மே 2024
மே 18 – இனம் எழுச்சியுற வேண்டிய நாள்
பனை மரக்காடும் பச்சிளங் குழந்தையும்
எறிகணைக் குண்டுக்கு எரிந்த எங்கள் தேசமும்!
சிதையுண்ட தேகமும் மலையெனக் குவிந்ததே!
குருதியும் வழிந்தோடிக் குளமாய்த் தேங்கியதே!
தீரத்துடந் தேசங்காக்கத் துணிந்தோரது தமிழீழமே!
உன் விடுதலை உணர்விற்குப் பரிசா மரண ஓலமே!
கூப்பிடுதூரத்தில் தொப்புள் கொடி உறவிருந்தனரே!
துரோகங்களும் சூழ்ச்சியுமவர் உயிர் குடித்தனவே!
அறப்பற்றும் மொழிப்பற்றும் தேசப்பற்றும் மிகுந்திருக்க
தேகமெல்லாம் தமிழீழப் பற்றும் சூழ்ந்திருக்க!
அறவழியில் நின்ற எங்களின் தமிழீழ மண்ணை
அகிம்சை பேசியநாடோ அழித்தொழிக்க எண்ணியதேனோ!
புத்தனின் தேசமென்று நாளும் அலறியக் கூகைகள்!
புதுநாடக மொன்றை அரங்கேற்றியக் கோழைகள்!
வெற்றுக் காலுடன் வெள்ளை மணற்காட்டிலே!
வெள்ளைக் கொடியேந்தியோரை வஞ்சகர் சூழ்ந்தாரே!
பாலச்சந்திரனை பாலகனென்றும் பாராதுக் கொன்றதேனோ!
பயமறியாதா நந்திக்கடலும் கலங்கிப் போனதம்மா!
சொந்த நிலத்தில் வாழக் காணியும் இல்லை!
அழுத பிள்ளைக்குப் பசியாற்றப் பாலுமில்லை!
எமது வலிகளை எடுத்துரைக்க நாதியுமில்லை!
நெடுங்காலம் கடந்தபோதும் இன்னும் நீதியுமில்லை!
உண்மைகளைக் கேட்க உலகிற்கு நேரமுமில்லை!
உயிரைக் காக்கவோடிடும் நிலையும் மாறிடவில்லை!
சிவந்த குருதி முள்ளிவாய்க்காலில் உறைந்த நாளோயிது!
சீறிய தோட்டாக்கள் தமிழீழ மண்ணில் உதிர்ந்த நாளோயிது!
சிதைந்தாலும் சிறுநரிக் கூட்டத்துக்குப் பணியாத நாள்!
உயிர்த் தமிழுக்கேயென எம்மவர் முழங்கிய நாள்!
உலகத்தமிழினம் ஒன்றாய் வெகுண்டெழ வேண்டிய நாள்!
எதிராளியின் கூடாரம் குலைநடுங்க வேண்டிய நாள்!
முடிவுரையொன்றை பகைவர்க்கு எழுத உறுதியேற்கும் நாள்!
முள்ளிவாய்க்கால் முடிவல்ல தொடக்கமென உரைக்கும் நாள்!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.