மே 2024
ஈழத்துப் பாவேந்தர் புதுவை இரத்தினத்துரை கவிதைகள்
”அட மானுடனே!
தாயகத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள்
பெற்ற தாய் சுமந்தது பத்து மாதம்
நிலம் சுமப்பதோ நீண்ட காலம்.
அன்னை மடியில் இருந்து கீழிறங்கி
அடுத்த அடியை நீ வைத்தது
தாயகத்தின் நெஞ்சில்தானே.
இறுதியில் புதைந்தோ
அல்லது எரிந்தோ எருவாவதும்
தாய்நிலத்தின் மடியில்தானே.
நிலமிழந்து போனால் பலமிழந்து போகும்
பலமிழந்து போனால் இனம் அழிந்து போகும்
ஆதலால் மானுடனே!
தாய்நிலத்தைக் காதலிக்கக் கற்றுக் கொள்”
“ஊர் பிரிந்தோம்
ஏதும் எடுக்கவில்லை
அகப்பட்ட கொஞ்சம் அரிசி,
பருப்பு, இரண்டு பாய், இருமல் மருந்து,
மனைவியின் மாற்றுடுப்பு மூன்று,
காற்றுப் போய்க்கிடந்த மிதிவண்டி,
காணியுறுதி,
அடையாள அட்டை அவ்வளவே,
புறப்பட்டு விட்டோம்.
இப்போ உணருகிறேன்
உலகில் தாளாத துயரெது?
ஊரிழந்து போதல் தான்.”
இந்த மண் எங்களின் சொந்த மண் இதன்
எல்லைகள் மீறி யார் வந்தவன்.
நிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து
நின்றது போதும் தமிழா – உந்தன்
கலைகள் அழிந்து கவலை மிகுந்து
கண்டது போதும் தமிழா இன்னும்
உயிரை நினைத்து உடலை சுமந்து
ஓடவா போகிறாய் தமிழா…
வெடிக்கும் எதிரிகணைகள் ஒவ்வொன்றுக்கும்
விரல்மடித்துக் கணக்கெடுத்தபடி இருந்தேன்
இடையிற் கண்ணயர்ந்து போனேன்
விழிப்புற்ற போதும்
வந்து வெடித்தன குண்டுகள்
மீண்டும் எண்ணத் தொடங்கினேன்
இடையிற் சிரிப்பு வந்தது, சிரித்தேன்
விளையாட்டாகிவிட்டது யுத்தம்.
அப்பாடா விடிந்துவருகிறது
இரவு எத்தனை குண்டுகள்
என்றாள் மனைவி.
எழுந்தமானத்தில் எழுபது என்றேன்
நேற்று?
எண்பது
ஏன் பத்துக் குறைந்தது என்றாள்
நெடுங்கேணியில்தான் நிற்கிறான் கேட்டுப் பார்
“கேட்காமலா விடுவோம்?”
நெஞ்சுக்குள் அலையெற்றிய
மாயக்கனவுகள் வெளியேற
நிஜமனிதர்களாக நிற்கிறோம் இப்போது.
மினுங்கிய மின்சாரமற்று
தொடர்புக்கிருந்த தொலைபேசியற்று
செப்பனிடப்பட்ட தெருவற்று
மாவற்று – சீனியற்று – மருந்தற்று
ஏனென்று கேட்க எவருமற்று
கற்காலத்துக்குத் திரும்புகிறோம் மீண்டும்…
கணினிகளையும் காஸ்சிலிண்டர்களையும்
வீட்டு மூலையில் வீசிவிட்டு
மெருகு குலையா மதில்களின் மின்குமிழ்களையும்
விறாந்தையின் தரைவிரிப்புகளையும்
மாடியிற் பூட்டிய அன்ரனாக்களையும்
அசுமாத்தமின்றி அகற்றிவிட்டு
பதுங்கு குழிக்குப் பால்காய்ச்சிவிட்டோம்..
விடுவிக்கப்பட்ட ஊர்களை
விடுதலைபெற்ற தேசமென வெளிச்சம் செய்து
ஆடிய கூத்துக்கள் ஒவ்வொன்றாய் அகல
மீண்டும் நிஜத்துக்குத் திரும்பியது அரங்கு.
இப்போ மயக்கம் கலைந்த மனிதர்களைச் சுமந்து
மாரீசப் போர்வை கலைத்துக் கிடக்கிறது மண்.
இன்றைய விடிகாலையிற் துயில்நீங்கி
தாய்நிலம் வாய்திறந்து பாடும்
விடுதலைப்பாடல் பரவுகிறது வெளியெங்கும்.
மனச்சாட்சியின் கதவுகள் திறந்தபடி
எல்லோர் முகங்களிலும் அறைந்தபடி
கேட்கும் பாடலை உணரமுடிகிறதா உன்னால்?