 காலகட்டத்தில் எடுத்துரைத்த கருத்துகளை நாம் மீள்வாசிப்பு செய்ய வேண்டும்.

குறிப்பாக, தமிழ்நாடுக்குள் தமிழ்க்குடிகளுக்கு இடையே அண்மையில் வேண்டுமென்றே மூட்டிவிடப்படும் சண்டைகள், சமூக நீதி பேசி வளர்ந்த திராவிட இயக்கம் வளர்த்தெடுத்த நிறுவனமயப்படுத்தப்பட்ட சாதீய அமைப்புகள், அவை சமூகத்தில் கொண்டிருக்கும் நேரடி செல்வாக்கு, வடக்கைப் போலவே தமிழ்நாட்டிலும் பாஜக வாக்கரசியலுக்காக மறைமுகமாகச் செய்யும் சாதி அடிப்படையிலான சமூக மறுகட்டமைவு ஆகியன இன்னும் தமிழரை இன அடையாளத்தை முன்னிறுத்த விடாது தடுத்துக் கொண்டிருப்பதைக் காணும்போது, அரசியல் தெளிவு தமிழருக்கு எவ்வளவு முக்கியம் என அறிகிறோம்.

தான் கொலையுறுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு எழுதிய தராகி சிவராம் எழுதிய “நெருக்கடியில் உள்ளதா தமிழ்த்தேசியம்?” எனும் கட்டுரையில் “தமிழ்த் தேசியமானது தமிழ் பேசும் சமூகத்தின் அகமுரண்பாடுகளைத் தீர்த்து அதை சரியான அரசியல் பாதையில் அணிதிரட்டிடக்கூடிய ஒரு கருத்தியலாக வளர்த்தெடுக்கப்படாமல் அதன் பாட்டிலேயே விடப்படுமானால் சந்தர்ப்பவாதிகளின் நுனி நாவில் புரட்டப்படும் ஒரு வெற்றுச் சொற்றொடராக அது இருக்குமாயின் – எதிர்காலத்தில் மீண்டும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்படபோகும் இன அழிப்புப்போர் அச்சுறுத்தல் கூட எமது சமூகத்தை ஒன்று திரட்டுவதற்கு போதாததாகிவிடும்” என்று 2005 காலகட்டத்தில் சொல்கிறார்.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பின்னடைவுகளை ஏற்படுத்திய சாதி, மத, வட்டாரப் பிளவுகள் எவ்வளவு பாதிப்பைத் தரக்கூடியவை என்றும், அவற்றைச் சந்தர்ப்பவாத சக்திகளும், இனப்பகையோரும் எப்படிப்பயன்படுத்தக் கூடும் என்று அவர் எச்சரிக்கிறார். தமிழ்நாட்டிலும் திராவிட இயக்கத்தின் அடிநாதமாக இருந்த தமிழுணர்வும் தமிழ்த்தேசியக் கருத்தியலும் எவ்வாறு சிலரின் பேராசைக்காவும், அதிகாரத்துக்காக மட்டுமே செய்யப்பட்ட சமரசங்களாலும் மடைமாற்றி மழுங்கடிக்கப்பட்டது எனவும் அவர் விளக்குகிறார்.

தமிழரின விடுதலை எனும் நெடும்பயணத்தில் இனப்படுகொலைக்குப் பிறகாக நாம் சில அடிகள் கூட முன்னே நகரவில்லை. இதற்கு அடிப்படைக் காரணம், நம்மை பின்னடையச் செய்த ஆற்றல்கள் நம்மை விடவும் நமது அகச்சிக்கல்களை நன்கு உணர்ந்து அவற்றை உளவியல் ஆயுதங்களாக மாற்றி நம் மீதே எறிவதை உணராததால் தான். இல்லாவிடில் இத்தகு பெருமைமிகு பேரினம் கொடும் இனவழிப்புக்கு முகம் கொடுத்திருக்குமா? நம்மைக் கூறுபோடும் வேறுபாடுகளை மறந்து, “நாம் தமிழர்” என்பதை நமது பேரடையாளமாக வரித்துக் கொண்டு, கால நேர தூர தேச எல்லைகளுக்கு அப்பால் அரசியல் தெளிவுடன் விடுதலைக்காக உலகத்தமிழர் ஒற்றுமையுடன் ஒன்றுதிரள்வதே, இனப்படுகொலைக்குப் பின்னான இனமீட்சிக்கான தொடக்கமாக இருக்கக்கூடும். அதனை எல்லாவகையிலும் சாத்தியப்படுத்த, விழுந்த இடத்திலிருந்தே இனம் மீண்டும் எழுந்திட ஆவன அனைத்தும் செய்ய இந்த இன எழுச்சி நாளில் உறுதியேற்போம்!

திருமதி. விமலினி செந்தில்குமார்,

செய்தித் தொடர்பாளர்,

செந்தமிழர் பாசறை – வளைகுடா.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles