விக்கிரமாதித்தன் – வேதாளம்: ஒரு பக்க விழிப்புணர்வு கதை
விக்கிரமாதித்தன் தன் வலது கையில் வாளை எடுத்துக்கொண்டு மரத்தில் இருந்த வேதாளத்தை இடது கையால் இழுத்து தன் தோளில் போட்டு நடந்தான் ‘வெற்றி ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட மன்னவனே! பொழுது போக உனக்கொரு கதை சொல்கிறேன் கேள் என்று வேதாளம் தனது அடுத்த கதையை சொல்லத் தொடங்கியது.
ஒரு ஊரில் மூன்று இளைஞர்கள் கல்லூரி படிப்பினை முடித்துவிட்டு அரசாங்க வேலைக்காக காத்திருந்தனர். மூவரும் ஒரே விடுதியில் தங்கியிருந்து அதற்காக படித்து வந்தனர். வேலைக்கான அறிவிப்பு வந்தது. ஒரே ஒரு பதவி பலர் போட்டியில் இருந்தாலும் மூன்று பேருக்குள் கடுமையான போட்டி முதலாமானவன். நேர்மையாளன். இறை நம்பிக்கையோடு, கடின முயற்சியோடு அவன் படித்து வந்தான். அவனுடைய தாய் ஒரு ஏழை விதவை. விவசாயம் செய்து மகனை படிக்க வைத்தாள். மகனும், அதை உணர்ந்து நன்கு படித்தான். ஏற்கனவே பலமுறை வெற்றியை கோட்டை விட்டவன், இம்முறை வெல்ல வேண்டுமென உறுதியோடு இருந்தான். அவனுடைய ஒரே குறிக்கோள், யாருக்கும் பணம் கொடுக்காமல் நேர்மையாக வெல்ல வேண்டுமென்பதே.

இரண்டாமானவன், பெரிய பணக்காரன், தகப்பன் பெரிய அரசியல்வாதி, இரண்டே தலைமுறையில், இரண்டாம் தர தொழில் செய்து தன் குடும்பத்தை உலகிலேயே பெரிய பணக்காரர் வரிசையில் கொண்டு வந்தவன் கொள்ளை அடிப்பது மற்றும் சாராயம் விற்பது போன்றவைகளை தொழிலாக செய்து வந்தான் கடவுளே இல்லை என்ற எண்ணம் உள்ளதால் கொஞ்சம்கூட பயமில்லாமல் தவறு செய்தான். “தந்தை எவ்வழியோ மகனும் அவ்வழியே” “தந்தை எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்’ என்பதுபோல் மகன் போதை பொருளையும் சேர்த்து விற்று பணம் சம்பாதித்தான் ‘கஞ்சா விற்பது பெருமை, கருவாடு விற்பது கேவலம்’ என்பது இவனுடைய கருத்து. அவனுக்கே தெரியும் நேர்மையாக படித்து தேர்வு எழுதினால் பாஸ் பண்ண முடியாது என்று. கேள்வித்தாளில் நெகடிவ் மார்க் இருந்தால் பூஜ்யம் மதிப்பெண்கூட இவன் வாங்கமாட்டான். அதனால் பணத்தை கொடுத்து அந்த வேலையை வாங்கிவிடலாம் என்று முடிவு செய்து அதற்கான வேலையில் இறங்கினான். இது இவனுக்கு புதிதல்ல. ஏற்கனவே பணத்தை கொடுத்துதான் பள்ளி, கல்லூரி படிப்புகளை முடித்தான். அழுகிய மாம்பழத்தை மொய்க்கும் ஈக்கள்போல, இவனுடைய பணத்திற்காக இவனை சுற்றி எப்பொழுதும் ஐந்தாறுபேர் இருப்பார்கள். தேர்வு எழுதும் முன்னரே வெற்றியை கொண்டாட ஆரம்பித்துவிட்டான் இந்த பணக்காரன்.
மூன்றாமானவன் ஒரு தந்திரக்காரன். அதிகார பலம் உள்ளவன். பக்கத்து ஊரில் படிக்கும்போது. தன்னுடைய சொந்த ஊரை குறை சொல்வான் சொந்த ஊருக்கு போனால், நான் இந்த ஊர்க்காரன் என்பான். இடத்திற்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொள்வான். தன்னை ஒரு அறிவாளியாக காட்டிக்கொள்வான். ஆனால், தேர்வுக்கான விண்ணப்பத்தைகூட சரியாக நிரப்ப தெரியாது. இருந்தாலும் அதிகார பலத்தை பயன்படுத்தி தேர்வுக்கான நுழைவு சீட்டினை பெற்றுவிட்டான். சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணத்தை நிறுத்திவிடலாம்” என்ற நம்பிக்கை உள்ளவன். இவனுக்கு நேர்மையாளன் மீது எப்பொழுதும் ஒரு கண் உண்டு. இவன் வெற்றி பெற வேண்டுமானால் முகலமானவன் தோற்க வேண்டும். எனவே, விடுதி காவலாளியை பயன்படுத்தி ஒருநாள் இரவில் முதலாமானவனின் குறிப்பேடு புத்தகத்தை ஒளித்து வைத்தான். அது மட்டுமின்றி. தன்னுடைய அதிகார பலத்தை பயன்படுத்தி விடைத்தாள் திருத்துபவரிடம் ஏதாவது செய்து வெற்றி பெற்றுவிடலாம் என்றும் நம்பினான். இவனும் பணக்காரனும் வெளியே சண்டை போடுவதுபோல் காட்டிக்கொள்வார்கள் ஆனால், இருவரும் இருட்டில் கூட்டாளிகள் அடுத்த நாள் காலையில் முதலாமானவன் எழுந்து பல ஆண்டுகளாக சேகரித்து வைத்த தன்னுடைய குறிப்பேடு புத்தகத்தை காணவில்லையென புலம்பினான் எல்லா இடங்களிலும் தேடினான் கிடைக்கவில்லை, விடுதி காப்பாளரிடம் புகார் செய்தான் இதற்கு காரணம் தந்திரக்காரன்தான் என்றான் அவனுடைய சந்தேகத்திற்கு காரணம், சில நாட்களுக்கு முன்பு அவன் நேர்மையாளனிடம், தேர்வில் நிச்சயம் நீ தோற்பாய்’ என்றான். ‘தவளை தன் வாயால் கெடும்’ என்பதுபோல் அவனே அவன் வாயால் மாட்டிக்கொண்டான். ஆனால், கடைசியில் அதிகார பலம் வென்றது. குறிப்பேட்டினை பறிகொடுத்தவனை பார்த்து நெருக்கடி காரணமாக விடுதி காப்பாளன், ‘நீதான் உன்னுடைய குறிப்பேட்டினை பாதுகாக்க வேண்டும், மற்றவர்களை குறை சொல்லாதே என்று கூறிவிட்டு எழுதாத ஒரு வெற்று குறிப்பேட்டினை கொடுத்து இனி எழுதி படி’ என்று கூறிவிட்டார். தேர்வு நாள் ஏப்ரல் 19ம் தேதி இன்னும் சில நாட்களே உள்ளன. அவனும் சோர்வடையவில்லை. இறைவன்மேல் நம்பிக்கை வைத்து இரவும் பகலும் கடினமாக உழைத்தான் அந்த நேர்மையாளன்.
இந்த கதையை சொல்லி முடித்த வேதாளம், விக்கிரமாதித்தனிடம், ‘நீ சொல் மன்னனே! மூவரில் யார் வெற்றிபெற தகுதியானவன்? நீ யாரை தேர்ந்தெடுப்பாய்? நேர்மை உள்ளவனையா, பணக்காரனையா அல்லது தந்திரக்காரனையா? வெற்றிபெற வேண்டியது கல்வியா, செல்வமா அல்லது தந்திரமா? சரியான விடை தெரிந்தும் நீ அதை சரியாக சொல்லாவிட்டால் உன் தலை சுக்கு நூறாக வெடித்து நீ சாவாய். பதில் சொல்லும் உத்தமனே! என்று கேட்டது.
வேதாளம் விக்கிரமாதித்தனை பார்த்து இக்கேள்வியை கேட்டது. இறைவன் நம்மை பார்த்து இதே கேள்வியை கேட்கிறான். இது தேர்வு களம் அல்ல, இது தேர்தல் களம். பாதி கதைதான் உள்ளது. விடையை நீங்களே உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள். மீதியை நீங்கள் எழுதுங்கள்.
திரு. இளம்தமிழ்,
செந்தமிழர் பாசறை – ஓமன்.